யாழ். கல்லுண்டாய் பகுதியில் இளைஞன் ஒருவரை இனம்தெரியாத கும்பல் ஒன்று வழிமறித்து தாக்கியுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான இளைஞனை மீட்க வந்த நண்பன் மீதும் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (03.04.2021) இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்.நகர் பகுதியில் பாதுகாப்பு உத்தியோகஸ்தராக கடமையாற்றும் இளைஞன் கடமை முடித்து கல்லுண்டாய் வீதி வழியாக வீடு திரும்பியுள்ளார்.
அவ்வேளை குறித்த இளைஞனை வீதியில் வழிமறித்த கும்பல் ஒன்று அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளது. காயமடைந்த இளைஞனை அவ்விடத்தில் விட்டு விட்டு அக்கும்பல் சென்றுள்ளது.
காயத்திற்கு இலக்கான இளைஞன் தொலைபேசி ஊடாக அராலியில் உள்ள தனது நண்பனுக்கு தகவல் வழங்கியுள்ளார். அதனை அடுத்து தாக்குதலுக்கு இலக்கான இளைஞனை மீட்டு வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல அவரது நண்பன் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு சென்ற போது , அராலி பலத்தடியில் வைத்து இளைஞனை தாக்கிய கும்பல் மறித்து கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
அதனை அடுத்து அக்கும்பல் அவ்விடத்திலிருந்து தப்பி சென்ற பின்னர் இரு இளைஞர்களும் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது போன்றதான சம்பவங்கள் நாளுக்கு நாள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான குற்றங்களுடன் தொடர்புடையோர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன, குற்றவாளிகள் தேடப்படுகின்றனர் என்ற செய்திகளே கிடைக்கின்றனவே தவிர அந்த குற்றங்களுக்கான தீர்வுகள் குறித்தோ முடிவுகள் என்ன என்பது குறித்தோ தகவல்கள் பெரிதாக வெளி வருவதேயில்லை.
இவ்வாறான குற்றச்செயல்களுடன் தொடர்புடையோர் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு முறையாக தண்டிக்கப்பட்டு சமூகத்தின் முன் நிறுத்தப்படல் வேண்டும். அவ்வாறான போது மட்டுமே எதிர்காலத்தில் இது போன்றதான தவறுகள் இடம்பெறாது தடுக்க முடியும். இல்லாது போயின் இந்த காடையர்களை கண்டு இதனை பின்பற்றும் பாழ்பட்டுப்போன எதிர்கால தலைமுறை ஒன்று உருவாகிட அதிக வாய்ப்புள்ளது. இது தொடர்பாக எடுக்கப்படும் ஆரோக்கியமான நடைமுறைகள் எதிர்காலத்துக்கு அவசியமானவை !