04

04

“மைத்திரிபால சிறிசேன அவர்களே இதற்காக நீங்கள் வெக்கப்படவில்லையா? ஆடை அணிந்திருக்கிறீர்களா ? ” – பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கேள்வி !

பல உயிர்களை காவு கொண்டமைக்கு பொறுப்புக் கூற வேண்டிய மைத்திரிபால சிறிசேன அவர்களே இதற்காக நீங்கள் வெக்கப்படவில்லையா? ஆடை அணிந்திருக்கிறீர்களா ? என்றும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று (4.04.2021) ஈஸ்டர் ஞாயிறு திருப்பலியின் பின்னரே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், ஈஸ்டர் பயங்ரவாதம் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவில் செயற்படுத்துங்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த தற்கொலை தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை இன்று நினைவு கூறுகிறோம்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவை குற்றவாளியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளார்.

எனவே அவருக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு மேலும் தாமதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் இந்த தாக்குதலுடன் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் ஏனைய சிலர் தற்போது சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே நடுநிலையாக அதனுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“அரசியலுக்கு, சினிமா இடையூறாக இருந்தால் அந்த சினிமாவையே நான் விட்டுவிடுவேன்.” – கமல்ஹாசன்

“அரசியலுக்கு, சினிமா இடையூறாக இருந்தால் அந்த சினிமாவையே நான் விட்டுவிடுவேன்.” என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமலகாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்ட மன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் இன்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று பேசும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது:

கோவை தொகுதி மக்கள் தெளிவான எண்ணத்தோடு இருக்கிறார்கள். குறிப்பாக இங்குள்ள ஏழை மக்களிடம் தங்களுக்கு பாதுகாப்பு முக்கியம் என்ற உணர்வு அதிகமாக இருக்கிறது. நான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை அரசியலுக்கு செலவிட விரும்புகிறேன்.

அதே நேரத்தில் அரசியலுக்கு, சினிமா இடையூறாக இருந்தால் அந்த சினிமாவையே நான் விட்டுவிடுவேன். எம்.எல்.ஏ. என்ற பட்டத்துடன் எம்.ஜி.ஆர். நிறைய படங்களில் நடித்தார். அதே போல நானும் நடிப்பேன். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு புதிய படங்களில் நடிக்கலாமா என பிறகு முடிவு எடுப்பேன். அரசியலில் சில மிரட்டல்கள் வந்தன.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசியலுக்கு வந்ததால் ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டதாக கமல் ஏற்கனவே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

“சர்வதேசத்துடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களையும் மீறுவதானது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.” – இரா.சம்பந்தன்

“சர்வதேசத்துடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களையும் மீறுவதானது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.” என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

காலப்போக்கில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா அழுத்தங்களுக்கு அச்சமின்றி முகங்கொடுப்பதோடு அதற்கு அடிபணியாமல் இருக்க முடியும் எனவும் இலங்கை ஒரு சுதந்திர நாடு என்றவகையில் இந்தியப் பெருங்கடலில் நடக்கும் அதிகாரப் போட்டிகளுக்கு நாங்கள் இரையாக மாட்டோமெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் இம்முறை நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களா? என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபோன்று தீர்மானங்கள் முன்னரும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை அனைத்தையுமே நிராகரிக்க முடியாது. அவ்வாறு நிராகரிப்பதாக கூறுவதானது, சர்வதேச தீர்மானங்களை மீறுவதாக அமையும். அதுமட்டுமன்றி சர்வதேசத்துடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களையும் மீறுவதாகவே அமையும். இது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் இனரீதியான மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்டங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் ஆகியன தொடர்பில் விசாரணைகள் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். முன்னதாக ஐ.நா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினரின் அறிக்கையில் இந்த சம்பவங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஐ. நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையிலும் அவ்விதமான சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகவே அக்குற்றச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டியுள்ளது மிகவும் முக்கியமானதாகும். இலங்கை அரசாங்கம் அவ்விதமான விசாரணைகளை முன்னெடுத்திருக்கவில்லை. எனவே அவை தொடர்பான விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. அக்கருமம் காலப்போக்கில் நிச்சயமாக இடம்பெறும்.

இலங்கை அரசாங்கம் உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக ஐ.நா.தீர்மானம், விசாரணை அறிக்கைகள் தொடர்பாக பல கருத்துக்களை வெளிப்படுத்தலாம். ஆனால் ஐ.நா.தீர்மானத்தினை நிராகரித்துச் செயற்பட முடியாது. மேலும், இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் கரிசணை கொண்டு செயற்படும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் நீண்டகாலக் கொள்கைகளின் அடிப்படையில் செயற்பட்டு வருபவை.

இதில் தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம், இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடங்கி இருக்கின்றன. ஆகவே அவ்விதமான நாடுகளை தவிர்த்துச் செயற்படுவதென்ற அறிவிப்பும் இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு அரசியலை அடிப்படையாக கொண்டவையே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு இளைஞனை தாக்கிய கும்பல் மீட்க வந்த நண்பனை கத்தியால் குத்திய வன்மம் – யாழில் அதிகரிக்கும் வாள்வெட்டுக் கலாச்சாரம் !

யாழ். கல்லுண்டாய் பகுதியில் இளைஞன் ஒருவரை இனம்தெரியாத கும்பல் ஒன்று வழிமறித்து தாக்கியுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான இளைஞனை மீட்க வந்த நண்பன் மீதும் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (03.04.2021) இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்.நகர் பகுதியில் பாதுகாப்பு உத்தியோகஸ்தராக கடமையாற்றும் இளைஞன் கடமை முடித்து கல்லுண்டாய் வீதி வழியாக வீடு திரும்பியுள்ளார்.

அவ்வேளை குறித்த இளைஞனை வீதியில் வழிமறித்த கும்பல் ஒன்று அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளது. காயமடைந்த இளைஞனை அவ்விடத்தில் விட்டு விட்டு அக்கும்பல் சென்றுள்ளது.

காயத்திற்கு இலக்கான இளைஞன் தொலைபேசி ஊடாக அராலியில் உள்ள தனது நண்பனுக்கு தகவல் வழங்கியுள்ளார். அதனை அடுத்து தாக்குதலுக்கு இலக்கான இளைஞனை மீட்டு வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல அவரது நண்பன் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு சென்ற போது , அராலி பலத்தடியில் வைத்து இளைஞனை தாக்கிய கும்பல் மறித்து கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

அதனை அடுத்து அக்கும்பல் அவ்விடத்திலிருந்து தப்பி சென்ற பின்னர் இரு இளைஞர்களும் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது போன்றதான சம்பவங்கள் நாளுக்கு நாள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான குற்றங்களுடன் தொடர்புடையோர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன, குற்றவாளிகள்  தேடப்படுகின்றனர் என்ற செய்திகளே கிடைக்கின்றனவே தவிர அந்த குற்றங்களுக்கான தீர்வுகள் குறித்தோ முடிவுகள் என்ன என்பது குறித்தோ தகவல்கள் பெரிதாக வெளி வருவதேயில்லை.

இவ்வாறான குற்றச்செயல்களுடன் தொடர்புடையோர் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு முறையாக தண்டிக்கப்பட்டு சமூகத்தின் முன் நிறுத்தப்படல் வேண்டும். அவ்வாறான போது மட்டுமே எதிர்காலத்தில் இது போன்றதான தவறுகள் இடம்பெறாது தடுக்க முடியும். இல்லாது போயின் இந்த காடையர்களை கண்டு இதனை பின்பற்றும் பாழ்பட்டுப்போன எதிர்கால தலைமுறை ஒன்று  உருவாகிட அதிக வாய்ப்புள்ளது. இது தொடர்பாக எடுக்கப்படும் ஆரோக்கியமான நடைமுறைகள் எதிர்காலத்துக்கு அவசியமானவை !

“தவறிழைக்கும் காவற்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

“தவறிழைக்கும் காவற்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறுவது, காவற்துறை திணைக்களத்தின் மீதான பொதுமக்கள் நம்பிக்கையைப் பாழ்படுத்தும்” என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அண்மையில் இடம்பெற்றகாவற்துறை அதிகாரிகளின் மோசமான நடவடிக்கைகள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

எந்தவொரு சூழ்நிலையிலும் சட்ட வரையறைகளை மீறி, காவற்துறை அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடாது என்றும் அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காவற்துறைஅதிகாரிகளின் வன்முறை நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுத்து, காவற்துறைதிணைக்களம் மீதான நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்றும் குறித்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

காவற்துறையினரின் நடவடிக்கைகள் தொடர்பில் தாம் தொடர்ந்தும் கண்காணிப்பாக இருப்பதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

“சிங்கள மக்கள் மத்தியிலும் துரோகி எனப்படுகின்றேன் தமிழ் மக்கள் மத்தியிலும் துரோகியாக நான் சொல்லப்படுகின்றேன்.” – மட்டக்களப்பில் எம்.ஏ.சுமந்திரன் !

“சிங்கள மக்கள் மத்தியிலும் துரோகி எனப்படுகின்றேன் தமிழ் மக்கள் மத்தியிலும் துரோகியாக நான் சொல்லப்படுகின்றேன்.” என ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பதில் வழங்கினார்.

IMG 0133

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

நாங்கள் சர்வதேசத்திடமே இன்று நீதிகோரி நிற்கின்றோம்,சர்வதேசத்தின் அறிக்கைகளை நாங்கள் சாதகமாகவே பாவிக்கின்றோம்.இந்த அறிக்கைகளுக்கு எதிராக யாரும் கருத்துகளை தெரிவித்ததாக நான் அறியவில்லை. இருதரப்பினரும் போர்க்குற்றம் செய்தார்கள் என்று நிபுணர்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசத்திடமிருந்து எங்களுக்கு நீதியும் ஆனால் நாங்கள் சொல்வதையே அங்கிருந்து சொல்லவேண்டும் என்பதை யாரும் எதிர்பார்க்கமுடியாது. அனைத்து பக்கங்களையும் விசாரணைசெய்து சரியான தீர்மானங்களையே அவர்கள் எடுப்பார்கள். விசாரணைகள் நடந்துமுடிந்துவிட்டது.அதனை நீதிமன்ற பொறிமுறைக்குள் கொண்டுசெல்லவேண்டுமாகயிருந்தால் அது கட்டாயமாகும்.

வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றியது இனஅழிப்பு தீர்மானம் என்று நாங்கள் கூறினாலும் அதன் இறுதியில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு என்று சொல்லப்பட்டுள்ளது. அது அவ்வாறானதொரு சர்வதேச குற்றம் இல்லை. அதிலேயே சொல்லப்பட்டுள்ளது கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு இன்னும் சர்வதேச குற்றங்களில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றுதான் அந்த தீர்மானம் முடிவுறுகின்றது.நாங்களே சொல்லுகின்றோம் இங்கு நடைபெற்றது சர்வதேச குற்றம் இல்லையென்று. அதனையே நாங்கள் இன அழிப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என தலையில் தூக்கிவைத்துகொண்டாடி வருகின்றோம்.

இன்று கிழக்கில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புகள் இன அழிப்பின் ஒரு அங்கமாகவுள்ளது.நாங்கள் அதனை மறுக்கவில்லை. ஒருவரின் மனதில் உள்ள இன அழிப்பு எண்ணங்கள் மாறிமாறி வருவதையே கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு என்று சொல்லப்படும். எனினும் அவ்வாறான இன அழிப்பு சர்வதேச சட்டங்களில் இல்லை.எனினும் விக்னேஸ்வரன் ஐயா வடமாகாணசபையில் நிறைவேற்றியதை வைத்து இனிவரும் காலங்களில் சேர்த்துக்கொள்வார்களோ தெரியாது.

உண்மைகளை சொல்லவேண்டும். தமிழ் மக்களுக்கு நாங்கள் பாரிய எதிர்பார்ப்பினை கொடுத்துக்கொண்டிருக்கின்றோம். அவ்வாறு வழங்கி அவர்களுக்கு கிடைக்காததன் காரணமாகவே விரக்தி நிலையில் உள்ளனர். குறிப்பாக வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் மனநிலையில் உள்ள விரக்தி நிலையும் அதுதான். சர்வதேசம் எங்களை கைவிட்டுவிட்டது என்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றது. சர்வதேசம் கைவிடவில்லை. நாங்கள் தேவையற்ற வகையில் மக்களுக்கு கூடுதலான எதிர்பார்ப்பினை வழங்கிக்கொண்டிருக்கின்றோம்.

நாங்கள் உண்மை நிலையினை சொன்னால் இவர் அரசாங்கத்திற்காக பேசுகின்றார் என்பார்கள். நாங்கள் அரசாங்கத்திற்காக பேசவில்லை உண்மையினை சொல்லுகின்றோம்.பொய்யான எதிர்பார்ப்பினை வழங்குவது என்பது பிழையான விடயமாகும். 30ஆயிரம் பேர் காணாமல் போயிருக்கின்றதற்கான ஆதாரங்கள் சாட்சியங்கள் உள்ள நிலையில் காணாமல்போனவர்களை கண்டுபிடித்து தருவேன் என்ற எதிர்பார்ப்பினை ஒருதாயிக்கு கொடுப்பது என்பது மிகவும் கொடுமையான செயல். அதன் காரணத்தினால் உண்மையினை சொல்லவேண்டும்.
நீதிகிடைக்கவேண்டும், குற்றவாளிகளுக்கு தண்டனைவழங்கப்படவேண்டும். அதற்கு இயன்றதை நாங்கள் செய்வோம். உண்மையைச்சொல்வது ஒருபோதும் துரோகச்செயல் இல்லை.

ஐ.நா.தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நன்றி தெரிவித்து அறிக்கைவெளியிட்டபோது அதனை சிங்கள ஊடகங்கள் இலங்கைக்கு எதிராக செயற்பட்ட நாடுகளுக்கு நன்றி தெரிவித்த சுமந்திரன் எம்.பி என்று செய்திவெளியிட்டபோது சிங்கள மக்கள் மத்தியிலிருந்து எதிரான கருத்துகள் வெளிப்பட்டன. சிங்கள மக்கள் மத்தியிலும் துரோகி தமிழ் மக்கள் மத்தியிலும் துரோகியாக நான் சொல்லப்படுகின்றது. தமிழ் மக்களின் எதிர்பார்ப்பிற்காக நாங்கள் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் என்று உழைத்தோம். அதனை நாங்கள் மறுக்கவில்லை.

இது இலங்கைக்கு எதிரான தீர்மானம் இல்லை. இலங்கை சரியான வழியில் பயணிக்கவேண்டுமாகயிருந்தால் இலங்கையில் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.அதுவே இலங்கைக்கு நல்லதாகும்.இலங்கையில் குற்றம் செய்தவர்கள் தப்பிச்செல்வது இலங்கைக்கு நல்லதல்ல.அதற்கு உதவியாக சர்வதேசம் வருகின்றபோது அது இலங்கைக்கு எதிரான தீர்மானம் இல்லை.ஆனால் இலங்கை ஆட்சியாளர்களுக்கு அது எதிரான தீர்மானம்.ஆட்சியாளர்கள் அதனை தடுக்கின்றனர்.செய்யவிடாமல் குறுக்கே நிற்கின்றனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்த தடவை நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மிகவும் முக்கியமான தீர்மானம்.இப்படியான தீர்மானமொன்று நிறைவேற்றப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. காரணம் 47நாடுகளை நாங்கள் எடுத்துப் பார்த்தபோது அது சாதகமாக இருக்கவில்லை. ஆனபடியால் இம்முறை மிகவும் கடினம் என நினைத்திருந்தோம். மனிதவுரிமை உயர் ஸ்தானிகர் மிச்சேல் பச்லட் அம்மையார் மிகமிக சக்தி வாய்ந்த காட்டமான ஒரு அறிக்கையை முதலில் வெளியிட்டார். டிசம்பர் மாதமே இவ் அறிக்கை இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்டது.

மனிதவுரிமை உயர் ஸ்தானிகர் மிச்சேல் பச்லட் அவர்களும் சித்திரவதையால் பாதிக்கப்பட்ட ஒருவராவார். சிலி நாட்டிலே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி அந்த நாட்டின் ஜனாதிபதியாகவும் இருந்தவராவார். அவருக்கு சர்வதேசத்தில் விஷேடமாக மனித உரிமைகள் ஆணையகத்தில் மிகப் பெரிய மதிப்பு இருக்கின்றது. அந்த அம்மையாரின் அறிக்கை காரணமாக பல நாடுகள் அதற்கு மாறாகச் செல்லத் தயாராக இல்லை. அதனால் தான் தென்னமெரிக்காவில் பல நாடுகள் இதற்கு சாதகமாக வாக்களித்தார்கள். ஏனென்றால் மிச்சேல் பச்லட் அம்மையாரைப் பற்றி அந்த நாட்டின் பலருக்குத் தெரியும். 47நாடுகள் கொண்ட சபையில் எங்களுக்கு ஆதரவு குறைவாக கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தவேளையில் அவரின் அறிக்கை காரணமாக அது மாற்றம்பெற்றது.

மனித உரிமை பேரவையினால் இலங்கையினை குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டுசெல்லமுடியாது.அதற்கான அதிகாரம் மனித உரிமை பேரவைக்கு இல்லை.நாங்கள் போராட்டங்களை நடாத்தி,சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டத்தினை நடாத்தி,உண்ணாவிரத போராட்டத்தில் பத்து பேர் உயிரிழந்திருந்தாலும் மனித உரிமை பேரவையினால் அதனை செய்யமுடியாது.பாதுகாப்பு சபைக்கு மட்டுமே குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டுசெல்வதற்கான அதிகாரம் உள்ளது.

நாங்கள் கேட்டது பாரப்படுத்தலுக்கான பொறுப்புக்கூரலுக்கு ஏதுவான காரணியை மனித உரிமை பேரவைக்கு வெளியில் கொண்டுசெல்லுங்கள் என்று கோரியிருந்தோம்.அதுவெளியே விடப்பட்டுள்ளது.நாங்கள் கேட்டதற்கு அமைவாக அதுவெளியே விடப்பட்டுள்ளது.

முன்னைய 30 ஒன்று 34ஒன்று 40ஒன்று தீர்மானங்களில் கலப்பு நீதிமன்ற முறை சொல்லப்பட்டிருந்தது.இந்த தடவை அது சொல்லப்படவில்லை. அதுமட்டுமன்றி ஒரு முழுமையான நீதிமன்ற பொறிமுறையின் கீழ் பொறுப்புக்கூறல் கொண்டுசெல்லப்படவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

முதல் வரைவில் சாட்சிங்களை பாதுகாப்பதும்,அதை பரிசீலிப்பதற்கு என்ற இரண்டு சொற்கள் மட்டுமே இருந்தது. ஆனால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சாட்சியங்களை சேகரிப்பதற்கும் என்று சொல் சேர்க்கப்பட்டுள்ளது.இது மிகவும் முக்கியமானது.நாங்கள் கேட்ட முக்கியமான தீர்மானங்களில் இரண்டு தீர்மானத்தில் இருக்கின்றது.அதனால்தான் நாங்கள் தீர்மானத்தினை வரவேற்றோம்.

சிலர் இந்த தீர்மானத்தில் எதுவும் இல்லை,பிரயோசனமற்றது என கூறுகின்றனர்.மக்கள் மத்தியில் தேவையற்ற அதிர்ப்தியை ஏற்படுத்துவதற்கான பொறுப்பற்ற செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. பொறுப்பாக மக்கள் மத்தியில் செயற்படுவோர் எந்த விடயத்தில் எவ்வளவு சாதிக்கமுடியும் என்ற விடயம் தெரிந்திருக்கவேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சாதிக்ககூடியவற்றினை உச்சக்கட்டம் நாங்கள் சாதித்திருக்கின்றோம்.இந்த பேரவை கூட்டத்தொடர் தொடங்கும்போது இதனைக்கூட நாங்கள் சாதிக்கமுடியும் என நாங்கள் நினைக்கவில்லை.நாங்கள் பல விடயங்களை முயற்சி செய்துவருகின்றோம்.

சில நாட்களில் சில விடயங்கள் மக்களுக்கு தெரியவரும்.எங்கள் முயற்சிகளை நாங்கள் பகிரங்கமாகவும் சொல்லமுடியாது.தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது முழுமையான முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.வெறுமனே மக்களுக்கு பொய் சொல்லி அவர்களின் எதிர்பார்ப்பினை உச்சக்கட்டத்திற்கு கொண்டுசென்று அவர்களை ஏமாற்றமடையும் செயற்பாட்டை நாங்கள் முன்னெடுக்கவில்லை.

இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தம் வந்திருக்கின்றது.குற்றச்சாட்டவர்கள் மீதான தடைகள் கொண்டுவரப்படுகின்றது.பொருளாதார தடைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் கேட்டிருந்தனர்.இலங்கைக்கு எதிரான பொருளாதார தடையினை நாங்கள் கோரவில்லை.இலங்கைக்கு எதிரான பொருளாதார தடைவரும்போது அதில் முதலாவதாகவும் மிகவும் மோசமாகவும் பாதிக்கப்படப்போவது தமிழ் மக்களாகும்.சிலவேளைகளில் பொருளாதார தடையினை கோரவேண்டிய சூழ்நிலை வரலாம்.அதனை நாங்கள் மறுக்கவில்லை.ஆனால் இன்று நாங்கள் அதனை கோரவில்லை.

இலங்கைக்குள் தீர்வொன்றினை ஏற்படுத்தவேண்டுமானால் சிங்கள மக்கள் மத்தியிலிருக்கின்ற முற்போக்கு சக்திகளும் எங்களுக்கு ஆதரவாக செயற்பட வேண்டும். அவர்களுடைய ஆதரவையும் நாங்கள் தக்கவைக்க வேண்டும். இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை வருவது ஆட்சியாளர்களுக்கு ஒரு பிரச்சினையே அல்ல. அவர்களுக்கு அது அழுத்தமல்ல. அவர்களுக்கு போதுமானளவு வளம் இருக்கின்றது. ஆனால் ஆட்சியாளர்களை குறிவைத்து தடைகள் வருமானால் அதுதான் அழுத்தமாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாகத்தான் இன்று இருக்கின்றது.மற்றைய கட்சிகளை இணைத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலவீனமடைந்திடும் என்ற அச்சம்தான் இருக்கின்றதே தவிர எங்களை பலப்படுத்துவதற்கு அவர்கள் தேவையில்லை.

தமிழ் மக்களின் நன்மைக்காக ஒற்றுமை தேவை.ஆனால் அடிப்படை கருத்துகளில் வித்தியாசமாக இருக்குமானால் நாங்கள் இணையமுடியாது.ஒற்றுமை ஒரு கொள்கையில்லை.கொள்கையுடன் ஒன்றுபடுபவர்கள் ஒன்றுசேர்ந்து பயணிக்கமுடியும்.” என்றார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,பா.அரியநேந்திரன் மற்றும் கட்சி ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.