October

October

நீக்கப்படும் முன்னாள் அமைச்சர்கள், ஜனாதிபதிகளின் சலுகைகள் – மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்து !

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் எம்.பிக்களின் பாதுகாப்பு மற்றும் இதர அரச சேவைகள் நிறுத்தப்பபடும் என அநுர தலைமையிலான அரசாங்கம் தெரிவித்து அதனை படிப்படியாக நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் இந்த பாதுகாப்பு சேவை நீக்கப்படுவது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து தெரிவித்துள்ளார்.

தாம் பிரமுகர்களின் பாதுகாப்பை விரும்பும் நபர் அல்ல எனவும், பிரமுகர்களின் பாதுகாப்பை நீக்கினால் பிரச்சினையில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (30) தெரிவித்துள்ளார்.

தான் எந்த தவறும் செய்யாத காரணத்தினால் எவரும் தம்மை கொல்லவோ அடிக்கவோ முயற்சிக்க மாட்டார்கள் என நம்பிக்கையுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒருவர் மனநலம் குன்றியவர்போல நடந்து கொண்டால் மட்டுமே இதுபோன்ற வன்முறைகள் சாத்தியமாகும் என்றார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படாத நிலையில், அமைச்சர்கள் உள்ளிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகளே மீள அழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை திணைக்களம் நேற்று முன்தினம்(29) தெளிவுபடுத்தியுள்ளது.

ஐ.தே.க சிறிகொத்த கட்சித் தலைமையகத்திற்கு முன்பாக போராட்டம் !

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் களமிறங்க வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று சிறிகொத்த கட்சித் தலைமையகத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் கெஸ்பேவை தொகுதி அமைப்பாளர் உபுல் மலேவன தலைமையிலான குழுவினரே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டால் ஐக்கிய தேசியக் கட்சியானது, எஞ்சியிருக்கும் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பல தலைவர்களை இழக்கக்கூடும் என்றும் இவர்கள் தெரிவித்திருந்தனர்.

எனவே, யானை சின்னத்திலேயே பொதுத் தேர்தல் உள்ளிட்ட எதிர்வரும் தேர்தல்களில் கட்சி களமிறங்க வேண்டும் என்றும் இவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலில் சாதகமான பதில் கிடைத்தமையால், போராட்டம் நிறுத்தப்பட்டது.