அரசாங்கத்தின் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரைப் படுகொலை செய்ய முயற்சிகளை மேற்கொண்டிருந்த பெரும்பான்மை இன சர்வதேச நபர் ஒருவரை கொழும்பு பயங்கரவாத ஒழிப்பு விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மேற்படி சந்தேக நபர் தென் மாகாண சபை தேர்தல் நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்கும் போர்வையில் இத்தகைய திட்டத்தைத் தீட்டியுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளன.
தென் மாகாண சபை தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சமயம் மேற்படி விசாரணைப் பிரிவினர் கடந்த 12ம் திகதி அந்நபரைக் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே பயங்கரவாத ஒழிப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள புலி சந்தேக நபரிடம் விசாரணை செய்தபோதே அவர் மேற்படி பெரும்பான்மை இன சந்தேக நபர் சம்பந்தமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அந்த சந்தேக நபர் தென் மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவருக்கு ஒத்துழைப்பு வழங்கும் தோரணையில் செயற்பட்டுள்ளார். இவர் வேறொரு கொலைக்கும்பலின் கைக் கூலியாக முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரைக் கொலை செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பொறுப்பேற்றுள்ளார் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.
பயங்கரவாதம், பாதாள உலகக் கோஷ்டி போன்றவற்றை ஒழித்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அரசியல் பிரமுகர்களைப் படுகொலை செய்வதற்கு சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் அமைப்புகள் செயற்பட்டு வருவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
மேற்படி சந்தேக நபர் அவ்வமைப்புகளின் ஒப்பந்தக்கார ராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அந் நபரிடம் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்நபர் தொடர்பான சகல தகவல்களையும் வெளியிடுவது தொடரும் விசாரணைகளுக்குத் தடையாக அமையலாம் என்பதால், விசாரணையின் முடிவில் முழுமையான தகவல்களை வெளியிட முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.