21

21

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு தற்காலிகமாக வந்த சீனக்கப்பலில் யுரேனியம் –

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு தற்காலிகமாக வந்துள்ள சீன கப்பலில் அணு சக்திக்கு பயன்படுத்தப்படும் யுரேனியம் இருப்பதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் தெரிவித்தார்.

இவ்வாறான இரசாயன பொருட்களை நாட்டிற்கு கொண்டு வரும் போது, விசேட அனுமதி பெறப்பட வேண்டும் என்றாலும் குறித்த கப்பலுக்கு எவ்வித அனுமதியும் பெற்றப்படவில்லை எனவும் பணிப்பாளர் எச்.எல்.அனில் ரஞ்சித் தெரிவித்தார்.

எனவே ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து கப்பலை வெளியேற்றுமாறு உரிமையாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஹம்பாந்தோட்டையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கதிரியக்க பொருட்கள் கொண்ட கப்பல் துறைமுகத்தை விட்டு வெளியேறியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்ததை அடுத்து கப்பலின் உரிமையாளர்களுக்கு முறையான வெளியேற்ற உத்தரவு வழங்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கப்பல் மூலம் கடத்தப்படும் கதிரியக்க பொருளான ஹெக்ஸஃப்ளூரைட் என்ற பொருள் யுரேனியத்தை பதப்படுத்த பயன்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

ஜார்ஜ் பிளாய்டின் சாவுக்கு நீதி கிடைத்தது – அமெரிக்க மக்கள் கொண்டாட்டம் !

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்த கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு, கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் திகதி போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஜார்ஜ் பிளாய்ட் கழுத்தில் போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் தனது கால் முட்டியை வைத்து அழுத்தியது, இதனால் அவர் மூச்சுவிட முடியாமல் திணறி உயிரிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
TRIBUTE TO GEORGE FLOYD : A NEW BREATH TO REBUILD HUMANITY – Article 19
ஜார்ஜ் பிளாய்டின் சாவுக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது. இனவெறிக்கு எதிராகவும் போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்தும் நடந்த இந்தப் போராட்டங்கள் அமெரிக்காவையே உலுக்கியது.
ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் உள்பட 4 போலீசார் மற்றும் மினியாபோலீஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டெரிக் சாவின் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. அவரின் குற்றத்துக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த தீர்ப்பை ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். தீர்ப்பைக் கேட்டதும் ஜார்ஜ் பிளாய்டுக்கு மரியாதை செலுத்தியும், கண்ணீர் மல்க நீதித்துறைக்கு நன்றி தெரிவித்தும் கொண்டாடிவருகின்றனர். நீதி வென்றுவிட்டதாக பலரும் கருத்து பதிவிட்டுவருகின்றனர். இந்த தீர்ப்பு பலருக்கு கிடைத்த வெற்றி என்றும், இன்று நாம் மீண்டும் சுவாசிக்க முடிகிறது என்றும் ஜார்ஜ் ஃபிளாய்டின் குடும்பத்தினர் கூறி உள்ளனர். ஆனால் நீதிக்கான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை என்றும் குறிப்பிட்டனர்.
ஜார்ஜ் பிளாய்டுக்காக மட்டும் போராடவில்லை, உலகில் உள்ள ஒவ்வொருவருக்காகவும் போராடுகிறேன் என அவரது சகோதரர் கூறி உள்ளார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சியினர் தமது ஆதரவினை வழங்க வேண்டும்.” – நாமல் ராஜபக்ஸ

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சியினர் தமது ஆதரவினை வழங்க வேண்டும்.”  என நாமல் ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்..

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டில் தற்போது உள்ள சட்டங்களுக்கு அமைவாக சுயாதீனமாக செயற்படுவதற்கு நீதிமன்றங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சியினர் தமது ஆதரவினை பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்கும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசி போட்டு இரத்த உறைவு ஏற்பட்டவர்களில் மூவர் உயிரிழப்பு !

இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு 6 பேருக்கு இதுவரை இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், இவ்வாறு இரத்த உறைவு ஏற்பட்டவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இந்த விடயத்தை தெரிவித்தார்.

இலங்கையில் இதுவரை 9 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஏப்ரல் தாக்குதலுக்கு நீதி கோரி கறுப்பு நிற உடையணிந்து போராட்டம் நடத்தியதால் நாடாளுமன்றில் பதற்றம் !

அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தின்போது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் பத்து நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன.

தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்பு நிற உடையணிந்து போராட்டம் நடத்தியதால் சபையில் பதற்றம் தொடங்கியது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அரசாங்க தரப்பு உறுப்பினர்கள் ஆசனத்தில் இருந்து எழுந்துவந்து எதிர்க்கட்சியை நோக்கி கோஷம் எழுப்பினர்.

அத்தோடு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக பதாகைகளையும் ஏந்தியவாறு அரசதரப்பு உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“கடந்த அரசாங்கத்தினால் குற்றங்கள் அலட்சியம் செய்யப்பட்டமையே ஏப்ரல் தாக்குதலுக்கு காரணம்.” – நாடாளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ !

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை இனி எப்போதும் ஏற்படாது தடுக்க ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே இதனைத்  தெரிவித்துள்ளார்.

அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

இத்தால் ஈராண்டுகளுக்கு முன்னர் அதாவது 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கை வரலாற்றில் ஏற்பட்ட இருண்ட தினத்தின் ஈராண்டு நிறைவை மிகுந்த அனுதாபத்துடன் நினைவு கூருகின்றோம். அன்று உயிர்த்த ஞாயிறு தின வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அப்பாவி மக்கள் உள்ளிட்ட 259 பேர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த அனைத்து அன்புக்குரியவர்களையும் நினைவு கூருவதுடன், உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்திக்கின்றேன்.

அத்துடன் தாக்குதலின்போது காயமடைந்த மற்றும் ஊனமுற்ற நூற்றுக்கணக்கானோர் உடல், உள ரீதியாக பாதிப்படைந்துள்ள நிலையில் அவர்களும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.

இதேவேளை, தாக்குதலில் உயிரிழந்த, ஊனமுற்ற மற்றும் காயமடைந்த அனைவரது குடும்பத்தினருக்கும் ஆழந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினால் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கமைய தயாரிக்கப்பட்ட அறிக்கை மற்றும் பிற ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள கௌரவ சட்டமா அதிபருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகளின் ஊடாக இவ்விடயத்தில் நாம் தலையீடு செய்யாவிடினும், அச்செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்வதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் நல்குவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் தயாராகவிருப்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

அத்துடன் ஆணைக்குழுவிற்கு மேலதிகமாக செயற்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவு ஆகியவற்றின் விசாரணைகளை சுயாதீனமான முறையில் முன்னெடுப்பதற்கு தேவையான வசதிகளை ஜனாதிபதி ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

அவ்விசாரணைகளின் இறுதியில் அந்தந்த திணைக்களங்களின் ஊடாக நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாம் நம்புகின்றோம்.

கடந்த அரசாங்கத்தினால் குற்றங்கள் அலட்சியம் செய்யப்பட்டமையினாலும், தேசிய பாதுகாப்பையும், தமது அரசியல் நடவடிக்கைகளையும் குழப்பிக் கொண்டமையினாலும் இறுதியில் பாதிக்கப்பட்டது அப்பாவி பொதுமக்களே ஆகும். இன்றும், தாக்குதலுக்கு காரணமான தரப்புகள் பல்வேறு பொய்களை சமூகத்தில் பரப்பி, விசாரணைகளில் செல்வாக்கு செலுத்துவதன் மூலம் சமூக கவனத்தை திசை திருப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றனர்.

நாம் அவர்கள் குறித்து வருந்துகின்றோம். மேலும், உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் அதே வேளை, இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை இனி எப்போதும் ஏற்படாது தடுக்க ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அத்துடன், இந்த கொடூர தாக்குதலுக்கு காரணமான அனைவரையும் நீதியின் முன்னிறுத்த நாம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம் என்றும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.