31

31

வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைப்பு !

ஜேர்மன் மற்றும் சுவிஸர்லாந்திலிந்து வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்ட ஈழத்தமிழர்கள் 24 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுவுத் துறையினரால் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் செயல்முறை முடிந்ததும், அவர்கள் சி.ஐ.டி மற்றும் தேசிய புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சுவிஸர்லாந்து மற்றும் ஜேர்மனில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 24 ஈழத்தமிழர்கள், நாடு கடத்தப்பட்டு சிறப்பு விமானத்தின் மூலமாக இன்று காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜேர்மனிலிருந்து 20 பேரும், சுவிஸர்லாந்திலிருந்து நான்கு பேருமே இவ்வாறு ஸ்ரீலங்காவிற்கு நாடு கடத்தப்பட்டனர்.

குடிவரவு சட்டங்களை மீறியதற்காக அவர்கள் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு முதல் அந்த நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த நாடுகளின் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டனர்.

இவர்கள் இன்று காலை 10.37 மணிக்கு ஜேர்மனின் டஸ்ஸெல்டோர்ஃப் விமான நிலையத்திலிருந்து வாமோஸ் ஏயர்லைன்ஸின் ஈபி -308 என்ற சிறப்பு விமானத்தினூடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இன்று முற்பகல் வரை யாழில் நூற்றுக்கு மேற்பட்ட புதிய கொரோனாத் தொற்றாளர்கள் !

யாழ்ப்பாணம் மாநகர சந்தைக் கடைத்தொகுதி வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை (31.03.2021)கிடைத்த அறிக்கையிலேயே 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் யாழ்ப்பாணம் மாநகரில் கருவாட்டுக் கடை உரிமையாளர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் கண்டறியப்பட்டதையடுத்து 117 பேர் இன்று முற்பகல் வரை அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 541 பேரின் மாதிரிகள் முல்லேரியா ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கட்டன.

அவற்றில் 13 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு இன்று காலை அறிக்கை கிடைத்துள்ளது. யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 1440 பேரிடம் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை மாதிரிகள் பெறப்பட்டன. அவற்றில் இதுவரை 35 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு பகுதியினரின் மாதிரிகள் இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றன. அதன் பெறுபேறுகள் இன்றிரவு கிடைக்கும்.

அத்துடன் 1440 பேரின் பரிசோதனை முடிவுகளும் முழுமைப்படுத்தப்படும் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

ஐ.பி.எல்.போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவராக ரி‌ஷப் பண்ட் தெரிவு !

ஐ.பி.எல்.போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவராக இருப்பவர் ஸ்ரேயாஷ் அய்யர். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது அவருக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஸ்ரேயாஷ் அய்யரால் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்கு யார் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலக்கு காப்பாளரான இளம் வீரர் ரி‌ஷப் பண்ட் டெல்லி அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்டீவ் சுமித், அஸ்வின், ரகானே போன்ற மூத்த வீரர்கள் இருக்கும் போது டெல்லி அணி நிர்வாகம் ரி‌ஷப் பண்ட் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு தலைவர் பொறுப்பை வழங்கி உள்ளது.

இந்தநிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவர் பதவிக்கு ரி‌ஷப் பண்ட் தகுதியானவர் என்று ஸ்ரேயாஷ் அய்யர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் பேசிய போது ,

ரி‌ஷப்பண்ட் சிறந்த மனிதர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. காயம் காரணமாக என்னால் ஐ.பி.எல். போட்டியில் ஆட முடியவில்லை. இதனால் டெல்லி அணிக்கு தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் ரி‌ஷப்பண்ட் சிறந்தவர். தலைவர் பதவிக்கு தகுதியானவர். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

இவ்வாறு ஸ்ரேயாஷ் அய்யர் கூறி உள்ளார்.

ஸ்ரேயாஷ் தலைமையில் டெல்லி அணி கடந்த ஐ.பி.எல். போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரி‌ஷப்பண்டுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும் சி.எஸ்.கே. அணியை சேர்ந்தவருமான சுரேஷ் ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த சீசனுக்கு டெல்லி அணியின் தலைவராகக நியமிக்கப்பட்டுள்ள ரி‌ஷப்பண்டுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். அவர் சிறந்த தலைவராக உருவாகுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தனது சிறப்பான பணி மூலம் டெல்லி அணியை அவர் பெருமைப்படுத்துவார்.

இவ்வாறு சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

பிரித்தானிய பாடசாலைகளில் இடம்பெற்ற பாலியல் வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பாக 8000 குற்றச்சாட்டுக்கள் பதிவு !

பிரித்தானியாவில் பாலியல் வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பான சாட்சியங்களை சேகரிக்கும் இணையதளத்தில் 8,000 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் மாணவர்களினால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கற்பழிப்பு கலாச்சாரம் அனைத்து பாடசாலைகளிலும் ஒரு பிரச்சினையாக இருப்பதாக தெரிவித்து சோமா சாரா என்பவர் உருவாக்கிய இணையத்திலேயே குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறித்த குற்றங்களை புரிந்தவர்களில் பலர் ஒரே பாடசாலையில் அல்லது ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனவே இந்த விடயம் தொடர்பாக ஹெல்ப்லைன் அமைக்கப்படும் என்றும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெறும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

“பொலிஸ் அதிகாரி ஒருவர் நடுவீதியில் சாரதி ஒருவரை தாக்கிய சம்பவத்தை அரசு அனுமதிக்கவில்லை. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – அமைச்சர் உதய கம்மன்பில

“பொலிஸ் அதிகாரி ஒருவர் நடுவீதியில் சாரதி ஒருவரை தாக்கிய சம்பவத்தை அரசு அனுமதிக்கவில்லை. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

 

TamilMirror.lk

பொலிஸார் சட்டத்தை கையிலெடுத்து செயல்படுவது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அரசாங்கம் பேச்சிலன்றி செயலில் காட்டியுள்ளது. இந்த அதிகாரி இடைநிறுத்தம் செய்யப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இவ்வாறான செயல்களை அனுமதிக்கவில்லை.அதனாலே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதென்றார்.

இராணுவம் மற்றும் பொலிஸார் செய்யும் மனித உரிமை மீறல்களினால் ஜெனீவாவில் அரசாங்கம் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுவது பற்றிய எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

அமெரிக்க பொலிஸ் அதிகாரி ஒருவர் கறுப்பினத்தவரை கொலை செய்தார்.உலகம் முழுவதும் பொலிஸாரினால் பொது மக்களுக்கு அநியாங்கள் நடைபெறுகிறது. அரசாங்கம் செயற்பாடமல் இருப்பது தான் தவறு.ஜெனீவா பிரேரணைக்கு இவ்வாறான விடயங்கள் காரணமல்ல. ஜெனீவா பிரேரணையை அரசு நிராகரித்துள்ளது என்றார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லீம் சமூகத்தை துன்புறுத்துவதில் அரசாங்கம் அடையும் இன்பத்திற்கு அளவே இல்லை. ” – ரவூப் ஹக்கீம்

கட்சியில் ஆதரவாளர்களுடைய செல்வாக்கும், நன்மதிப்பும் இருக்கும் வரைதான் கட்சித் தலைமையில் நான் இருப்பேன்  என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை எஸ்.ரி.ஆர். அமைப்பின் நான்காவது ஆண்டு நிறைவு தின நிகழ்வு  சம்மாந்துறை அப்துல் மஜீத் நகர மண்டபத்தில் அமைப்பின் தலைவர் யாத்தீக் இப்றாஹிம் தலைமையில் கடந்த 27.03.2021 அன்று இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில்  இவ்வாறு தெரிவித்தார்.

அவர்  தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கட்சியின் ஆதரவாளர்கள், அடிமட்ட போராளிகளின்  மன உணர்வுகள் சம்பந்தமான பெறுமானத்தை பாராளுமன்ற உறுப்பினர்களும் சரி, தலைமையும் சரி உணர்ந்து கொள்ள வேண்டும். கட்சியில்  பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட கௌரவம் மற்றும் எதிர்கால அரசியலில் என்னால் எதுவித  பாதிப்புகளும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மிகவும் மௌனமாக இருந்து வந்துள்ளேன்.

பல்வேறு போராட்டங்களின் பின்னர் சர்வதேசத்தின் தலையீட்டினாலேயே   ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான உரிமை கிடைக்கப் பெற்றுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் இயக்கம் இந்த ஆட்சியாளர்களுடன் தேலையில்லாமல் முரண்பட்டு கொள்ளவுமில்லை. ஆனால் அவர்களின் எடுப்பார் கைப்பிள்ளையாகவும் ஒருபோதும் இருக்கவும் போவதில்லை.

ஆட்சியாளர்களின் அனுசரணை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வளவோ இருக்கலாம் ஆனால் தமது பதவியில் நீடிக்க வேண்டுமாயின் கட்சி ஆதரவாளர்களின் செல்வாக்கும், நன்மதிப்பும்  தலைமையின் ஆசீர்வாதமும் இல்லாவிட்டால் தங்களின் நிலைமை என்னவென்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் முஸ்லிம் சமூகம் நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சமூகத்தை துன்புறுத்துவதில் அரசாங்கம் அடையும் இன்பத்திற்கு அளவே இல்லை. அந்த அளவுக்கு நாட்டில் இனவாதம் தலைவிரித்தாடுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது  ஒரு சிலரின் அரசியல் நோக்கத்திற்காக இவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள் என்பதுதான் எங்களுக்கு மத்தியில் பேசப்படுகின்ற விடயமாகும்.

முஸ்லிம் காங்கிரஸ்  தனிநபர்களில் தங்கியிருக்கின்ற இயக்கமல்ல. எந்தவித எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் இருக்கின்ற இளைஞர்களினதும், தாய்மார்களின் துஆக்களினாலும் வளர்க்கப்பட்ட இயக்கமாகும்.

எனவே, இந்த இயக்கத்தினுடைய பொறுப்பு என்பது சமூகத்தின் அவலங்களுக்கு தைரியமாக குரல்கொடுக்கின்ற திராணியுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆட்சியாளர்களுக்கு கூஜா தூக்குகின்றவர்களாக இருக்கக் கூடாது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஏ.எல். தவம், எம்.எஸ். உதுமாலெவ்வை, கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வி.மணிவண்ணன், பா.மயூரன் ஆகியோரை கட்சியிலிருந்து  நீக்கக்கோரிய மனு தள்ளுபடி !

தமிழ்  தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர்கள் சிலரைக் கட்சியிலிருந்து விலக்கும் தீர்மானத்திற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக் கோரி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் செய்த மேன்முறையிட்டு மனுவை மாகாண குடியியல் மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

யாழ். மாநகரசபை உறுப்பினர்கள் வி.மணிவண்ணன், பா.மயூரன் ஆகியோரை கட்சியிலிருந்து விலக்குவதாக அண்மையில் அகில இலங்கை காங்கிரஸ் அறிவித்தது.

இதற்கு எதிராக யாழ் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் வி.மணிவண்ணன், பா.மயூரன் தாக்கல் செய்த மனுவையடுத்து, அவர்களை கட்சியை விட்டு நீக்கும் முடிவிற்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது. இந்த தடைக்கு எதிராக, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் மாகாண குடியியல் மேல்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இடைக்கால தடையை செல்லுபடியற்றதாக்க கோரியிருந்தனர். இந்த மனுவை மாகாண குடியியல் மேல்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தொடர்ந்தும் சரிவடைந்த இலங்கை ரூபாயின் வரலாறு காணாத வீழ்ச்சி !

இலங்கை வரலாற்றில் அண்மைக்காலமாக தொடர்ந்தும் வீழ்ச்சி அடைந்து வரும் ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 202.04 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேவேளை அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 197.62 ஆக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

தந்தை எஸ்.ஜே.வி செல்வநாயகத்தின் 123வது பிறந்ததின நிகழ்வுகள் மட்டக்களப்பில் !

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை எஸ்.ஜே.வி செல்வநாயகத்தின் 123வது பிறந்ததின நிகழ்வுகள் மட்டக்களப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராசா அவர்களின் தலைமையில் வாவிக்கரை வீதியில் தந்தை செல்வா சிலை அமைந்துள்ள பூங்காவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள், கட்சிக் கிளைகளின் நிருவாகிகள், தந்தை செல்வாவின் பேரனாகிய எஸ்.சி.சி.இளங்கோவன் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தந்தை செல்வாவின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு, சிறப்புரையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இங்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

இன்று தந்தை செல்வாவின் பிறந்த தினத்தை நாங்கள் ஆராதித்து வாழ்த்தி வணங்கி எமது இனத்தின், தேசத்தின் விடுதலைக்காக அவர் விட்டுச் சென்ற உறுதிமொழிகளை எல்லோருடைய இதயத்திலும் இருத்தி செயற்படுகின்றோம்.

எத்தனையோ சத்தியாக்கிரகப் போராட்டங்களைச் சந்தித்த வரலாற்று நாயகன் அவர். 1956ம் ஆண்டு காலிமுகத்திடலிலே எமது இனத்தின் விடுதலைக்காகவும், மொழியின் சமத்துவத்திற்காகவும் இரத்தம் சிந்திய வரலாறு இன்று வரையிலும் எமது நினைவுகளில் இருக்கின்றது. அகிம்சை வழியிலும், ஆயுத ரீதியிலும், எமது இலட்சக் கணக்கான மக்களைப் பறிகொடுத்தும் இன்னும் அந்த விடிவை நாங்கள் எட்டவில்லை. எமது மக்களின் விடிவை நோக்கி நாங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றோம், போராடிக் கொண்டிருக்கின்றோம்.

அந்த இலக்கை அடைவதற்காக இன்று தேசத்தின் விடுதலைக்காகவும், எமது இனத்தின் விடுதலைக்காவும் சர்வதேச அரங்கிலே தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. எமது நிகழ்ச்சிகளின் முன்னோடியாக, எமது தந்தை செல்வா காட்டிய அர்ப்பணத்தின் பயனாக இன்று ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கையில் இனப்பிரச்சினக்கு தீர்வு காண வேண்டும் என்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அது தமிழ் மக்களுக்கு ஒரு மனப் பலத்தை அளித்திருக்கின்றது.

இவையெல்லாம் தந்தை செல்வா அவர்களின் வழிகாட்டலிலே இடம்பெற்றுக் கொண்டு வருகின்றது என்பதை ஏற்றுக் கொண்டு அந்த இலக்கை நாங்கள் அடைவோம். தமிழ் மக்களின் விடுதலைக்காக எங்களை அர்ப்பணித்து உழைப்போம் என்று எமது தந்தை செல்வாவின் பிறந்த தினத்திலே தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.

வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஜேர்மனியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 புகலிட கோரிக்கையாளர்கள் !

ஜேர்மனியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 புகலிட கோரிக்கையாளர்கள் நேற்று (30.03.2021) வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

குறித்த 31 புகலிட கோரிக்கையாளர்களும் Dusseldorf சர்வதேச விமான நிலையத்தினூடாக இலங்கைக்கு வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்கள் இன்று நாட்டை வந்தடைவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேர்மனிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 100 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து Dusseldorf விமான நிலையத்திற்கு முன்பாக தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அந்த நாட்டின் இடதுசாரி கட்சிகள் மற்றும் ஏனைய போராட்ட அமைப்புகளைச் சேர்ந்த பலரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்தோடு,  புகலிடம் கோரியவர்களின் அகதி விண்ணப்பங்களின் மீள் பரிசீலனை அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் இறுதி நேரத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறிருப்பினும் இலங்கையின் பாதுகாப்புப் படையினரால் சித்திரவதை செய்யப்பட்டதாக அறிக்கைகள் தெரிவித்தபோதிலும்31 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.