இலங்கையில் மீள்கட்டுமானப் பணிகளுக்கு ரஷ்யா தொடர்ந்தும் உதவும்

russia_s.pngஇலங் கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் மீள்கட்டுமாணப் பணிகளை மேற்கொள்வதற்காகவும் ரஷ்யா தொடர்ந்தும் உதவிகளை வழங்குமென அந்நாட்டு ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் சமகால நிலைவரங்கள் குறித்து இரு தலைவர்களும் நேற்று தொலைபேசி மூலம் கலந்துரையாடியனார்கள். இக்கலந்துரையாடலின்போதே ரஷ்ய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ரஷ்யா, இலங்கையை ஒரு நீண்டநாள் நண்பனாகவே கருதுவதாகத் தெரிவித்த அந்நாட்டு ஜனாதிபதி இரு நாடுகளுக்குமிடையிலான சிறந்த நல்லுறவைத் தொடர்ந்தும் கட்டியெழுப்பப்போவதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்ட அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ரஷ்யா வழங்கிய காத்திரமான உதவிகளுக்காக ரஷ்ய ஜனாதிபதிக்கு இவ்வுரையாடலின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்தார்.

புலிகளால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அப்பாவித் தமிழ் பொதுமக்களை அவர்களிடமிருந்து விடுவிக்கின்ற மனிதாபிமான நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் சர்வதேச மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவந்த பல்வேறு முயற்சிகளின்போது ஐ.நா. பாதுகாப்புச் சபையிலும் ஐ.நா. மனித உரிமை பேரவையிலும் இலங்கைக்கு ரஷ்யா வழங்கிய ஆதரவுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்தும் வகையில் ரஷ்ய ஜனாதிபதியை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதாக இத்தொலைபேசி உரையாடலின்போது உடன்பாடு காணப்பட்டது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *