மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்றுவரும் ஜனநாயகப் புரட்சிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக, அந்த நாட்டின் துணை ஜனாதிபதி மான்வின் காயிங் தான் சூளுரைத்துள்ளார்.
ஆட்சியை இராணுவம் கைப்பற்றியதில் இருந்து தலைமறைவாக இருந்து வரும் அவர், இணையதளத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் உரையில்,
‘மியன்மார் வரலாற்றில் இது மிகவும் இருண்ட காலமாகும். ஆனால், விரைவில் விடியல் வரவிருக்கிறது. நீண்ட கால இராணுவ ஆட்சியினால் அடக்குமுறைக்கு ஆளாகி அல்லலுற்று வரும் பல்வேறு இனத்தினரும் ஜனநாயகத்தைக் கொண்டு வருவதற்கு, அனைவரும் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வரும் இந்தப் புரட்சி மட்டுமே கைகொடுக்கும்.
இந்தப் புரட்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம். இராணுவத்தின் அடக்குமுறைக்கு அடிபணிந்து நமது புரட்சியைக் கைவிட மாட்டோம். ஒற்றுமையின் பலத்தால் நமது எதிர்காலத்தை நாமே தீர்மானிப்போம் என கூறினார்.
மியான்மாரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இராணுவம் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி கவிழ்த்தது.
அத்துடன், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட் உட்பட 100க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களை இராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.
இராணுவத்தின் இந்நடவடிக்கைக்கு எதிராக மக்கள் பலர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், போராட்டத்தைக் கடுமையான நடவடிக்கைகள் மூலமாக இராணுவம் ஒடுக்கி வருகிறது. இதுவரை ஒட்டுமொத்தமாக போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.