“தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு 5 ஆம் திகதி நல்ல முடிவு வரும் என நம்புகின்றோம்.” – ஜீவன் தொண்டமான்

“தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு 5 ஆம் திகதி நல்ல முடிவு வரும் என நம்புகின்றோம்.” என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலையில் அமைந்துள்ள சீல்.எல்.எப் கேட்போர் கூடத்தில் நேற்று (3.4.2021) நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களில் காணப்படும் குறைநிறைகளை கண்டவறிதற்கான கலந்துரையாடலில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வு நடைபெற்ற பின்னர் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு மற்றும் கம்பனிகளின் செயற்பாடுகள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் ஜீவன் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ 50 ரூபா, 100 ரூபா என கூறிக்கொண்டு கடந்த ஆட்சியின்போது 5 வருடங்கள் கடத்தப்பட்டன. அதற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படவில்லை. ஆனால் இன்று கம்பனிகளுக்கு எதிராக நாம் நீதிமன்றம்வரை சென்றுள்ளோம்.

இந்நிலையில் தொழிலாளர்களை உசுப்பேத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.அரசாங்கத்திடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது, அப்படி இருக்கையில் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றியாவது ஏன் சம்பள உயர்வை வழங்கமுடியாது எனவும் கேட்கின்றனர். எடுத்த எடுப்பிலேயே எல்லாவற்றையும் செய்துவிடமுடியாது. அதற்கென நடைமுறைகள் உள்ளன.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாகத்தான் சம்பள நிர்ணய சபை ஊடாக தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கு எதிராக மேன்முறையிடு செய்யும் உரிமையும், நீதிமன்றம் செல்லும் உரிமைகளும் கம்பனிகளுக்கு இருக்கின்றன. ஆனால் 5 ஆம் திகதி நல்ல முடிவு வரும் என நம்புகின்றோம்.

தொழிற்சங்க ரீதியில் தொழிலாளர்களின் பல பிரச்சினைகளுக்கு நாம் தீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம். பெற்றுக்கொடுத்தும் வருகின்றோம். மற்றைய தரப்பினரும் தொழிற்சங்கம் நடத்துகின்றனர்.

அவர்கள் விமர்சனங்களை முன்வைப்பதையே பணியாக முன்னெடுக்கின்றனர். நாம் பொறுமையாக இருக்கின்றோம். அதற்கு பயம் காரணம் அல்ல. நீதிமன்ற தீர்ப்புவரும்வரை காத்திருக்கின்றோம்.

சிலவேளை நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாவிட்டால், அடுத்து என்ன செய்வது என்பதும் தெரியும். பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும். இது தொடர்பில் தொழில் அமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.” என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *