April

April

பட்டித்திடல் படுகொலைச் சம்பவம் – 37வருடங்கள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை !

பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு இதுவரை எவ்வித நீதியும் கிடைக்கவில்லை என கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

பட்டித்திடல் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் படு கொலை செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த 26 ஆம் திகதியுடன் 37வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. எனினும் இதுவரை பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு எவ்வித நீதியும், நிவாரணங்களும் கிடைக்கபெறவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் கிராமத்தில் 26.04.1987 ஆம் ஆண்டு இறைவழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒரே குடும்ப உறுப்பினர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

அதில் மூன்று கைக்குழந்தைகளும் பாடசாலை மாணவ, மாணவிகளும் அடங்குவர். தாக்குதல் நடந்த வீட்டிலிருந்து இருவர் மட்டுமே உயிர் தப்பியிருந்தார்கள்.

குறித்த கொலைச் சம்பவம் நடைபெற்ற தினத்தன்று காலை பட்டித்திடலுக்கு அண்மித்த பகுதியின் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் வைத்து கண்ணிவெடி தாக்குதலில் சில இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர்.

இதன் பின்னணியிலேயே இப்படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊழல்வாதிகளால் சீரழியும் வடக்கின் கல்வித்துறை – பின்னணியில் ஆளுநரா என தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு !

வடக்கு மாகாணத்தில் கல்வியில் ஊழல் மலிந்து காணப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்படும் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்படாமல் பதவி உயர்வு வழங்கும் நடைமுறை  இருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகரன் மேற்படி குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்றையதினம் (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்படும் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்படாமல் பதவி உயர்வு வழங்கும் நடைமுறை வடக்கில் காணப்படுவது வடக்கு கல்வியை அழித்துவிடும் செயற்பாடாகவே பார்க்கிறேன்.

ஆசிரிய மற்றும் அதிபர்கள் இடமாற்றத்தில் முறைகேடுகள் இடம்பெறுகின்ற நிலையில் இடமாற்ற சபையின் அதிகாரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன.

வன்னி ஒட்டுசுட்டான் பாடசாலையில் பாடசாலை வளங்கள் ஊழல் செய்யப்பட்ட நிலையில், குறித்த பாடசாலை அதிபருக்கு எதிராக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் நிதி நிர்வாக விடயங்களில் முறைகேடுகளுடன் தொடர்புபட்ட நிலையில் அவருக்கு தண்டனை வழங்கப்படாமல் உயர் பதவி ஒன்றில் அமர்த்துவதற்கான ஏற்பாடுகளை வடக்கு உயர் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கில் காணப்படும் நான்கு அமைச்சுகளில் தகுதியான செயலாளர்கள் இல்லாத காரணத்தினால் நிர்வாக ரீதியான முடிவுகள் எடுப்பதில் பிரச்சனைகள் காணப்படுகிறது.

தகுதியானவர்களை நியமிக்க வாய்ப்புகள் கிடைத்தும் அவர்களை ஒதுக்கி தமக்குத் தேவையான அலிபாபா திருடர்களை பதவியில் வைத்திருப்பதற்கு சிலர் முயற்சி செய்கின்றனர்.

வடக்கு ஆளுநர் இத்தகைய செயற்பாடுகள் இடம்பெறுவதை கண்டும் காணாமல் இருக்கிறாரா அல்லது அவரும் இத்தகைய செயற்பாடுகளின் பின்னணியில் உள்ளாரா என சந்தேகம் எழுகிறது.

ஆகவே, வடக்கு கல்வி ஊழல்வாதிகளால் சீரழிந்து வருகின்ற நிலையில் வட மாகாண ஆளுநர் வேடிக்கை பார்க்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.“ என அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் சனத்தொகையில் 10 சத வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிப்பு !

இலங்கையின் சனத்தொகையில் 10 சத வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் பிரதம வைத்தியர் சஞ்சய ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு நீரிழிவு நோயே பிரதான காரணியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நமது நாட்டில் சுமார் 10 சத வீதமானோர்  சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உண்மையில் பல்வேறு காரணிகள் இந்தப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.  இந்த நோய் தவிர்க்கப்பட வேண்டும்.

குறிப்பாக நம் நாட்டில் சிறுநீரகத்தைப்  பாதிக்கும் முக்கிய காரணியாக சர்க்கரை நோய் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

‘நாசம் நாசம் கனவுகள் நாசம்’ – யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் போராட்டம் !

அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் இன்று காலை இப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது ஏமாற்றாதே ஏமாற்றாதே பட்டதாரிகளை ஏமாற்றாதே, வேண்டும் வேண்டும் வேலை வேண்டும், நாசம் நாசம் கனவுகள் நாசம் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியிருத்தனர்.

மேலும் பலவருட கனவு வெறும் கனவாகவே போய் விடுமா, எமக்கான வாழ்க்கையை நாம் எப்போது வாழ்வது, அழிக்காதே அழிக்காதே எமது எதிர்காலத்தை அழிக்காதே, வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து நீண்ட காலமாக வேலையில்லாமல் தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் பாதிப்புக்களை சுட்டிக்காட்டி தமக்கான வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி வடக்கு மாகாண ஆளுநர் ஊடாக ஐனாதிபதிக்கு மகஜர் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.

அதே போன்று இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசியல்வாதிகளுக்கும் அந்த மகஜரின் பிரதிகளை அனுப்பி வைக்க உள்ளதாகவும் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமது கோரிக்கைகளை அரசாங்கம் விரைந்து நிறைவேற்ற வேண்டுமென்றும் இல்லையேல் தொடர்ந்து தாம் பாரிய போராட்டங்களை நடாத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மே தின கூட்டங்களுக்காக மக்களை திரட்ட சுமார் ஆயிரம் மில்லியன் ரூபாவை செலவிடும் இலங்கை கட்சிகள் !

பிரதான அரசியல் கட்சிகள் தமது அதிகாரத்தை மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் மே தினக் கூட்டங்களில் அதிகம் மக்களை பங்குபற்ற செய்வதற்காக சுமார் ஆயிரம் மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளதாக கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

எதிர்வரும் தேர்தல்களை இலக்காகக் கொண்டு, பிரதான அரசியல் கட்சிகள், மே தினக் கூட்டங்கள் மூலம் தமது அதிகபட்ச அரசியல் பலத்தை வெளிப்படுத்தும் வகையில், மே தினத்தில் இவ்வளவு பணத்தைச் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மே பேரணிகளில் பங்கேற்கும் தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு பயண வசதி செய்து கொடுக்கவும், அவர்களுக்கு உணவு வழங்கவும் பேருந்துகளுக்கும் இவ்வளவு பெரிய தொகை செலவிடப்படும்.

இந்தத் தொகையுடன், மே பேரணி நடைபெறும் இடங்களில் பேனர்கள், சுவரொட்டிகள், கட்-அவுட் அலங்காரங்கள், மேடைகள், ஒலிபெருக்கிகள் அமைக்க பல இலட்சம் செலவை அரசியல் கட்சிகள் மேற்கொள்ளவுள்ள

கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான பேருந்துகள் கொழும்புக்கு வரவுள்ளன.

மேல் மாகாணத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளுக்கு ஒரு பேருந்துக்கு 30,000 முதல் 35,000 ரூபாய் வரையிலும், அனுராதபுரம் போன்ற தொலைதூரப் பகுதிகளில் இருந்து கொழும்பு வரும் பேருந்துக்கு 1,50,000 ரூபாய் வரையிலும் கட்டணம் செலுத்த வேண்டும். ஒருவருக்கு மதிய உணவுக்கு 300 முதல் 450 ரூபாய் வரை செலவாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது

இதற்கு முக்கிய அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்படும் பணம் போதாது என்பதால், தொகுதி அமைப்பாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் பணம் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வல்லவராகவும் நல்லவராகவும் தன்னை நிரூபித்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியே தமிழ் மக்களின் வெற்றியாகும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேடுவோரின் விருப்பமே தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஒப்பீட்டளவில் வல்லவராகவும் நல்லவராகவும் தன்னை நிரூபித்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை தமிழ் மக்களின் வெற்றியாக மாற்றும் வகையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகள் அமைய வேணடும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே செயலாளர் நாயகத்தினால் குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமகால அரசியல் நிலவரங்கள், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சு சார்ந்த முன்னெடுப்புக்கள் போன்றவை தொடர்பிலும், அவை சரியான முறையில் மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்கு அரச அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய ஒத்துழைப்புக்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தும் வகையில் குறித்த கலந்துரையாடல் அமைந்திருந்தது.

 

அதன்போது, தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை வெற்றியடைய செய்ய வேண்டிய அவசியம் தொடர்பாக வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் பொது வேட்பாளரை தேர்தலில் நிறுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பான விமர்சனத்தினையும் முன்வைத்துள்ளார்.

 

அத்தோடு, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவலங்களையும் அரசியல் கோஷங்களாக பயன்படுத்தி குறுகிய அரசியல் ஆதாயம் தேடும் தரப்புக்கள், தமது நலன்களுக்காக தமிழ் மக்களை இன்னுமொருமுறை பலிக்கடாவாக்க முனைகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மேலும், இவ்வாறான முட்டாள்தனமான முயற்சிகள் கடந்த காலங்களில் ஆயுதப் போராட்ட குழுக்களினாலும் மிதவாத தமிழ் தலைமைகளினாலும் பலமுறை முன்னெடுக்கப்பட்டதாகவும் ஆனால் அவற்றினால் எமது மக்களுக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கவில்லை என்றும் மாறாக மீளமுடியாத பின்னடைவுகளையே ஏற்பட்டதாகவும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் தமிழ் கலவன் பாடசாலையை முஸ்லிம் பாடசாலை என மாற்ற முயற்சி..? – மாகாணக் கல்வித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு !

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் (அ.த.க) பாடசாலையின் பெயரில் எந்தவித மாற்றமுமில்லை என வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் இதே பெயரையே உத்தியோகபூர்வமாகப் பயன்படுத்துமாறும் பணப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளர் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயரில் நியமனம் வழங்கப்பட்ட கல்லூரியின் தற்போதைய அதிபர் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என்ற முத்திரையை பயன்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அதாவது இந்த வருடம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் பெயர் மாற்ற சர்ச்சை: கல்வித் திணைக்களம் விடுத்துள்ள பணிப்புரை | There Will Be No Change In The School Name

எனினும் அந்தப் பாடசாலையின் அதிபர் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என்ற பதவி முத்திரையைப் பயன்படுத்தி கையொப்பம் இட்டிருந்தமை மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை சரியானது என்பதையும் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என்று பயன்படுத்துவது தவறென்பதையும் கல்வித் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழ் பொதுவேட்பாளர் மண் கவ்வுவார் ! கொன்சவேடிவ் கட்சி தொழிற்கட்சிக்கு வாக்களியாதீர்கள் !

அண்மையில் நடைபெறவுள்ள இங்கிலாந்தின் உள்ளூராட்சி தேர்தலில் மக்களின் தெரிவு எவ்வாறானதாக இருக்க வேண்டும்..? இங்கிலாந்தின் உள்ளூராட்சி தேர்தலில் பாலஸ்தீன் – இஸ்ரேல் போரின் தாக்கம் வெளிப்படுமா என்கின்ற விடயத்தில் தொடங்கி இலங்கையில் 2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் அதில் தமிழர்களின் நிலைப்பாடு எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்பது தொடர்பிலும் – பொதுவேட்பாளர் என்ற மாய விம்பம் தொடர்பிலும் – பொதுவேட்பாளரை நிறுத்துவதில் உள்ள சவால்கள் தொடர்பிலும் சமூக – அரசியல் செயற்பாட்டாளர் ஏ.ஆர்.சிறீதரனுடன் தேசம் ஜெயபாலன் கலந்துரையாடும் சமகால அரசியலை அடிப்படையாக கொண்ட பரபரப்பான நேர்காணல்…

இது தொடர்பான தேசம்திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் நெய்யவும் !

தமிழர்களுக்கு ஏன் பொது வேட்பாளர் தேவை..? – சிவஞானம் சிறீதரன் விளக்கம் !

தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக அல்ல துணை ஜனாதிபதியாக கூட தெரிவுசெய்யப்பட முடியாதென்பதை அறிந்துதான் அனைவரும் செயற்படுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தேசிய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இங்கு பொது வேட்பாளர் யார் என்பது முக்கியமல்ல.

வடக்கிலும் கிழக்கிலும் வாழுகின்ற தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் இந்த பொது வேட்பாளர் மூலம் உலகறியச் செய்யப்பட வேண்டும். தமிழர்கள் தங்களது பாரம்பரிய பூமியில் இறைமையோடு வாழ்ந்தவர்கள் அத்தோடு அவர்களுக்கு அவர்களது இறைமையை மீட்டுக்கொடுக்கும் வகையிலான சமஷ்டித் தீர்வினை இந்த பொது வேட்பாளர் முன்வைப்பார்.

தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான ஒருகளமாக நாங்கள் இந்த ஜனாதிபதி  தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கான ஆதரவைக் கேட்போம்.

எங்கள் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான ஒரு சர்வஜன வாக்கெடுப்பாகவே பொது வேட்பாளர் களமிறக்கப்படுவதைத் தமிழர்கள் பார்க்கின்றார்கள். தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக அல்ல துணை ஜனாதிபதியாக கூட தெரிவுசெய்யப்பட முடியாதென்பதை அறிந்தேதான் எல்லோரும் செயற்படுகின்றார்கள்.

இங்கு முக்கியமானது தமிழர்கள் தங்களது அபிலாஷைகளுக்கான அங்கீகாரத்தை இந்த பொது வேட்பாளர் மூலம் கோருகின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிகரிக்கும் விவாகரத்துக்களின் எண்ணிக்கை !

பல்வேறு காரணங்களால் இலங்கையில் இரண்டு அல்லது மூன்று வருடங்களின் பின்னர் விவாகரத்து (பிரிந்து செல்லும்) போக்கு அதிகரித்து வருவதாக சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் (சிவில் பதிவுகள்) சட்டத்தரணி திருமதி லக்க்ஷிகா கணேபொல தெரிவித்தார்.

பொருளாதாரக் காரணங்களும் பிற சமூகக் காரணங்களும் இதில் வேரூன்றியுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் வருடாந்த இறப்பு எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும்  அவர் கூறியுள்ளார்.

இறப்பு எண்ணிக்கை 2000 ஆம் ஆண்டில் 140,000 ஆக இருந்தது, ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 180,000 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் பிறப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக பிரதிப் பதிவாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

சராசரியாக, 2020 ஆம் ஆண்டில், நாட்டில் ஆண்டு பிறப்பு எண்ணிக்கை சுமார் 325,000 ஆக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 280,000 ஆக குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .