சமூகப்போராளி வ.சிவஜோதியின் நினைவாக “சிவஜோதி எனும் ஆளுமை” – என்னும் நினைவேடு வெளியீடு!
சமூகப் போராளி வயிதீஸ்வரன் சிவஜோதியின் நினைவு நிகழ்வு இன்று [ஞாயிறு மார்ச் 7ம் திகதி] இடம்பெற்றது.
கிளிநொச்சியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘மக்கள் சிந்தனைக் கழகமும் லிற்றில் எய்ட் அமைப்பும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
அமரர் சிவஜோதி மக்கள் சிந்தனைக் கழகத்தின் உருவாக்கத்தில் சிவஜோதி முக்கிய பங்கெடுத்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவஜோதி 2017 முதல் லிற்றில் எய்ட் அமைப்பின் இணைப்பாளராகப் பணியாற்றி அதன் முக்கிய தூண்களில் ஒன்றாக இருந்தவர். இன்று எல்லோர் மனங்களிலும் சமூகப்போராளியாக ஒரு முன்ணுதாரணமாக வாழ்கின்றார்.
இந்நிகழ்வில் ‘சிவஜோதி எனும் ஆளுமை…’ என்ற தலைப்பிலான சிவஜோதியின் வாழ்க்கை மற்றும் சமூகப் போராட்டத்தை பற்றிய நினைவுகளைத் தாங்கிய நூல் வெளியிடப்பட்டது. இந்த நினைவு நூலினை சமூகப்போராளி சிவஜோதியின் மனைவியான ஹம்சாகௌரி சிவஜோதி அவர்களால் வெளியிடப்பட்டிருந்தது
இந்நூலுக்கான பதிப்பு அனுசரணையை யா. விக்ரோரியாக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் பொறுப்பேற்றிருந்ததுடன் இந்நூலை லிற்றில் எய்ட் நிறுவனம் சார்பாக சமூகப்போராளி சிவஜோதியின் மனைவியான ஹம்சாகௌரி சிவஜோதி அவர்கள் வெெளியிட்டிருந்தார்.
இந்த நிகழ்வில் சமூகசெயற்பாட்டாளர்கள், பாடசாலை அதிபர்கள், கலை-இலக்கிய செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள் லிட்டில் எய்ட் நிறுவனத்தின் உறுப்பினர்கள், அமரர் சிவஜோதியின் பாடசாலை நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.
சிவஜோதி எனும் ஆளுமை… நூலின் இணைப்பு:
ஆளுமை பற்றி…
‘சிவஜோதி எனும் ஆளுமை…’ ஒரு ஆளுமையாக எண்ணப்படுவதற்கு முதற்காரணம் அவ்வாளுமை தான் சார்ந்த சமூகத்தின் மீது ஏற்படுத்திய தாக்கமே. இன்றைய காலகட்டத்தில் உலகத் தலைவர்களே கோமாளிகளாக, பொறுப்பற்றவர்களாக, வினைத்திறனற்றவர்களாக, ஏன், மோசடியாளர்களாகவும், பாதகம் செய்பவர்களாகவும் இருப்பதால் ஆளுமைகளை வரலாற்றில் தான் தேட வேண்டியுள்ளது. கீழைத்தேச நாகரிகத்தின் – இந்தியாவின் மோடியில் இருந்து, மேலைத்தேச நாகரீகத்தின் – அமெரிக்காவின் ட்ரம் வரை, இவர்களிடம் இருந்து எதைத்தான் நாளைய தலைவர்கள் கற்றுக் கொள்வது? இம்மண்ணில் பிறக்காத உயிரின் (pசழ டகைந) உரிமைக்காகப் போராடும் அமெரிக்கர்கள் பள்ளிகளில், கல்லூரிகளில் கொல்லப்படும் மாணவர்களின் உயிரைக் காப்பாற்ற, துப்பாக்கிகளைக் கட்டுப்படுத்துவதற்கு கூடத் தயாரில்லை. பொறுப்பற்ற இந்த பொதுப்புத்தி மனிதர்களை நாம் ஆளுமைகளாகக் கொள்ள முடியாது.
உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றான பிரித்தானியாவில் பள்ளி மாணவர்கள் பட்டினியில் வாடுகிறார்கள். பள்ளிச் சிறுமிகள் மாதவிடாய் அங்கிகளை வாங்குவதற்கு வசதியில்லாததால் பாடசாலைக்குச் செல்வதில்லை. ஆனால் பிரித்தானிய அரசு ஆயதத் தளபாடங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து உள்ளது.
இன்று வல்லரசுகள் வைத்துள்ள அதிநவீன ஆயுதங்களால் ஒரு கொரோனா வைரஸைக் கூட சுட்டு வீழ்த்திவிட முடியாது. ஆனால் இந்த நவீன அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவும் பாதுகாக்கவும் இந்த வல்லரசுகள் பல பில்லியன் டொலர்களைச் செலவிட வேண்டியுள்ளது. ஆனால் மருத்துவர்களையும் தாதிகளையும் உருவாக்குவதற்கு, அவர்களுக்கான பாதுகாப்பு அங்கிகளை வழங்குவதற்கும் கூட இந்த உலகத் தலைவர்கள் தயாரில்லை.
இந்தக் கொரோனா தாக்கத்தினால் 270 மில்லியன் மக்களின் ஒரு நேர உணவே கேள்விக்குறியாகி இருக்க, 2200 பில்லியனெர்கள் 2020 ஏப்ரல் முதல் 2020 ஜூலை வரையான நான்கு மாதங்களில் 2.7 ரில்லியன் டொலர்களைச் சம்பாதித்து உள்ளனர். இந்த சம்பாத்தியத்தில் வெறும் 20 பில்லியன் டொலர்களை வழங்கினால் அந்த 270 மில்லியன் மக்களின் வறுமையைப் போக்க முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள்.
அரசுகளும் அரசுத் தலைவர்களும் செய்ய முடியாத, செய்ய விரும்பாத விடயங்களை தனிநபர்கள் தங்கள் தோள்களில் சுமக்கின்றனர். சமூகம் என்ற கட்டமைப்பு ஒன்றில்லை, அவரவர் தங்கள் தங்கள் நன்மைகருதிச் செயற்பட வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் தன்னலம்சார்ந்த முதலாளித்துவ சமூகக் கட்டமைப்பு; தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டது. சமூகம் என்பதன் அவசியம் இன்று உலகெங்கும் உணரப்படுகின்றது. இந்த சமூகத்தில் சராசரி மனிதர்கள் ஆற்றுகின்ற பங்கின் முக்கியத்துவம் உணர வைக்கப்பட்டுள்ளது.
பள்ளியில், கல்லூரியில், பல்கலையில் உயர்புள்ளி பெற்றவர்கள் எல்லாம் சமூகத்தைவிட்டு ஒதுங்க, சராசரியானவர்களே சமூகத்தின் சுமைகளைத் தங்கள் தோள்களில் சுமந்தனர். அவ்வாறு சுமந்ததனாலும் அந்த சமூகத்திற்கு வழிகாட்டியதனாலுமே நாங்கள் இத்தன்னலமற்ற மனிதர்களை ஆளுமைகளாக கணிக்கின்றோம். அவ்வாறான ஆளுமைகளே மக்களோடு மக்களாக நின்று அவர்களின் முன்னேற்றத்திற்காக அயராது உழைக்கின்றனர். அவ்வாறான ஒரு ஆளுமையே இந்த ‘சிவஜோதி எனும் ஆளுமை…’
சிவஜோதி தனது 49 ஆண்டுகால குறுகிய வாழ்க்கைக் காலத்தில் தனது பன்முக ஆளுமையை பல கோணங்களில் வெளிப்படுத்தி உள்ளார். கலை, இலக்கியம், நாடகம், கல்வி, சமூக செயற்பாடுகள் என சிவஜோதி பதித்த தடங்கள் குறிப்பிடத்தக்கன. இத்தடங்களைப் பதிப்பதற்கு சாதி, மத, இன எல்லைகள் எதுவும் தடையாக இருக்கவில்லை. இந்த எல்லைகளைத் தாண்டி மக்களின் வாழ்க்கைப் பயணம் முழுவதும் சிவஜோதி பயணித்தது குறிப்பிடத்தக்கது.