03

03

“இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு செல்ல விடாது தடுத்த துரோகிகள் அதனை மக்களிடம் மறைக்கும் முயற்சியிலும் ஈடுபடுகின்றனர்.”- சுமந்திரன், சாணக்கியன் தொடர்பில் கஜேந்திரன் !

“இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு செல்ல விடாது தடுத்த துரோகிகள் அதனை மக்களிடம் மறைக்கும் முயற்சியிலும் ஈடுபடுகின்றனர்.” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

அம்பாறை – பாண்டிருப்பு பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை(3.04.2021) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,

இந்தியாவின் எடுபிடிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பினை வைத்து மைத்திரியை வெல்ல வைத்தார்கள். இதனால் ரணில் மைத்திரி நல்லாட்சி வருகின்றது. இது அவர்களுக்கு வேண்டப்பட்ட ஆட்சி. இந்த அரசின் 5 ஆண்டு காலப்பகுதியில் எவ்வித உள்ளக விசாரணையும் நடத்தப்படவில்லை. சுமந்திரன் தற்போது கூறுகின்றார் – உள்ளக விசாரணை தான் வேண்டும்.

காரணம் இந்த நாட்டில் தான் நாம் சேர்ந்து வாழ வேண்டும். ஆகவே இந்த நாட்டில் குற்றங்கள் நடந்திருந்தால் அவை விசாரிக்கப்பட வேண்டும். விசாரிக்கப்படுவது தான் நாட்டிற்கு நல்லது. ஆகவே தான் இந்த தீர்மானத்தை வரவேற்றதாக குறிப்பிடுகின்றார். ஆனால் 2015 ஆண்டு ராஜபக்சவினை தேர்தலில் வீழ்த்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வோம் எனக் கூறினார்கள்.

இதனை நம்பி சகல மக்களும் விழுந்தடித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றித்திற்கு அவரை(ராஜபக்ச) கொண்டுசெல்ல வேண்டும் என்பதற்காக மைத்திரிக்கு வாக்களித்தார்கள்.

இதன் பிறகு 2019 வரை இந்த ஆட்சியில் ஏன் உள்ளக விசாரணையை வலியுறுத்தவில்லை என்பதை கேட்க விரும்புகின்றேன். நம்பிக்கை இருக்கின்றது எனக் கூறி கால நீடிப்பினை தானே வழங்கி கொண்டிருந்தீர்கள். உங்களுடைய நோக்கம் குற்றங்கள் விசாரிக்கப்படுவதற்கல்ல. உங்களுடைய நோக்கம் குற்றங்கள் நடைபெற வேண்டும். அந்த குற்றங்களை வைத்துக்கொண்டு சர்வதேச நாடுகள் ஆவணங்களை தயார் செய்ய வேண்டும். மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கு இல்லை.

சுமந்திரனிடம் 2015 தொடக்கம் 2019 வரை ஜெனிவாவில் இலங்கையை எந்த அளவில் மீட்டு கொண்டு வந்தீர்கள் என கேட்கின்றேன். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை கொண்டு செல்லுவம் வாய்ப்பு சுமந்திரன், சாணக்கியன், சம்பந்தன் ஆகியோரினால் வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற கூட்டமைப்பினால் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

அங்கே டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன், பிள்ளையான், வியாழேந்திரன், திலீபன் போன்றோர் பேரினவாத கட்சியின் முகவர்கள். இதில் பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

அவர்கள் அரசாங்கத்தோடு இருப்பவர்கள். ஏனைய 13 பேரில் அறுதிப்பெரும்பான்மையுடன் உள்ள கூட்டமைப்பினர் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் 46:1 தீர்மானத்தை நிறைவேற்றுங்கள் எனக் கூறியதன் மூலம் அது உள்ளக விசாரணையை வலியுறுத்தி இருக்கின்றது.

உள்ளக விசாரணையை வரவேற்பதாக இவர்கள் கேட்டுக்கொண்டதனால் தான் இந்த தீர்மானம் நிறைவேறி இருக்கின்றது. இதனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்லும் வாய்ப்பு இவர்களின் செயற்பாட்டினால் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த துரோக செயலுக்கு சாணக்கியனும் சுமந்திரனும் கூட்டாக மிகத் தீவிரமாக செயல்பட்டது மட்டுமல்லாமல், அவர்கள் அந்த துரோகத்தை மறைக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளனர் என்பதை மக்கள் மத்தியில் நான் தெளிவு படுத்த விரும்புகின்றேன்.”என்றார்.

“ஊவா மாகாணத்தில் தமிழ் கல்வி அமைச்சு பறிக்கப்பட்டமை மலையக மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும்.” – முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன்

“ஊவா மாகாணத்தில் தமிழ் கல்வி அமைச்சு பறிக்கப்பட்டமை மலையக மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும்.” என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று (03.04.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் மத்திய மாகாணத்தில் 522 தமிழ் பாடசாலைகளும் ஊவா மாகாணத்தில் 222 தமிழ் பாடசாலைகளும் உள்ளன. இவ்விரு மாகாணங்களிலும் தமிழ்மொழி மூல கல்வி மேம்பாட்டுக்காக தமிழ்க் கல்வி அமைச்சுகள் உருவாக்கப்பட்டிருந்தன. 1988 இல் தான் மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து மலையக மக்களுக்கானதொரு உரிமையாக இவை கிடைக்கப்பெற்றுவந்தன.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இற்றைக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சு இல்லாது செய்யப்பட்டது. தற்போது ஊவா மாகாணத்திலும் தமிழ்க் கல்வி அமைச்சும் பறிக்கப்பட்டுள்ளது. இது பெருந்தோட்ட மக்களுக்கு செய்யப்படும் துரோகம்.

தமிழ்க் கல்வி அமைச்சு இருந்தால் கல்விப்பணிப்பாளர் நியமனம், ஆசிரியர் நியமனம் என பல விடயங்களை செய்யலாம். தமிழ்மொழிமூல கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம். தற்போது அந்த அமைச்சு இல்லாமல் செய்யப்பட்டமையானது கல்வி வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதேவேளை, நாளொன்றுக்கு 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என தோட்ட துரைமார் இன்று வலியுறுத்தி வருகின்றனர். பல நெருக்கடிகளை நிர்வாகம் கொடுத்து வருகின்றது. எனவே, ஆயிரம் ரூபாவை அரசு பெற்றுக்கொடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

“முன்பு வெள்ளை வான் தொடர்பில் குற்றஞசாட்டப்பட்டேன் இன்று இப்போது சூழல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்படுகிறேன்.” – வவுனியாவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச !

“நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மகிழ்ச்சியான குடும்பத்தையம், வளமான தேசத்தையும் உருவாக்குவதாக உறுதியளிக்கிறேன்.” என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று வுவுனியாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி , வெடிவைத்தகல்லு கிராமத்தில் போகஸ்வெவ மகா வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்ற கிராமத்துடன் உரையாடல் நிகழ்வில் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய அவர் ,

“இந்த வறிய மக்களின் பிரச்சினைகள் சிலருக்கு புரிவதில்லை. அவர்கள் இங்கு வருவதுமில்லை. மஹிந்த ஜனாதிபதியாக இருந்த போது சுற்றாடலைப் பாதுகாக்க என்னைப்போல் எவரும் செயற்பட்டிருக்க மாட்டார்கள். நாங்கள் வெள்ளை வான் அனுப்பியதாக அந்தக்காலத்தில் கூறினார்கள். நபர்களை கடத்தி முதலைகளுக்கும், எனது மீன் தொட்டியில் உள்ள சுறாக்களுக்கும் உண்ணக் கொடுத்ததாக கூறினார்கள்.

Sri Lanka : President discusses issues of the people in Vavuniya in  'Discussion with the village'இப்போது வெள்ளை வான் இல்லை. சுறாக்களும் இல்லை. முதலைகளும் இல்லை. அவையனைத்தையும் வேறு எவரோ செய்திருக்கின்றார்கள்.

எமது தேங்காய் எண்ணெய்யே சிறந்தது. நாம் பாம் எண்ணெய்யை தடை செய்தோம். எமது தேங்காய் எண்ணெய்க்கு உலகில் பாரிய கேள்வி உள்ளது. ஆனால் நாம் அந்தளவிற்கு தெங்கு உற்பத்தியை செய்யவில்லை.

இதனால் வெளிநாடுகளில் இருந்து எண்ணெய்யை வர்த்தகர்கள் கொண்டு வருகின்றனர். அவற்றின் தரத்தை ஆராய அரச நிறுவனங்கள் உள்ளன. இப்போது அவற்றை கைப்பற்றியதால் நச்சு தேங்காய் எண்ணெய் கொண்டுவந்ததாக எம்மைத் தூற்றுகின்றனர். அதனை நாம் கொண்டு வரவில்லை. வர்த்தகர்களே கொண்டு வருகின்றனர்.

மஹிந்த ராஜபக்ச மீது குற்றஞ்சாட்டி, அவரை தோற்கடிப்பதற்கு எதனோல் ஒரு காரணமாக இருந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கும். எதனோல்.. எதனோல்.. என அனைத்து இடங்களிலும் கூறப்பட்டது. பதாகைகள் ஒட்டப்பட்டமை நினைவிருக்கும் அல்லவா? மக்களிடையே அணுகுமுறை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். திருட்டுத் தனமாக செயற்படும் இந்த வர்த்தகர்களும் எமது மக்களே. திருட்டுத்தனமாகக் கொண்டு வருகின்றனர். அவற்றைக் கைப்பற்றவே அரச நிறுவனங்கள் உள்ளன. அவற்றைக் கைப்பற்றாவிட்டால், அவை மக்களைச் சென்றடையும்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மகிழ்ச்சியான குடும்பத்தையம், வளமான தேசத்தையும் உருவாக்குவதாக உறுதியளிக்கிறேன்” என்றும் கூறினார்.

முடிவின்றி தொடரும் கொரோனா இறப்புக்கள் – நேற்று 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மரணம் !

2019 ஆம் ஆண்டு இறுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸானது இன்று வரை உலக நாடுகளை முழுமையாக உலுக்கி வருகிறது.

இந்நிலையில் உலகளவில் கொரோனா வைரசால் பலியானவர்கள் எண்ணிக்கை 28½ லட்சத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 382 பேர் உயிரிழந்தனர்.

அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.08 கோடியாக உயர்ந்தது. புதிதாக 6.37 லட்சம் பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இதில் 10.52 கோடி பேர் குணம் அடைந்துள்ளனர். 2.26 கோடி பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 2807 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 69 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவிலும் தொடர்ந்து பாதிப்பு இருந்து வருகிறது. அங்கு நேற்று 1000 பேர் பலியாகி உள்ளனர்.

“இலங்கை மீதான ஐ.நா.தீர்மான வாக்கெடுப்பு முடிவுகள் தாய் நாட்டை காட்டிக் கொடுக்கத் தயாராக உள்ளவர்களை தெளிவாக அடையாளம் காட்டியுள்ளது.” – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க

“இலங்கை மீதான ஐ.நா.தீர்மான வாக்கெடுப்பு முடிவுகள் தாய் நாட்டை உண்மையாக நேசிப்பவர்களையும், பணம் மற்றும் அதிகாரத்துக்காகத் தாய் நாட்டைக் காட்டிக் கொடுக்கத் தயாராக உள்ளவர்களையும் தெளிவாக அடையாளம் காட்டியுள்ளது.” என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஜெனிவா விவகாரத்தில் தாய் நாட்டின் நலனுக்கு முன்னுரிமை வழங்கிய குழுவினரையும், பணம் மற்றும் அதிகாரத்துக்காக நாட்டை அழிவுக்கு இட்டுச் செல்லத் தயாராகவுள்ள குழுவினரையும் நாம் அடையாளம் கண்டுகொண்டோம்.

ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தாலும், இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்குரிய சாத்தியங்கள் இல்லை.

ஐ.நா. மனித உரிமைகள் சபையைப் பயன்படுத்தி சில பிரிவினர் இலங்கையை இழிவுபடுத்த முயற்சிக்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சிகள் நாட்டை இழிவுபடுத்தும் முயற்சிகளில் கைகோர்த்துள்ளன – என்றார்

“காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஆராய்ந்து தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும் பொறிமுறையை இலங்கை அரசு முன்னெடுத்தேயாக வேண்டும்.” – அனுரகுமார திஸாநாயக்க

“காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஆராய்ந்து தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும் பொறிமுறையை இலங்கை அரசு முன்னெடுத்தேயாக வேண்டும்.” மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த விவகாரத்தை சர்வதேசத்தைத் திருப்திப்படுத்தும் செயற்பாடாகக் கருதாது எமது பிரஜைகள் மீதான அக்கறையில் உண்மைகளைக் கண்டறியும் பொறிமுறையை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டவுடன் 2009ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணி 14 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அதில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் குறித்து பல்வேறு விடயங்களைச்  சுட்டிக்காட்டியிருந்தது.

அத்தோடு போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளதா?, காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது? போன்ற உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தோம்.

நாட்டின் நீதிமன்ற சுயாதீனம் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும், பொது ஆணைக்குழுக்கள் சுயாதீனமாகச் செயற்பட வேண்டும் எனவும், சர்வாதிகாரப் போக்கைக் கைவிட்டு சகல மக்களுக்குமான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் நீண்டகாலமாக நாம் கோரி வருகின்றோம்.

தற்சமயம் நிறைவேற்றப்பட்டுள்ள ஜெனிவாத் தீர்மானத்தால் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என நம்ப முடியாது. அதேபோல் பொருளாதாரத் தடைகள் ஏற்படும் எனவும் கூறிவிட முடியாது.

ஒரு சிலர் அல்லது அரசு செய்த தவறுகளுக்கு ஒட்டுமொத்த நாட்டு மக்களும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டுமா? என்ற கேள்வியும் எங்கள் மத்தியில் உள்ளது.” என்றார்.

“இம்முறை எமது அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.” – விராட்கோலி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் திகதி சென்னையில் தொடங்குகிறது.

முதல் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சும், விராட் கோலி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ்- பெங்களூர் அணியும் மோதுகின்றன.

இதற்காக இரு அணி வீரர்களும் சென்னை வந்துள்ளனர். பெங்களூர் அணி தலைவர் விராட்கோலி நேற்று சென்னை வந்தார். தன்னை 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு பயிற்சியில் ஈடுபடுகிறார்.

ஏற்கனவே வந்த பெங்களூர் அணி வீரர்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறையை முடிந்த பிறகு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் விராட்கோலி பெங்களூர் அணியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:-

நாங்கள் மீண்டும் இந்தியாவில் விளையாடுகிறோம் என்பதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். வேறுபட்ட அமைப்பில் இருந்தாலும், வேறு வழியில் இருந்தாலும் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்த நேரத்தில் எனக்கு ஒரு நல்ல உணர்வு இருக்கிறது.

இது ஒரு நீண்ட பயணம் – பெங்களூர் அணிக்கு திரும்பி வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த ஐ.பி.எல். போட்டியை நேற்றுதான் நாங்கள் முடித்தது போல் உணர்கிறோம். கடந்த போட்டியின் உத்வேகத்தை நாங்கள் பெற்றுள்ளோம். அணியில் சில புதிய வீரர்கள் வந்துள்ளனர். பழைய வீரர் பெயர்களும் உள்ளன. அவர்களை நான் பல ஆண்டுகளாக அறிந்து இருக்கிறேன்.

டேனியல் கிறிஸ்டியன் இதற்கு முன்பு பெங்களூர் அணியில் இருந்திருக்கிறார். மேக்ஸ்வெல், முதல் முறையாக இடம் பெற்றுள்ளார். ஆனால் அவரை நாம் அனைவரும் அடிக்கடி ஐ.பி.எல். போட்டியில் பார்த்து இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக இணைந்து நிறைய ஆட்டங்களில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் இடையான இரண்டாவது டெஸ்ட் போட்டி – இலங்கை வீரர்களின் நிதான துடுப்பாட்டத்தால் போட்டி சமன் !

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்திருந்தது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் சகல விக்கெட்டுக்களை இழந்து 354 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கை அணி சார்ப்பில் சுரங்க லக்மால் 4 விக்கெட்களையும், துஷ்மந்த சமீர 3 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர். இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுக்களுக்கு 280 ஒட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. அவ்வணி சார்பாக அணித்தலைவர் பிராத்வெயிட் அதிகபட்சமாக 85 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அதன்படி, இலங்கை அணிக்கு 377 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதன் அடிப்படையில் தனது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 ஆவது நாள் ஆட்ட நேரம் நிறைவடையும் போது2 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இலங்கை அணி சார்பில் ஓசத பெர்ணான்டோ ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 75 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

அதன்படி, இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. போட்டியின் ஆட்ட நாயகனாக பிராத்வெயிட் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தொடராட்ட நாயகனாக சுரங்க லக்மால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு அதிகாரி கொலை – வெள்ளை மாளிகை கொடிக் கம்பங்கள் அரை கம்பத்தில் பறக்க விட உத்தரவிட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் !

அமெரிக்காவில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் வெளியே மர்ம நபர் ஒருவர் நீல நிற செடான் காரை கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மீது மோதியுள்ளார். இதில் 2 அதிகாரிகள் காயமடைந்தனர்.
இதன்பின் காரில் இருந்து வெளியே குதித்த ஓட்டுனர் அதிகாரிகளை கத்தியால் குத்தியுள்ளார். இதில், அதிகாரி ஒருவர் பலியானார்.  இதனால் கேபிடால் போலீசார் அந்த நபரை சுட்டுக் கொன்றனர். தாக்குதல் நடத்திய நபரின் அடையாளம் தெரியவில்லை. தாக்குதலுக்கான நோக்கம் பற்றிய விவரமும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், அமெரிக்க கேபிடால் கட்டிட பாதுகாப்பு அதிகாரியான வில்லியம் பில்லி இவான்ஸ் மர்ம நபர் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் 18 ஆண்டு கால பணி அனுபவம் கொண்டவர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் மனமுடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அமெரிக்காவின் கேபிடால் பகுதியில் பாதுகாப்பு சோதனை சாவடியில் நடந்த வன்முறை தாக்குதலில் காவல் அதிகாரி வில்லியம் இவான்ஸ் கொல்லப்பட்டும், சக அதிகாரி உயிருக்குப் போராடி வருகிறார் என்பது பற்றியும் அறிந்து ஜில் மற்றும் நான் மனமுடைந்து போனோம். வெள்ளை மாளிகை கொடிக் கம்பங்கள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மட்டக்களப்பு பண்ணையாளர்களின் கந்தர்மல்லிச்சேனை மேய்ச்சற்தரை அபகரிப்பு முயற்சி – களவிஜயம் மேற்கொண்ட த. தே.கூ பிரதிநிதிகள்  !

மட்டக்களப்பு பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெவிலியாமடு கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவின் கந்தர்மல்லிச்சேனை பிரதேசம் காலாகாலமாக சம்பிரதாயபூர்வமாக மட்டக்களப்பு பண்ணையாளர்களின் மேய்ச்சற்தரைப் பிரதேசமாகப் பாவிக்கப்பட்டு வந்த பிரதேசமாக அறியப்படுகின்றது.

தற்போது அப்பிரதேசத்தில் அண்மைய மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை மக்களால் மரமுந்திரிகைச் செய்கை மேற்கொள்ளப்படுவது குறித்து அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அவ்விடம் சென்று பார்வையிட்டு, இது தொடர்பில் பட்டிப்பளைப் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதோடு, மாவட்ட செயலாளார் மற்றும் வன இலாகா அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தும் தற்போது மீண்டும் அச்செயற்பாடு தொடர்வதாகத் தெரியவந்ததையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று நேற்றைய தினம்(2.04.2021) மீண்டும் அப்பிரதேசத்திற்கு களவிஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது மேற்படி பிரசேத்தில் சிவில் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளினால் மரமுந்திரிகைச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றமை பிரதிநிதிகளால் அவதானிக்கப்பட்டது. அதன் பிற்பாடு அங்கு செய்கை மேற்கொள்ளும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன், மேற்படி செய்கை தொடர்பில் அவர்களிடம் வினவப்பட்டது.

கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் பெரும்பான்மைப் பொது மக்களால் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டதுடன், 2015ம் ஆண்டின் பின்னர் வனஇலாக அதிகாரிகளினால் இவை தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது எனவும் மீண்டும் தற்போது சிவில் பாதுகாப்புப் பிரிவினரால் இப்பிரதேசத்தில் மரமுந்திரிகைச் செய்கை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கு தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சடடத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.இசாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் மா.நடராஜா, மண்முனை தென்ருவில் பற்றுப் பிரதேசசபைத் தவிசாளர், மண்முனை தென்மேற்குப் பிரதேசசபைத் தவிசாளர், மண்முனை மேற்குப் பிரதேசசபைத் தவிசாளர் மற்றும் உபதவிசாளர், போராதீவுப் பற்றுப் பிரதேசசபைத் தவிசாளர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.