October

October

யாழ்ப்பாணத்தில் ஆடையகத்தை தீயிட்டு கொளுத்திய வன்முறை கும்பல்!

யாழ்ப்பாணம் – நெல்லியடியில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள ஆடையகமொன்று வன்முறைக் கும்பலினால் நேற்று இரவு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

மூன்று பேர் கொண்ட குழு ஆடையகத்தை சேதப்படுத்தி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இதன் காரணமாக பெறுமதியான ஆடைகள் தீயில் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த ஆடையகத்தில் சில வாரங்களுக்கு முன்பும் நுழைந்த வன்முறைக் கும்பல் தீ வைக்க முயன்று தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக பொறுப்பேற்றார் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க!

வினைத்திறன்மிக்க மக்கள்நல அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

குடிமக்களுக்காக பாடுபடும் அரச அதிகாரிகள் அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுக்கும் நிலை இதுவரை காலமும் இருந்தபோதும் அந்த சம்பிரதாயம் இனிமேலும் நடக்காது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக இன்று (03) காலை கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விவசாய அமைச்சின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடினார்.

கிராமிய வறுமையை ஒழிப்பதற்காக விவசாய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள பங்களிப்பு மகத்தானது எனவும், அரச அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு அமைவாகவே வறுமை ஒழிக்கப்படுமா இல்லையா என்பது தீர்மானமாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் புதிய அரசியல் சம்பிரதாயம் மற்றும் பழைய அரசியல் கலாசாரத்திற்கு எதிரான எதிர்ப்பு, பிரஜைகள் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள், அரச சேவையின் செயற்பாடு தொடர்பான பிரஜைகளின் அதிருப்தி போன்றன தாக்கம் செலுத்தியதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

எனவே, வினைத்திறன் மிக்க மக்கள் நல அரச சேவையை உருவாக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னால் மோசடி மற்றும் ஊழல் இருப்பதாக மக்கள் நம்புவதாகவும், அதனை தடுப்பதற்காகவே இம்முறை மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரச கட்டமைப்பு முழுவதும் பரவியுள்ள பாரிய மோசடிகள் மற்றும் ஊழலை தடுத்து நிறுத்துவதற்கு மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவதாகவும், அரச ஊழியர்கள் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் அரச ஊழியர்களிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

பிரஜைகளை திருப்திப்படுத்தும் வகையில் வினைத்திறன் மற்றும் செயற்திறன் மிக்க அரச சேவையை உருவாக்க தற்போதைய அரச உத்தியோகத்தரின் அர்ப்பணிப்பு அவசியமானது எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

அரச சேவையில் இதுகாலவரை இடம்பெற்று வந்த அரசியல் பழிவாங்கல், இடமாற்றம், அரச சேவையில் பதவி உயர்வு வழங்காமை போன்ற செயற்பாடுகள் தமது அரசாங்கத்தின் கீழ் இடம்பெறாது என வலியுறுத்திய ஜனாதிபதி, மக்களை திருப்திப்படுத்தும் வினைத்திறன்மிக்க அரச சேவையை உருவாக்குவதற்கு அரச உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

 

எதிர்வரும் நாற்பது நாட்கள் நிலைமாற்ற காலமாகும் எனவும், அந்த காலப்பகுதியில் அரச சேவையை வீழ்ச்சியடையாமல் பேணுவதற்கு அரச உத்தியோகத்தர் பாடுபட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் இந்த அமைச்சுக்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி சூசகமாக தெரிவித்தார்.

 

முன்பிருந்த அரச தலைவர்கள், அரச அதிகாரிகளை ஊடகங்களுக்கு முன்பாக கேள்வி எழுப்பியது போன்று தான் ஊடகங்களுக்கு முன்னால் அரச அதிகாரிகளை கேள்வி கேட்கப் போவதில்லை எனவும், இவ்வாறான ஊடகக் கண்காட்சிகளை தான் ஏற்கவில்லை எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

 

அரசு ஊழியரின் கண்ணியத்தைப் பாதுகாத்து குடிமக்கள் திருப்தியடையும் அரச சேவையை உருவாக்க தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

மதுபானசாலைகளுக்கான அனுமதிகளை பெற்றுக்கொண்ட அரசியல்வாதிகளின் பெயர்கள் உடனடியாக பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்- எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள்!

கடந்த ஆட்சியில் மதுபானசாலைகளைப் பெற்று வழங்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் அனைவரது பெயர்களையும் தற்போதைய அரசு உடனடியாகப் பகிரங்கப்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

கொழும்பில் நேற்று (2.10.2024) புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே எம்.ஏ.சுமந்திரன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று நாடு முழுவதும் மதுபானச் சர்ச்சை நிலவுகின்றது. இதனால் அந்தப் பட்டியலை அரசு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்.எந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அரசியல்வாதிகள் சிபார்சு செய்து இந்த அதிகூடிய சாராயக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும்.

அது தேர்தலுக்கு முன்பு தெரிய வந்தால்தான் அப்படியானவர்களை விலக்கி வைக்கலாம். இது ஒரு சமூக விரோதச் செயற்பாடு. நாட்டிலே மதுபோதை தொடர்பில் சமூக மட்டத்தில் பெரும் பிரச்சினை எழுந்துள்ளது.

இளையவர்களுக்கு இதனால் பாதிப்பு இருக்கின்றது. அப்படியான நிலையிலும் மதுபானசாலைகளை அதிகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள், இரகசியமாக ஈடுபட்டவர்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

அவர்களது பெயர்கள் தெரிய வேண்டும். இது மட்டுமன்றி பணத்துக்கு ஆதாயமாக்கியும் உள்ளனர் அதாவது அனுமதிப் பத்திரங்களை விற்றுள்ளனர் என்ற செய்தியும் எட்டியுள்ளது.

ஆகையினால் அவர்கள் யார் என்பதை நாடறிய வெளிப்படுத்த வேண்டும் இதேநேரம் மக்கள் சேவைக்கு வருபவர்களுக்கு மிக அதிகமான சலுகைகள் இதுவரை கொடுக்கப்பட்டுள்ளன.

 

ஆகையினாலே இந்தச் சலுகைகளைக் குறைக்க எமது பூரண ஆதரவு கிடைக்கும். பொருளாதார நெருக்கடி நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இத்தனை சலுகைகள் தேவையற்றது.

அதிகமான சலுகைகளைக் குறைக்கின்றபோது நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர்களது பெயர்கள் தெரிய வேண்டும். இது மட்டுமன்றி பணத்துக்கு ஆதாயமாக்கியும் உள்ளனர் அதாவது அனுமதிப் பத்திரங்களை விற்றுள்ளனர் என்ற செய்தியும் எட்டியுள்ளது.

ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்ஸூக்கு தடை விதித்தது இஸ்ரேல்!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: இஸ்ரேல் மண்ணில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் காலடி எடுத்து வைக்க தகுதியற்றவர்.

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை உலக நாடுகள் கண்டித்தன. இதனை செய்யாமல் மௌனம் காக்கும் யாருக்கும் இஸ்ரேல் மண்ணில் கால் வைக்க தகுதி கிடையாது.

ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி மற்றும் தற்போது ஈரானின் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நபர் இஸ்ரேல் வரலாற்றின் ஒரு கறையாக நினைவு கூரப்படுவார் என தெரிவித்தார்.

இஸ்ரேல் மீது ஈரான் 200-க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதை ஐ.நா பொதுச் செயலாளர் கண்டிக்காதமை இஸ்ரேலை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

34 கட்சிகள் கையெழுத்திட்டு புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டி !

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு சம்பந்தப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு மல் வீதியில் அமைந்துள்ள தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் கூடியிருந்தனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து இயலும் சிறிலங்கா மாநாட்டில் 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் கையெழுத்திட்டிருந்தன.

பாராளுமன்ற தேர்தலில் 25% பெண்களின் உரிமையினை உறுதிப்படுத்த வேண்டும் – பெண் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்

தமிழ் தேசிய கட்சிகளை ஒன்றிணைந்து செயற்படமுன்வருமாறு கோரிக்கை விடுத்துள்ள பெண் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பாராளுமன்ற தேர்தலில் 25% பெண்களின் உரிமையினை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளர்.

நேற்றைய தினம் (02) மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர் மிரேகா நாகேஷ்வரன் மற்றும் மட்டக்களப்பு சிவில் வலையமைப்பின் உறுப்பினர்களான குணரெட்னம் யுனிதா,பிரசாந்தன் பவித்திரா ஆகியோர் கருத்துகளை முன்வைத்தனர்.

வடகிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் 22 பாராளுமன்ற உறுப்பினர்களைப்பெற்றுக்கொண்டோம். ஆனால் ஒற்றுமையின்மை காரணமாக தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையானது அரைவாசிக்கு மேல் குறைந்துள்ளது.ஒற்றுமையில்லாத நிலையே இதற்கு காரணமாகவுள்ளது.

 

வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து தமிழர்களுக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்தவேண்டும்.தங்களுக்குள் இருக்கின்ற வேறுபாடுகளை மறந்து இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்று கோருகின்றோம்.

 

அதேபோன்று பாராளுமன்ற தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும்.கட்சிகள் பேச்சளவிலேயே பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்துபேசுகின்றனர். உளரீதியாக அவர்கள் பெண்களுக்கான பிரதிநித்துவத்தினை வழங்குவதை உறுதிப்படுத்துவதில்லை. வெறுமனே பேச்சளவிலேயே உறுதிகூறுகின்றனர்.

எனவே வடகிழக்கில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியில் பெண்களின் அங்கத்துவத்தினை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

எமது புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் எவரும் நியமிக்கப்பட மாட்டார்கள் – அமைச்சர் விஜித ஹேரத்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் புதிய அரசாங்கத்தை தேசிய மக்கள் சக்தியே அமைக்கும். அந்த அமைச்சரவையில் 25 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இடம்பெறுவர் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அந்த புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் எவரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்த அமைச்சர், அந்தந்த துறைக்கான நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்கும் வகையில் 25 பிரதியமைச்சர்களும் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களே தமது கட்சியில் உள்ளனர்.இதனால் தற்போதைய அரசாங்கத்தில் ஜனாதிபதி பிரதமர் மற்றும் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரே இடம்பெறுகிறார்.இதனால், அமைச்சின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு மக்களுக்கான சேவைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எமது உறுப்பினரான நிபுண ஆரச்சியை மற்றும் ஒரு அமைச்சராக நியமிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் சட்டப் பிரச்சினை காணப்பட்டதால் அதனை மேற்கொள்ள முடியவில்லை.

அடுத்து அமைக்கப்படும் அரசாங்கத்தில் குறைந்தளவு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு மக்களுக்கான நிறைவான சேவை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ராஜபக்ஷ குடும்பத்தினர் மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளை அனுர குமார திசாநாயக்க நிரூபிக்க வேண்டும் – நாமல் ராஜபக்ச

ராஜபக்ச குடும்பத்தினர் உகன்டாவிலும் வேறு பல நாடுகளிலும் மில்லியன் கணக்கான டொலர்களை மறைத்துவைத்திருக்கின்றனர் என்ற தனது குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி நிரூபிக்கவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் நிதி களவாடப்பட்டுள்ளது என ஜனாதிபதியும் அவரது குழுவினரும் பல ஆண்டுகளாக தெரிவித்துவருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தனது குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான தருணம் இது என அவர் தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக சீன அறிவிப்பு!

சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீ ஷென்ஹொங் (Qi Zhenhong) இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தேர்தல் வெற்றிக்கு மனப்பூர்வமான வாழ்த்து தெரிவித்த தூதுவர், இலங்கையின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு சீனா முழுமையான ஒத்துழைப்பை வழங்குமெனவும், சீனா அரசாங்கத்துடனான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த அர்ப்பணிப்பதாகவும் உறுதியளித்தார்.

இலங்கைக்குள் தற்போது ஒத்துழைப்பு அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முக்கியத்துவம் மற்றும் இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பதற்காக சீன அபிவிருத்தி வங்கி (CDB) மற்றும் EXIM வங்கியின் செயற்திறனான தலையீடுகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் அபிவிருத்திக்கு ஒத்துழைக்கும் வகையில் பிரதான வர்த்தக கடன் வழங்குநர் மற்றும் இரு தரப்பு கடன் வழங்குநர் என்ற வகையில், கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் சீன தூதுவர் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.

போர்க்காலத்தில் ஓடி மறைந்து திரிந்தவர்கள் தான் பாராளுமன்றத்தில் வாய்ப்பேச்சில் தமிழ்தேசியம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் – தமிழ்க்கவி அம்மா காட்டம் !

போர்க்காலத்தில் ஓடி மறைந்து திரிந்தவர்கள் தான் பாராளுமன்றத்தில் வாய்ப்பேச்சில் தமிழ்தேசியம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் – தமிழ்க்கவி அம்மா காட்டம் !

 

சமகால அரசியல்- பொருளாதார நிலமைகள் தொடர்பில் எழுத்தாளர் தமிழ்க்கவி அவர்களுடனான தேசம் ஜெயபாலனின் கலந்துரையாடல்..!