28

28

இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய ஜெனீவாவில் செயலகம் !

இலங்கையில் எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக மனித உரிமை பேரவை ஜெனீவாவில் செயலகமொன்றை ஏற்படுத்தவுள்ளது.
மனித உரிமை பேரவையின் செயலாளர் Goro Onojima உறுப்புநாடுகளிற்கு வழங்கியுள்ள சுற்றுநிரூபத்தில் 13 உறுப்பினர்களை கொண்ட செயலகம் குறித்தும் அதற்கு வருடாந்தம் அமெரிக்க டொலர் தேவைப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த செயலகம் விசாரணையாளர்கள் சட்டத்தரணிகளை கொண்டிருக்கும்.
உருவாக்கப்படவுள்ள இந்த செயலகம் உலகளாவிய நியாயாதிக்கத்தை பயன்படுத்தும் நாடுகள் பயன்படுத்துவதற்கான ஆதாரங்களை சேகரிக்கும்.
இதன்; காரணமாக இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட படைத்தரப்பினர் வெளிநாடுகளில் கைதுசெய்யப்படலாம் வெளிநாட்டு நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம்.
இலங்கையின் யுத்தத்துடன் தொடர்புபட்ட அரசியல் தலைவர்களும் வெளிநாடுகளில் கைதுசெய்யப்படலாம்.

இந்தியாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 60,000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று – 300 பேர் வரை பலி !

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வரும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் நேற்று கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 300-ஐ தாண்டியது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62,714 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 312 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 1,19,71,624 ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 1,61,552 ஆகவும் உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 24-ந்திகதி நிலவரப்படி ஒரு நாள் பலி எண்ணிக்கை 300 என்ற அளவில் இருந்தது. அதன்பிறகு உயிரிழப்புகள் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இந்தஆண்டில் முதல் முறையாக நேற்று பலி எண்ணிக்கை 300-ஐ தாண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று அதிகபட்சமாக மராட்டியத்தில் 166 பேரும், பஞ்சாபில் 45 பேரும் இறந்துள்ளனர். இதுவரை மராட்டியத்தில் 54,073, கேரளாவில் 4,567, கர்நாடகாவில் 12,492, ஆந்திராவில் 7,203, தமிழ்நாட்டில் 12,659, டெல்லியில் 10,997, உத்தரபிரதேசத்தில் 8,783, மேற்கு வங்கத்தில் 10,322, சத்தீஸ்கரில் 4,061, குஜராத்தில் 4,484, பஞ்சாபில் 6,621 பேர் அடங்குவர். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது.

நாட்டில் உள்ள 15 மாநிலங்களில் நேற்று தினசரி பாதிப்பு ஜனவரியில் இருந்து இதுவரை இல்லாத அளவில் நேற்று அதிகமாக ஏற்பட்டுள்ளது. நேற்றைய மொத்த பாதிப்பில் மராட்டியம், கர்நாடகா, தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் மட்டும் சுமார் 80 சதவீதம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் மராட்டியத்தில் மட்டும் 35,726 பேர் அடங்குவர். கேரளாவில் 2,055, கர்நாடகாவில் 2,886, தமிழ்நாட்டில் 2,089, டெல்லியில் 1,558, உத்தரபிரதேசத்தில் 1,102, சத்தீஸ்கரில் 3,162, குஜராத்தில் 2,276, மத்தியபிரதேசத்தில் 2,142, அரியானாவில் 1,383, பஞ்சாபில் 2,805 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்த பாதிப்பில் மராட்டியத்தில் 25,73,461, கேரளாவில் 11,15,777, கர்நாடகாவில் 9,83,930, ஆந்திராவில் 8,97,810, தமிழ்நாட்டில் 8,77,279, டெல்லியில் 6,55,834, உத்தரபிரதேசத்தில் 6,12,403, மேற்குவங்கத்தில் 5,83,839 பேர் அடங்குவர்.
எஞ்சிய மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்களில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.

நோய் பாதிப்பில் இருந்து நேற்று 28,739 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,13,23,762 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 4,86,310 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மராட்டியத்தில் மட்டும் 3,04,809 பேர் அடங்குவர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று வெளியிட்ட அறிக்கையின் படி, நாடு முழுவதும் இதுவரை 24.09 கோடியாக உயர்ந்துள்ளது.

இதில் நேற்று மட்டும் 11,81,289 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கை என்பது உண்மையில் நாணயம்மிக்க தனித்துவமான நாடு.” – கருணா

“யுத்தம் முடிவுற்ற தருவாயில் இருந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தொடர்பான விடயங்களை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனைச் சிறந்த முறையில் கையாண்டார்.” என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன்  தெரிவித்தார்.

செங்கலடியில் இன்று (28.03.2021) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது  மேலும் தெரிவித்த அவர்,

“யுத்தம் முடிவுற்ற தருவாயில் இருந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தொடர்பான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தக் காலத்தில்கூட பாரிய நெருக்கடிகள் தரப்பட்டன. ஆனால், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனைச் சிறந்த முறையில் கையாண்டார்.

ஆனால், தற்போதைய சூழலில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்தப் பிரச்சினை இரண்டு தரப்பும் இருந்து பேசித் தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சினை. ஏனெனில் இலங்கை என்பது உண்மையில் நாணயம்மிக்க தனித்துவமான நாடு. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாகவும் இருக்கின்றது.

அந்த வகையிலே இந்தத் தீர்மானம் நிறைவேற்றத்தினூடான சில தகவல்களை அரசாங்கத்திற்கு அவர்கள் தந்திருக்கின்றார்கள்.

இது சம்பந்தமாக நாட்டின் ஜனாதிபதி கோட்டாபாய சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றார். குறைந்தது ஆறு மாதத்திற்குள் நிறைவேற்றும்படி இந்தத் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

எனவே ஜனாதிபதி சிறந்த முறையில் இந்த மாற்றங்களை உருவாக்கி மீண்டும் இந்த ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை சிறந்த முறையில் பேணுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள் என்று நான் நினைக்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

“தென்னிலங்கையில் பௌத்த விகாரைகளுக்குள் இந்துக்கோயில்கள் உள்ளன. தொல்பொருள் அகழ்வுகள் நாட்டின் நன்மைக்கே” – பேராசிரியர் அநுர மனதுங்க

தொல்பொருள் இடங்களைக் கண்டறிந்து அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதில் தெற்கினைப் போன்றே வடக்கு, கிழக்கினையும் அணுகுவதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க தெரிவித்தார்.

அத்தோடு, தென்னிலங்கையில் பௌத்த விகாரைகளுக்குள் இந்துக்கோயில்கள் உள்ளன என்றும் குறிப்பிட்ட இனத்தினையோ மதத்தினையோ இலக்கு வைத்து தொல்பொருள் அகழ்வுகளை முன்னெடுக்கவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க,

இந்த நாட்டின் வரலாற்றுத் தொன்மம் வாய்ந்த பகுதிகளை அடையாளம் காணலும் முறையாக பாதுகாத்தலுமே தொல்பொருள்  திணைக்களத்தின் பிரதான பணியென்றும் குறிப்பிட்டார். அப்பகுதிகளில் இருந்து மீட்கப்படும் பொருட்களை பாதுகாத்து வரலாற்றுத் தொன்மங்களை அழிவுறாது பேணுவதே தமது கடமையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்தப் பணியையே தாம் முன்னெடுத்து வருவதாகவும் இதில் எவ்விதமான இன, மத ரீதியான பாகுபாட்டினைக் காண்பிக்கவில்லை என்றும் விளக்கமளித்தார்.

தெற்கில் எவ்வாறு புராதனப் பகுதிகளைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோமோ? அதேபோன்றுதான் வடக்கிலும் கிழக்கிலும்  நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கில் காணப்பட்ட அசாதாரண நிலைமைகளால் அங்குள்ள தொல்பொருள் பகுதிகள் பாதுகாக்கப்பட்டிருக்கவில்லை என்றும் தற்போது அதற்காக விசேட நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் தொல்பொருள்  திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும் கோயில்களில் தொல்பொருட்களை அடையாளப்படுத்துவதற்கான முயற்சிகள் ஒரு மதத்தினை இலக்குவைத்த நடவடிக்கை அல்ல எனத் தெரிவித்த பணிப்பாளர், தென்னிலங்கையில் பௌத்த விகாரைகளுக்குள் இந்துக்கோயில்கள் உள்ளன என குறிப்பிட்டார்.

எனவே தொல்பொருளியல் செயற்பாடு தொடர்பாக தவறான புரிதலை வடக்கு கிழக்கு சமூகத்தினர் விடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்

“இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கும் என நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை” – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே

“இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கும் என நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை” என குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே தான் சொன்னது தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா எங்களிற்கு ஆதரவளிக்கும் நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை நான் சொன்னது தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது நான் இந்திய பிரதமரின் வார்த்தைகளையே எதிரொலித்தேன் அவர் இந்தியா இலங்கைக்கு எந்த அநீதியும் இழைக்காது என குறிப்பிட்டிருந்தார்.  நான் அந்த வார்த்தைகளையே பயன்படுத்தினேன் என வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் சிங்கள மொழிபெயர்ப்பின்போது ஒரு பத்திரிகையாளர் நான் இந்தியா ஆதரவளிக்கும் என தெரிவித்ததாக கருதிவிட்டார் அது இலங்கையில் தலைப்புச்செய்தியாக மாறிவிட்டது இந்திய ஊடகங்களும் அதனை செய்தியாக்கின எனவும் அவர் தெரிவித்துள்ளார்

“பெண் ஊழியர்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால், அவர்களுக்கு மூன்று நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை கொடுக்க முடிவு” – உலகின் முதல் நாடாக நியூசிலாந்து பெருமை !

ஆண்களுக்கு இணையாக பெண்களும் அரசு அலுவலங்களில் வேலை செய்து வருகிறார்கள். திருமணம் ஆன பெண்கள் குழந்தை பெறுவதற்கான சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. உலகில் ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் இது நடைமுறையில் இருந்து வருகிறது.

பெண்கள் குழந்தைகளை பெறுவதைத் தவிர மற்றும் சில விஷயங்களிலும் வேலைக்கு வரும்போது கஷ்டப்படும் நிலை உள்ளது. கருவுற்ற சில வாரங்களில் துரதிஷ்டவசமாக கருச்சிதைவு ஏற்பட்டால், அது பெண்களுக்கு உடலளவிலும், மனதளவிலும் மிகப்பெரிய வேதனையைக் கொடுக்கும். இந்த வேதனையுடன் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும். அல்லது விடுமுறை எடுக்க வேண்டும். இதனால் கூடுதல் வேதனையுடன் மன அழுத்தமும் ஏற்படும்.

இதை கருத்தில் கொண்டு நியூசிலாந்து அரசு ஒரு வேளை பெண் ஊழியர்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால், அவர்களுக்கு மூன்று நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை கொடுக்க முடிவு செய்தது. இதுகுறித்த மசோதா கடந்த புதன்கிழமை அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்பட அனைவரும் இதற்கு ஆதரவு தெரிவிக்க ஒருமனதாக சட்டம் நிறைவேறியது.

இதனைத் தொடர்ந்து நியூசிலாந்தில் கருச்சிதைவு ஏற்பட்டால், பெண்கள் மூன்று நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்பது நடைமுறைக்கு வருகிறது.

இச்சட்டத்தை இயற்றி, செயல்முறைக்கு கொண்டு வரும் முதல் நாடு நியூசிலாந்தாகிறது. இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்த தொழிலாளர் எம்.பி. ஜின்னி ஆண்டர்சன், ‘‘நாம் உலகில்  முதலாவது நபராக இருக்கும்போது, கடைசி நபராக இருக்கமாட்டோம் என்பதை என்னால் உறுதியாக நம்ப முடியும். நம்நாட்டை பார்த்து மற்ற நாடுகளும் அதன் வேதனையை அறிந்து சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அங்கீகரிக்கும் சட்டத்தை தொடங்குவார்கள்’’ என்றார்.

“அடுத்த 100 ஆண்டுகளுக்கு விண்கல் மோதல் ஏதுமின்றி பூமி பாதுகாப்பாக இருக்கும்.” – நாசா

அடுத்த 100 ஆண்டுகளுக்கு விண்கல் மோதல் ஏதுமின்றி பூமி பாதுகாப்பாக இருக்கும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக Apophis எனும் விண்கல் பூமியை அடுத்த 100 ஆண்டுகளுக்கு தாக்காது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு இந்த விண்கல் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

Apophis எனும் விண்கல் பூமிக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியது என நாசா விஞ்ஞானிகள் கருதியிருந்தனர்.

2029 மற்றும் 2036 ஆம் ஆண்டுகளில் இரண்டு விண்கற்கள் பூமியைத் தாக்கக்கூடும் எனவும் விஞ்ஞானிகளால் கணிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவை தடம் மாறிச் சென்றதால், அவற்றினால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என நாசா விஞ்ஞானிகள் கூறியிருந்தனர்.

எனினும், Apophis எனும் விண்கல் 2068 ஆம் ஆண்டிற்குள் பூமியை நோக்கி நெருங்கி வரும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 340 மீட்டர் விட்டம் கொண்ட Apophis எனும் விண்கல்லின் திசை மாறும் நிலையிலுள்ளதால், அடுத்து வரும் 100 ஆண்டுகளுக்கு பூமிக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் போலி நடுநிலைமையை வகித்ததன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்கு தாம் தயார் இல்லை என்பதை இந்தியா எடுத்துக்காட்டியுள்ளது !

“ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் போலி நடுநிலைமையை வகித்ததன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்கு தாம் தயார் இல்லை என்பதை இந்தியா எடுத்துக்காட்டியுள்ளது” என  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கவனயீர்ப்பு போராட்டம், இன்று 1500 ஆவது நாளை எட்டியுள்ளதையடுத்து முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணியின் போது அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இன்று நாம் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளோம். எங்கள் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்பு தொடர் போராட்டம் 1500 வது நாளை எட்டியது. தமிழர்கள் விரும்பும் தீர்வுகள் இல்லாவிட்டால், நம்முடைய மற்றும் பிற தமிழர்களின் போராட்டங்கள் தொடரும். ஒரு புதிய தலைமுறையினரும் தங்கள் போராட்டத்தைத் தொடங்குவதற்கான நல்ல வாய்ப்பு உள்ளது. அவர்களின் போராட்ட வடிவம் நாம் கற்பனை செய்ய முடியாத ஒரு நவீனமானதாக இருக்கலாம்.

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளைக் கண்டுபிடிக்க இப் போராட்டத்தின் முதல் நாள் முதல் அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் அழைத்தோம். தமிழர்களைக் கொல்வது, நமது பொருளாதாரத்தை அழிப்பது, சிங்கள இராணுவத்தால் தமிழ் பெண்களின் பாதிப்பு, நமது நிலத்தை கையகப்படுத்த புத்த மதகுருவின் ஆக்கிரமிப்பு, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் மட்டுமே தடுக்க முடியும்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் வலுவான நேட்டோ வைக் கொண்டுள்ளன. அவை உலகில் பல சிக்கல்களைத் தீர்த்தன. இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால் யு.என்.எச்.ஆர்.சி அமர்வில் அவர்களின் போலி நடுநிலைமை தமிழர்களுக்கு உதவ இந்தியா தயாராக இல்லை என்பதைக் காட்டுகிறது. இந்தியா ஸ்ரீலங்காவுடன் நட்பாக இருக்க விரும்புகிறது. அதாவது அவர்கள் தமிழர்களை ஆதரிக்கவில்லை என்பதாகும்.

7கோடி தமிழர்களைக் கொண்ட நாடு. தமிழர்களுக்கு உதவ இந்தியாவை அழைப்பது எங்கள் கடமை. 13 ஆவது திருத்தம் 5 வீத பிரச்சினையை மட்டும் தீர்க்க முடியும். ஆனால் 13 வது திருத்தம் தமிழர்களை சிங்களவர்களால் மேலும் பாதிக்கச் செய்யும்.

எங்களைப் பொறுத்தவரை, இரண்டு மொழிகள் இருக்கும்போது, சமஷ்டி ஒரு நிரந்திர தீர்வாக இருக்க முடியாது. தமிழ் இனப்படுகொலையைத் தவிர்க்க, சமஷ்டிக்கு அப்பாற்பட்ட ஒரு தீர்வு நமக்குத் தேவை. இது கனேடிய மாதிரியான பாதுகாக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான தமிழ் தாயகம் மாதிரியாக இருக்கலாம்.

யு.என்.எச்.ஆர்.சி தீர்மானம் பற்றியது என்னவெனில், ஐ.நா எந்த இனப் பிரச்சினையையும் அமெரிக்க தலையீடு இல்லாமல் தீர்க்கும் வரலாறு இல்லை. எனவே எங்களுக்கு உதவுமாறு அமெரிக்காவை அழைக்கிறோம். பல தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் சிந்தனையாளர்கள் அமெரிக்காவை அழைக்கும் எங்கள் கருத்தை எப்போதும் நிராகரித்தனர். பெரும்பாலான அரசியல்வாதிகள் எங்கள் பந்தலுக்கு வர விரும்பவில்லை. ஏனெனில் அமெரிக்கக் கொடியுடன் படம் எடுப்பது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பிடியாது என்பதால்.

இப்போது அவர்களில் பெரும்பாலானோர் நமது அரசியல் பிரச்சினையை அமெரிக்காவால் மட்டுமே தீர்க்க முடியும் என்ற உண்மையை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த உரையை விட்டுச் செல்வதற்கு முன், மாகாணத் தேர்தல்களில் வாக்குகளைப் பெற சுமந்திரனும் சாணக்கியனும் செயல்படுகிறார்கள் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். சுமந்திரன் ஐக்கியதேசியக் கட்சி உறுப்பினர் என்றும் சாணக்கியன் ஒரு முன்னாள் ராஜபக்ச கட்சி உறுப்பினர் என்றும் நாம் அனைவரும் அறிவோம். சிங்கள சூழலில் ஆடம்பர வாழ்க்கை வாழ வாழ இருவருக்கும் ஒரே குறிக்கோள் உள்ளது.

சுமந்திரன் ஆட்சி மாற்றத்தைப் பெற முயற்சிக்கிறார். தமிழர்கள் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும். ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு பேரழிவு தரும். 1000 விகாரைகள், நெடுங்கேணியில் 4000 சிங்கள குடியேற்றங்கள் மற்றும் புத்த மதத்திற்கு முதன்மையான இடம், வட கிழக்கு பிரிவினை, ஏக்கியா ராஜ்ஜிய இவை யாவும் முன்னைய ஆட்சி மாற்றத்தின் விளைவு. இதை தான் ரணில்
புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படவில்லை என்றாலும், பௌத்த நாடு என்பதை கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டது பெரு வெற்றி என்றார்.

“இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக ராஜபக்ஷ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளது”  – எம்.ஏ.சுமந்திரன்

“இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக ராஜபக்ஷ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளது”  என அக்கட்சியின்  ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பிரபல பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள் தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் இறங்கி வருமாறு என்று வினவினயபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதற்கு அவர் அளித்துள்ள பதிலில் மேலும் தெரிவித்த விடயங்களும் 13ஆவதுதிருத்தச்சட்டம் சம்பந்தமாக எழுப்பிய வினாக்களுக்கு அளித்த பதில்களும் வருமாறு,

தற்போதைய சூழலில் ஆயுத பலம் இல்லை. ஆகவே பேச்சுவார்த்தைகள் ஊடாகவே அனைத்து விடயங்களையும் கையாள வேண்டியுள்ளது. அந்த அடிப்படையில் இனப்பிரச்சினை தொடர்பாக நாம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தயாரகவே உள்ளோம். பேச்சுவார்த்தைகளின் ஊடாகவே அடுத்தகட்ட நகர்வுகளைச் செய்யமுடியும்.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு ஜெனிவா தீர்மானம் ஒரு தடையாக அமையாது. தற்போதைய நிலையில் புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை ஆட்சியாளர்கள் முன்னெடுத்துள்ளார்கள். அதற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவிடத்தில் நாம் எமது முன்மொழிவுகளைச் செய்துள்ளோம்.

மேலதிக விடயங்கள் தேவைப்பட்டால் அவர்களுடன் தொடர்ந்தும் பேசுவதற்கு தயாராகவே உள்ளோம். ஆகவே அரசாங்கம் அனைத்து மக்களுக்குமான புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதாக இருந்தால் எம்முடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதை தவிர்ந்து செல்ல முடியாது. மேலும் அரசாங்கம் எம்முடன் பேச்சுவார்த்தைகளைச் செய்வதற்காக இறங்கி வருகின்றது என்றெல்லாம் கருத வேண்டியதில்லை என்றார்.

கேள்வி:- தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக 13ஆவது திருத்தசட்டத்தினையும் மாகாண சபை அலகுமுறைமையையும் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கான சமிக்ஞையையே ஐ.நா.தீர்மானம்ரூபவ் மற்றும் பேரவையில் இந்தியா வெளிப்படுத்தியுள்ளது என்று கருதலாமா?

பதில்: தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை முழுமையாக பூர்த்திசெய்யவில்லை என்பதனால் நாம் 13ஆவது திருத்தச்சட்டத்தினை நாம் தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அதிகாரப்பகிர்வுக்கான அடிப்படையாக 13ஆவது திருத்தச்சட்டமே காணப்படுகின்றது.

அதன்பிரகாரமே மாகாண சபை முறைமை தோற்றம்பெற்றதேடு காணி, காவற்துறை அதிகரங்கள்,  வடக்கு, கிழக்கு இணைவதற்கான நிலைமைகள் என்பன ஏற்படுத்தப்பட்டன. ஆகவே 13ஆவது திருத்தம் முழுமையானதாக இல்லை என்பதற்காக அதிலுள்ள அடிப்படைகளை மறந்து முழுமையாக தூக்கி எறிவது முட்டாள்தனமான விடயமாகும்.

13ஆவது திருத்தச்சட்டத்தினையே முழுமையாக அகற்றுவதற்குரிய நகர்வுகள் உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் சூழலில் தான் அதனை முழுமையாக அமுலாக்குவதற்கான அழுத்தத்தினை இந்தியா வெளிப்படையாக வழங்குகின்றது. அதனடிப்படையில் 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுலாக்கப்பட்டு அதற்கு அப்பால் சென்று அதிகாரங்கள் அர்த்தமுள்ளதாக பகிரப்பட வேண்டும்.

கேள்வி: ஒற்றையாட்சிக்குள் 13 ஐ முழுமையாக அமுலாக்கப்படுவதால் பயனில்லை என்ற நிலைப்பாடும் தமிழ் அரசியல் கட்சிகளிடத்தில் உள்ளதே?

பதில்:- சரி, அவர்களின் கூற்றுப்படி 13 தேவையில்லை என்றால் அது தற்போதைய நிலைமையில் முழுமையாக அகற்றப்படும். அவ்வாறு அகற்றப்பட்டால் அடுத்த தெரிவு என்ன?

ஆயுதரீதியான பலம் இல்லாதநிலையில் பேச்சுவார்த்தைகள் மூலமாக அரசியல் தீர்வை நோக்கி பயணிக்க வேண்டிய நிலையில் இருப்பதை கைவிட்டு புதிய கட்டமைப்பை உருவாக்குவது எந்தவகையில் சாத்தியமாகும். இவ்வாறு பிற்போக்குத்தனமாக சிந்திப்பதே அடைந்துள்ள இலக்குகளை இழக்கச் செய்யும் முட்டாள்த்தனமாகும்” என்றும் கூறினார்

“சிலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவில்லாமல் முதலமைச்சராக வந்திருக்க முடியாது.” – ரவூப் ஹக்கீம்

“சிலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவில்லாமல் முதலமைச்சராக வந்திருக்க முடியாது.” என  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை (27) காலை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் நடைபெற்ற சம்மாந்துறை பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் குழுமத்தின் நான்காவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு உரையாற்றிய அவர்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியாளர்களுடன் வாய்திறப்பதில்லை, யாரையும் தேவையில்லாமல் மலினப்படுத்தவும் இல்லை. பலருக்கும் பல பிரச்சினைகள் இருக்கிறது. பிராந்திய ரீதியான பிரச்சினை, அவர்களுடைய அரசியல் தொடர்பிலான பல சிக்கல்கள் இருக்கலாம். அதைப்பற்றி தாராளமாக தெரிந்தவன், புரிந்து கொண்டவன் என்ற அடிப்படையில் விட்டுக்கொடுப்புக்களை செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

நான் யாரையும் அவசரப்பட்டு கட்சியை விட்டு விரட்ட விரும்புவதில்லை. அவர்களாகவே அவர்களை விரட்டக்கூடிய நிலைமையை உருவாக்காமல் இருப்பது நல்லது. சிலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவில்லாமல் முதலமைச்சராக வந்திருக்க முடியாது. இப்போது புதிய எஜமானர்களை கண்டதும் அதனையெல்லாம் மறந்துவிட்டார்கள்.
நாடுமுழுவதிலும் இருந்து வரும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதில் போட்டிபோட்டுக்கொண்டு சிலர் ஜனாஸா அடக்கம் செய்யும் இடத்திற்கு சென்று படம் காட்டுகின்றனர். தேவை இல்லாமல் வாய் உழறி பிரச்சினைக்குள் மாட்டிக்கொள்கின்றனர். அங்கும் இங்குமாக இப்போது தலைவரையும் வம்புக்கு இழுக்கின்றனர்.

இதன் பின்னணி என்ன என்பதை நான் நன்றாக அறிந்துள்ளேன். இந்த நாட்டின் ஆட்சியாளர்களின் போக்கை அறிந்து வைத்துள்ளேன். கட்சியை பல தடவை நீதிமன்றத்தில் நிறுத்தியவர்களும் இவர்களே” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.