Multiple Page/Post

வவுனியா முகாம்களுக்கு தினமும் பதினொன்றேகால் கோடி ரூபா தேவை

Wanni_War_Welfare_Campவட பகுதியில் நடைபெற்ற மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 3 இலட்சம் மக்களுக்கான ஒரு நாளைக்குரிய உணவு மற்றும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் (11 கோடியே 30 இலட்சம் ரூபா) நிதி தேவைப்படுவதாக “வேள்ட் விசன்’ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக “வேள்ட் விஷன்’ நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் சுரேஷ் பார்ட்லட் தெரிவிக்கையில்;

நிவாரண உதவிகளை வழங்கும் அமைப்புகளுக்கு நிதிஉதவி தற்போது பாரியதொரு பிரச்சினையாக உள்ளது.

ஏற்கனவே வழங்கப்பட்ட நிதிஉதவிகள் முன்னரே திட்டமிட்ட செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டுவிட்டநிலையில் தற்போது நிவாரண உதவிகளை வழங்குவதற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  இந்நிதி உதவியை இலங்கைக்கு வழங்குவதா இல்லையா என்பது குறித்த அரசியலில் உலக நாடுகள் ஈடுபடக்கூடாது.

ஏனெனில் பாதிக்கப்பட்ட மக்களில் சிறுபிள்ளைகள் பெருமளவில் உள்ளனர். அவர்களின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மோதலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கான தேவை உள்ளது. அம்மக்கள் மீளக் குடியமர்த்தப்படவேண்டியவர்கள்.

இம்மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பலமில்லியன் டொலர் நிதி உதவி தேவைப்படுகிறது. சர்வதேச சமூகத்தின் ஆதரவில்லாமல் இம்மக்களுக்கான உதவித் திட்டங்கள் எதனையும் முழுவளவில் செயற்படுத்த முடியாது.

இலங்கையில் நடைபெற்ற மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை மேற்கொள்வதற்கும் வன்முறையற்ற இலங்கையை உருவாக்குவதற்கும் பங்களிப்புச் செய்வதற்கு சர்வதேச சமூகத்திற்கு இது ஒர் அரிய சந்தர்ப்பம் எனத் தெரிவித்தார்.

யுத்தம் முடிந்த கையோடு தேர்தல் நடைபெறுவது பொருத்தமற்றது – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி

Anandasangaree V _ TULF Leaderயாழ். மாநகரசபை, வவுனியா நகரசபை ஆகியவற்றுக்கான தேர்தலை ஒத்திவைக்கவேண்டும் என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்மநாபா அணி) ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டமைப்பான ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: யாழ். மாநகரசபை, வவுனியா நகரசபை ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை அரசு அறிவித்துள்ளது. ஜனநாயக சமூகத்தில் தேர்தல்கள் மக்களின் தெரிவு என்பன முக்கியத்துவம் வாய்ந்தவை எனினும் எமது மக்களின் ஒரு பகுதியினர் பெரும் இழப்புக்களைச் சந்தித்து சொல்லொண்ணா அவலத்திற்கு முகம் கொடுத்து முகாம்களிலும் வைத்தியசாலைகளிலும் வாழ்கின்றனர். இவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய ஆசுவாசப்படுத்த வேண்டிய இன பந்துக்களில் கணிசமானோர் தேர்தல் அறிவிக்கப்பட்ட மாநகரசபை பகுதிகளில் வாழ்கின்றார்கள். இவற்றை மனங்கொண்டு சிறிது காலத்திற்கேனும் தேர்தலை ஒத்திவைப்பது அவசியமானதென கருதுகிறோம்.

வடக்கில் வசந்தம் வீசவேண்டும்: ஜனநாயகம் மிளிர வேண்டும் எனினும் யுத்தம் முடிந்த கையோடு தேர்தல் நடைபெறுவது பொருத்தமற்றதென நாம் கருதுகிறோம் தேர்தலை சிறிது காலத்திற்கேனும் ஒத்திவைக்குமாறு அரசை கேட்டுக்கொள்கின்றோம்.

கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்: ஸ்ரீ.மு.காங்கிரஸ்

sl_muslim-congres.jpgகிழக்கு மாகாணத்தின் அரசியல் அதிகாரம் முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கிழக்கில் தமிழ் மக்களை விட முஸ்லிம் மக்களே அதிகம் வாழ்ந்து வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நிஸார் காரியப்பர் குறிப்பிட்டுள்ளார்.
 
வட மாகாணத்தில் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை உறுதிப்படுத்துவது மாத்திரமின்றி, கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் கடமை. வடக்கில் இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களை மீளக்குடியேற்ற முன்னர், மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் கிழக்கில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை மீளக்குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இந்த இரண்டு மாகாணத்திலும் இடம்பெயர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை மீளக்குடியேற்றுவது மாத்திரமல்லாது. இந்த மாகாணங்களில் அதிகாரத்தை இரண்டு சமூகங்களுக்கும் பெற்றுக்கொடுப்பதும் அரசாங்கத்தின் கடமை எனவும் நிஸார் காரியப்பர் கூறியுள்ளார்.

இலங்கைகான புதிய அமெரிக்கத் தூதுவராக பெட்ரிக்கா புட்டினிஸ்

butenis.jpgஇலங் கைகான புதிய அமெரிக்கத் தூதுவராக பெட்ரிக்கா புட்டினிஸ் ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் நியமிக்கப்பட்டுள்ளார். பெட்ரிக்கா இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் புதிய தூதுவராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

மேல் மாகாண சபையின் முதலாவது கூட்டம் இன்று

mavulana000.jpgமேல் மாகாண சபையின் முதலாவது கூட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா தெரிவித்தார்.

ஐந்தாவது மேல் மாகாண சபையின் இன்றைய முதலாவது கூட்டம் ஸ்ரீஜயவர்தனபுரவில் அமைந்துள்ள மாகாண சபையின் புதிய கட்டடத் தொகுதி சபா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இக்கூட்டத்தில் மாகாண சபையின் புதிய தலைவர், பிரதித் தலைவர்,  எதிர்க்கட்சித் தலைவர் உட்பட ஏனைய பதவிகளுக்கான உத்தியோகபூர்வ தெரிவுகள் நடைபெறும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். ஐந்தாவது மேல் மாகாண சபைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

பிரதிக் கல்வி அமைச்சர் தலைமையிலான விசேட குழு இன்று வன்னிக்கு விஜயம்

shachi.jpgவன்னி யில் கல்வி நிர்வாக கட்டமைப்புகளைத் துரிதமாக மீளக் கட்டியெழுப்புவது குறித்து ஆராய பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன் தலைமையிலான குழு இன்று வன்னிக்கு விஜயம் செய்கிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கு ஏற்ப, கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவின் வழிகாட்டலின் கீழ் வன்னியில் கல்வி நிர்வாக கட்டமைப்புகளைத் துரிதமாக மீளக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பிரதி அமைச்சர்; கூறினார். இடம்பெயர்ந்துள்ள மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு வசதியாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வன்னியில் நிலைமைகளை அவதானிப்பதுடன் கிழக்கில் திருகோணமலைப் பிரதேசத்திற்கும் சென்று பாடசாலைகளின் நிலைவரங்களை ஆராய்ந்து அவற்றின் தரத்தை மேம்படுத்த துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் பிரதி அமைச்சர் மேலும் கூறினார்.

இலங்கையில் மீள்கட்டுமானப் பணிகளுக்கு ரஷ்யா தொடர்ந்தும் உதவும்

russia_s.pngஇலங் கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் மீள்கட்டுமாணப் பணிகளை மேற்கொள்வதற்காகவும் ரஷ்யா தொடர்ந்தும் உதவிகளை வழங்குமென அந்நாட்டு ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் சமகால நிலைவரங்கள் குறித்து இரு தலைவர்களும் நேற்று தொலைபேசி மூலம் கலந்துரையாடியனார்கள். இக்கலந்துரையாடலின்போதே ரஷ்ய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ரஷ்யா, இலங்கையை ஒரு நீண்டநாள் நண்பனாகவே கருதுவதாகத் தெரிவித்த அந்நாட்டு ஜனாதிபதி இரு நாடுகளுக்குமிடையிலான சிறந்த நல்லுறவைத் தொடர்ந்தும் கட்டியெழுப்பப்போவதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்ட அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ரஷ்யா வழங்கிய காத்திரமான உதவிகளுக்காக ரஷ்ய ஜனாதிபதிக்கு இவ்வுரையாடலின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்தார்.

புலிகளால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அப்பாவித் தமிழ் பொதுமக்களை அவர்களிடமிருந்து விடுவிக்கின்ற மனிதாபிமான நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் சர்வதேச மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவந்த பல்வேறு முயற்சிகளின்போது ஐ.நா. பாதுகாப்புச் சபையிலும் ஐ.நா. மனித உரிமை பேரவையிலும் இலங்கைக்கு ரஷ்யா வழங்கிய ஆதரவுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்தும் வகையில் ரஷ்ய ஜனாதிபதியை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதாக இத்தொலைபேசி உரையாடலின்போது உடன்பாடு காணப்பட்டது. 

சில அகதி முகாம்களுக்குச் செல்ல செஞ்சிலுவை குழுவுக்கு அரசாங்கம் தடை

refugee_.jpgஇடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள சில முகாம்களுக்குச் செல்ல செஞ்சிலுவை சர்வதேசக் குழுவுக்கு, இலங்கை அரசுதடைவிதித்துள்ளது என்று குழுவின் தலைவர் ஜக் வூப் கெலன் பேகர் தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கான மக்களின் நிலைமை குறித்து அறிவதற்காக அனைத்து முகாம்களுக்கும் செல்ல அனுமதி தரப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“சில முகாம்களுக்கு மாத்திரம் செல்லவே எமக்கு அனுமதி தரப்படுகிறது. ஆனால், சில முகாம்களுக்குச் செல்ல அனுமதி தரப்படுவதில்லை. அத்துடன், மெனிக்பாம் முகாமின் சில பகுதிகளுக்குச் செல்லவும் அனுமதி தரப்படுகின்றது. பாதுகாப்புக் காரணங்களுக்காக சிலர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அரசுஎங்களுக்கு எந்தளவிற்குப் பணியாற்ற அனுமதியளிக்கும் என்று தெரியவில்லை. அத்துடன் முகாம்களில் உள்ள மக்களுக்கு உணவு, குடிதண்ணீர் மற்றும் மருத்துவ உதவிகள் போன்றன தேவைப்படுகின்றன”  என்று அவர் மேலும் குறிப்பிட்டார். 

அம்பாறையில் இரு தரப்பும் மோதல் – புலிகளின் 11 சடலங்கள் மீட்பு

அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு காட்டுப் பகுதியில் நேற்று இராணுவ கொமாண்டோ படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையொன்றின் போது 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர் என பாதுகாப்புத் தரப்பு கூறுகின்றது.

அந்த காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் மறைவிடமொன்று சுற்றி வளைக்கப்பட்ட சமயம் இரு தரப்பினருக்குமிடையில் மோதல் இடம் பெற்றது என்று தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்புத் தரப்புத் தகவல்களின்படி குறிப்பிட்ட 11 சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள அதேவேளை, படையினருக்கு எத்தகைய சேதங்களும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. சம்பவத்தின் பின்பு ரி  56 ரகத் துப்பாக்கிகள்  05, கிளேமோர்க் குண்டுகள்  20, கைக்குண்டுகள்  02, மிதி வெடிகள்  02 மற்றும் ஒரு தொகுதி மருந்துப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.                                   

ஐ நா வின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு வெற்றி

uno.jpgஇலங்கை விவகாரம் குறித்து ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடந்த அவசர மாநாட்டில் இலங்கை அரசாங்கத்ததுக்கு சாதகமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் போரின் பொழுது இலங்கைப் படைகளாலும், விடுதலைப்புலிகளாலும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரியும் மற்றும் இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு உதவி நிறுவனங்கள் சென்றுவர தடையற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று கோரியும் ஐரோப்பிய நாடுகள் உட்பட 17 நாடுகளால் கிட்டத்தட்ட இலங்கை அரசாங்க கருத்துக்கு முரணான தீர்மானம் ஒன்று இந்த சந்திப்பில் முன்வைக்கப்பட்டது.

இறுதியாக இந்த தீர்மானத்தில் இணக்கத்தை காணும் வகையில் சில மாற்றங்களுடன் அது வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ஆயினும் அந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. அந்த தீர்மானத்துக்கு எதிராக 22 வாக்குகளும், ஆதரவாக 17 வாக்குகள் அளிக்கப்பட்டன. 8 நாடுகள் அந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

அதேவேளை, இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்காக சர்வதேச உதவி கோரும் தீர்மானம் ஒன்று இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டது. அந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது அது வெற்றி பெற்றுள்ளது.  அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 29 வாக்குகளும், எதிராக 12 வாக்குகளும் கிடடைத்தன. 6 நாடுகள் அந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.