05

05

“அமெரிக்கத் தாக்குதல்களை விசாரணை செய்த பாணியில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணைகளை அரசாங்கம் நடத்தவேண்டும்.” – எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ

“அமெரிக்கத் தாக்குதல்களை விசாரணை செய்த பாணியில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணைகளை அரசாங்கம் நடத்தவேண்டும்.” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை தண்டிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த கோட்டாபய – மஹிந்த அரசாங்கம், வழங்கிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்ற அதிக தாமதம் செய்வது ஏன் என்றும் அவர்  கேள்வி எழுப்பியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான ஷஹ்ரான் காசீம், தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் இலங்கை அரசு புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சாலியை தொடர்புகொண்டிருந்தார் எனக் கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது நளின் பண்டார குறிப்பிட்டிருந்தார்.

நளின் பண்டாவின் இந்தக் கருத்துக்கு எதிராக மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைய நளின் பண்டாரவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு பிரிவினர் அழைத்திருந்தனர்.

அந்த வகையில் இன்று முற்பகலில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகிய நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவிடம் பலமணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் விசாரணைக்காக நளின் பண்டார முன்னிலையான போது அவருடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த மேலும் சில உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர் சஜித் பிரேமதாஸ,

ஈஸ்டர் தாக்குதல் குறித்த உண்மைகளை அரசாங்கமே அம்பலப்படுத்த வேண்டும். இந்த தாக்குதலுக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரிகள், உதவிசெய்தோரை கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனையளிப்பதற்கான கடமை அரசாங்கத்திற்கு உள்ளது.

அதனை தேர்தல்காலத்தில் அரச தரப்பினரே வாக்குறுதியாகக் கூறிவந்தார்கள். தாக்குதலுக்குப் பின்னால் இருப்போர் அம்பலமாகவில்லை என்பதையே நாங்களும் மக்களும் நினைக்கின்றார்கள். உண்மையை கண்டறியவே மக்கள் ஆணையை இந்த அரசாங்கத்திற்கு வழங்கியிருக்கின்றனர்.

எமது அரசாங்கத்தின் காலத்தில்தான் ஆணைக்குழுவும் அமைக்கப்பட்டு தற்போது இந்த அரசாங்கத்தின் காலத்தில் அறிக்கை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கத் தாக்குதல்கள் குறித்து பின்பற்றப்பட்ட நடவடிக்கையை இந்த அரசாங்கமும் பின்பற்ற வேண்டும் என யோசனை முன்வைக்கின்றேன்.

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் மிகவும் தாமதமாகும். 2019ஆம் ஆண்டில் ஆட்சிக்குவந்த அரசாங்கம், புதிய விசாரணைக் குழுவை அமைத்து, வெளிநாட்டிலுள்ள நிபுணர்களை இணைத்துக்கொண்டு சில மாதங்களில் விசாரணையை நிறைவுபடுத்தியிருக்கலாம்.

கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவிக்கின்ற அதிருப்திகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை நடத்தி உண்மையை அறிவதில் இந்த அரசாங்கம் இன்னும் தாமதிக்கின்றது. மக்களிடம் இருந்து தகவல்கள் மறைக்கப்படுகின்றதா? கர்தினாலின் கருத்துக்களே இன்று மிகத்தெளிவாக இருக்கின்றன. தீவிரவாத செயற்பாடுகள், போதைப்பொருள் கடத்தல்களை தடுப்பதற்காக சிங்கப்பூரில் அமுல்படுத்தப்பட்டுள்ள தண்டனைகள், சட்டங்களே இங்கும் அமுல்படுத்தப்பட வேண்டும்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை என்னைப் பற்றி தெரிவித்துள்ள விடயங்கள் கவலையளிக்கின்றன.” – மைத்திரிபால சிறீசேன !

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தன்னைப் பற்றி தெரிவித்துள்ள விடயங்கள் கவலையளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை நாவல பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிர்வாக சேவையாளர் சங்கம் நாவல பிதேசத்தில் கட்சி தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடியது.

கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் பேராயரின் கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட போதே , “பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை என்னைப் பற்றி தெரிவித்துள்ள விடயங்கள் கவலையளிக்கின்றன.” என்று அவர் குறிப்பிட்டார்.

இதன் போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அவர் குறிப்பிடுகையில் , மாகாணசபைத் தேர்தல் தொடர்பான சட்ட மூலமே இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பான புதிய சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னரே அது குறித்து தீர்மானிக்க முடியும். அது தொடர்பில் இதுவரையில் எவ்வித கலந்துரையாடல்களையும் நாம் முன்னெடுக்கவில்லை என்றார்.

பேராயரின் கருத்து தொடர்பில் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கையில் ,

முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கும் தெரிவாகிவிட்டார். தேர்தல் நிறைவடைந்துவிட்டது. மீண்டும் அவர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. எனவே இதனை தவறாக புரிந்து கொள்ளுகின்றனர் என்றே நான் எண்ணுகின்றேன்.

அதே போன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் அவர் குற்றவாளியாகக் குறிப்பிடப்படவில்லை.

அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இடமளிக்குமாறு தான் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

பொலிஸ் அதிகாரியால் தெமழோ என கூறி தாக்கப்பட்டேன் – மஹரகம வீதியில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்ட சாரதி !

அண்மையில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரியால் மஹரகம வீதியில் வைத்து சாரதி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பெரிய அதிர்வினை ஏற்படுத்தியிருந்தது.  மேலும் தாக்கிய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டதாகவும் அரச தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கொடூரமாக தாக்கப்பட்ட சாரதியான இளைஞர் தனது மோசமான அனுபவத்தைப் பற்றி தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் கலைமகன் பிரவீன் என்ற தமிழ் இளைஞரே தாக்குதலுக்கு இலக்கானவராவார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

மரக்கறிகளை ஏற்றிக்கொண்டு கடந்த மாதம் 29ஆம் திகதி பண்டாரவளையிலிருந்து கொழும்புக்கு வரும் போதே இந்த சம்பவம் நடந்தது.

இதன்போது மஹரகம போக்குவரத்து சமிக்ஞையில் லொறியை நிறுத்தியிருந்தேன். அப்போது எனக்கு நித்திரை வந்து விட்டது. உறங்கி விட்டேன்.

எனக்கே தெரியாமல் லொறி முன் சென்றுவிட்டது. ஆனாலும் எனக்கு சட்டென்று நிதானம் வந்த போது எனது லொறிக்கு முன்னால் யாரோ இருப்பது தெரிந்தவுடன் விபத்தை தவிர்ப்பதற்காக லொறியை திருப்பினேன்.

அப்போதுதான் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எனது லொறியின் கண்ணாடி பட்டது. அவரை மோதவில்லை. கண்ணாடி மட்டுமே பட்டது. உடனே நான் லொறியை நிறுத்திவிட்டேன். எனினும் அப்போது மற்றுமொரு பொலிஸ் அதிகாரி வந்தார். என்னை அடித்து வெளியே இழுத்தார். நான் வாகனத்தின் பட்டியை கூட கழற்றவில்லை. அவர் என்னை அடித்து இழுத்த பிறகே பட்டிகை கழற்றினேன்.

எதுவும் கேட்டவில்லை. விசாரிக்கவும் இல்லை. உடனே அடிக்க ஆரம்பித்துவிட்டார்.

எனது வாகனத்தில் அடிபட்ட அதிகாரியை உடனே வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் அவருக்கு எதுவும் ஆகவில்லை.

அந்த இடத்தில் யாரென்றே தெரியாத ஒருவரும் வந்து என்னை தாக்கினார். பின்னர் பொலிஸ் அதிகாரி அவரது காலால் எனது காலை மடக்கி கீழே போட்டு, என் மீது ஏறி குதித்தார்.

பின்னர் என்னை வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று சிறுநீர் மற்றும் இரத்த பரிசோதனை செய்தார்கள். எனக்கு அடிப்பட்டது என்று கூறியும் வைத்தியர்கள் அதை கவனிக்கவில்லை. அடிக்கும் போது பொலிஸ் அதிகாரி “தெமழோ (தமிழன்)” எனவும் தகாத வார்த்தைகளையும் பிரயோகித்து ஏசியதாக அவர் தெரிவித்தார்.

“முன்னாள் தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ் நீக்கப்பட்ட விதம் தவறானது.” – அலிசப்ரி

“முன்னாள் தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ் நீக்கப்பட்ட விதம் தவறானது.” என நீதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னக்கோன், மொஹான் பீரிஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அலி சப்ரி இவ்வாறு பதிலளித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த வேளையில், அவரது அறிவுறுத்தலின் பேரில், ஜனாதிபதியின் செயலாளர், அப்போதைய தலைமை நீதிபதி மொஹான் பீரிஸுக்கு பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக  ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார்.

இந்நிலையிலேயே இவ்விடயம் தொடர்பில் அலி சப்ரி மேலும் கூறியுள்ளதாவது,  “தவறை சரிசெய்ய வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க தற்போதைய அரசாங்கம் தயாராக உள்ளது. இது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தேவையான ஆலோசனையைப் பெறுவார் என்று நம்புகிறேன்” என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்வாய்க்கிரகத்தில் பறக்கவுள்ள நாசாவின் ஹெலிகாப்டர் !

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் திகதி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. இது செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெஸரோ பள்ளத்தாக்கு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் உயிரினங்களுக்காக கரிம படிகங்கள் இருக்கின்றனவா என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக அங்கிருந்து சிறிய அளவிலான மாதிரிகளை இந்த விண்கலம் சேகரித்து பூமிக்கு அனுப்பி உள்ளது.

இந்த விண்கலத்தில் நவீன ஹெலிகாப்டர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது பெர்சவரன்ஸ் ஆய்வு விண்கலத்துடன் 47.1 கோடி கிலோ மீட்டர் பயணம் செய்து செவ்வாய் கிரகத்துக்கு சென்றுள்ளது.

இந்த ஹெலிகாப்டர், பெர்சவரன்ஸ் ரோவரில் இருந்து இறங்கி செவ்வாய் கிரகத்தில் நிறுத்தப்பட்டுள்ள படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் பறக்க தயாராக உள்ளது. இரவு நேரங்களில் இங்கு கடும் குளிர் நிலவுகிறது.

இதனால் அங்கு ஹெலிகாப்டரில் பாகங்கள் உறைந்து பழுது ஆவதை தடுக்க இதில் வெப்பம் உண்டாக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் வெப்பத்தை உருவாக்கி பேட்டரி மூலம் இந்த ஹெலிகாப்டரை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தயாராக நிற்கும் இந்த ஹெலிகாப்டர் விரைவில் செவ்வாய் கிரகத்தில் பறக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.

அரசாங்கம் வெளியிட்டுள்ள கறுப்பு பட்டியலில் பெயர் உள்ள நபர்களுடன் தொடர்புகளை பேணுவோர் கைது செய்யப்படுவர் !

இலங்கையிலுள்ள பலரது பெயர்களும் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள். அத்துடன் அவர்களுடன் தொடர்புகளைப் பேணுபவர்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு அண்மையில் தடை செய்யப்பட்ட தனிநபர்கள் மற்றும் அமைப்புக்களின் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் தடை செய்யப்பட்ட நபர்களாக அறிவிக்கப்பட்ட சிலர் இலங்கையில் வசித்து வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில் அவர்களை இலங்கை அரசு நாடு கடத்துமா? என்று அமைச்சர் சரத் வீரசேகரவிடம் ஊடகங்கள் கேட்டபோது,

“அரசு வெளியிட்ட தடைப் பட்டியலில் உள்ளவர்கள் இலங்கையில் இருந்தால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அவர்களுடன் தொடர்புகளைப் பேணுவோரும் சிறையில் அடைக்கப்படுவார்கள்” என்று பதிலளித்தார்.

“அரசு சிங்கராஜ வனப்பகுதி அழிக்கப்படுவதாக சிங்கராஜ வனப்பகுதி குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்.” – இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க

“அரசு சிங்கராஜ வனப்பகுதி அழிக்கப்படுவதாக சிங்கராஜ வனப்பகுதி குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்.” என கருத முடியாது என வனப்பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்.

சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகள் அரச அதிகாரத்துடன் முன்னெடுக்கப்படுவதாக கூறிக் கொண்டு எதிர்தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள். சிங்கராஜ வனப்பகுதியின் நிலப்பரப்பு ஆக்கிரமிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டது. இவ்விடயம் குறித்து முறையான விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

சுற்றுசூழல் பாதுகாப்பு விவகாரம் தற்போது அரசியல்மயப்படுத்தப்பட்டு விட்டன. சிங்கராஜ வனப்பகுதி குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் சூழ்ச்சிகள் உள்ளக மற்றும் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. உள்ளக மட்டத்தில் சுற்றுசூழல் விவகாரம் பிரதான குற்றச்சாட்டாக காணப்படுகிறது.

வனப்பகுதியை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு காணப்படுகிறது. கிராமிய புறங்களின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கான அபிவிருத்தி நிர்மாண பணிகளை முன்னெடுக்கும் போது அதனை சுற்றுசூழலுக்கு எதிரான செயற்பாடு என குறிப்பிட முடியாது.

நல்லாட்சி அரசாங்கத்தில் வில்பத்து காடு அரச அதிகாரத்துடன் அழிக்கப்பட்டன. இவ்விடயம் குறித்து தற்போது சூழலியளாலர்கள் என குறிப்பிட்டுக் கொள்பவர்கள் எவரும் அன்று எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

சுற்றுசூழக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் எவ்வித அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுக்கவில்லை. வனப்பகுதியின் பரப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளும் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“உங்களுக்கு இங்கு இடமில்லை. தனித்தமிழீழ நாட்டை இலங்கைத் தீவில் அமையுங்கள் என தேரர்கள் கூறுகின்றனர்.” – மனோ கணேசன்

தனித் தமிழீழத்தை இலங்கைத் தீவில் அமைப்பதற்கும், சர்வதேச சமூகம் அதற்கு உதவும் வகையில் சில தேரர்களின் செயற்பாடு அமைவதாக முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான  மனோ கணோசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது முகப்புத்தகத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

“கறுப்பு ஜூலை புகழ் கொண்ட ஒரு தேரர் உட்பட பெளத்த தேரர்களின் குழு மூன்று பிரேரணைகளை தேசிய அரங்கில் முன்வைத்துள்ளது.

1)நாட்டின் பெயரை “சிங்களே” என மாற்றனும்.

2)அதிகார பரவலாக்கம் வேண்டவே வேண்டாம்.

3)சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி.

அதாவது இந்த தேரர்கள் மறைமுகமாக, “உங்களுக்கு இங்கு இடமில்லை. தனித்தமிழீழ நாட்டை இலங்கைத் தீவில் அமையுங்கள்” என தமிழர்களுக்கும், “அதற்கு உதவுங்கள்” என சர்வதேச சமூகத்துக்கும் கூறுகிறார்கள் என நினைக்கிறேன்.

ஆகவே, இந்த தேரர்கள்தான் இன்று இலங்கையின் பிரதான பிரிவினைவாதிகள். மீண்டும், மீண்டும், இலங்கைக்கு கறுப்பு “பெயிண்ட்” அடிக்கிறார்கள்..!”

என்றார் மனோ கணேசன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின்போது, செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்களுக்கு அனுமதியில்லை !

‘மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின்போது, செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்காதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.” தேசிய பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளரான ஜெனரல் கமால் குணரத்னவால் இது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டங்கள் தொடர்பான செய்திகளை அறிக்கையிட வேண்டுமாயின், ஊடகவியலாளர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அல்லது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முடிவடைந்த பின்னர், அந்தக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் தனியாகக் கலந்துரையாடித் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று குறித்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்காக இந்தச் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ‘ஊடகங்களுக்கு விடயங்களை அறிக்கையிடல்’ என்ற தலைப்பின் கீழ் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

“இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களில் புற்றுநோய்கள் உள்ளிட்ட பல தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன.” – டொக்டர் சித்திக சேனரத்ன

“இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களில் புற்றுநோய்கள் உள்ளிட்ட பல தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன.” என்று இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் ஜெனரல் டொக்டர் சித்திக சேனரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும், அந்த உணவுகள் என்ன, அவற்றை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் எவை என்பதை பகிரங்கமாக சொல்ல முடியாது என்று அவர் தெரிவித்தார். இல்லையெனில் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் இறக்குமதி நிறுவனங்கள் முற்றிலும் பாதிப்படைந்துவிடும்.” எனவும் தெரிவித்துள்ளார்.

டொக்டர் சித்திக சேனரத்ன மேலும் தெரிவிக்கும் போது,

இது தொடர்பில் நிலையாக செய்யக்கூடிய ஒரே விஷயம், அசுத்தங்களைக் கொண்ட உணவுகளை அடையாளம் காண்பது மற்றும் குறைபாடுகளை சரிசெய்ய அத்தகைய உணவுகள் தொடர்பில் இறக்குமதியாளர்களுக்கு தெரிவிப்பது.

தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்யும் பல நிறுவனங்கள் இருந்தாலும், அவற்றில் ஒன்று மட்டுமே இலங்கை தர நிர்ணய சான்றிதழைக் கொண்டுள்ளது, மேலும் அந்த நிறுவனம் இறக்குமதி செய்யும் தேங்காய் எண்ணெய் முற்றிலும் ஆரோக்கியமானது என்று பொறுப்புடன் கூறலாம்.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை அடையாளம் கண்டு அவற்றை மீண்டும் ஏற்றுமதி செய்வது நீண்டகால நடைமுறையாக இருந்தபோதிலும், அப்லாடொக்சின் கொண்ட தேங்காய் எண்ணெய் குறித்து சமூகத்தில் கலந்துரையாடல் சுகாதார அமைச்சின் தலையீட்டால் உருவாக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார். இந்த விடயத்தில் மட்டும் சுகாதார அமைச்சகம் ஏன் தலையிட்டது என்பதில் சிக்கல் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.