12

12

“இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது.” – அமைச்சர் விமல் வீரவன்ச

“இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது. அரசாங்கத்தின் இலக்கை திசை திருப்ப பல குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றன.” என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு மேலும் அவர்,

ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி குறுகிய காலத்தில் அரசாங்கம் பல சவால்களை எதிர் கொண்டுள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் ஏற்பட்ட சவால்களை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றி கொண்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் அரச ஆதரவுடன் எழுச்சி பெற்றது.

ஜெனிவா விவகாரம் அரசாங்கத்துக்கு பெரும் சவாலாக காணப்பட்டது. சர்வதேசத்தில் மண்டியிடாமல் இராணுவத்தினரை அரசாங்கம் பாதுகாத்துள்ளது. ஜெனிவா விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை வெற்றிக்கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.” என்றார்.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து விண்வெளிக்கு செல்லும் முதல் விண்வெளி வீராங்கனை !

விண்வெளிக்கு அனுப்பத் தங்களது நாட்டைச் சேர்ந்த முதல் விண்வெளி வீராங்கனையை ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகம், விண்வெளிஆராய்ச்சியில் பல முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. அந்த வகையில் தங்கள் நாட்டின் முதல் விண்வெளி வீராங்கனையை உலக நாடுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் அரசு வெளியிட்ட அறிக்கையில்,

“27 வயதான நோரா அல் மத்ருஷி என்ற வீராங்கனை, ஐக்கிய அரபு அமீரகம் சார்பாக விண்வெளிக்கு அனுப்பப்பட இருக்கிறார். இவர் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துள்ளார். விரைவில் நாசாவில் நடக்கவிருக்கும் பயிற்சி வகுப்பில் இவர் கலந்துகொள்ள இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளது.

வளைகுடா நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம், முதல் முறையாக செவ்வாய் கிரகத்துக்கு ‘நம்பிக்கை’ விண்கலத்தை அனுப்பி கடந்த ஆண்டு சாதனை புரிந்தது. ஜப்பான் நாட்டிலிருந்து இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகம் இதற்கு முன் 2009, 2013-ம் ஆண்டுகளில் தென் கொரியாவுடன் இணைந்து விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பியிருந்தாலும், 2014-ம் ஆண்டுதான் சொந்தமாக விண்வெளி மையத்தை அமைத்தது. ஆனால், அடுத்த 6 ஆண்டுகளில் வளைகுடா நாடுகளில் உள்ள ஒரு சிறிய நாடு, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்பியது இதுவே முதல் முறை என்று பாராட்டப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகம் தங்களது பொருளாதாரத்திற்கு எண்ணெய் வளத்தை நம்பி இருப்பதை சமீப ஆண்டுகளாகக் குறைத்துள்ளது. இதன் காரணமாக அறிவியல் தொழில்நுட்பத் திறன்களை வளர்த்து வருகிறது.

வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் முதலமைச்சர் வேட்பாளராக யாழ் மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் !

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின்போது வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் முதலமைச்சர் வேட்பாளராக யாழ் மாநகர சபையின் தற்போதைய மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் களமிறக்கப்படவுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கசிந்துள்ளன.

வடக்கு மாகாணத்தில் மணிவண்ணனுக்கு அதிகரித்துவரும் ஆதரவு அலையின் அடிப்படையில் இந்த முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு பரிந்துரை  இடம்பெறவுள்ளதாக  அறியமுடிகிறது .

இது தொடர்பான உள்ளகப் பேச்சுவார்த்தையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கட்சியின் ஒரு பிரிவினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துவருவதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.  எவ்வாறாயினும் கட்சிக்குள் எதிரும் புதிருமாகவுள்ள இரு அணியினரிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தும்பொருட்டே பொது வேட்பாளராக மணிவண்ணன் களமிறக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து யாழ் மேயர் மணிவண்ணனின் நிலைப்பாடு என்னவென்பது குறித்து அந்த நபர் தகவல் தர மறுத்துவிட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இராணுவதளபதி சவேந்திரசில்வா தொடர்பிலான ஐம்பது பக்க ஆவணம் பிரித்தானியாவிடம் கையளிப்பு !

இராணுவ தளபதி சவேந்திரசில்வா தொடர்பிலான ஐம்பது பக்க ஆவணமொன்றை தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் என்ற அமைப்பு பிரித்தானிய வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் தடைகள் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது.
இராணுவதளபதி சவேந்திரசில்வா தொடர்பிலான ஐம்பது பக்க ஆவணமொன்றறை தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் என்ற அமைப்பு பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் தடைகள் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளது.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டம் தொடர்பில் எங்களிடம் பெருமளவு ஆதாரங்கள் உள்ளன என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
மிகவும்நுணுக்கமான முறையில் சர்வதேச சட்டத்தரணிகள் மற்றும் வழக்கு தொடுநர்களினால் சேகரிக்கப்பட்டவையே இந்த ஆதாரங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் தற்போது வசிக்கும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கண்ணால் கண்டவர்களின் வாக்குமூலங்கள் இந்த ஆவணங்களின் முக்கியமானவையாக காணப்படுகின்றன எனவும் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் முடிவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மீறல்களில் சவேந்திரசில்வாவிற்கு பங்களிப்பு உள்ளதாக குற்றம்சாட்டப்படும் தொடர்பிற்காக 2020இல் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தடை விதித்தது என ஜஸ்மின்சூக்கா தெரிவித்துள்ளார்.
ஆனால் பிரிட்டனின் தடை தொடர்பான செயற்பாடுகளின் எல்லை பரந்துபட்டது, இராணுவநடவடிக்கைகளின்போது மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்களின் வாழ்விடங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதல்கள் தொடர்பிலானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் தடை பொறுப்புக்கூறல் தொடர்பில் இன்னொரு முக்கியமான நடவடிக்கையாக காணப்படும் – சமீபத்தில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்ற தீர்மானத்தின் அடிப்படையிலானதாக அமையும், பிரிட்டனே இதில் முக்கிய பங்கு வகித்தது என அவர் மேலும்தெரிவித்துள்ளார்.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சமர்ப்பித்துள்ள ஆதாரங்களில் பாரிய மனித உரிமைமீறல்கள் இழைக்கப்படுவதில் சவேந்திரசில்வாவின் பங்களிப்பு குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணம் மருத்துவமனைகள் மற்றும் உயர்பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சு மற்றும் எறிகணை வீச்சிலிருந்து உயிர்தப்பிய தமிழர்களின் கண்ணால் கண்ட சாட்சியங்களை அடிப்படையாக கொண்டவை.
இவர்களில் பலர் தற்போது பிரிட்டனில் வசிக்கின்றனர்.

ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் மையம் மீது தாக்குதல் !

ஈரானில் புதிதாக செயற்படத் தொடங்கிய யுரேனியம் செறிவூட்டல் மையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈரானின் அணுசக்தி அமைப்பான ‘அடாமிக் எனர்ஜி ஆர்கனைசேஷன் ஒஃப் ஈரான்’இன் செய்தித் தொடர்பாளர் பெஹ்ரூஸ் கமால்வண்டி தெரிவித்துள்ளார்.

நேற்று (11.04.2021) நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், தெற்கு ஈரானில் இருக்கும் நடான்ஸ் அணுசக்தி மையத்தில் மின்சார வசதி செயலிழந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை, ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி நடான்ஸ் அணுசக்தி மையத்தில் இருக்கும் புதிய மைய விலக்கு சுழற்சிக் கருவிகளின் இயக்கத்தைத் தொடங்கி வைத்த மறுநாள் இந்த தாக்குதல் நடந்துள்ளது. எனினும், இந்த தாக்குதலில் யாரும் பாதிக்கப்படவோ, எந்த வித கசிவோ ஏற்படவில்லை என கமால்வண்டி தெரிவித்தார்.

இதேவேளை இந்த அமைப்பின் தலைவர் அலி அக்பர் சலேஹியின், இது ஒரு தாக்குதல் எனவும் இது அணுசக்தி தீவிரவாதமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த இழிவான நடவடிக்கைகளை ஈரான் கண்டிக்கிறது. அதோடு இந்த அணுசக்தி தீவிரவாதம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகாமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரான் வலியுறுத்துகிறது’ என தெரிவித்தார்.

இது இஸ்ரேலிய சைபர் தாக்குதலால் நடந்ததாக, புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள் கூறியதாகக் கூறப்படுகின்றது. ஆனால் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் நேரடியாக எதையும் குறிப்பிடவில்லை. கடந்த ஜூலை மாதம் கூட, இதே நடான்ஸ் அணுசக்தி மையத்தில் ஒரு தீ விபத்து ஏற்பட்டது.

அது மத்திய மைய விலக்கு சுழற்சிக் கருவிகளை ஒன்றாக இணைக்கும் பட்டறையை பாதித்தது. அது கூட ஒரு தாக்குதல் எனக் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

வலைப்பயிற்சி அதிகமாக இல்லாததாலேயே கேன் வில்லியம்சன் களமிறக்கப்படவில்லை – தலைமை பயிற்சியாளர்

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் வெளிநாட்டு வீரர்களில் பேர்ஸ்டோ, டேவிட் வார்னர், முகமது நபி, ரஷித் கான் ஆகியோர் களம் இறங்கினர்.
கடந்த வருடத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆபத்தான நிலையில் இருந்தபோதெல்லாம் தனியொரு மனிதனாக துடுப்பெடுத்தாடி  அசத்தி அணியின் வெற்றிக்கு உதவியது கேன் வில்லியம்சன் தான்.
தலைசிறந்த வீரரரான அவருக்கு இடம் கொடுக்காதது குறித்து ரசிகர்கள் அணி நிர்வாகத்தை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்ந நிலையில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் டிரேவர் பெய்லிஸ் கேன் வில்லியம்சனை களம் இறக்காதது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கேன் வில்லியம்சன் குறித்து டிரேவர் பெய்லிஸ் கூறுகையில்
‘‘போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை பெற கேன் வில்லியம்சனுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் தேவை என் நாங்கள் எண்ணுகிறோம். வலைப்பயிற்சியில் கொஞ்சம் அதிகமாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது நடந்திருந்தால் பேர்ஸ்டோவிற்குப் பதிலாக கேன் வில்லியம்சன் இடம் பிடித்திருப்பார். ஆனால் பேர்ஸ்டோ இந்தியாவிற்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். போட்டி சென்று கொண்டிருக்கும்போது கட்டாயம் கேன் வில்லியம்சன் அணியில் இடம் பிடிப்பார்’’ என்றார்.
பேர்ஸ்டோ நேற்றைய போட்டியில் 40 பந்தில் 55 ஓட்டங்கள் அடித்தார். இந்த போட்டியில் ஐதராபாத் அணி தோல்வியடைந்தததும் குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்கமாட்டார் !

இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு ஏப்ரல் 17-ம் திகதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும். கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே அதில் பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கடுமையான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் முடிந்தவரை அரச குடும்ப உறுப்பினர்களுக்கு இடமளிக்கும் வகையில் இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்ளமாட்டார் என தகவல்கள் வெளியாகின.
இதுதொடர்பாக பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜ குடும்பத்தின் தேவைக்கு ஏற்ப செயல்பட விரும்பினேன். ராஜ குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் நான் அதில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

குடும்பத்தகராறு – 25 மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த 18 வயது மனைவி !

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் 25 மாத்திரைகளை உட்கொண்ட மனைவி கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளம் யுவதியொருவரே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் இன்று (12) மதியம் இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,

இளம் கணவனும் மனைவியும் கடந்த வருடம் திருமணம் முடித்த நிலையில் தினமும் குடும்ப சண்டைகள் பிடிப்பதாகவும், இருவரும் சரியாக கதைப்பதும் இல்லையெனவும் அயலில் வசிப்போர் தெரிவிக்கின்றனர்.

இன்றைய தினமும் சண்டை ஏற்படவே விரக்தியில் மனைவி 25 மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் அவரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்ததாக அயல் வீட்டுக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து கணவனை பொலிஸார் கைது செய்து தடுத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சீனாவுடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து !

சீனாவின் அபிவிருத்தி வங்கியுடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது.

குறித்த நிதி இந்த வாரம் கிடைக்கப்பெறும் என நிதி அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு குறித்த நிதி பங்களிப்பு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“தேசிய நல்லிணக்கத்துக்கான என்னுடைய அழைப்பை அழைப்பை துரோகம் என்று பிரபாகரனது புராணம் பாடியவர்கள் கூறிவந்தார்கள். இன்று அவர்களே  ஏற்றுக்கொள்கின்றனர்” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

“தேசிய நல்லிணக்கத்துக்கான என்னுடைய அழைப்பை அழைப்பை துரோகம் என்று பிரபாகரனது புராணம் பாடியவர்கள் கூறிவந்தார்கள். இன்று அவர்களே  ஏற்றுக்கொள்கின்றனர்” என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி அரசியல் நிகழ்வொன்றில் குறித்த விடயம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,

கடல் வளத்தையும் எமது கடற்றொழிலாளர்களையும் பாதிக்கும் இந்திய மீனவர்களது எல்லைதாண்டும் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதே எனது நோக்கமாக உள்ளது. குறிப்பாக இந்தியா உட்பட பல சர்வதேச நாடுகளினாலும் எமது நாட்டிலும் தடைசெய்யப்பட்ட ஒரு தொழில் முறைமையை இந்தியக் கடற்றொழிலாளர்கள் மேற்கொள்வதை  எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆனாலும் இந்த விடயத்திற்கு தீர்வு காண வேண்டும் என்பதே தேவையாக உள்ளது.  அதனடிப்படையில் சில யோசனைகள் பலதரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு யோசனையே அனுமதிப்பத்திரம் வழங்கும் விடயமும். அது ஒரு முடிவல்ல. இதை சிலர் தவறான பார்வையில் சித்தரிக்கின்றனர். ஆனாலும் இவ்விடயம் தொடர்பில் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துமீறி எல்லைதாண்டி சட்டவிரோத தொழில் முறைகளை பயன்படுத்துகின்ற  இந்திய கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக பல்வேறு வழிமுறைகள் பரசீலிக்கப்பட்டு வருகின்றதே தவிர  தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.  குறித்த யோசனையை சிலர் மிகைப்படுத்தி தவறாகச் சித்தரித்து வருகின்றனர்.

அதேநேரம் எனக்கும் வடக்கு கடற்றொழிலாளர்களுக்கும் இடையே சிறந்த புரிந்துணர்வு உண்டு என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தன்னால் எடுக்கவுள்ள முடிவுகள் பாதிக்கப்படுகின்ற கடற்றொழிலாளர்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்தாகவே இருக்கும் என்றும் அவர்களது விருப்புக்கு மாறானதாக அவை இருக்க மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் யுத்த காலகட்டத்தில் கடவுச் சீட்டின்றி இந்தியாவுக்கு சென்ற எமது மக்களை அந்நாட்டு அரசு தமிழக மக்களும் கௌரவமாக ஏற்றுக்கொண்டனர் என சுட்டிக்காட்டிய அமைச்சர், “தற்போதைய பூகோள அரசியல் ரீதியில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு இரண்டு நாடுகளுக்கும் அவசியமானது.

அதேநேரம் 1987ஆம் ஆண்டு உருவான இலங்கை இந்திய ஒப்பந்தம் காரணமாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையே தமிழ் மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வாக  அமையும் என 34 வருடமாக நான் கூறிவருகின்றேன். இதை ஏனைய தமிழ் தலைமைகள் போட்டுடைத்துவிட்டனர். இன்று ஜெனிவாவில் அதை சுட்டிக்காட்டியதும் அதை அவர்கள் கையிலெடுத்துள்ளனர்.

அதேநேரம் தேசிய நீரோட்டம், நாடாளுமன்ற ஜனநாயகம், தேசிய நல்லிணக்கம் ஊடான பாதையே எமது மக்களின் பிரச்சினைகளுக்கான சிறந்ததொரு தீர்வை தரும் என கூறி அதன்வழியில் அனைவரும் பயணிக்க வருமாறு கோரியிருந்தேன்.

ஆனால் எனது அழைப்பை துரோகம் என்று பிரபாகரனது புராணம் பாடியவர்கள் கூறிவந்தார்கள். இன்று ஏற்றுக்கொள்கின்றனர்” என்றும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.