October

October

மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு !

2024 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் ஆம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோ ஆர்.என்.ஏ.வின் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக இவர்கள் இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.

இந்த ஆண்டு, மருத்துவத்திற்கு பெருமை சேர்த்த இரு விஞ்ஞானிகளான விக்டர் ஆம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக சுவீடனின் கரோலின்ஸ்கா பயிற்சி மையத்திலிருந்து இன்று அறிவிக்கப்பட்டது.

விக்டர் ஆம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகிய இருவரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் தோல்வியடைந்தால் இரண்டு அணி தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் ஒரு அணி என செயற்படுபவர் தான் சுமந்திரன். – கே.வி. தவராசா குற்றச்சாட்டு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக அதன் கொழும்பு கிளைத் தலைவர் கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.

கட்சியில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து தாம் பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனிநபர்களின் தன்னிச்சையான போக்குக்குள் சிக்குண்டுள்ள தமிழரசு கட்சியுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாது.

தமிழ்த் தேசியத்தை உரிய பலத்துடன் நிலைநாட்டுவதற்கான வழிவகைகள் குறித்து எதிர்காலத்தில் சிந்திப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் கே.வி.தவராசா குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய மேலதிக பேட்டி ஒன்றில் இரா.சம்பந்தன்  மற்றும் மாவை சேனாதிராஜா  ஆகியோரின் ஆளுமையின்மையின் வெளிப்பாடு தான் இன்றைய சுமந்திரனுடைய ஆட்டத்திற்கு காரணம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா  தெரிவித்தார்.

தலைமைத்துவத்தை சரியாக கையாளாமல் விட்டமையினால் இன்று தமிழரசுக்கட்சி தனியொருவரினுடைய கம்பனியாக மாறிவிட்டது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

சுமந்திரனுக்கும் எனக்கும் எந்த முரண்பாடு இல்லை. ஆனால் நான் தமிழரசுக் கட்சியினுள் வந்துவிடக் கூடாது என்பதிலும் நாடாளுமன்றத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதிலும் சுமந்திரன் விசேடமாக அக்கறையாக உள்ளார்.

தேர்தலில் தோல்வியடைந்தால் இரண்டு அணி தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் ஒரு அணி என செயற்படுபவர் தான் சுமந்திரன். அவருக்கு என்ன தேவையோ அந்த நேரத்திற்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக்கொள்வார் என்பது உலகமே அறிந்ததாகும்.

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளருக்கு வாக்களித்த மக்களுக்கு நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழரசுக் கட்சி இவ்வாறு செயற்படுமாக இருந்தால் அதற்கு எவ்வாறு பதிலடி கொடுக்க வேணடுமென தெரியும்.“ என தெரிவித்தார்.

அனைத்து சிறு வழக்குகளுக்கும் இரண்டு வாரங்களுக்குள் தீர்வு வழங்க உத்தரவு !

பொதுமக்களால் முன்வைக்கப்படும் நிலுவையில் உள்ள அனைத்து சிறு புகார்கள் குறித்தும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழரசுக்கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார் மாவை சேனாதிராஜா !

தமிழரசு கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தான் விலகுவதாக நமது கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ள போதிலும் அவர் கடிதம் எதனையும் எனக்கு அனுப்பி வைக்கவில்லை என கட்சியின் செயலாளர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவை சேனாதிராஜா , தான் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீங்கி உள்ளதாகவும் உறுப்புரிமையில் மாத்திரம் தமிழரசுக் கட்சியில் இருப்பேன் எனவும் தெரிவித்ததோடு கட்சியின் செயலாளர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வைத்திய கலாநிதி சத்தியலிங்கத்திடள் இது தொடர்பில் கேட்டபோது, எனக்கு எவ்விதமான கடிதமும் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

வீட்டிலிருந்து வெளியேறி சங்குகட்சியுடன் இணைந்தார் சசிகலா ரவிராஜ் !

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட பெண் வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் பாரியார் திருமதி சசிகலா ரவிராஜ் வேட்புமனுவில் இன்று திங்கட்கிழமை கையெழுத்திட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான சசிகலா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார்.

அந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சியே தனக்கு எதிராகச் சதி செய்தது என்று சசிகலா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், கட்சி மீது கடந்த காலங்களில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்திருந்தார்.

இவ்வாறான நிலையில் இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியில் போட்டியிடுவதற்கு அவர் விண்ணப்பித்திருந்தார். ஆனால், தமிழரசுக் கட்சியில் அவருக்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்படவில்லை.

தமிழரசுக் கட்சியின் இந்த வேட்பாளர் தெரிவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அடாவடித்தனமாகப் பல்வேறு குளறுபடிகளைச் செய்து தனக்கு வேண்டியவர்களுக்கு நியமனத்தைக் கொடுத்துள்ளார் என்று சசிகலா நேற்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதையடுத்து தமிழரசுக் கட்சியில் இருந்து இன்று காலை வெளியேறிய சசிகலா, ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சின்னமான சங்குச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இன்று பிற்பகல் கையெழுத்திட்டுள்ளார்.

ராஜபக்சக்கள் கொள்ளையடித்த மக்கள் பணம் தொடர்பில் ஆளுந்தரப்பு வெளியிட்ட தகவல் !

ராஜபக்ச குடும்பத்தினர் கொள்ளையடித்த மக்கள் பணம் எங்கிருக்கின்றது என்பதை விரைவில் கண்டுபிடித்து வெளிக்கொணர உள்ளதாக வசந்த சமரசிங்க  தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச  உள்ளிட்டவர்கள் கொள்ளையடித்துள்ளதாக குற்றம் சாட்டிய தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வாரங்கள் கடந்துள்ளன.

இந்நிலையில், தங்களுடைய ஊழல்களை இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் போனது ஏன் என்று அண்மையில் நாமல் ராஜபக்ச அதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க, நாமல் ராஜபக்ச ​போன்றவர்கள் கொள்ளையடித்த பணம் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் சொத்துக்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா? வேறு வகையில் பதுக்கப்பட்டுள்ளதா? என்பதை விரைவில் கண்டுபிடித்து வெளிக் கொண்டு வருவோம்.

 

ஊழல்வாதிகள் தாங்கள் இன்னும் மாட்டிக் கொள்ளவில்லை என்று சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கும் கடைசி மணித்துளிகள் ஆகும்.

மிக விரைவில் அவர்கள் கூண்டோடு மாட்டிக் கொண்டு தங்கள் தவறுகளுக்கான தண்டனையை அனுபவிக்க நேரிடும் என கடுமையாக எச்சரித்துள்ளார்.

அறிவிக்கப்பட்டது தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர்கள் விபரம்!

தமிழரசுக் கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தமிழரசுக் கட்சியின் நியமனக்குழு இன்று அறிவித்துள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தமிழரசுக்கட்சியின் வேட்பாளர்களை இறுதி செய்வதற்கான நியமனக்குழு வவுனியாவில் இன்று (06) கூடியது.

அதன் தீர்மானங்களின் படி, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான வேட்பாளர்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், எம்.ஏ. சுமந்திரன், எஸ்சி.சி.இளங்கோவன், கேசவன் சயந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன், சுரேக்கா சசீந்திரன், இமானுவல் அர்னோல்ட், கிருஸ்ணவேணி சிறிதரன், தியாகராஜா பிரகாஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன்,கட்சியின் இளைஞரணி தலைவர் கிருஸ்ணப்பிள்ளை சேயோன், முன்னாள் மேயர் தியாகராஜா சரவணபவன், வைத்தியர் சிறிநாத் ஆகியோர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர் மேலும் இருவர் மட்டக்களப்பு மாவட்டக்கிளையுடன் கலந்துரையாடி இறுதிசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதேவேளை, வன்னித் தேர்தல் மாவட்டம், திருகோணமலை, அம்பாறை தேர்தல் மாவட்டங்களில் இதுவரை தமிழரசுக் கட்சியூடாக போட்டியிடும் வேட்பாளர்கள் நியமிக்கப்படவில்லை.

எனவே, மீண்டும் எதிர்வரும் புதன்கிழமை குறித்த நியமனக்குழு கூடி அங்கு போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் 50 ஆண்டுகள்- முளையிலேயே கிள்ளி எறிய முற்பட்ட தமிழ்தேசிய கனவான்கள்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் 50 ஆண்டுகள்- முளையிலேயே கிள்ளி எறிய முற்பட்ட தமிழ்தேசிய கனவான்கள்!

 

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். – அனுர குமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தும் இந்தியா!

மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது அரசமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த உதவும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

 

நேற்றையதினம் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துப் பேசினார்.

இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

“இலங்கையின் ஐக்கியம், ஆள்புல ஒருமைப்பாடு, இறைமை ஆகியவற்றைப் பேணும் அதேவேளை, தமிழர்கள் உட்பட அனைத்து சமூகத்தினரினதும் சமத்துவம் – நீதி – கௌரவம் – சமாதானம் ஆகியவற்றுக்கான அபிலாஷைகளுக்கு இந்தியா ஆதரவளிக்கின்றது.

 

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த நோக்கத்தை அடைய மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது உதவும்’ என்றுள்ளது.

“சிறீதரனும் நானும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் – வெற்றிபெறுவோம்.” – மத்திய குழு கூட்டத்தின் முடிவில் சுமந்திரன் !

பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவது கடினமாக உள்ளதுடன் நாளையும் வேட்பாளர் தெரிவு முடிவு பெறாது என தமிழரசுக்கட்சியின் ஊடக பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை (05) தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் நியமன குழு இன்று வவுனியாவில் கூடிய நிலையில் அதன் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தேர்தல் நியமன குழுவானது இன்று வவுனியாவில் கூடி மாவட்டம் மாவட்டமாக ஆராய்ந்து இருக்கின்றோம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வாறானவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதும் எந்தெந்த இடங்களிலிருந்து வேட்பாளர்கள் வரவேண்டும் குறிப்பாக இன்றைய நிலையில் மாற்றத்தை இளைஞர் யுவதிகள், படித்தவர்கள் வரவேண்டும் என பெருவாரியான எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். அதற்கு இடம் கொடுத்து எந்த விதமாக இந்த வேட்பாளர்களை நியமிப்பது தொடர்பில் பல சிந்தனைகள் இன்று பரிமாறப்பட்டன.

எனினும் நாங்கள் இன்றைய தினம் எந்த மாவட்டம் தொடர்பிலும் ஒரு தீர்மானம் எடுக்கவில்லை.

எனினும் நாங்கள் கடந்த முறை மத்திய செயற்குழுவிற்குப் பின்னர் அறிவித்ததை போலத் திருகோணமலை மாவட்டம் அம்பாறை தேர்தல் மாவட்டம் சம்பந்தமாக விசேட கரிசனை ஒன்று இருக்கின்றது.

இந்த இரு மாவட்டங்களிலும் ஒரு தமிழ் பிரதிநிதியையே பெற்றுக் கொள்ள முடியும். எனவே தமிழ் கட்சிகள் எதிர் எதிராகப் போட்டியிட்டால் அம்பாறை மாவட்டத்தில் கடந்த முறை ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமல் போனதைப் போல இம்முறையும் அந்த மாவட்டத்திலும் திருகோணமலையிலும் இவ்வாறான ஒரு சாத்தியக்கூறு இருப்பதன் காரணத்தினால் அது குறித்து சில நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க வேண்டி இருக்கின்றது.

இந்த விடயத்தில் திருகோணமலை கத்தோலிக்க ஆயர் மிக முனைப்பாகப் பல கட்சிகளோடு பேசி சில நகர்வுகளைச் செய்திருக்கின்றார். அவரை சந்திப்பதற்காக நாங்கள் சிலர் செல்கின்றோம். அந்த விடயத்தை நாங்கள் வெற்றிகரமாக முடிப்போமாக இருந்தால் எங்களுடைய மத்திய செயற்குழு தீர்மானம் மற்றும் அரசியல் குழு தீர்மானம் இன்றும் நாங்கள் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் தமிழரசு கட்சியினுடைய பெயரிலும் சின்னத்திலும் தான் நாங்கள் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடுவோம்.

ஆனால் திருகோணமலையிலும் அம்பாறையிலும் மற்ற கட்சி உறுப்பினர்களையும் உள்வாங்கி ஒரு போட்டி இல்லாமல் தேர்தலை சந்திப்பதற்கான விடயங்கள் ஆராயப்படுகின்றன. அதனை நாங்கள் செய்து முடித்த பின்னர் நாளை மீண்டும் சந்தித்து வேட்பாளராக விண்ணப்பித்தவர்கள் உடைய பெயர்களை ஆராய்ந்து தீர்மானங்களை எடுப்போம்.

எனினும் நாங்கள் நாளையும் இறுதி தீர்மானம் எடுப்போம் என்று கூற முடியாது. நாங்கள் எதிர்பார்க்கின்ற மாதிரியான வேட்பாளர்கள் சில இடங்களில் முன் வரவில்லை.

இதேவேளை பெண்கள் பல இடங்களில் முன்வரவில்லை. பள்ளம் மேடு காடு எங்குத் தேடியும் பெண்கள் கிடைக்காமல் இருக்கிறார்கள். பெண்கள் பல குறைபாடுகளைக் கூறுகின்றார்கள். அவர்களுக்கான நியமனங்களை நாங்கள் கொடுப்பதில்லை என்று. ஆனால் நாங்கள் அவர்களுக்குச் சந்தர்ப்பத்தை வழங்கத் தயாராக இருக்கின்ற போதிலும் வராத ஒரு சூழ்நிலை இருக்கின்றது. எனவே பெண்களுக்கும் பெண்கள் அமைப்புகளுக்கும் ஒரு விசேட கோரிக்கையாக நாங்கள் முன்வைக்கின்றோம். தேர்தலில் வெல்லக்கூடிய எங்களோடு சேர்ந்து பயணிக்கக் கூடிய பெண்களைத் தயவு செய்து முன்மொழிவியுங்கள்.

அவர்களுக்கான இடங்களை வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். இந்த தடவை அவ்வாறான ஒரு புதிய பரிமாணத்திலே மக்களுடைய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கின்ற வகையிலே பல புதிய ஆற்றல் உள்ள இளைய தலைமுறைகளுக்கு வாய்ப்பளித்து நிச்சயமாக இடம் கொடுப்போம். அதற்கான தேடலையும் நாங்கள் செய்து வண்ணம் இருக்கிறோம்.

யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சிவனேசனுக்கு இம்முறை வேட்பாளர் நியமனம் கொடுப்பதில் ஏதேனும் சிக்கல் இருப்பதாக ஊடகங்களில் பல கருத்துக்கள் வெளி வந்திருக்கின்றனவே என ஊடகவியலாளர் கேட்டபோது,

எங்களுடைய மத்திய செயற்குழு கூட்டத்திலே ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது மீளவும் இன்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து அதற்குப் பின்னர் தேர்தலிலே தோற்றவர்கள் இந்த தடவை சந்தர்ப்பத்தை வழங்காமல் புதியவர்களை உள்வாங்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே அந்த பிரிவுக்குள் பலர் அடங்குவார்கள். ஆனால் சிறிதரணை பொறுத்தவரை அதற்குள் வர மாட்டார்.

எனினும் இன்றைய கூட்டத்தில் நான் கூறியிருந்தேன் கட்சியினுடைய தீர்மானத்தை மீறி ஜனாதிபதி தேர்தலிலே கட்சியின் தீர்மானத்தை எதிர்த்து பிரசாரம் செய்த காரணத்தினால் அவருக்கு நியமனம் கொடுக்கக் கூடாது என்பதற்கு அப்பால் அவராகவே ஒதுங்கி இருந்தால் நல்லது என தெரிவித்திருந்தேன். எனினும் ஸ்ரீதரன் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் போட்டியிடுவார்.

என்னையும் அவரையும் யாழ் மாவட்டத்தில் கட்டாயமாகப் போட்டியிட வேண்டும் என சகல நியமன குழு உறுப்பினர்களும் கூறி இருந்தார்கள். அதற்கு அமைவாக நாங்கள் இருவரும் யாழ் மாவட்டத்திலே போட்டியிடுவோம். வெற்றியும் அடைவோம் என்று எதிர்பார்க்கின்றோம்.

எங்கள் இருவருக்கும் இது நான்காவது பாராளுமன்றம் எனினும் இன்னும் ஏழு பேரை நியமிக்க வேண்டும். மிகவும் ஆர்வமாக இளையவர்களுக்கும் புதியவர்களுக்கும் இடம் கொடுப்பதற்கு நாங்கள் கருத்தாகக் கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.