“கலாசாரம், மதம் என பேசிக் கொண்டிருக்காது கஞ்சா செய்கையை சட்டபூர்வமாக்க வேண்டும்.” – அமைச்சர் டயனா கமகே

“கலாசாரம், மதம் என்ற வரைபுக்குள் இருந்துக் கொண்டு செயற்பட்டால் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. கஞ்சா செய்கையை நிச்சயம் சட்டபூர்வமாக்க வேண்டும்.” என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அரச வருவாய் அதிகரிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாடு வங்குரோத்தடைந்து விட்டது. பொருளாதார நெருக்கடி என குறிப்பிட்டுக் கொண்டிருந்தால் மாத்திரம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. வெளிநாட்டு கையிறுப்பை ஈட்டிக் கொள்ள நான் முன்வைத்த ஒருசில யோசனைகள் தொடர்பில் ஒரு தரப்பினர் குறிப்பாக மத குருமார்கள் வெறுக்கத்தக்க பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார்கள்.

சேறு பூசல் பிரசாரங்களுக்கு ஒருபோதும் அஞ்சபோவதுமில்லை. எனது திட்டங்களை தவிர்த்துக்கொள்ள போவதுமில்லை. எம்மை விட கலாசாரத்தை முன்னிலைப்படுத்திய நாடுகள் கலாசாரத்துக்கு அப்பாற்பட்டு செயற்பட்டதால் முன்னேற்றமடைந்துள்ளன என்பதை விமர்சனங்களை முன்வைப்பவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

2,500 வருட கால பழைமை தொடர்பில் பேசிக் கொண்டிருந்தால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.சிறந்த திட்டங்களை முன்வைக்கும் போது கலாசாரம், மதம் ஆகிய விடயங்களை குறிப்பிட்டுக்கொண்டு ஒரு தரப்பினர் அத்திட்டங்களுக்கு தடையேற்படுத்துகிறார்கள்.குறுகிய வரைபுக்குள் இருந்துக் கொண்டு எதனையும் வெற்றிக்கொள்ள முடியாது.

கலாசாரம் தொடர்பில் கருத்துரைப்பவர்கள் இலங்கை பெண்கள் வெளிநாடுகளுக்கு பணி பெண்களாக செல்வது குறித்து ஏன் கவனம் செலுத்தவில்லை? இலங்கை பெண்கள் வெளிநாடுகளில் மிக மோசமாக துயரங்களை எதிர்க்கொள்கிறார்கள்.  இதற்கு ஆட்சியில் இருந்த அனைத்து அரச தலைவர்களும், அரசாங்கங்களும் பொறுப்புக் கூற வேண்டும் அத்துடன் வெட்கப்பட வேண்டும்.

கஞ்சா பயிர்ச்செய்கையை ஏற்றுமதி செய்ய வேண்டும் என நான் குறிப்பிட்டதை ஒருசில பௌத்த தேரர்கள் தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் தெரிவிக்கின்றனர்.  கஞ்சா எமது கலாசாரத்துடன் தொடர்புடையது. கஞ்சாவை மருத்துவ பொருளாக ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதையே குறிப்பிட்டேன். சட்ட பூர்வமற்றதாக செய்வதை ஏன் சட்ட ரீதியாக செய்ய முடியாது?

கொழும்பில் இரவு 10 மணிக்கு பிறகு ஒன்றும் இல்லை என குறிப்பிட்டதை ஒரு தரப்பினர் முழுமையாக திரிபுப்படுத்தி விட்டார்கள். 10 மணிக்கு பிறகு விபசார விடுதிகள் இல்லை என குறிப்பிடவில்லை. அதற்கு அப்பாற்பட்டு ஒன்றுமில்லை என்றே குறிப்பிட்டேன். நாட்டு மக்களின் மனநிலையும் கவலைக்குரியது.

காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரை மதுபானசாலைகள் திறக்க வேண்டும். மதுபானம் அதிகம் விற்பனை செய்யப்பட்டால் அரசாங்கத்துக்கு வரி அதிகமாக கிடைக்கும். மாற்றுத்திட்டங்களை செயற்படுத்தாவிடின் பொருளாதாரத்தை ஒருபோதும் முன்னேற்ற முடியாது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *