16

16

“குருந்தூர் மலையில் இந்து மக்கள் சென்று வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையினை நாங்கள் மேற்கொள்வோம்.” – எம்.ஏ.சுமந்திரன்

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்புப் பகுதியில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத்தலமான குருந்தூர்மலையில், இந்து மக்கள் வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வழக்கொன்றினைத் தொடர்வது தொடர்பில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் கடந்த 30.01.2021 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தினைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் அன்று வழக்குத் தொடர்வதற்கான ஆவணங்கள் சிலவற்றினைக் கையளித்திருந்தனர்.

இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக இன்று வெள்ளிக்கிழமை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்து வழக்குத் தொடர்வது தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிலவற்றினை கையளித்திருந்தனர்.

இச் சந்திப்பினையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

குருந்தூர்மலை சம்மந்தமாக சில வருடங்களுக்கு முன்பிருந்தே ஒரு பிணக்கு ஏற்பட்டது. அது தொடர்பாக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே வழக்கொன்று தாக்கல்செய்யப்பட்டு அதிலே ஒரு இணக்கப்பாடு எய்தப்பட்டிருக்கின்றது. இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொல்லியல் திணைக்களத்தினர், அமைச்சரோடு வந்து அங்கே இருந்த வழிபாட்டுச்சின்னத்தை அகற்றி ஒரு புத்தர் சிலையை வைத்து புதியதாக தொல்பொருள் ஆராய்ச்சி என்று ஆரம்பித்துள்ளார்கள்.

ஆகையினாலே இது தொடர்பாக வழக்கு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்காக, கடந்த 2018ஆம் அண்டு தாக்கல்செய்யப்பட்ட AR/673/18 என்ற வழக்கின் ஆவணப் பிரதியை முழுமையாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் என்னிடம் கையளித்திருக்கின்றார்.

அந்தவகையில் இது தொடர்பான அடுத்தடுத்த நடவடிக்கைகள், அதாவது அந்த இடத்திலே இந்து மக்கள் சென்று வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையினை நாங்கள் மேற்கொள்வோம் என்றார்.

டுபாய் நகரில் ரமழான் மாதத்தில் யாசகம் செய்ய தடை – தடையை மீறிய 12 யாசகர்கள் கைது !

டுபாய் நகரில் ரமழான் மாதத்தில் யாசகம் செய்வதை தடுக்கும் ஒருங்கிணைந்த செயற்றிட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக டுபாயில் விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்யப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்தை கருத்திற்கொண்டு இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கையை தடுக்கும் வகையில் யாசகர்களை கைது செய்ய அங்கு ரோந்துப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதன் காரணமாக ரமழான் மாதத்தின் முதல் நாளிலேயே 12 யாசகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நன்கொடை வழங்க விரும்பும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் மாத்திரமே நன்கொடைகளை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேலும் யாசகம் செய்பவர்களுக்கு நன்கொடை கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

“தேசிய நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்து சுதந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்துபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.” – அமைச்சர் சரத் வீரசேகர

“தேசிய நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்து சுதந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்துபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.”  என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.

முல்லேரியாவ பிரதேசதத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொதுமக்களின் கருத்து சுதந்திரத்தை முடக்கும் வகையில் சட்டம் உருவாக்கும் யோசனை ஏதும் கிடையாது. தற்போது நடைமுறையில் உள்ள தண்டனை சட்டகோவையின் உள்ளடக்கங்களில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தவும், புதிய விடயங்களை இணைத்துக் கொள்ளவும் மாத்திரம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளில் கருத்து சுதந்திரம் பிரதான ஒன்றாக காணப்படுகிறது. ஜனநாயக நாடுகளில் கருத்து சுதந்திரம் தாராள மயமாக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டிலும் அத்தன்மையே காணப்படுகிறது. நல்ல நோக்கத்திற்காக வழங்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்தை ஒரு தரப்பினர் தவறான முறையில் பயன்படுத்துகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் சிலர் போலியான செய்திகளை பதிவேற்றம்’ செய்து சமூகத்தின் மத்தியில் மாறுப்பட்ட நிலைப்பாட்டை தவறான முறையில் தோற்றுவிக்கிறார்கள். ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் பதிவுகள் வெறுக்கத்தக்க வகையில் காணப்படுகிறது.

இவை தேசிய நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி இறுதியில் அடிப்படைவாத முரண்பாடுகளை தோற்றுவிக்கும். இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. கருத்து சுதந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்துபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.” என்றார்.

வடமராட்சியில் சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூடு – துன்னாலையைச் சேர்ந்த இருவர் படுகாயம் !

வடமராட்சியில் சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த மண் கடத்திய இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, துன்னாலையைச் சேர்ந்த இருவரே படுகாயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஒருவரின் காலில் துப்பாக்கி ரவை உள்ளதாகவும், இதன்காரணமாக அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

“இலங்கை தமிழர்களையும் – தமிழ்நாட்டுத் தமிழர்களையும் அரசியல்வாதிகள் மோத விடுகின்றனர்.” – செல்வராசா  கஜேந்திரன்

“இலங்கை தமிழர்களையும் – தமிழ்நாட்டுத் தமிழர்களையும் அரசியல்வாதிகள் மோத விடுகின்றனர். இதனை ஒரு போதும் ஏற்க முடியாது” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா  கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை ஆட்சியாளர்களால் தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்ற நிலையில் தமிழ் – சிங்களப் புத்தாண்டு பிறந்துள்ளது. நாட்டில் தற்போது வறுமை சூழ்ந்து கொண்டிருக்கின்றது. பொருட்கள் விலையேற்றம், தேங்காய் எண்ணெய் மற்றும் பருப்பில் கலப்படம் என உண்ணும் உணவுகளிலேயே நச்சுப் பதார்த்தங்கள் கலக்கப்பட்ட  நிலை காணப்படுகின்றது.

அரசால் புத்தாண்டுக்காக வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்ற 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவுகூட புத்தாண்டு தினத்தில் அந்த மக்களுக்குக் கிடைக்காத துர்ப்பாக்கிய நிலை காணப்பட்டது.

திட்டமிடாத வகையில் திடீரென அரசு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவைத் தமது அரசியல் நோக்கத்துக்காக வழங்கப்பட்டமையால் மக்கள் இரவிரவாக அரச அலுவலகங்களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் வடபகுதி மீனவர்கள் அதிலும் குறிப்பாக யாழ். மாவட்ட மீனவர்கள் தமது வாழ்வாதாரத் தொழிலை எண்ணி கலக்கமடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய மீனவர்களை யாழ். கடல் எல்லைப் பகுதிகளில் மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பில் வெளியிட்ட கருத்து அத்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் மக்களுக்குப்  பேரிடியாக மாறியுள்ளது.

இலங்கைத் தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் ஒருதாய் பிள்ளைகளாகச் செயற்பட்டு வரும் நிலையில் அரசியல்வாதிகள் அவர்களை மோத விடுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.

ஆகவே, இலங்கை அரசானது மீனவர்கள் பிரச்சினையில் அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுத்து இரு நாட்டு மீனவ மக்களை மோத விட்டு வேடிக்கை பார்ப்பதை முதலில் நிறுத்த வேண்டும்- என்றார்.

கருப்பின வாலிபர் சுட்டுக்கொலை – மக்கள் போராட்டத்தின விளைவாக பதவியை ராஜினாமா செய்த பெண் போலீஸ் அதிகாரி !

அமெரிக்காவின் மின்சோட்டா மாகாணம் புரூக்ளின் சென்டர் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் டான்ட் ரைட் (வயது 20) என்ற கருப்பின வாலிபரை போலீசார் கைது செய்ய முற்பட்டனர்.

அதன்போது அவர் போலீசாரின் பிடியில் இருந்து நழுவி காரில் தப்பிச் செல்ல முயன்ற போது, பெண் பொலீஸ் அதிகாரியான கிம் பாட்டர் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். வெள்ளை இனத்தைச் சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரியால் கருப்பின வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து புரூக்ளின் சென்டர் நகரில் பெரும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் வன்முறைகள் அரங்கேறின.

இதனிடையே டான்ட் ரைட் கொல்லப்பட்டது ஒரு விபத்து என்றும், போலீஸ் அதிகாரி கிம் பாட்டர் எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கும் ‘டாசர்’ துப்பாக்கியை பயன்படுத்துவதற்கு பதில் தவறுதலாக துப்பாக்கியால் சுட்டதாகவும் புரூக்ளின் சென்டர் நகர போலீசார் தெரிவித்தனர்.‌ ஆனாலும் மக்கள் இதனை ஏற்க மறுத்து, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.‌

இந்த நிலையில் டான்ட் ரைட்டை சுட்டுக்கொன்ற பெண் போலீஸ் அதிகாரி கிம் பாட்டர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து புரூக்ளின் சென்டர் நகரின் தலைமை போலீஸ் அதிகாரியான டிம் கேனனும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.‌ இவர்களின் முடிவு போராட்டத்தை தணித்து சமூகத்தில் அமைதியை கொண்டுவர உதவும் என புரூக்ளின் சென்டர் நகர மேயர் எலியட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“பொறுமையுடன் இருங்கள். அரசிலிருந்து வெளியேறுவதா? இல்லையா? என எதிர்வரும் 19ஆம் திகதிக்குப் பின்னர் பதிலளிக்கின்றோம்.” – அமைச்சர் விமல் வீரவன்ச

அரச கூட்டணியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிலிருந்து வெளியேறுவோமா? என்ற கேள்விக்கு எதிர்வரும் 19ஆம் திகதிக்குப் பின்னர் பதிலளிக்கின்றோம். அதுவரைக்கும் பொறுமையுடன் இருங்கள்.”என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி), அமைச்சர் விமல் வீரவன்ச (தேசிய சுதந்திர முன்னணி) ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

‘அரச கூட்டணியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல பங்காளிக் கட்சிகள் அதிலிருந்து வெளியேறும் முடிவில் இருக்கின்றன. எதிர்வரும் 19ஆம் திகதிக்குப் பின்னர் அனைத்து உண்மைகளும் அம்பலத்துக்கு வரும்’ என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே மைத்திரியும் விமலும் மேற்கண்டவாறு கூறினர்.

அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-

“நாங்கள் அரசின் பிரதான பங்காளிகள். எம்மைப் புறந்தள்ளிவிட்டுச் செயற்பட அரசிலுள்ள சிலர் எத்தனிக்கின்றனர். மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பில் அரசு முன்வைத்துள்ள யோசனையை நாம் அடியோடு நிராகரிக்கின்றோம். இது தொடர்பில் முடிவெடுக்க எதிர்வரும் 19ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அரசிலுள்ள பங்காளிக் கட்சிகளுடன் பேச்சு நடத்தவுள்ளார். மே தினக் கூட்டம் தொடர்பிலும் இதன்போது தீர்மானம் எடுக்கப்படும்.

அதேவேளை, அரசுக்குள் எழுந்துள்ள கருத்து மோதல்கள் தொடர்பிலும் பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பேசப்படும்.

அரசிலிருந்து வெளியேறும் தீர்மானத்தை நாம் இன்னமும் எடுக்கவில்லை. ஆனால், அரசிலுள்ள சிலர் எங்களைப் புறந்தள்ளிவிட்டுச் செயற்படும் முடிவில் இருப்பது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் எமது நிலைப்பாடுகளைத் தெரிவிப்போம். அந்தப் பேச்சு வெற்றியடைந்தால் அரசுக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது; நாட்டு மக்களுக்கும் நல்லது. பேச்சு தோல்வியடைந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் நாம் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டி வரும். எனவே, 19ஆம் திகதி வரைக்கும் பொறுமையாக இருங்கள்” – என்றார்.