“அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை கையிலெடுக்கிறார்கள்.” – இம்ரான் மஹ்ரூப்

“அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை கையிலெடுத்தே அந்த அதிருப்தியை மறைக்கிறார்கள்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

கிண்ணியாவில் நேற்றைய தினம்(18.04.2021) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட சிங்கள அமைப்புக்கள் எதனையும் தடைசெய்யாது முஸ்லிம் அமைப்புக்களை மாத்திரம் தடை செய்துள்ளனர். ரமழான் மாதத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சால் முஸ்லிம்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாயலில் நூறு பேருக்கு மேல் ஒன்றுகூட முடியாது. நோன்பு கஞ்சி பகிரமுடியாது என அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆனால் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் கடை வீதிகளிலும் பொது இடங்களிலும் ஆயிரக்கணக்கில் சமூக இடைவெளி இன்றி ஒன்று கூடியதை நாம் கண்டோம். மதுபான சாலைகளில் பெரிய கூட்டமே கூடி இருந்தது. ஆகவே புத்தாண்டில் தடைகளை விதிக்காத அரசு ஏன் ரமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு மாத்திரம் தடைகளை விதிக்க வேண்டும்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் முஸ்லிம்களுக்கு மாத்திரம் தான் கொரோனா தொற்றுவது போன்று முஸ்லிம்களுக்கு மட்டும் தடைகள் விதிக்கப்படுவது ஏன் என்றே நாம் கேட்கின்றோம். இதற்கு பின்னாலும் பெரிய இனவாத நிகழ்ச்சிநிரல் உள்ளது.

இந்த காலத்தில் இடம்பெறும் முஸ்லிம்களின் வியாபாரத்தை முடக்குவதே இந்த அரசின் நோக்கம். மே மாதத்தில் கொரோனாவின் மற்றொரு அலை உருவாக்கலாம் என இராணுவ தளபதி ஏற்கனவே அறிவித்து விட்டார்.

ஆகவே மே மாதத்தில் இடம்பெறும் பெருநாள் வியாபாரத்தை முடக்க அரசு திடடமிட்டுள்ளதா என்ற சந்தேகம் இதனால் இப்போது எழுகிறது. தற்போது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி தடையால் முஸ்லிம் வியாபாரிகள் பலரே பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை மேலும் சிரமத்துக்கு உள்ளாக்கவே அரசு திட்டமிட்டு வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு துறைகளிலும் முஸ்லிம்களை பழிவாங்கவே இந்த அரசு முயற்சிக்கிறது. ஆனால் காபட் வீதி மற்றும் பாலங்களில் இருந்து வரும் கொமிஸ்களுக்காக சிலர் பசில் வந்தால் சரியாகும் நாமல் வந்தால் சரியாகும் என ஊருக்குள் கூறி திரிவது வேடிக்கையானது எனவும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *