17

17

“நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி அச்சுறுத்தும்போது சாதாரண பொதுமக்களின் நிலை என்ன .? – அனுரகுமார திஸாநாயக்க ளே்வி !

“நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி அச்சுறுத்தும்போது சாதாரண பொதுமக்களின் நிலை என்ன .?” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.

ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக ஜனாதிபதி தகாத வார்த்தைகளால் என்னை மிரட்டினார். என்ற குற்றச்சாட்டை பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச முன்வைத்திருந்தார். இது பற்றி பேசிய போதே திஸ்ஸநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறிய போது ,

மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களால் நாட்டை ஆட்சி செய்ய ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொண்ட முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து தொடர்பாக தனது கருத்தை தெரிவிக்க ஜனாதிபதிக்கு உரிமை உண்டு. ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சாதாரண மக்களின் கருத்திற்கு பதிலளிக்க பல்வேறு வழிகள் உள்ளன.

ஜனாதிபதி ஊடக பிரிவு அல்லது அரசாங்க தகவல் திணைக்களம் ஊடாக அந்த அறிக்கைக்கு பதிலளித்திருக்க முடியும். மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களால் நாட்டை ஆட்சி செய்ய ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொண்ட முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும்” என கூறினார்.

நாடு குறித்து முடிவுகளை எடுக்கும்போது மக்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் எனவே தான் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் அங்கீகரிக்க வேண்டும் என கோரி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

நீண்ட விடுமுறை காலத்தில் நாடாளுமன்றில் வரைபை சமர்ப்பித்து குறித்த சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்திற்குச் செல்வதற்கான உரிமையை கூட அரசாங்கம் பறித்திருக்கிறது என்றும் திஸ்ஸ நாயக்க குற்றம் சாட்டினார்.

“ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக ஜனாதிபதி தகாத வார்த்தைகளால் என்னை மிரட்டினார். ஒரு நாட்டின் தலைவரிடமிருந்து இதனை எதிர்பார்க்கவில்லை.” – விஜயதாச ராஜபக்ச

“ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக ஜனாதிபதி தகாத வார்த்தைகளால் என்னை மிரட்டினார். ஒரு நாட்டின் தலைவரிடமிருந்து இதனை எதிர்பார்க்கவில்லை.” நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(16.04.2021) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் நான் தெரிவித்த கருத்துகளுக்காக ஜனாதிபதி எனக்கு அச்சுறுத்தல் விடுத்தார். ஜனாதிபதி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார். நாடு ஒன்றின் தலைவரிடமிருந்து நான் இதனை எதிர்பார்க்கவில்லை.

இதன்போது ஜனாதிபதியின் பாணியிலேயே நான் பதிலளித்தேன். தற்போது எனது மற்றும் எனது குடும்பத்தவர்களின் உயிர்களின் பாதுகாப்பு குறித்து நான் அச்சமடைந்துள்ளேன்.“ எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மிரட்டியதாக அவர் கூறியதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ மேலதிக பாதுகாப்பை கோரியுள்ளார்.

இது தொடர்பாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச  பொலிஸ்மா அதிபரிடம் இது தொடர்பான  கடிதத்தை கையளித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் உட்பட அரசாங்கத்தின் சில திட்டங்கள் மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக குரல் கொடுத்ததால் தான் ஜனாதிபதி மிரட்டியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது, இது போர்ட் சிட்டிக்குள் ஒரு தனி சீன காலனி அமைக்க வழிவகுக்கும் எனவும்  அரசாங்க தரப்பு உறுப்பினராக இதுபோன்ற ஊழல்களையோ அல்லது நாட்டின் சில பகுதிகளோ விற்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தமை நோக்கத்தக்கது.

புலிகளை மீள உருவாக்க முயற்சித்ததாக கூறி யாழில் நால்வர் கைது !

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் முயற்சியில் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (17.04.2021) அதிகாலை, யாழ்ப்பாணம்- இளவாலை பொலிஸ் பிரிவில் இருவரும் கோப்பாய் மற்றும் பலாலி பொலிஸ் பிரிவுகளில் தலா ஒருவரும் இவ்வாறு  பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் கூறப்படுகின்றது.

மேலும் அண்மையில், இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் தொலைபேசியில் தொடர்பினை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

“சீனா தனக்கான அரசியல் தளம் ஒன்றை இலங்கையில் உருவாக்க முனைகிறது.” – ஜே.வி.பி குற்றச்சாட்டு !

“சீனா வியாபார நாடாக மாத்திரம் இலங்கையைப் பார்க்காது தமக்குத் தேவையான மையமாக  இலங்கையை கணித்துள்ள காரணத்தால் அவர்களுக்கு ஏற்ற அரசியல் தளம் ஒன்றை உருவாக்க நினைக்கின்றனர். ” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தொடர்பாக பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சீனாவின் பொருளாதார ஆக்கிரமிப்பு இன்று இலங்கையின் அரசியலைத் தீர்மானிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. அதேநேரம் அவர்கள் வெறுமனே வியாபார நாடாக மாத்திரம் இலங்கையைப் பார்க்காது தமக்குத் தேவையான மையமாக கணித்துள்ள காரணத்தால் அவர்களுக்கு ஏற்ற அரசியல் தளம் ஒன்றை உருவாக்க நினைக்கின்றனர்.

இலங்கை பெற்றுள்ள கடன் தொகையை மீளச் செலுத்த முடியாது.கடன் வாங்கிய நாடுகளிடம் மண்டியிடும் நிலைமை உருவாகியுள்ளது. நாளுக்கு நாள் நாடு பலவீனப்பட்டுக்கொண்டே செல்கின்றது.

சீனாவின் பொருளாதாரத் தலையீடு காரணமாக நாட்டின் வளங்களை இழக்கும் அளவுக்கு நாம் வந்துவிட்டோம் என்ற விமர்சனத்தை ஒரு தடவை சீனத் தூதுவர் எம்மைச் சந்தித்த வேளையில் முன்வைத்தேன். அதற்கு அவர் என்னிடம் கூறியது ஒன்றுதான், ‘இலங்கையில் முன்னெடுக்கும் எந்தவொரு வேலைத்திட்டமும் நாம் முன்வைத்த திட்டங்கள் அல்ல. அனைத்துமே இலங்கை அரசு எம்மிடம் முன்வைத்த திட்டங்களே. அதற்கு உதவிகளை மட்டுமே நாம் செய்கின்றோம்’ என்றார்.

எனவே, சீனாவை மாத்திரம் திட்டுவது அர்த்தமற்றதாகும். அவர்களுக்கு இடமளித்த ஆட்சியாளர்களே பாரிய தவறைச் செய்துள்ளனர். அவர்களை மாற்ற வேண்டியதே அவசியம் எனக் கருதுகின்றேன். இலங்கையைப் பொறுத்தவரை இந்தியாவின் சந்தை, உற்பத்தி என்பன இலங்கைக்கு வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவுடன் எமது பொருளாதார உறவு பலமடைந்தால் நாடு பாதுகாப்பாகவும் அதேபோல் ஆசியாவின் முக்கிய மையமாகவும் நாம் மாறலாம்.

இதேவேளை, மூவின மக்களும் ஒன்றிணைந்து, நாட்டைச் சரியான பாதையில் கொண்டு செல்லும் அரசியல் தலைமையை உருவாக்கிக்கொண்டு நாடாக ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியதையே முதலில் சிந்திக்க வேண்டும்.

தனித் தலைவர்களால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. சகலரும் இணைந்தால் மட்டுமே நாடாக மீள முடியும்.” என தெரிவித்துள்ளார்

“யார் எதிர்த்தாலும் மாகாண சபை முறைமைக்கு எதிரான எமது போராட்டத்தை எந்த வித்தியாசமும் இன்றி, நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்வோம்.” – முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

“யார் எதிர்த்தாலும் மாகாண சபை முறைமைக்கு எதிரான எமது போராட்டத்தை எந்த வித்தியாசமும் இன்றி, நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்வோம்.” என  முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத்  தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“நாட்டினதும், மக்களினதும் இறையாண்மைக்கு எதிராக யாராவது தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி, நினைத்த பிரகாரம் சட்டமூலங்களை ஏற்படுத்தத் திட்டமிடுவதாக இருந்தால் அதற்கு எதிராகப் போராடுவதற்கு மகாநாயக்க தேரர்கள் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.

சில சந்தர்ப்பவாத தேரர்கள் பின்வாங்கினாலும் இவ்வாறான அச்சுறுத்தல், அடக்குமுறைகளுக்கு பயந்து, மீகெட்டு வத்தே குணானந்த தேரரின் வம்சத்தில் செயற்படும் எந்தவொரு பிக்குவும் மௌனித்திருக்கப் போவதில்லை. ஒரு சிலர் எம்மை அச்சுறுத்தி, அடக்கி எங்களது வாயை மூடிவிடப் பார்க்கின்றனர்.

மேலும், மாகாண சபை முறைமைக்கு நாங்கள் எதிர்ப்பு. யார் எதிர்த்தாலும் எவ்வாறு எதிர்த்தாலும் மாகாண சபைத்  தேர்தலை நடத்தியே ஆகுவோம் எனச் சிலர் தெரிவிக்கின்றனர்.

அப்படியானால் இது தொடர்பாக யார் எதிர்த்தாலும், யார் அச்சுறுத்தினாலும் மாகாண சபை முறைமைக்கு எதிரான எமது போராட்டத்தை எந்த வித்தியாசமும் இன்றி, நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்வோம் என்பதை இவர்களுக்குத்  தெரிவித்து வைக்க விரும்புகின்றோம் – என்றார்.

அடுத்த இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பளிப்பதற்காக பதவி விலகுகிறார் ராஹுல் காஸ்ட்ரோ !

அடுத்த இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பளிப்பதற்காக கியூபாவின் கமியூனிஸ்ட் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராஹுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார். இதன்மூலம், தமது குடும்பத்தின் ஆறு தசாப்தகால ஆட்சியை அவர் முடிவுக்கு கொண்டு வருகின்றார்.

89 வயதான ராஹுல் காஸ்ட்ரோ, கட்சியின் மாநாட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஒரு இளைய தலைமுறையினருக்கு ஆர்வமும் ஏகாதிபத்திய எதிர்ப்பு மனப்பான்மையும் நிறைந்த தலைமையை ஒப்படைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவருக்கு அடுத்ததாக பதவியேற்க உள்ளவர், கட்சியின் நான்கு நாள் மாநாட்டின் தெரிவுசெய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1959 ஆம் ஆண்டு புரட்சியுடன், ஆரம்பித்த தலைமைத்துவ பயணம், 6 தசாப்தத்தின் பின்னர் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளது.

பிடல் காஸ்ட்ரோ, கடந்த 2008 ஆம் ஆண்டு தலைமைத்துவத்தை தமது சகோதரரான ராஹுல் காஸ்ட்ரோவிடம் கையளித்தார். பின்னர், கடந்த 2016ஆம் ஆண்டு தமது 90 ஆவது வயதில் பிடல் காஸ்ட்ரோ காலமானமை குறிப்பிடத்தக்கது.

“அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் ஒருபோதும் என்னிடம் கிடையாது.” – வேலன் சுவாமிகள்

“அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் ஒருபோதும் என்னிடம் கிடையாது.” என வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

வேலன் சுவாமிகளை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்குவதற்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலரினால் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தகவல் அண்மையில் வெளியாகி இருந்தது.

இந்நிலையிலேயே வேலன் சுவாமிகள், அரசியலுக்கு வரமாட்டேன் என அறிவிப்பு விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் எவரும் அரசியலில் பிரவேசிக்கமாட்டார்கள்.

நாங்கள் அனைவரும், சமூகங்கள் மற்றும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை ஒழுங்குப்படுத்தும் விடயத்திலேயே எங்களது பணியை தொடருவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.