“தேசிய நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்து சுதந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்துபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.” என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.
முல்லேரியாவ பிரதேசதத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளில் கருத்து சுதந்திரம் பிரதான ஒன்றாக காணப்படுகிறது. ஜனநாயக நாடுகளில் கருத்து சுதந்திரம் தாராள மயமாக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டிலும் அத்தன்மையே காணப்படுகிறது. நல்ல நோக்கத்திற்காக வழங்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்தை ஒரு தரப்பினர் தவறான முறையில் பயன்படுத்துகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் சிலர் போலியான செய்திகளை பதிவேற்றம்’ செய்து சமூகத்தின் மத்தியில் மாறுப்பட்ட நிலைப்பாட்டை தவறான முறையில் தோற்றுவிக்கிறார்கள். ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் பதிவுகள் வெறுக்கத்தக்க வகையில் காணப்படுகிறது.
இவை தேசிய நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி இறுதியில் அடிப்படைவாத முரண்பாடுகளை தோற்றுவிக்கும். இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. கருத்து சுதந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்துபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.” என்றார்.