“சர்வதேசத்துடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களையும் மீறுவதானது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.” – இரா.சம்பந்தன்

“சர்வதேசத்துடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களையும் மீறுவதானது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.” என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

காலப்போக்கில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா அழுத்தங்களுக்கு அச்சமின்றி முகங்கொடுப்பதோடு அதற்கு அடிபணியாமல் இருக்க முடியும் எனவும் இலங்கை ஒரு சுதந்திர நாடு என்றவகையில் இந்தியப் பெருங்கடலில் நடக்கும் அதிகாரப் போட்டிகளுக்கு நாங்கள் இரையாக மாட்டோமெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் இம்முறை நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களா? என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபோன்று தீர்மானங்கள் முன்னரும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை அனைத்தையுமே நிராகரிக்க முடியாது. அவ்வாறு நிராகரிப்பதாக கூறுவதானது, சர்வதேச தீர்மானங்களை மீறுவதாக அமையும். அதுமட்டுமன்றி சர்வதேசத்துடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களையும் மீறுவதாகவே அமையும். இது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் இனரீதியான மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்டங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் ஆகியன தொடர்பில் விசாரணைகள் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். முன்னதாக ஐ.நா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினரின் அறிக்கையில் இந்த சம்பவங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஐ. நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையிலும் அவ்விதமான சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகவே அக்குற்றச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டியுள்ளது மிகவும் முக்கியமானதாகும். இலங்கை அரசாங்கம் அவ்விதமான விசாரணைகளை முன்னெடுத்திருக்கவில்லை. எனவே அவை தொடர்பான விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. அக்கருமம் காலப்போக்கில் நிச்சயமாக இடம்பெறும்.

இலங்கை அரசாங்கம் உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக ஐ.நா.தீர்மானம், விசாரணை அறிக்கைகள் தொடர்பாக பல கருத்துக்களை வெளிப்படுத்தலாம். ஆனால் ஐ.நா.தீர்மானத்தினை நிராகரித்துச் செயற்பட முடியாது. மேலும், இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் கரிசணை கொண்டு செயற்படும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் நீண்டகாலக் கொள்கைகளின் அடிப்படையில் செயற்பட்டு வருபவை.

இதில் தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம், இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடங்கி இருக்கின்றன. ஆகவே அவ்விதமான நாடுகளை தவிர்த்துச் செயற்படுவதென்ற அறிவிப்பும் இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு அரசியலை அடிப்படையாக கொண்டவையே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *