18

18

“முன்பு அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக காணப்பட்ட சிறுபான்மையினர் இன்று துவேசம் மூலம் நசுக்கப்பட்டு வருகின்றனர்.” – கலாநிதி வே.இராதாகிருஸ்ணன்

“முன்பு அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக காணப்பட்ட சிறுபான்மையினர் இன்று துவேசம் மூலம் நசுக்கப்பட்டு வருகின்றனர்.”என  மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தலைமை தாங்கி உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

மலையக மக்கள் முன்னணி எப்போதும் வடக்கு கிழக்குடன் சுமூகமான தொடர்பை கொண்டுள்ளது. அதனடிப்படையிலேயே இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை அழைத்திருந்தோம். ஆனால் அவர் தவிர்க்க முடியாத காரணத்தினால் வரவில்லை. அதேபோன்று தான் ஹரின் பெர்ணான்டோவும் வரவில்லை.

கடந்த தேர்தலில் இளைஞர்களே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தினர். மலையகத்திலும் ஒரு ஜீவனுக்கு இளைஞர்கள் வாக்களித்தனர். மறுபக்கத்தில் மற்றுமொரு யுவதிக்கும் 7000ஆயிரம் வாக்குகள் வரை கிடைத்தது. ஆனால் அவை அனைத்தும் இன்று வெற்று வேட்டாக போயுள்ளது.

தற்போதைய அரசாங்கம் பல விடயங்களில் சிக்கியுள்ளது. எல்லாவற்றிலும் ஊழலும்,  லஞ்சமும் நிறைந்துள்ளது. அதேபோல் எல்லாவற்றிலும் கலப்படம் உள்ளது.தேங்காய் எண்ணை போன்றவற்றிலும் கலப்படம் நிறைந்துள்ளது. சீனியில் ஊழல், பருப்பில் ஊழல் என அனைத்திலும் ஊழல் கலந்துள்ளது.

தற்போது எமது கடல் வளத்தை மூடி சீனாவுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாட்டை விற்கும் செயற்பாடு எங்கு முடியப்போகின்றது என தெரியவில்லை. சஜித்தின் தோல்விக்கு உட்கட்சி மோதலும் முக்கியமானது. அதன் பிறகுதான் சிறுபான்மை மக்களையும் இணைத்து ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டுள்ளது.

முன்னர் ஆட்சி பீடம் ஏறும் தரப்பினரை தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மையினர் காணப்பட்டனர். ஆனால் இன்று சிறுபான்மையினர் துவேசம் மூலம் நசுக்கப்பட்டு வருகின்றனர். இப்போது உளுந்து,  பாசிப்பயறு உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியாதுள்ளது. இதனால் இன்று உளுந்து வடை, தோசை, சூசியம் போன்ற திண்பண்டங்களை சாப்பிட முடியாதுள்ளது.

இன்றும் 1000 ரூபா சம்பளத்தை முழுமையாக சிலர் பெற்றுக்கொள்ளவில்லை. முக்கியமாக அரசாங்க தோட்டங்களில் 1000 ரூபா அதிகரிப்பு கொடுக்கப்படவில்லை. இன்று எல்லா சலுகைகளும் இல்லாது போயுள்ளது. தற்போதைய நிலையில் 1000 ரூபாவைக்கொண்டு உளுந்தை கூட வாங்க முடியாது. எனவே எமது இளைஞர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“தமிழர்கள் நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கிறார்கள் என கூறி ராஜபக்ஷக்கள் அரசாங்கம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியது.” – நா.உ. காவிந்த ஜயவர்தன குற்றச்சாட்டு !

“நல்லாட்சி அரசாங்கத்தில் நீதியமைச்சர் பதவி வகித்துக்கொண்டு ராஜபக்க்ஷர்களுக்கு ஆதரவாக செயற்பட்ட முன்வினையின் பயனையே நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தற்போது அனுபவிக்கிறார்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் வினவிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்தத் தெரிவிக்கையில்,

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தை அரசாங்கம் கடந்த 8 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பித்தது. இச்சட்ட மூலத்திற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்காத வகையில் பொது விடுமுறை காலத்தில் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அரசாங்கத்தின் குறுகிய நோக்கம் பெற்றிப் பெறவில்லை.

இச்சட்ட மூலத்திற்கு எதிராக பல மனுக்கல் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இச்சட்ட மூலம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்க்ஷ குறிப்பிட்ட கருத்தினால் ஜனாதிபதி அச்சுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயத்தை பெரிதுப்படுத்துவது அவசிமற்றது. முன்வினையின் பயனை விஜயதாஸ ராஜபக்க்ஷ தற்போது அனுபவிக்கிறார்.

திருடர்களுக்கு தண்டனை வழங்குவதாக குறிப்பிட்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்தது. இவ்வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. அதற்கு இவ்வாறானவர்களும் ஒரு காரணியாகும். நீதியமைச்சர் பதவி வகித்துகொண்டு ஒரு தரப்பினருக்கு சார்பாக செயற்பட்டமை குறித்து இவரே பல முறை பகிரங்கமாக ஊடகங்கள் மத்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இவரது அரசியல் செயற்பாட்டை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். தமிழர்கள் நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கிறார்கள் அதற்கு இடமளிக்க கூடாது என்று போலியான குற்றச்சாட்டை முன்வைத்து அரசாங்கம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியது. 69 லட்ச மக்களும் பொய்யான வாக்குறுதிகளினால் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.

இனியாவது பெரும்பான்மை மக்கள் உண்மை தன்மையை புரிந்துக் கொள்ள வேண்டும். கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் நீதிமன்றம் எவ்வாறான தீர்வினை வழங்கும் என்பதை குறிப்பிட முடியாது.

நாட்டு மக்கள் அனைவரும் நீதித்துறையினையே இறுதியாக நம்பியுள்ளார்கள்.அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றினைய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“சிலர் கட்சியைக் காட்டிக்கொடுத்தனர். சிலர் தலைவர் தொண்டமானை முதுகில் குத்தினர். வரலாறுகளை மறக்கக்கூடாது.” – ஜீவன் தொண்டமான்

“சிலர் கட்சியைக் காட்டிக்கொடுத்தனர். சிலர் தலைவர் தொண்டமானை முதுகில் குத்தினர். வரலாறுகளை மறக்கக்கூடாது.” என   இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை சீ.எல்.எஃப். வளாகத்தில் இன்று (18.04.2021) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் கனவு சிறிதுசிறிதாக நிறைவேறி வருகிறது. அத்துடன், பெருந்தொட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தைப் பெற்றுக்கொடுத்து அமரர் ஆறுமுகன் தொண்டமானின் கனவை நிறைவேற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனை யாரும் நிராகரிக்கவோ அல்லது மறுக்கவோ முடியாது என்று தெரிவித்துள்ள அவர், நுவரெலியா மாவட்டத்திற்கு உரித்தான வகையில் கொட்டகலையில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளதாகவும் இதற்கான பணிகள் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நிறைவடையும் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, சிலர் கட்சியைக் காட்டிக்கொடுத்தனர் என்பதுடன் சிலர் தலைவர் தொண்டமானை முதுகில் குத்தினர் என்றும் தெரிவித்துள்ள ஜீவன் தொண்டமான், பழையவைகளை மறக்கக் கூடாது எனவும் வரலாறும் முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“அரசவளங்களை பாதுகாப்போம் என தெரிவித்து ஆட்சிக்குவந்த அரசாங்கம் தற்போது அரசவளங்களை விற்பனை செய்துவருகின்றது.” – லக்ஸ்மன் கிரியல்ல குற்றச்சாட்டு !

“அரசவளங்களை பாதுகாப்போம் என தெரிவித்து ஆட்சிக்குவந்த அரசாங்கம் தற்போது அரசவளங்களை விற்பனை செய்துவருகின்றது.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகவியலாளர்களிற்கு பதில் அளிக்கையில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“உலகின் முக்கியமான நாடுகளின் கவனம் இலங்கையின் பக்கம் திரும்பியுள்ளதால் இன்னொரு நாடு திருகோணமலை துறைமுகத்தை கோரும் நிலையேற்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.
வேறு எந்த அரசாங்கமும் வெளிநாடுகள் இலங்கையில் நிரந்தரமாக கால்பதிப்பதற்கு அனுமதிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் அதேவேளை அந்த அரசாங்கங்கள் உலக நாடுகளுடன் சிறந்த உறவுகளை பேணிண எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 100,  150வருடங்கள் நிரந்தரமாக கால்பதிப்பதற்கான நிலையை வெளிநாடுகள் உருவாக்கியுள்ளன என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
எனினும் அடுத்த 25 வருடங்களிற்கு அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுகநகரம் மூலம் இலங்கைக்கு எந்த வருமானமும் கிடைக்கப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இடிக்கப்பட்ட யாழ்.பல்கலைகழக வளாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீள ஏப்ரல் 23ஆம் திகதி திறப்பு !

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் மீளவும் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வரும் ஏப்ரல் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி 8ஆம் திகதி இடித்து அழிக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவுத்தூபி அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம் |  Virakesari.lk

எனினும் அதனைக் கண்டித்து எழுந்த மக்கள் எழுச்சியாலும் மாணவர்களின் போராட்டங்களினாலும் இருந்த இடத்திலேயே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்தது.

பல்கலைக்கழக துணைவேந்தரினால் அடிக்கல்லும் நட்டுவைக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எனக் குறிப்பிடப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டு நினைவுத் தூபியை மீள அமைக்கும் பணிகள் மாணவர்களின் பங்களிப்புடன் ஜனவரி 15ஆம் திகதி ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.

“பேச்சு , கருத்து சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்யும் குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.” – நீதியமைச்சர் அலி சப்ரி

பேச்சு , கருத்து சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்யும் குழுக்களை அடையாளப்படுத்தி அவர்களின் நடவடிக்கைகளை பலவீனப்படுத்துவதற்கான சட்டசீர்திருத்தங்கள் உருவாக்கப்படுகின்றன.” என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ள போது ,
சமூக ஊடகங்களில் அரசாங்கத்திற்கு எதிராகவும் அரசாங்கத்தின் திட்டங்களிற்கு எதிராகவும் சிலகுழுக்கள் தவறான தகவல்களை பரப்புகின்றன எனவும்  இந்த தவறான தகவல்கள் பொதுமக்களை பிழையாக வழிநடத்தக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
பேச்சு , கருத்து சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்வதை சகித்துக்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ள அவர்,  இந்த குழுக்களை அடையாளம் கண்டு அவர்களின் நடவடிக்கைகளை பலவீனப்படுத்துவதற்கான சட்டசீர்திருத்தங்களை உருவாக்கிவருவதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியா,  சிங்கப்பூர்,  மலேசியா போன்ற நாடுகளில் இவ்வாறான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என குறிப்பிட்டுள்ள அவர் இந்த சட்டங்கள் குறித்து ஆராய்ந்துவருகின்றோம் இலங்கையின் சூழமைவிற்கு பொருத்தமான சட்டமுறைமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை கையிலெடுக்கிறார்கள்.” – இம்ரான் மஹ்ரூப்

“அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை கையிலெடுத்தே அந்த அதிருப்தியை மறைக்கிறார்கள்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

கிண்ணியாவில் நேற்றைய தினம்(18.04.2021) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட சிங்கள அமைப்புக்கள் எதனையும் தடைசெய்யாது முஸ்லிம் அமைப்புக்களை மாத்திரம் தடை செய்துள்ளனர். ரமழான் மாதத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சால் முஸ்லிம்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாயலில் நூறு பேருக்கு மேல் ஒன்றுகூட முடியாது. நோன்பு கஞ்சி பகிரமுடியாது என அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆனால் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் கடை வீதிகளிலும் பொது இடங்களிலும் ஆயிரக்கணக்கில் சமூக இடைவெளி இன்றி ஒன்று கூடியதை நாம் கண்டோம். மதுபான சாலைகளில் பெரிய கூட்டமே கூடி இருந்தது. ஆகவே புத்தாண்டில் தடைகளை விதிக்காத அரசு ஏன் ரமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு மாத்திரம் தடைகளை விதிக்க வேண்டும்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் முஸ்லிம்களுக்கு மாத்திரம் தான் கொரோனா தொற்றுவது போன்று முஸ்லிம்களுக்கு மட்டும் தடைகள் விதிக்கப்படுவது ஏன் என்றே நாம் கேட்கின்றோம். இதற்கு பின்னாலும் பெரிய இனவாத நிகழ்ச்சிநிரல் உள்ளது.

இந்த காலத்தில் இடம்பெறும் முஸ்லிம்களின் வியாபாரத்தை முடக்குவதே இந்த அரசின் நோக்கம். மே மாதத்தில் கொரோனாவின் மற்றொரு அலை உருவாக்கலாம் என இராணுவ தளபதி ஏற்கனவே அறிவித்து விட்டார்.

ஆகவே மே மாதத்தில் இடம்பெறும் பெருநாள் வியாபாரத்தை முடக்க அரசு திடடமிட்டுள்ளதா என்ற சந்தேகம் இதனால் இப்போது எழுகிறது. தற்போது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி தடையால் முஸ்லிம் வியாபாரிகள் பலரே பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை மேலும் சிரமத்துக்கு உள்ளாக்கவே அரசு திட்டமிட்டு வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு துறைகளிலும் முஸ்லிம்களை பழிவாங்கவே இந்த அரசு முயற்சிக்கிறது. ஆனால் காபட் வீதி மற்றும் பாலங்களில் இருந்து வரும் கொமிஸ்களுக்காக சிலர் பசில் வந்தால் சரியாகும் நாமல் வந்தால் சரியாகும் என ஊருக்குள் கூறி திரிவது வேடிக்கையானது எனவும் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர்  ஜீவன் தொண்டமானுக்கு எதிராக ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டம் !

பெண்களை இழிவாக பேசியதாக தெரிவித்தும் இராஜாங்க அமைச்சர்  ஜீவன் தொண்டமான் பகிரங்கமாக மன்னிப்புக்கோர  வேண்டும் எனக் கோரியும்  `ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டமொன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

ஹட்டன் மல்லியப்பு சந்தியில்  மகளிர் அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அண்மையில் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தாக்கி பேசிய சமயம் பெண்களை  இழிவு படுத்தும் வகையில் கருத்துக்களை பரிமாறியதாக அவர் மீது பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பல்வேறு மலையக அமைப்புகள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதுடன் சமூக வலைத்தளங்களிலும் இவ் விவகாரம் பேசு பொருளாக மாறியுள்ளது.

இதனால் ஜீவன் தொண்டமான்   மலையக பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு  கேட்க வேண்டும் எனக் கோரியே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அண்மையில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

“எமது நாட்டினை ஹொங்கொங் போன்று ஆள முடியாது.” – இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க

எமது நாட்டினை ஹொங்கொங் போன்று ஆள முடியாது. எனவும் முதலீட்டாளர் யார் என்பது முக்கியமல்ல. நிலம் தொடர்பிலான சட்டம் அனைவருக்கும், எல்லா இடங்களுக்கும் பொருந்தும் எனவும் தேசிய மரபுரிமைகள், கலைக்கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் விதுர விக்ரமநாயக்க மேலும் கூறியுள்ளதாவது,

“நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் சட்டம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஹொங்கொங் போன்ற தனி நிர்வாக பிரிவை நாட்டில் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

முதலீட்டாளர் யார் என்பது முக்கியமல்ல. நிலம் தொடர்பிலான சட்டம் அனைவருக்கும், எல்லா இடங்களுக்கும் பொருந்தும். அத்துடன் இந்த நடவடிக்கைகள் மக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டமையினால் அது நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் உத்வேகத்தை அளிக்குமென்று நம்புகின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கத்தால் இந்த நாட்டில் மற்றொரு மாநிலமொன்று உருவாகப் போகிறது.” – ஓமல்பே சோபித தேரர்

“இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கத்தால் இந்த நாட்டில் மற்றொரு மாநிலமொன்று உருவாக்கப் போகிறது.” என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவிலுள்ள போதிராஜா தர்ம நிறுவனத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் ஓமல்பே சோபித தேரர் மேலும் கூறியுள்ளதாவது,

“நாங்கள் அனைவரும் முப்பது வருடங்களாக கடுமையான சோகத்தில் இருந்தோம். புலிகளுடனான போராட்டம் முப்பது வருடத்துடன் நிறைவடைந்தது. உண்மையில், இலங்கை மக்களாகிய நாங்கள் வெற்றியடைந்துள்ளோம்.

ஆனால் தற்போது எமது வளங்கள் ஏனைய மூலோபாய வழிமுறைகள் ஊடாக கைப்பற்ற முயற்சிகள் இடம்பெற்று வருகின்றது. நாங்கள் அதை ஒரு துறைமுக நகரமாகப் பார்க்கிறோம். மேலும் நவீன சீன காலனி துறைமுக நகரம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையும் அதைத் தொடர முன்வைக்கப்பட்ட திட்டங்களையும் நாங்கள் பார்த்தோம்.

மேலும் புதிய சட்டத்தின் கீழ் போர்ட் சிட்டி இலங்கைக்கு சொந்தமானது அல்ல என்பதுடன் இதனை ஒரு சீன மாகாணமாகவே பார்க்கின்றோம். இந்த நாட்டில் மற்றொரு மாநிலமொன்று உருவாக்கப் போகிறது என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. இந்த துறைமுக நகர திட்டத்தின் கீழ் புதிய சீன காலனித்துவ காலனி நிறுவப்பட உள்ளது.

மேலும் புதிய சீன காலனியாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த துறைமுக நகரம், நாட்டின் கட்டுப்பாட்டில் இல்லை. அதற்கு முகவர்கள் யாரும் இல்லை. அந்த நிலத்திற்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான பிரதிநிதித்துவமோ கட்டுப்பாடோ இல்லை.

ஆகவே உருவாக்கப்படவுள்ள புதிய சீன காலனி நிராகரிக்கப்பட வேண்டும். இது இந்த நாட்டில் நிறுவப்படக்கூடாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.