25

25

கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த வைத்தியசாலையில் தீ பரவல் – 82 பேர் உயிரிழப்பு !

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள இப்னு காதிப் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக நோயாளிகள், ஊழியர்கள் என அனைவரும் அலறியடித்து வெளியேறினர். எனினும் தீ சூழ்ந்ததால், ஏராளமானோர் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். கட்டிடத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடைபெற்றது. இன்று காலையில் தீ முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த தீ விபத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். 110 பேர் காயமடைந்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் அனைவரும் உடனடியாக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
தீ விபத்து குறித்து உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல்செய்யும்படி பிரதமர் உத்தரவிட்டுள்ளார். ஆக்சிஜன் டேங்க் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

“சிறுப்பான்மை இனங்களை அழித்து, அடிமைப்படுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது.” – இந்திய சமூக ஜனநாயகக் கட்சி குற்றச்சாட்டு !

“சிறுப்பான்மை இனங்களை அழித்து, அடிமைப்படுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது என்பதைனையே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் கைதின் ஊடாக தோன்றுகின்றது.” என இந்திய சமூக ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சமூக ஜனநாயகக் கட்சி இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“நாட்டில் ராஜபக்ஷ தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் தொடர்ந்த இடம்பெற்று வருகின்றது. ஆரம்பத்தில் இந்த அரசாங்கத்தினால் ஈழத்தமிழர்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள் தற்போது முஸ்லிம்களை இலக்கு வைத்து சர்வதிகார போக்கை வெளிப்படுத்தி வருகின்றது.

அதாவது சிறுப்பான்மை இனங்களை அழித்து, அடிமைப்படுத்துவமே தங்களது நோக்கம் என்பதையே அரசாங்கம் தற்போது வெளிப்படுத்தியுள்ளது.

முஸ்லிம்களின் கலாசாரம், அடையாளங்கள் ஆகியவற்றுக்கு தடை விதிப்பதும் முஸ்லிம் இயக்கங்களுக்கு தடைவிதிப்பதும் முஸ்லிம் தலைவர்களை கைது செய்வதும் என முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இதன் ஒரு பகுதியாகவே ரிஷாட் பதியுதீனும் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை வன்மையான கண்டிப்பதுடன் இத்தகைய செயற்பாடுகளை அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.”  என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் வெடிப்பு – இளைஞர் ஒருவர் பலி !

முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு இளைஞன் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இரண்டு மணியளவில் இந்த வெடிப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிப்பபையடுத்து, 19 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில், முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி 19 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, வெடிப்பு இடம்பெற்ற பகுதி அண்மையில் சுத்தம் செய்யப்பட்டிருந்ததாகவும் தொடர் மழையையடுத்து மண்ணுக்குள் புதைந்திருந்த பொருட்கள் சில வெளியில் தென்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கடந்த யுத்த காலத்தில் புதைத்துவைக்கப்பட்டிருந்த ஏதாவது பொருள் இவ்வாறு வெடித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், இதுகுறித்த விசாரணைக்காக விசேட நிபுணர்கள் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதுடன் இது தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

“இலங்கையில் தற்போது பரவும் புதிய கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தான அதே நேரம் முன்னரைவிடவும் தீவிரமாகப் பரவும் தன்மை கொண்டது.”  – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன

“இலங்கையில் தற்போது பரவும் புதிய கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தான அதே நேரம் முன்னரைவிடவும் தீவிரமாகப் பரவும் தன்மை கொண்டது.”  என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பொதுமக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும், விசேடமாக இந்தியாவின் நிலைமையைக் கருத்தில் கொண்டு அனைவரும் பொறுப்புடன் செயற்படும் படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் கொரோனாவின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்தப் புதிய வகை கொரோனா வைரஸ், முன்னரைவிடவும் தீவிரமாகப் பரவும் தன்மை கொண்டது. இந்த வைரஸ், தொற்று ஏற்பட்டு அறிகுறிகள் தோன்றும்போது நோயாளியின் நுரையீரலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றது.

பிரிட்டனில் பரவி வரும் கொரோனா வைரஸை ஒத்த வைரஸே இலங்கையிலும் பரவுகின்றது எனத் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகளிலிருந்து அறியமுடிகின்றது. எனினும், உத்தியோகபூர்வ முடிவுகளை வெளியிட சில தினங்கள் ஆகலாம்.

எனினும், பொது மக்கள் அதுவரை, காத்திருக்காது சுகாதார விதிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்து ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.

ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் பச்சிளம் குழந்தை உட்பட நால்வர் பலி !

தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சிம்பாப்வேயின் கிழக்கு பகுதியில் உள்ள மஷோனாலேண்ட் மாகாணத்திலிருந்து அந்த நாட்டு விமானப்படைக்கு சொந்தமான ‘அகுஸ்தா பெல் 412′ ரக ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. ஹெலிகாப்டரில் 2 விமானிகளும் தொழில்நுட்ப ஊழியர் ஒருவரும் இருந்தனர். இந்த ஹெலிகாப்டர் மஷோனாலேண்ட் மாகாணத்தின் ஆக்டூரஸ் நகரிலுள்ள ஹூகூரு என்ற கிராமத்துக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் ஹெலிகாப்டர் நடுவானில் திணறியது. இதையடுத்து ஹெலிகாப்டரை அங்குள்ள குடியிருப்பு பகுதியில் அவசரமாக தரையிறக்க விமானிகள் முயற்சித்தனர்.‌

ஆனால் அவர்களின் கட்டுக்குள் வராத ஹெலிகாப்டர் அங்குள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது. இந்தக் கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதுமட்டுமின்றி ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய வீட்டில் இருந்த பச்சிளம் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.

அதேசமயம் அந்த குழந்தையின் தாயும், சகோதரியும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இந்த கோர விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலி தீவுக்கு வடக்கே மாயமான இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கிக் கப்பலின் சில சிதைவுகள் கண்டுபிடிப்பு !

காணாமல் போன இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வந்ததாக நம்பப்படும் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய கடற்படைத் தளபதி யூடோ மார்கோனோ தெரிவித்துள்ளார்.

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வந்ததாக நம்பப்படும் ஆறு சிதைவுகள், நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இந்த சிதைவுகள்  காட்சிப்படுத்தப்பட்டது.

நேற்று அதிகாலைக்குள் நீர்மூழ்கிக் கப்பலில் ஒக்ஸிஜன் தீர்ந்துவிடும் என்று எதிர்வுகூறப்பட்டிருந்த நிலையில், இந்த செய்தி வந்துள்ளது.

காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வந்ததாக நம்பப்படும் சிதைவுகளில் கிரீஸ் போத்தல், டார்பிடோ லாஞ்சரின் ஒரு பகுதி, உலோகக் குழாயின் ஒரு பகுதி, பிரார்த்தனை செய்யப் பயன்படுத்தப்படும் பாய்கள் மற்றும் எரிபொருள் ஆகியவை அடங்கும்

இவை கடலில் 850 மீட்டர் (930 கெஜம்) ஆழத்தில் ஒரு இடத்தில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கே.ஆர்.ஐ.நங்கலா-402 நீர்மூழ்கிக் கப்பலில் முந்தைய பயணத்தில் இருந்தவர்கள், இந்த சிதைவுகள் நீர்மூழ்கிக் கப்பலுக்கு சொந்தமானவை என்பதை உறுதிப்படுத்தியதாக கடற்படைத் துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.

கடந்த புதன்கிழமை அதிகாலை 53 பேருடன் பயணித்த கே.ஆர்.ஐ.நங்கலா-402 என்ற நீர்மூழ்கி கப்பல், பாலி தீவுக்கு வடக்கே பயிற்சியை மேற்கொண்டிருந்த போது, சுமார் 60 மைல் (100 கி.மீ) நீரில் காணாமல் போனது. ஆழமான நீரில் மூழ்குவதற்கு நீர்மூழ்கிக் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்ட பின்னர் தொடர்பு இழந்ததாக சில தகவல்கள் கூறுகின்றன. இந்தோனேசியாவால் இயக்கப்படும் ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்களில் இந்த கப்பலும் ஒன்றாகும். இந்தோனேசியா தனது நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றை இழப்பது இதுவே முதல் முறை.

“எங்கள் வரலாறு குறித்து நாங்கள் யாரிடமிருந்தும் பாடம் எடுக்கப் போவதில்லை.” – பைடனுக்கு துருக்கி பதில்!

“எங்கள் வரலாறு குறித்து தாங்கள் யாரிடமிருந்தும் பாடம் எடுக்கப் போவதில்லை.” என துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லட் கவுசோக்லு தெரிவித்துள்ளார்.

1915 ஆம் ஆண்டில் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை ஒரு இனப்படுகொலை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில் அறிவித்திருந்தார்.

நவீன கால துருக்கியின் உருவாக்க காரணமாக அமைந்த ஒட்டோமான் பேரரசு வீழ்ச்சியுற்ற காலகட்டத்தில் இந்த கொலைகள் இடம்பெற்றன. இந்த அட்டூழியங்களை துருக்கி ஒப்புக் கொண்ட போதும் “இனப்படுகொலை” என்ற வார்த்தையை நிராகரித்தது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் முடிவை துருக்கி “முற்றிலுமாக நிராகரிக்கிறது” என வெளிவிவகார அமைச்சர் மெவ்லட் கவுசோக்லு நேற்று சனிக்கிழமை தெரிவித்தார்.

மேலும் எங்கள் வரலாறு குறித்து தாங்கள் யாரிடமிருந்தும் பாடம் எடுக்கப் போவதில்லை என்றும் டுவிட் செய்துள்ளார்.

இதனை அடுத்து துருக்கிய வெளிவிவகார அமைச்சு அங்காராவின் வலுவான எதிர்ப்பை வெளியிடும் முகமாக அமெரிக்க தூதுவரை சந்திக்கவுள்ளது.

நேட்டோ நட்பு நாடான துருக்கியுடனான உறவுகளை முறிவடைய செய்யும் என்ற காரணத்தினால் கடந்த அமெரிக்க அரசாங்ககங்கள் இனப்படுகொலை என்ற வார்த்தையை முறையான அறிக்கைகளில் பயன்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மண்ணெண்ணை ஊற்றி தன்னைத் தானே எரியூட்டிய கற்பிணிப்பெண் சிகிச்சை பலனின்றி மரணம் – யாழில் சம்பவம் !

எரிகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 8 மாதம் நிரம்பிய கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பெண் மண்ணெண்ணை ஊற்றி தன்னைத் தானே எரியூட்டினார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்ட போதும் அவரது உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதால் கணவனைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், பொலிஸாருக்கு பணித்தார்.

உடுப்பிட்டியைச் சேர்ந்த சிந்துயன் ரிசிக்கா (வயது-19) என்ற பெண்ணே உயிரிழந்தார். திருமணமாகிய ஒருவருடம். அவர் 8 மாதம் நிரம்பிய கர்ப்பிணிப்பெண். கடந்த 17ஆம் திகதி அவரது உடலில் மண்ணெண்ணை ஊற்றி எரியூட்டப்பட்ட எரிகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

கடந்த 6 நாள்களாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். அவரது உடலில் தீ காயங்கள் ஏற்பட்டமையில் சந்தேகம் இருப்பதாகவும் கணவனை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறும் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் பொலிஸாருக்கு பணித்தார்.

“யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக தென்னிந்திய மீனவர்களோடு தொடர்புகளைப் பேணாதீர்கள்” – கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா

இந்திய மீனவர்களுடன் இலங்கை மீனவர்கள் பேணிவரும் தொடர்புகள் காரணமாக வடபகுதியில் குறிப்பாக யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவரமடையக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் என மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா எச்சரித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணிக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

“யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள மீனவர்களுக்கு நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் தயவு செய்து யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக தென்னிந்திய மீனவர்களோடு தொடர்புகளைப் பேணாதீர்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு நீங்கள் தொடர்புகளைப் பேணிக் கொள்வதன் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று தீவிரமடையக் கூடிய ஆபத்து நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்பொழுது கொரோனா தொற்று நிலைமை மிகத் தீவிரமடைந்துள்ளது. அந்த வைரஸ் இங்கு பரவினால் தொற்று நிலைமை தீவிரமடையும்.

எனவே இந்த விடயம் தொடர்பில் அவதானமாகச் செயல்படுமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

 

“பதவி நியமனங்கள் வழங்கப்படும் போது தகுதிக்கும் திறமைக்கும் முன்னுரிமை அளியுங்கள். உறவுக்கும் இனத்துக்கும் முன்னுரிமையளிக்காதீர்கள்.” – கோவிந்தன் கருணாகரம்

“பதவி நியமனங்கள் வழங்கப்படும் போது தகுதிக்கும் திறமைக்கும் முன்னுரிமை அளியுங்கள். உறவுக்கும் இனத்துக்கும் முன்னுரிமையளிக்காதீர்கள்.” என  பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரித்து தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்தக் கேள்விகளை அவர் எழுப்பினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

நமது நாடு ஒரு சுந்தரத் தீவு. நமது நாடு இந்து சமமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த முத்து. நமது நாடு உலகுக்கு ஆன்மீக ஒளியைப் பரப்பிய நான்கு மதங்களும் தளைத் தோங்கும் நாடு. நமது நாடு மூப்பு, பிணி, சாக்காடு கண்டு தனது இல்லற வாழ்வில் அழகிய இளம் மனைவியையும் துறந்து தனக்கு ராஜபோகம் தரக்கூடிய அரச சுகபோகங்கள் அனைத்தையும் துறந்து உலகுக்கு ஞான ஒளியினை தன் பரி நிர்வாணம் மூலம் ஏற்படுத்திய கௌதம புத்தரின் ஆன்மீக ஒளியின் பெருமையினை பின்பற்றும் நாடும் கூட.

மூப்பு, பிணி, சாக்காடு கண்டு முத்தி கண்ட கௌதம புத்தருக்கு எதிரி என்று எவருமில்லை. இருப்பவரும் வாழ்பவரும் மனுக்குலத்தவரே. இந்த மண்ணில் வாழ்வது இன, மத, மொழி பேதங்களற்ற ஒரே மனுக்குலமே என்று போதி மர நிழலில் இருந்து பெற்ற ஞானம் மூலம் அறியத் தந்த கௌதம புத்தரை விசுவாசிக்கும் நாட்டில், அந்த விசுவாசம் உண்மையாக மாறி மாறி நாட்டை ஆட்சி செய்த அரசுத் தலைவர்களுக்கு உண்மையாக இருக்குமானால், இந்த நாட்டில் அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விவாதம் ஒன்று ஏன் தேவை என்பதுதான் இன்று என் முன் எழுந்துள்ள பிரதான கேள்வியாகும்.

நம் அரசின் தலைவர்கள் தாம் உதட்டளவில் பேசும் பௌத்த தர்மம், தேசாபிமானம் என்பன தம் உள்ளத்திலிருந்து வெளிவராததன் காரணமாகவே இந்த நாட்டின் உயரிய சபையில் இன்று இந்த விவாதம் நடைபெறுகிறது. இதையிட்டு கௌதம புத்தரின் போதனைகளை மதிக்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் வெட்கமடைவதா, தேவையடைவதா, துக்கமடைவதா, துயரமடைவதா இல்லை கௌதம புத்தனைப் போல் என் மனைவி பிள்ளைகளை விட்டுத் துறவறம் செல்வதா என்று பல்வேறு சிந்தனைகள் என் மனதைக் குழப்புகின்றது. வேதனைப்படுத்துகின்றது.

ஆட்சி மாறும் போது அமைச்சர்கள் மாற்றம் பெறுவார்கள், அமைச்சின் செயலாளர்கள் மாற்றம் பெறுவார்கள், அரச திணைக்கள, கூட்டுத்தாபன நியதிச் சபைகள் உட்பட அரச இயந்திரம் முற்றிலும் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளருக்குச் சாதகமாக மாறும் கடந்த அரசாங்க காலத்தில் உயர் பதவி பெற்றவர்கள் ஏன் அகில இலங்கைச் சேவை ஆளணியினர் கூட பொலிஸ் சேவை இப்படி பல பதவி நிலையில் இருப்பவர்கள் பந்தாடப்படுவார்கள்.

இது எமது நாட்டின் ஆட்சி மாற்றங்கள் நடைபெறும் பொழுது காணும் சாதாரண காட்சிகள். ஓவ்வொரு ஆட்சியாளரும் தமது பக்க நியாயத்தை தாம் சார்ந்த அலுவலர்கள் சார்பில் நியாயப்படுத்துவார்கள். இன்று எமது கௌரவ நீதி அமைச்சர் அலி சப்றி கூட பிரதம நீதியரசர் பதவியிலிருந்து சிரானி பண்டாரநாயக்கா அவர்கள் நீக்கப்பட்டது அரசியலமைப்புக்கு முரணானது அல்ல எனவும், பிரதம நீதியரசர் மொஹான் நீதியரசர் அந்தப்பதவியிலிருந்து நீக்கப்பட்டது அரசியலமைப்புக்கு முரணானது என்றும் ஒரு சட்டத்தரணிக்கே உரிய வாதத்திறனோடு நியாயப்படுத்துகிறார்.

இவை ஆட்சி மாற்றங்கள் நடைபெற்ற போது பெரும்பான்மை இன மக்களுக்கிடையே, பௌத்த சிங்க மக்களுக்கிடையே ஏற்படும் அரசியல் பழிவாங்கல்களினதும் அவற்றுக்கான நிவாரணம் வழங்குவது என்பதும் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனும் வகையில் ஓரிரு உதாரணங்களாகும்.

தமது இனத்துக்குள்ளே, தமது மதத்துக்குள்ளே, மாறி மாறி ஆட்சியமைக்கும் அரசியல் தலைவர்களால் அரசியல் பழிவாங்களல்கள் ஏற்படுவதென்றால், அர்த்த புஸ்டியுள்ள அதிகாரப்பகிர்வுக்காகவும் புறக்கணிப்புக்கு எதிராகவும் சமத்துவத்துக்காகவும் போராடும் எமது மக்கள் எத்துணை பழிவாங்கப்பட்டிருப்பார்கள்.  இத்தகைய பழிவாங்கல்களுக்காக நியாயம் கேட்க முடியாத நாதியற்ற சமுதாயமாக எமது மக்கள் எவ்வளவு காலம் வாழ்ந்திருப்பார்கள். சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து தொடர்ச்சியாக தேசியத்துக்கு உழைத்த எம் இனத் தலைவர்கள் கூட இன்று உரிய தேசிய மரியாதை இன்றி புறக்கணிக்கப்படுகின்றார்கள்.
ஆனால், எம் இனத்தின் பெயரில் அரசிற்கு ஆதரவு வழங்கும் ஒரு சில அரசியல் வாதிகளுக்கு எலும்புத் துண்டுகளுக்கும் குறைவான மரியாதையை மக்கள் வழங்குகின்றார்கள் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆட்சியாளர்களுக்குச் சார்பாக அரச சட்டங்கள் வளைந்து கொடுக்கின்றன. கிருசாந்தி குமாரசாமி கொலை வழக்கில் நீதி மன்றத்தின் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்ட மரண தண்டனைக் கைதி ஒரு பெரும்பான்மை இன இராணுவச் சிற்பாய் என்பதனால் அவர் அரசின் பொது மன்னிப்புக்கு ஆளாகின்றார்.
இப்படி எத்தனையோ இராணுவத்தினர் நீதிமன்றங்கள் வழங்கிய தண்டனைத் தீர்ப்பிலிருந்து பொது மன்னிப்பு பெற்றுள்ளனர். ஆனால், தாயை இழந்து தனியாக உறவினர் தயவில் வாழும் தன் மகளின் வாழ்வை காப்பாற்றுவதற்காக ஆனந்த சுதாகரனுக்கு பொது மன்னிப்பு அளியுங்கள் என்று முழந்தாளில் நிற்காத குறையாக அகிலமே வண்டியும் கூட ஆட்சியாளர்களின் அஹிம்சைக் கண் திறக்கவில்லை.

தென்னாபிரிக்காவின் தேச பிதாவான நெல்சன் மண்டேலா அவர்களை ஏகாதிப்பத்திய அரசு 26 வருடங்கள் சிறையில் வைத்து 26 வது வருடத்தில் விடுதலை செய்தது. இங்கு 26 வருடங்களுக்கு மேலாக விசாரணைகளின்றி வழக்குத் தாக்கலின்றி வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் எத்தனை அரசியல் கைதிகள் சிறையில் வாடுகின்றனர்.

தமது வாழ்வின் இளமையைத் தொலைத்துள்ளனர். இவர்கள் செய்த குற்றம் என்ன. தன் இனத்தை தன் மொழியை தன் மண்ணை நேசித்ததா, இது போன்ற ஒரு அரசியல் பழிவாங்கல் உலகின் இராணுவ ஆட்சி நடக்கும் நாட்டில் கூட நடந்ததாக, நடப்பதாக அண்மைய உலக வரலாறுகள் எதுவும் பதிவுசெய்யவில்லை.
ஆனால் உலகுக்கு ஜனநாயகத்தைப் போதித்த பாராளுமன்ற சம்பிரதாயங்களின் தாய் என போற்றப்படும், பிரித்தானியாவுக்கு முன்னரேயே சர்வஜன வாக்குரிமையை வழங்கியதாக பெருமை கொண்ட ஆசியப்பிராந்தியத்தில் பாராளுமன்றப் பிரதி நிதித்துவ ஜனநாயகத்தைப் பேணும் ஒரு முக்கிய நாடான எமது நாட்டில் இத்தகைய பழிவாங்கல்கள் என்று ஓயும். இவை ஓயுமா, அல்லது அடுத்த தலைமுறைக்கும் இது நகர்த்தப்படுமா?

அரச உயர் பதவி நியமனங்களில் தமிழர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்படுகிறார்கள். அண்மைய இலங்கை நிருவாக சேவைப் பரிட்சைகளின் முடிவு இதற்குத் தகுந்த சான்றாகும். முட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் கடந்த முறை 69 பேர் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அதில் ஒரு பரீட்சாத்தி கூட தமிழ் பேசுபவர் இல்லை என்பதே ஒரு உதாரணமாகும். ஒரு பழிவாங்கலுமாகும்.

அந்தப்பரீட்சை முடிவுகளின்படி சித்தியடைந்த அனைவருமே பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாவார்களா என்பதைக் கேட்க விரும்புகிறேன். இது ஒரு திட்டமிட்ட பழிவாங்கலாகும். பதவி நியமனங்கள் வழங்கப்படும் போது தகுதிக்கும் திறமைக்கும் முன்னுரிமை அளியுங்கள். உறவுக்கும் இனத்துக்கும் முன்னுரிமையளிக்காதீர்கள். ஒரு காலத்தில் புகழ் பூத்த வெளிநாட்டுச் சேவையாக இருந்த இலங்கை வெளிநாட்டுச் சேவை இன்று அரசியல் நியமனங்களால் அலங்கரிக்கப்பட்டு நிற்கின்றது என்பதற்கு அண்மைய ஜெனீவா மகா நாடு சரியான முன்னுதாரணங்களாகும்.
எமது நாடு மீண்டும் பண்டைய சிறப்புகளை, பண்டைய பெருமையினைப் பெற வேண்டுமாக இருந்தால் ஆட்சியாளர்கள் கடந்த கால வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவைகள் அனேகம் உண்டு. தவறுகளும் குறைபாடுகளும் கொண்டதுதான் மனித வாழ்க்கை. தவறுகள் இனங்காணப்பட்டு குறைகள் களையப்பட்டு வாழ்க்கையைச் சீராக்க வேண்டியது வாழ்வியலின் தத்துவம்.
இது தனிமனித வாழ்க்கைக்கு மாத்திரமல்ல நாட்டின் ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும்.
ஆட்சியாளர்களே! எமது நாட்டின் கடந்த கால வரலாற்றினை நன்கு சீர்தூக்கிப் படியுங்கள் தவறுகள் எங்கு எவ்வாறு எவரால், உருவாக்கப்பட்டது என்பதனைக் கண்டுபிடியுங்கள். அதற்கான தீர்வினை இன மத, மொழி வேறுபாடின்றி நடுநிலையுடன் வழங்குவதற்கு முனையுங்கள். வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாத எவரும் மக்கள் போற்றும் அரசுத் தலைவராக மிளிர முடியாது. இதனை உணர்ந்து உங்கள் தீர்மானங்களை எடுங்கள். அவ்வாறு நீங்கள் தீர்மானம் மேற்கொள்வீர்களாக இருந்தால் அரசியல் பழிவாங்கல் என்ற சொல் இலங்கை அரசியல் வரலாற்றின் அகராதியில் இருந்து பூரணமாக நீக்கப்பட்டுவிடும்.

இந்த நாட்டில் இன்று தமிழ் பேசும் மக்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இந்த அரசியல் பழிவாங்கலுக்கு நல்ல உதாரணமாகும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கடந்த 28 ஆண்டுகளாக அந்தப்பிரதேச செயலகம் தனியாக இயங்கிவந்தது. 40ஆயிரத்துக்கும்அதிகமான தமிழர்கள் வாழ்கின்றார்கள். 29 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டு இருக்கும் அந்தப்பிரதேச செயலகம் இன்று தரம் இறக்கப்பட்டதாக அறிகின்றோம். கடந்த கால ஆட்சியில் அது தரம் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். அது தவிர்க்கப்பட்டிருக்கிறது, கல்முனை நகரில் அரசியல் செய்யும் அரசியல் வாதியான ஹரீஸ் எம்.பியின் நடவடிக்கைதான் இது. பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டுமே தவிர தரம் இறக்கப்படக் கூடாது. இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் இறக்கப்பட்டுள்ளது.

ஹரீஸ் பாராளுமன்ற உறுப்பினர், தான் சார்ந்த சமூகத்தின் மரணமானவர்களின் உடலங்கள் எரிக்கப்பட்டிருக்கும் போதே 20வது திருத்தத்துக்கு வாக்களித்து ஆதரவளித்து தன்னுடைய சமூகத்துக்கே துரோகம் செய்தவர். இன்னுமொரு சமூகத்துக்கு உதவி செய்வார் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் நாங்கள் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம்கள் இன ஒற்றுமையாக வாழவேண்டுமென்று ஆசைப்படுகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் தமிழ் முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று எங்களுடன் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பெரும்பான்மை ஆட்சியாளர்களின் பிரித்தாளும் தந்திரத்தின் ஊடாக இந்த வேலையைச் செய்கின்றார்கள். எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. 20வது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்த இவர்கள் பிரதேச செயலகத்தினை தரம் இறக்குவதன் மூலம் எதிர்வரும் காலங்களில் கொண்டு வரப்படவிருக்கின்ற கொழும்பு துறைமுக நகர பிரேரணையிலும் அதரவைப் பெறுவதற்காக இப்படிச் செய்கின்றார்கள என்று நினைத்துப்பார்க்க வேண்டியதாகயிருக்கிறது.

அதற்கும் மேலாக வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தொல்பொருள் என்ற ரீதியில் பழிவாங்கப்பட்டு பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அம்பாறை பொத்துவில்லிருந்து பருத்தித்துறை வரையில் பல ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன.

கௌதம புத்தரின் பௌத்த சின்னங்கள் இருப்பதாகக் அடையாளம் காட்டி நீங்கள் அபகரிக்கின்றீர்கள். கடந்த காலங்களில் இந்து மன்னர்கள் வாழ்ந்த, ஆட்சி புரிந்த பொலநறுவை, அனுராதபுரம் போன்ற இடங்களில் இந்து சின்னங்கள் இன்னும் இருக்கின்றன. அங்கு நூறு ஏக்கர் காணியைக் கொடுத்து இந்து மத ஸ்தாபனம் அமைக்க உங்களால் இடம் தரமுடியுமா என்று கேட்க விரும்புகிறேன்.