October

October

ஜனாதிபதி அனுரவை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய (EU) பிரதிநிதிகள் குழு !

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ (H.E. Carmen Moreno) தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய (EU) பிரதிநிதிகள் குழு நேற்று வெள்ளிக்கிழமை (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர்.

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விளக்கமளித்ததுடன், சுற்றுலாப் பயணிகள் மற்றும் இலங்கை மக்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு அண்மைக்காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவித்தார்.

முக்கிய சுற்றுலாப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவசர சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் முக்கியமான பங்காளியாகவுள்ளதோடு, இலங்கையின் இரண்டாவது பாரிய ஏற்றுமதி மற்றும் சுற்றுலா சந்தையாகவும் மூன்றாவது பாரிய இறக்குமதி சந்தையாகவும் செயல்படுகிறது.

இலங்கைக்கான தனது சந்தை பிரவேசத்தை விரிவுபடுத்தல், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு ஆதரவளிப்பதற்கான தமது அரப்பணிப்பை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இதன்போது ஜனாதிபதியிடம் உறுதிப்படுத்தினர்.

அத்துடன், அறிவுப் பரிமாற்றம், கல்வி, சமூகப் பாதுகாப்பு மற்றும் ஊழலுக்கு எதிரான முயற்சிகளில் புதிய பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என அவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.

தொழிற்கல்வி, கடல்சார் விவகாரங்கள், முதலீடு, அமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை வலுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் அர்ப்பணிப்பை தூதுக்குழு வலியுறுத்தியதுடன், இந்த பொதுவான முன்னுரிமைகளை முன்னெடுப்பதற்கு நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படுவதாகவும் உறுதி செய்தது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலை அமைதியான முறையில் நடத்திய இலங்கைக்கு தூதுக்குழுவினர் பாராட்டு தெரிவித்ததுடன், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்து, நெதர்லாந்து, பிரான்ஸ், ருமேனியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் தமது நாடுகளின் ஜனாதிபதிகள் அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்திகளை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

இத்தாலிய தூதுவர் டெமியானோ பிராங்கோவிக் (Damiano Francovigh), ருமேனியாவின் தூதுவர் ஸ்டெலுடா அர்ஹைர் Steluta Arhire, நெதர்லாந்து தூதுவர் பொனி ஹொபெக் (Bonnie Harbach), பிரான்சின் தூதுவர் மாரி-நோயில் டூரிஸ் (Marie-Noelle Duris),ஜெர்மனித் தூதுரகத்தின் பிரதிநிதி ஒல்ப் மெல்ஷோ (Olaf Malchow), நெதர்லாந்தின் பிரதித் தூதுவர் இவாம்ஸ் ரட்ஜன்ஸ் (Iwams Rutjens) ஆகியோர் ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

பொதுதேர்தல் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் !

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் சசிகலா ரவிராஜ் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியினர் தமது உண்மை முகங்களை தற்போது வெளிக்காட்டி தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிட்டனர் – முருகேசு சந்திரகுமார்

தேசிய மக்கள் சக்தியினர் தமது உண்மை முகங்களை தற்போது வெளிக்காட்டி தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிட்டனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை (26) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஏராளமான சுயேட்சை குழுக்கள் களமிறங்கி வாக்குகளை சிதைக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் யார் என்பது பற்றி மக்கள் மத்தியில் தெளிவு இருக்கிறது.

ஐக்கிய மக்கள் சக்தியில் நாம் தேர்தலில் போட்டியிடுகிறோம். ஐக்கிய மக்கள் சக்தியில் மாத்திரமே தான் சிறுபான்மையினர் போட்டியிடுகின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மாத்திரமே சிறுபான்மையினர் மீது அக்கறை உள்ளவர்கள். கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இனவாதி அல்ல. அவரே சிறுபான்மையினர் மீது அக்கறை கொண்டவர்.

தேசிய மக்கள் சக்தியினரின் உண்மை முகங்கள் தற்போது வெளிவர தொடங்கிவிட்டது. அவர்களே எல்லாம் என்ற மாயை உருவாகி அலை ஒன்று ஏற்பட்டிருந்தது.

தற்போது அதன் உண்மை வெளிவர தொடங்கிவிட்டது. ரில்வின் சில்வாவின் கருத்து, அவர்கள் யார் என்பதனையும் அவர்களின் உண்மை முகங்களையும் காட்டுகின்றது.

தமிழ் மக்களின் இன பிரச்சினைக்கு ஒழுங்கான தீர்வு திட்டம் எதுவும் அவர்களிடம் இல்லை. தமிழ் மக்களுக்கு பொருளாதார பிரச்சினை தான் இருக்கிறது என கூறுகின்றனர். தமிழர்களுக்கு சோற்றுக்கு தான் பிரச்சினை என சொல்கின்றனர்.

தமிழ் மக்கள் மத்தியில் அவர்கள் செல்வாக்கை இழந்துவிட்டார்கள். சஜித் பிரேமதாச தலைமையில் தான் பாராளுமன்றம் அமையும். அவரே பிரதமராக பதவியேற்பார்.

ஊழலற்ற நேர்மையானவர்களே நாடு முழுவதும் சஜித் தலைமையில் போட்டியிடுகின்றனர் என்றார்.

அதேவேளை குறித்த ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளரும் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளருமான உமாச்சந்திர பிரகாஷ் கருத்து தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் கூட்டணியாக நாங்கள் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகிறோம். தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சி பீடம் ஏறி எதனையும் செய்யவில்லை.

குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழர்கள் மற்றும் மலையக தமிழர்கள் என எவருக்கும் எதுவும் செய்யவில்லை. அவர்கள் இனியும் செய்யப்போவதில்லை.

எனவே தான் சஜித் பிரேமதாச தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும். யார் மக்கள் பிரதிநிதியாக போக வேண்டும் என்பதனை மக்கள் தான் தெரிவு செய்ய வேண்டும்.

தேசிய மக்கள் சக்தியின் தமது கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்பது ஜனநாயகம் அல்ல. வேட்பாளர். தெரிந்தவர் அறிந்தவர் அயலவர்கள் என வாக்களித்து வாக்கை சிதறடிக்க வேண்டாம் என்றார்.

ஈரான் மீதும் தாக்குதல்களை ஆரம்பித்த இஸ்ரேல்!

ஈரானின் இராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளதாக இன்று (26) அதிகாலை இஸ்ரேல் இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில், இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்களாக நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலடி நடவடிக்கையாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

ஈரானில் உள்ள ஆட்சியும் பிராந்தியத்தில் அதன் பினாமிகளும் அக்டோபர் 7 முதல் இஸ்ரேலை இடைவிடாமல் தாக்கி வருகின்றனர்.

ஈரானிய மண்ணில் இருந்து நேரடி தாக்குதல்கள் உட்பட ஏழு முனைகளில். உலகில் உள்ள மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் பதிலளிக்கும் உரிமையும் கடமையும் உள்ளது.

 

எங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழுமையாக அணிதிரட்டப்பட்டுள்ளன.

 

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டையும் இஸ்ரேல் மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்” எனவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://x.com/IDF/status/1849957541301666038?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1849957541301666038%7Ctwgr%5E51f5d1ee7e637168403b952cb60dff3e96a0f045%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamilwin.com%2Farticle%2Fisrael-began-to-attack-iran-1729909552

 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவிற்கும் ஈ.பி.டி.பி. கட்சியினருக்கும் இடையே சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவிற்கும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றது.

 

இச்சந்திப்பின் போது, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பணியாற்றிய காலப் பகுதியில், அடையாளம் கண்டு சிபார்சு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை தொடர்வது, மற்றும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருத்த திட்டங்களை ஆரம்பிப்பது மற்றும் முன்னுரிமைப்படுத்தப்பட்ட 38 விடயங்கள் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவினால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

 

இந்த சந்திப்பில் நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி. கணிசமான ஆசனங்களை பெற்று நாடாளுமன்றம் வரவேண்டும் என்ற வாழ்த்துக்களை ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண மக்கள் அனுர குமாரவின் பக்கம் தான் நிற்கிறார்கள் – யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட NPP முதன்மை வேட்பாளர் இளங்குமரன்!

முன்பள்ளி முதல் மும்மொழி அறிமுகம்!

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தகுந்த சம்பளம்!!

புலம்பெயர்ந்தவர் உதவியோடு வடக்கில் தொழிற்சாலைகள் அமையும்!!!

தேசிய மக்கள் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் இளங்குமரன் உடனான நேர்காணல்.

 

 

திட்டமிட்ட சீமான் என் படம் தொடர்பில் பொய் பிரச்சாரம் செய்கிறார் – ஒற்றைப்பனைமரம் இயக்குனர் புதியவன் இராசையா!

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் காலத்து கதைக்களத்தை மையமாக கொண்டு புதியவன் இராசையா உருவாகியுள்ள ஒற்றைப்பனை மரம் பலத்த சர்ச்சைகளை சந்தித்து வரும் நிலையில் குறித்த படம் தொடர்பில் திட்டமிட்ட குற்றச்சாட்டுகளை சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியினர் முன்வைப்பதாக குறித்த படத்தின் இயக்குனர் தனது முகநூல் பதிவு ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த முகநூல் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதன் படி;

நாம் தமிழர் கட்சி எனது திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடக் கூடாது என்று அறிக்கை விட்டிருக்கிறது. மீறி திரையிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று மிரட்டியிருக்கிறார்கள்.

சில திரையரங்க உரிமையாளர்கள் அறிக்கையைப் பார்த்தபின் தங்கள் திரையரங்குகளிலும் படத்தை திரையிடுமாறு கேட்கிறார்கள்.

எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அது மட்டுமல்லாது அண்டைய மாநிலங்களிலிலும் திரையரங்க உரிமையாளர்கள் கேட்கத் தொடங்கியுள்ளார்கள்.

கேரளாவில் இதுவரை பத்து திரையரங்கங்கள் உறுதிசெய்து விட்டன.

என் மண்ணைப் பற்றி, என் மக்களின் வாழ்வியலைப் பற்றி என் அரசியல் சார்ந்து படம் செய்வது எனது உரிமை. படத்தைப் பார்த்து ஆதரிப்பதும் நிராகரிப்பதும் பார்வையாளர்கள் உரிமை…

அறிக்கையில் சொல்கிறார் , படம் பொய்ப்பிரச்சாரம் செய்கிறதாம் அப்போ இவர் சொல்லிறதெல்லாம்……

விதானையார் இடையில எதுக்கு கெம்பிறார். ” என குறித்த பதிவில் இயக்குனர் புதியவன் இராசையா குறிப்பிட்டுள்ளார்.

பேருந்துகளில் சிறுமிகளிடம் அத்துமீறினால் ஐந்து ஆண்டுகள் சிறை !

பேருந்துகளில் பயணிக்கும் சிறுமிகளை தகாத முறைக்கு உட்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

பேருந்துகளில் பயணிக்கும் பெண்களில் 80 வீதமானவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

 

பெரும்பாலான சிறுவர்கள் மதகுருமார்களால் தகாத முறையிலான துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாக அதிகார சபையின் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.

 

அவ்வாறு செயல்படும் மதகுருமார்கள் மீது ஆணையம் வழக்குப் பதிவு செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அதிகாரசபையில் நேற்று இடம்பெற்ற செயலமர்வில் பணிப்பாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

பெற்றோரின் குடும்பத் தகராறுகள் குழந்தைகளை கடுமையாகப் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வர் எழுதியிருந்த இறுதி உயில் சுருக்கம்: – ராஜசங்கீதன்

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வர் எழுதியிருந்த இறுதி உயில் சுருக்கம்:

 

இந்த வார்த்தைகளை எழுதுகையில் என் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் எண்ணி பார்க்கிறேன். சந்துகளில் திரிந்திருந்த பால்யகாலம் தொடங்கி பல வருட சிறைவாசம் வரையான வாழ்க்கையையும் இந்த நிலத்தில் சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி ரத்தத்தையும் நினைவுகூருகிறேன்.

 

1962ம் ஆண்டில் நான் கான் யூனிஸ் முகாமில் பிறந்தேன். பாலஸ்தீனம் கிழித்தெடுக்கப்பட்டு நினைவாக மட்டுமே எஞ்சியிருந்த காலக்கட்டம் அது. அரசியல்வாதிகளின் மேஜைகளில் மறக்கப்பட்ட வரைபடமாக பாலஸ்தீனம் கிடந்தது.

 

நெருப்புக்கும் சாம்பலுக்கும் இடையில் வளர்ந்தவன் நான். ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் வாழ்வது, நிரந்தர சிறைவாசம் என்பதை வாழ்க்கையின் தொடக்கத்திலேயே புரிந்திருந்தேன்.

 

இங்கு பிறக்கும் ஒவ்வொருவரும் தன் நெஞ்சில் உடையாத ஓர் ஆயுதத்தை ஏந்தியிருக்க வேண்டும். விடுதலைக்கான தூரம் நெடியது என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.

 

முதன்முறையாக 1988ம் ஆண்டில் சிறைக்கு சென்றேன். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இருள் நிறைந்த அந்த சிறைகளின் ஒவ்வொரு சுவரிலும் தூரத்து அடிவானத்துக்கான ஒரு ஜன்னலை நான் கண்டேன். ஒவ்வொரு சிறையிலும் விடுதலைக்கான வழி காட்டும் வெளிச்சம் தெரிந்தது,.

 

பொறுமை என்பது பண்பல்ல, ஆயுதம் என்பதை சிறையில் கற்றுக் கொண்டேன். மிகவும் கடுமையான ஆயுதம் அது. ஒவ்வொரு துளியாக மொத்த கடலையும் குடிக்க முனையும் ஒருவரின் முயற்சிக்கு நிகரான ஆயுதம்!

 

என்னுடைய அறிவுரை இதுதான்: சிறைகளுக்கு அஞ்சாதீர்கள். விடுதலைக்கான நெடும்பாதையின் அங்கங்கள் அவை.

 

விடுதலை என்பது வலியில் பிறப்பது; பொறுமையில் பக்குவப்படுவது! 2011ம் ஆண்டு “வஃபா அல் அஹ்ரார்” ஒப்பந்தத்தில் நான் விடுவிக்கப்பட்ட போது, போராட்டத்தை விட்டுச் சென்றுவிட வில்லை. வலிமை பெற்றிருந்தேன். நம்பிக்கை அதிகமாகி இருந்தது. நாம் முன்னெடுப்பது சாதாரண போராட்டமல்ல என்பதையும் நம் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நாம் சுமக்கும் விதி போராட்டம்தான் என்பதையும் புரிந்து கொண்டேன்.

 

என்னுடைய அறிவுரை, துப்பாக்கியையும் வழுவாத சுயமரியாதையயும் அழிவுறா நம் கனவையும் கைவிட்டு விடாதீர்கள் என்பதுதான். நம் போராட்டத்தை நாம் கைவிட்டுவிட வேண்டுமென எதிரி விரும்புகிறான். நம் நோக்கத்தை நெடிய பேச்சுவார்த்தை மூலம் நீர்த்துப் போக வைக்க விரும்புகிறான்.

 

ஆனால் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் உரிமை பெற்றிருக்கும் ஒரு விஷயத்துக்காக பேச்சுவார்த்தை நடத்தாதீர்கள். உங்களின் ஆயுதங்களை விட, உங்களின் உறுதி அவர்களை அச்சுறுத்துகிறது.

 

போராட்டவுணர்வு என்பது நமக்கான ஆயுதம் மட்டுமில்லை, நம் சுவாசத்தில் பாலஸ்தீனத்தின்பால் நாம் கொண்டிருக்கும் அன்பு அது; ஆக்கிரமிப்பும் படையெடுப்பும் தாக்குதலும் தொடர்ந்தாலும் இங்கு நாம் தொடர்ந்து நீடிப்பதற்கான பற்று அது!

 

உயிரிழந்த ஈகியரின் ரத்தத்துக்கு உண்மையாக இருங்கள். முட்களாலான பாதையில் நமக்கான விடுதலைப் பாதையை தங்களின் ரத்தம் கொண்டு போட்டவர்கள் அவர்கள்தான். அரசியல்வாதிகள் தரும் கணக்குகளுக்காகவும் அரசப் பிரதிநிதிகள் காட்டும் ஆட்டத்துக்காகவும் அவர்களின் ஈகையை விரயமாக்கி விடாதீர்கள்.

 

முன்னவர்கள் தொடங்கியதை முடிக்கத்தான் நாம் இங்கு இருக்கிறோம். என்ன விலை கொடுக்க நேர்ந்தாலும் இந்த பாதையிலிருந்து நாம் விலகிடக் கூடாது. பூமியே நம்மை குறுக்கினாலும் உறுதிப்பாட்டின் தலைநகரமாகவும், தொடர்ந்து துடிக்கும் பாலத்தீன இதயமாகவும் காசா இருக்கும்.

 

2017ம் ஆண்டில் ஹமாசின் தலைவராக நான் ஆனபோது, வெறும் அதிகாரப் பரிமாற்றமாக அதை நான் பார்க்கவில்லை. கற்களால் தொடங்கி துப்பாக்கிகளால் தொடரும் ஒரு பெரும் போராட்டத்தின் தொடர்ச்சியாகதான் பார்த்தேன்.

 

விடுதலையை நோக்கி நாம் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு விலையை கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்திருந்தேன். ஆனால் ஒன்றை மறந்து விடாதீர்கள். சரணடைவதால் நாம் கொடுக்கும் விலை இவற்றை விட மிக அதிகமாக இருக்கும். எனவே வேர், மண்ணை பிடித்திருப்பது போல், இந்த நிலத்தை பிடித்திருங்கள். வாழ வேண்டுமென முடிவெடுத்து விட்ட மக்களை எந்தக் காற்றாலும் பெயர்த்தெடுக்க முடியாது.

 

அல் அக்ஸா போர், உடல்களுக்கு எதிரான ஆன்மாக்களின் போர்; ஆயுதங்களுக்கு எதிரான உறுதியின் போர்!

 

நான் விட்டுச் செல்வது என் தனிப்பட்ட மரபு அல்ல, ஒரு கூட்டு மரபு! விடுதலைக் கனவு கொண்ட ஒவ்வொரு பாலஸ்தீனருக்கும், உயிர் துறந்த மகனை தோளில் சுமந்த ஒவ்வொரு தாய்க்கும், தோட்டா உயிர் குடித்த மகளை சுமந்த ஒவ்வொரு தந்தைக்கும் அந்த மரபை நான் விட்டுச் செல்கிறேன்.

 

போராட்டம் வீண் போகாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். போராட்டம் என்பது துப்பாக்கியின் தோட்டா மட்டும் அல்ல, நாம் மதிப்புடனும் மரியாதையுடனும் வாழ்வதற்கான அடிப்படையும் அதுதான்.

 

உலகம் நீதி வழங்கும் என எதிர்பார்க்காதீர்கள். நம் வலியை வெறுமனே உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தற்கு நானே சாட்சி. நீதியை எதிர்பார்க்காதீர்கள்; வழங்குங்கள்! பாலஸ்தீனர்களின் கனவை நெஞ்சில் ஏந்துங்கள். ஒவ்வொரு காயத்தையும் ஆயுதம் ஆக்குங்கள். ஒவ்வொரு கண்ணீரிலும் நம்பிக்கையை பெற்றெடுங்கள்.

 

இதுவே என் உயில். உங்களின் ஆயுதங்களை ஒப்படைக்காதீர்கள். கற்களை கீழே போடாதீர்கள். ஈகியரை மறந்திடாதீர்கள். நீங்கள் உரிமை கொண்டிருக்கும் கனவை காவு கொடுத்து விடாதீர்கள்.

 

நாம் இங்குதான் இருப்போம். நம் நிலத்தில், நம் நெஞ்சங்களில், நம் குழந்தைகளின் எதிர்காலத்தில் நாம் இருப்போம்.

 

இறுதி வரை நான் நேசித்த நிலத்தையும் பெருமலை போல் என் தோள்களில் சுமந்த கனவையும் உங்களிடம் ஒப்படைக்கிறேன்.

 

நான் வீழ்ந்தால், நீங்களும் வீழ்ந்திடாதீர்கள். என்றுமே வீழாத பதாகையை எனக்காக ஏந்துங்கள். என் ரத்தத்தை, ஒரு தலைமுறை வலிமை பெறுவதற்கான பாலமாக மாற்றுங்கள்.

 

சொந்த நிலம் என்பது சொல்வற்கான கதையல்ல, வாழ்வதற்கான யதார்த்தம் என்பதை மறந்து விடாதீர்கள்.

 

உயிரை ஈகை செய்த ஒவ்வொருவரிடமிருந்தும் ஆயிரக்கணக்கான போராளிகள் பிறப்பார்கள்.

 

மீண்டும் போர் வருகையில் நான் உங்களுடன் இல்லாது போயிருந்தால், விடுதலைக்கான அலைகளின் முதல் துளி நான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

– Rajasangeethan

இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடியால் குறைந்த உக்ரைனின் மக்கள் தொகை!

இந்தியா மற்றும் சீனாவில் மக்கள் தொகை பெருக்கம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் நிலையில், உக்ரைனில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் மக்கள் தொகை 1 கோடி குறைந்துள்ளது.

இந்தியாவில் மக்கள் தொகை ஒரு பெரிய பிரச்சனையாக கருதப்படுகிறது. இந்தியாவில் அதன் பெரும் மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான வளங்கள் இல்லை என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். மறுபுறம், உலகின் அனைத்து வளர்ந்த நாடுகளிலும் மக்கள் தொகை குறைவாக உள்ளதுடன், அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் நன்றாக உள்ளது.

ரஷ்யாவுடன் உக்ரைன் போர் துவங்கிய பின், கடந்த இரண்டரை ஆண்டுகளில் மக்கள் தொகை சுமார் ஒரு கோடி குறைந்துள்ளது. உக்ரைன் பிறப்பு விகிதம் ஏற்கனவே மிகக் குறைந்த அளவில் இருக்கும் நாடு. இங்கு சராசரியாக ஒரு பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அதாவது பிறப்பு விகிதம் ஒரு சதவீதம். மக்கள்தொகையின் தற்போதைய சூழ்நிலையை பராமரிக்க, குறைந்தபட்ச பிறப்பு 2.1 சதவீதம் தேவைப்படுகிறது.

பிப்ரவரி 2022 இல் ரஷ்யாவுடனான போர் தொடங்கிய பின்னர் உக்ரைனில் மக்கள்தொகை நிலைமை மோசமடைந்து வருவதாக கிழக்கு ஐரோப்பாவுக்கான ஐநா மக்கள் தொகை நிதியத்தின் தலைவர் புளோரன்ஸ் பாயர் ஜெனீவாவில் நடந்த மாநாட்டில் கூறினார். இந்த காலகட்டத்தில் உக்ரைனில் பிறப்பு விகிதம் ஒரு சதவீதமாக குறைந்துள்ளதாக அவர் கூறுகிறார்.

1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சிதைந்த பிறகு உருவான உக்ரைன், அப்போது ஐந்து கோடி மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. ஆனால், அதன் பிறகு இங்கு மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. உண்மையில், உக்ரைனை ஒட்டியுள்ள கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் இந்தப் பிரச்சனை எழுந்துள்ளது.

ரஷ்யாவுடனான போர் காரணமாக மக்கள் தொகை குறைவதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்த போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது தொடர்பாக உக்ரைன் அரசு அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இந்த காலகட்டத்தில் மக்கள் தொகை குறைவதற்கு உக்ரைனில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்ததே மிகப்பெரிய காரணம். தற்போது சுமார் 67 லட்சம் உக்ரைனியர்கள் வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதேபோன்று, உக்ரைனில் உள்ள கிராமங்கள் காலியாக தொடங்கியுள்ள நிலையில், வீடுகளில் முதியவர்கள் மட்டுமே உள்ளனர். இளம் தலைமுறையினர் வேகமாக நாட்டை விட்டு வெளியேறி வருவதால், குடும்பத்தில் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்ள ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.