September

September

குருந்தூர்மலை நில மீட்பை வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம் !

குருந்தூர்மலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டமைக்கு நீதி கோரியும் பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் (வியாழக்கிழமை) பேரணி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று நண்பகல் 12 மணியளவில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள் அங்கிருந்து கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக இராமநாதன் வீதி ஊடாக பரமேஸ்வராச் சந்தியை அடைந்து அங்கிருந்து சிறிது நேரம் வீதியை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பின்னர் பேரணியாக பல்கலைக்கழகத்தை வந்தடைந்தனர்.

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து நேற்றையதினம் (புதன்கிழமை) குருந்தூர்மலையில் அப்பகுதி மக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், சிவில்சமூகப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் இ.மயூரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனை கண்டித்தே யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரவிகரன் மற்றும் மயூரனை விடுதலை செய், எமது காணி எமக்கு வேண்டும், எமது மலை எமக்கு வேண்டும், குருந்தூர் மலையை ஆக்கிரமிக்காதே போன்ற கோஷங்கள் பல்கலைக்கழக மாணவர்களால் எழுப்பப்பட்டது.

ரவிகரன் மற்றும் மயூரன் விடுதலை செய்யப்படாவிட்டால் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.

பகல் நேர உணவிற்காக தேங்காய் துண்டுகளை கொண்டு வந்த பாடசாலை மாணவி – பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்கள் !

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் இன்னமும் பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ள இந்த நிலையில் இலங்கையில்மந்த போசணையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உணவிற்கு பெரும் கஷ்டப்படும் குடும்பம் ஒன்றில் பாடசாலை மாணவி ஒருவர் தனது பகல் நேர உணவிற்காக தேங்காய் துண்டுகளை கொண்டு வந்த நெஞ்சை உருக வைக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மினுவாங்கொடை கல்வி வலயத்திலுள்ள பாடசாலையில் தரம் 09 இல் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு தேங்காய் துண்டுகளை கொண்டு வந்துள்ளார்.

குறித்த மாணவியின் தந்தை நாளாந்த கூலி வேலை செய்தே தனது குடும்பத்தை காப்பாற்றி வருகின்றார். மாணவிக்கு மேலும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். பாடசாலை இடைவேளையின்போது ஏனைய மாணவர்களுடன் பகலுணவை சாப்பிட சென்றபோதே இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த சம்பவம், ஆசிரியர்களின் காதுகளுக்கு எட்டியதை அடுத்து ஆசிரியர்கள் உணவுப் பொதிகளை கொண்டுவந்து அந்த மாணவிக்கு கொடுத்துள்ளனர்.

இதேவேளை அதே பாடசாலையில் தரம் மூன்றில் கல்விபயிலும் மாணவர்கள் சிலரும் பகலுணவு இன்றி இருக்கின்றனர். அத்துடன், அந்த பாடசாலையில் கல்விபயிலும் மாணவர்களில் பலர் முதல்நாள் இரவு உணவை உட்கொண்டிருக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

பாராளுமன்ற நிலத்தில் கஞ்சாவை பயிரிடுங்கள் – டயானாவுக்கு ஹர்ஷ டி சில்வா பதில் !

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெற்று நிலத்தில் மாதிரி கஞ்சா பயிர்ச்செய்கையை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சரின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.

இலங்கையில் கஞ்சா பயிரிடுவது சட்டவிரோதமானது அல்ல எனவும், கஞ்சா ஏற்றுமதி மூலம் பாரிய அளவிலான அந்நிய செலாவணியை ஈட்டமுடியும் எனவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே தெரிவித்தார்.

கஞ்சா ஏற்றுமதி மூலம் டொலர்களை சம்பாதிப்பதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் கஞ்சாவை விற்பனை செய்து அபிவிருத்தியடைந்த நாடுகள் உலகில் இல்லை எனவும் ஹர்ஷ டி சில்வா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர்களுக்கு ஒரு லட்சம் வேலை வாய்ப்பு – மலேசியா தீர்மானம் !

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்காக 10,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க மலேசியா தீர்மானித்துள்ளது.

குறித்த தீர்மானத்திற்கு அந்நாட்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“ அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உடைமாற்றும் அறையில் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.”- பெண் எழுத்தாளர் குற்றச்சாட்டு !

27 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டிய பெண் எழுத்தாளர் ஒருவர் அவருக்கு எதிராக புதிய வழக்கைத் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் கற்பழிப்பு புகார் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது,

“1995-ம் ஆண்டின் பிற்பகுதி அல்லது 1996 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மிட்டவுன் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு கடையின் உடைமாற்றும் அறையில் தன்னை டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்தார்” என்று கூறி உள்ளார்.

இதுதொடர்பாக கரோலின் வக்கீல் ராபர்ட்டா கப்லன் கூறும்போது, “டிரம்ப் மீது வருகிற நவம்பர் 24 ஆம் திகதி வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாகவும், இவ்வழக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரிக்கப்படலாம்” என்றும் தெரிவித்தார்.

பெண் எழுத்தாளரின் குற்றச்சாட்டை டொனால்டு டிரம்ப் மறுத்துள்ளார். அவர் கூறியதாவது, கரோல் தனது புத்தகத்தை விற்பதற்காக கற்பழிப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார்” என்றார்.

ஏற்கனவே டிரம்ப் மீது மாடல் அழகி ஒருவர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு !

சில பல்கலைக்கழகங்களில் பகிடிவதை சம்பவங்கள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.

பகிடிவதையை தடை செய்யும் சட்டத்தின் கீழ், அவ்வாறான நடவடிக்கைகளுடன் தொடர்புபடும் மாணவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பேராசிரியர் தெரிவித்தார்.

இதேவேளை, பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதைக்கு எதிரான மற்றும் பகிடிவதைக்கு ஆதரவான மாணவர்களுக்கு இடையிலும் மோதல்கள் இடம்பெற்றுள்ளமை குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.

மோதல் குறித்து மூன்று மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்தார்.

தாய்மார்களுக்கான திரிபோஷாவில் நச்சுத்தன்மை என்பதில் உண்மை இல்லை – சுகாதார அமைச்சர் கெஹலிய

நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களில் இருந்து சிசுக்கள் மற்றும் தாய்மார்களுக்கு விநியோகிக்கப்படும் திரிபோஷாவில் விஷம் கலந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

திரிபோஷவில் அடங்கியிருக்க வேண்டிய அளவை விட அஃபலரொக்சின் அளவு அதிகமாக இருப்பதன் காரணமாக திரிபோஷ தயாரிப்பு நிறுவனம் அவற்றை சேகரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கருத்து தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணை நடத்த வேண்டும் என அரச குடும்ப நல சுகாதார சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல குடும்ப நலப் பணியாளர்களிடமும் இது தொடர்பில் வினவியதாக அதன் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், திரிபோஷாவை வழங்க வேண்டாம் என எந்தவொரு தரப்பினரும் தமது அதிகாரிகளிடம் கோரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, குறித்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
திரிபோஷ உற்பத்தி நடவடிக்கையின்போது, அஃப்ளொடோக்சின் அடங்கிய சோளம் அகற்றப்படும் என்றும், அதற்கமைய குறித்த குற்றச்சாட்டை தாம் நிராகரிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
திரிபோஷா தொழிற்சாலையை நவீனமயப்படுத்துவதற்கு இரண்டு மில்லியன் டொலர்களை சுகாதார அமைச்சுக்கு வழங்குவதற்கு தனியார் துறை உறுதியளித்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.

குருந்தூர்மலையை பாதுகாக்க அணிதிரண்ட மக்கள் – து.ரவிகரன் மற்றும், இ.மயூரன் ஆகியோர் கைது !

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் இன்றையதினம் குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்தில் மக்களோடு கலந்துகொண்ட முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், முன்னாள் கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத் தலைவரும், சமூகசெயற்பாட்டாளருமான இரத்தினராசா மயூரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில் இவ்வாறு ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டமைதொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக து.ரவிகரன் மற்றும், இ.மயூரன் ஆகியோரை முல்லைத்தீவு காவல்துறையினர், காவல்நிலையம் வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் காவல் நிலையம் சென்ற இருவரையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“கலாசாரம், மதம் என பேசிக் கொண்டிருக்காது கஞ்சா செய்கையை சட்டபூர்வமாக்க வேண்டும்.” – அமைச்சர் டயனா கமகே

“கலாசாரம், மதம் என்ற வரைபுக்குள் இருந்துக் கொண்டு செயற்பட்டால் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. கஞ்சா செய்கையை நிச்சயம் சட்டபூர்வமாக்க வேண்டும்.” என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அரச வருவாய் அதிகரிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாடு வங்குரோத்தடைந்து விட்டது. பொருளாதார நெருக்கடி என குறிப்பிட்டுக் கொண்டிருந்தால் மாத்திரம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. வெளிநாட்டு கையிறுப்பை ஈட்டிக் கொள்ள நான் முன்வைத்த ஒருசில யோசனைகள் தொடர்பில் ஒரு தரப்பினர் குறிப்பாக மத குருமார்கள் வெறுக்கத்தக்க பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார்கள்.

சேறு பூசல் பிரசாரங்களுக்கு ஒருபோதும் அஞ்சபோவதுமில்லை. எனது திட்டங்களை தவிர்த்துக்கொள்ள போவதுமில்லை. எம்மை விட கலாசாரத்தை முன்னிலைப்படுத்திய நாடுகள் கலாசாரத்துக்கு அப்பாற்பட்டு செயற்பட்டதால் முன்னேற்றமடைந்துள்ளன என்பதை விமர்சனங்களை முன்வைப்பவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

2,500 வருட கால பழைமை தொடர்பில் பேசிக் கொண்டிருந்தால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.சிறந்த திட்டங்களை முன்வைக்கும் போது கலாசாரம், மதம் ஆகிய விடயங்களை குறிப்பிட்டுக்கொண்டு ஒரு தரப்பினர் அத்திட்டங்களுக்கு தடையேற்படுத்துகிறார்கள்.குறுகிய வரைபுக்குள் இருந்துக் கொண்டு எதனையும் வெற்றிக்கொள்ள முடியாது.

கலாசாரம் தொடர்பில் கருத்துரைப்பவர்கள் இலங்கை பெண்கள் வெளிநாடுகளுக்கு பணி பெண்களாக செல்வது குறித்து ஏன் கவனம் செலுத்தவில்லை? இலங்கை பெண்கள் வெளிநாடுகளில் மிக மோசமாக துயரங்களை எதிர்க்கொள்கிறார்கள்.  இதற்கு ஆட்சியில் இருந்த அனைத்து அரச தலைவர்களும், அரசாங்கங்களும் பொறுப்புக் கூற வேண்டும் அத்துடன் வெட்கப்பட வேண்டும்.

கஞ்சா பயிர்ச்செய்கையை ஏற்றுமதி செய்ய வேண்டும் என நான் குறிப்பிட்டதை ஒருசில பௌத்த தேரர்கள் தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் தெரிவிக்கின்றனர்.  கஞ்சா எமது கலாசாரத்துடன் தொடர்புடையது. கஞ்சாவை மருத்துவ பொருளாக ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதையே குறிப்பிட்டேன். சட்ட பூர்வமற்றதாக செய்வதை ஏன் சட்ட ரீதியாக செய்ய முடியாது?

கொழும்பில் இரவு 10 மணிக்கு பிறகு ஒன்றும் இல்லை என குறிப்பிட்டதை ஒரு தரப்பினர் முழுமையாக திரிபுப்படுத்தி விட்டார்கள். 10 மணிக்கு பிறகு விபசார விடுதிகள் இல்லை என குறிப்பிடவில்லை. அதற்கு அப்பாற்பட்டு ஒன்றுமில்லை என்றே குறிப்பிட்டேன். நாட்டு மக்களின் மனநிலையும் கவலைக்குரியது.

காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரை மதுபானசாலைகள் திறக்க வேண்டும். மதுபானம் அதிகம் விற்பனை செய்யப்பட்டால் அரசாங்கத்துக்கு வரி அதிகமாக கிடைக்கும். மாற்றுத்திட்டங்களை செயற்படுத்தாவிடின் பொருளாதாரத்தை ஒருபோதும் முன்னேற்ற முடியாது என்றார்.

மன்னார் மனிதப் புதைகுழி வழக்கு – புதைகுழி எச்சங்களை அநுராதபுரம் நீதவான் முன் பிரிக்க அனுமதி !

மன்னார் – திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களை மீண்டும் பிரித்தெடுக்க தேவை ஏற்படுமாயின், அதனை அநுராதபுரம் நீதவான் முன்னிலையில் மேற்கொள்ள முடியும் என மன்னார் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மனிதப் புதைகுழி வழக்கு மன்னார் நீதவான் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

மன்னார் நீதவான் முன்னிலையில் மனித எச்சங்களை பிரித்தெடுத்து, அமெரிக்காவின் புளோரிடாவிற்கு ஆய்விற்கு அனுப்புவதற்கான கட்டளை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும், மாதிரிகளை மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று பிரித்தெடுப்பதாக இருந்தால், பல வருடங்கள் பழமையான எச்சங்களுக்கு சேதம் ஏற்படக்கூடும் என மனுதாரர்கள் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி மன்றில் இன்று தெரிவித்துள்ளார்.

ஆகவே, அவற்றை அநுராதபுரம் நீதவான் முன்னிலையில் பிரித்தெடுப்பதற்கான அனுமதியை வழங்குமாறு மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கைக்கு பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு சட்டத்தரணிகள் ஆட்சேபனை தெரிவித்தனர்.

எனினும், அநுராதபுரம் சென்று அவற்றை பரிசோதிப்பதற்கு தனக்கு நியாயாதிக்கம் இல்லை என மன்னார் நீதவான் அறிவித்துள்ளார்.

ஆகவே, மனுதாரர்களின் கோரிக்கைக்கு அமைய, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அநுராதபுரம் நீதவான் முன்னிலையில் பிரித்தெடுக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மன்னார் நீதவான் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சதொச மனிதப் புதைகுழி வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.