17

17

“தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பிரதான மக்கள் செல்வாக்குள்ள கட்சிகள், ஈழத் தமிழர்களுக்கான அடிப்படைப் பிரச்சினையை முன்வைத்துள்ளமை வரவேற்கத்தக்கது” – சி.சிறீதரன்

“தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பிரதான மக்கள் செல்வாக்குள்ள கட்சிகள், ஈழத் தமிழர்களுக்கான அடிப்படைப் பிரச்சினையை முன்வைத்துள்ளமை வரவேற்கத்தக்கது” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (17.03.2021) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தெரிவிக்கையில்,

“தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கின்றது. உலகத்திலே வாழ்கின்ற 10 கோடி தமிழர்களில் கிட்டத்தட்ட ஏழு கோடி தமிழர்கள் எங்களுடைய தந்தையர் நாடான தமிழ் நாட்டிலே வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தலில் பல்வேறுபட்ட தேர்தல் விஞ்ஞாபனங்கள் பல பெரும்பான்மைக் கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றன.

ஏற்கனவே, அ.தி.மு.க. இலங்கை மீது பொருகாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும், இலங்கையின் குற்றங்கள் பற்றி விசாரிக்கப்பட வேண்டும், இலங்கையில் ஒரு நீதி நிலைநாட்டப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டசபையில் ஜெயலலிதா அம்மையார் இருக்கும்போது நிறைவேற்றியிருந்தார்.

இது வரலாற்றில் மிக முக்கியமாக தருணத்தில் எடுக்கப்பட்ட தீர்மானமாகவும் கருப்பொருளாகவும் உலகத்தில் உள்ள தமிழ் தலைவர்களால் பார்க்கப்பட்டது. இப்போழுது, ஜெயலலிதாவின் இழப்பிற்குப் பிற்பாடு, அங்கிருக்கின்ற பெரும்பாலாக மக்கள் செல்வாக்குள்ள கட்சிகள். ஈழத் தமிழர்களுக்கான அடிப்படைப் பிரச்சினையை முன்வைத்துள்ளார்கள்.

தமிழர்களுக்கான ஒரு சுதந்திர நாடு, அவர்களுடைய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான, அவர்களுடைய சுதந்திரத்தை அனுபவித்து வாழ்வதற்கான நிரந்தரத் தீர்வு. தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப் படுகொலை, போர்க் குற்றங்களுக்கு ஓர் சர்வதேச விசாரணை.

இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்கள மக்களோடு சேர்ந்து வாழலாமா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு ஒரு பொதுஜன வாக்கெடுப்பையும் கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் தெரிவித்திருப்பதை நாம் பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் பார்க்கக் கூடியதாக இருந்தது. அதுவொரு நல்ல விடயமாகும். இந்தியாவில் இருக்கின்ற அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க. அல்லது நாம் தமிழர் கட்சி என பல்வேறுபட்ட கட்சிகளினுடைய ஒன்றுபட்ட கோரிக்கையும் ஈழத் தமிழர்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்பதேயாகும். ஈழத் தமிழர்கள் இந்த மண்ணிலே சுதந்திரமாக வாழவேண்டும் என்ற கோரிக்கையை அடிப்படையாக வைத்திருக்கிறார்கள்.

ஆகவே, இது மிக முக்கியமாக காலகட்டத்தினுடைய கோரிக்கையாகும். அவர்கள் முன்வைத்திருக்கின்ற பூரணமான கோரிக்கையை வரவேற்கிறோம். அதை அடித்தளமாக தமிழ்நாட்டில் இருக்கின்ற மூலை முடுக்கிலே வாழ்கின்ற அனைத்து தமிழ் மக்களிடமும் இது கொண்டுசெல்லப்பட வேண்டும். தமிழ்நாட்டிலே வாழ்கின்ற தமிழர்கள் அதைப் புரிந்துகொள்வதற்கான ஒரு காலகட்டமாக இருக்கும்.

ஆகவே, எங்களுக்குமான, எங்களுடைய பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு காலச்சூழலாக நாம் இதனைப் பார்க்கிறோம்.

எனவே, இந்தக் கட்சிகளுடைய காலமாற்ற விஞ்ஞாபனத்தை வரவேற்கிறோம். இந்தக் காலமாற்ற விஞ்ஞாபனம் எங்களுடைய மண்ணிலும் ஒரு மாற்றத்தைத் தரக்கூடியதாக தேர்தல் மாற்றங்கள் அமையவேண்டும் என நாம் அன்போடும் வாஞ்சையோடும் வரவேற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வெகு விரைவில் சந்திக்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வெகு விரைவில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவறு கூறினார்.

உறவுகளை சந்தித்து அவர்களுடைய தேவைப்பாடுகள் மற்றும் அவர்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து தனக்கு தெரியப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தன்னை கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

அதற்கமைய வடக்கு மாகாணத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை எதிர்வரும் சனிக்கிழமை மாவட்ட செயலகத்தில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.

“அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு சாதகமாக முடிவுகளை கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி புடின் முயற்சி” – அமெரிக்க உளவுத்துறை பரபரப்பு குற்றச்சாட்டு !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோபைடன் வெற்றி பெற்றார்.

அப்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் (குடியரசு கட்சி) தோல்வி அடைந்தார்.. ஆனால் தனது தோல்வியை ஏற்க மறுத்து தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அது எதுவும் நிறைவேறவில்லை. இதையடுத்து கடந்த ஜனவரி 20-ந் தேதி அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோபைடன் பதவி ஏற்றார்.

இந்தநிலையில் 2020-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு சாதகமாக முடிவுகளை கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி புடின் முயற்சிகள் மேற்கொண்டார் என்று அமெரிக்க உளவுத்துறை பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.

தேசிய புலனாய்வு இயக்குனர் அலுவலகம் வெளியிட்ட 15 பக்க அறிக்கையில் அதிபர் தேர்தலில் டிரம்புக்கு பயன் அளிப்பதற்காக ரஷிய ஜனாதிபதி புடின் தேர்தலில் தலையீட்டை மேற்பார்வையிட்டார் அல்லது குறைந்த பட்சம் ஒப்புதல் அளித்தார் என்று தெரிவித்துள்ளது.

மேலும் ரஷிய ஆதரவுடைய உக்ரைன் பாராளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரிடெர்காக் போன்ற நபர்கள், ஜோ பைடன் மற்றும் அவரது மகன் ஹண்டர் ஆகியோருக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடும் அமெரிக்க அரசியல் பிரமுகர்கள் பட்டியலிட்டுள்ளனர். 2019-ம் ஆண்டு டிரம்பின் வக்கீல் ரூடி கியுலியானியை ஆண்ட்ரி டெக்காக் சந்தித்தார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை காரணமாக ரஷியா மீது அமெரிக்கா அடுத்த வாரம் பொருளாதார தடைகள் விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோபைடன் தனது பிரசாரத்தின் போது ஜனாதிபதி தேர்தலில் ரஷிய தலையீடு உள்ளது என்று குற்றம்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தனி ஈழம் தொடர்பாக தென்னிந்திய அரசியல் கட்சிகள் குறிப்பிடும் கருத்துக்கள் தேர்தலின் பின் மறக்கப்பட்டு விடும்” – அச்சம் தேவையில்லை என்கிறார் சுசில் பிரேமஜயந்த !

தமிழகத்தின் சட்ட மன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில் அங்குள்ள முன்னணி கட்சிகள் பலவும் ஈழத்தமிழர் தொடர்பாகவும் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டு வருகின்றன.

இந்நிலையிலேயே “தனி ஈழம் தொடர்பாக தென்னிந்திய அரசியல் கட்சிகள் குறிப்பிடும் கருத்திற்கு அதிகளவு கவனம் செலுத்த வேண்டிய தேவை இலங்கை  அரசாங்கத்துக்கு கிடையாது என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

தமிழக தேர்தல் பிரசார மேடைகளில் பேசப்படும் விடயங்கள் அனைத்தும் தேர்தலின் பின்னர் மறக்கப்பட்டுவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

பாரிய போராட்டத்திற்கு பின்னர் 30 வருட கால சிவில் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பிரிவினைவாத செயற்பாடுகள் தோற்றம் பெறாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“தோட்டத் தொழிலாளர்களை ‘டம்மி’ மலையகத் தலைவர்களை வைத்து ராஜபக்ச அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது” – அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் காட்டம் !

“தோட்டத் தொழிலாளர்களை ‘டம்மி’ மலையகத் தலைவர்களை வைத்து ராஜபக்ச அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது” என அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

“தமக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் என 2015 ஆம் ஆண்டிலிருந்து தோட்டத் தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும், இதற்கு தோட்டக் கம்பனிகள் இணக்கம் தெரிவிக்கவில்லை. இறுதியில் சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பளத்தை நிர்ணயிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கும் கம்பனிகள் எதிர்ப்பை வெளியிட்டன. ஆனாலும் ஆயிரம் ரூபா தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைக்கு வருவதற்கு தடைவிதிக்குமாறு கோரி கம்பனிகள் நீதிமன்றம் சென்றுள்ளன. சர்வ அதிகாரங்களும் கொண்ட பலம்பொருந்திய அரசால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை கம்பனிகள் சவாலுக்குட்படுத்தியுள்ளன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்பது அரசின் உறுதிமொழி. அது எப்படியாவது நிறைவேற்றப்படவேண்டும். எனவே, நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தால் தனது நிலைப்பாடு என்னவென்பதனை அரசாங்கம் அறிவிக்க வேண்டும். அதேபோல் ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களை ‘டம்மி’ மலையகத் தலைவர்களை வைத்து ராஜபக்ச அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது. வடிவேல் சுரேசும் கூட ஏமாற்றுகின்றார். ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டம் கூட நாடகம் என்பது எமக்கு தெரியும். இருந்தாலும் தொழிலாளர்களின் நலன் கருதி அமைதி காத்தோம்” என தெரிவித்துள்ளார்

“பெண்களுடைய பிரதிநிதித்துவம் அரசியலில் குறைவாகவுள்ளமையாலே அரசியல் கொள்கைகளிலும், சட்டவாக்கங்களிலும் பெண்களது உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றது“ – பி.எஸ்.எம்.சாள்ஸ்

“பெண்களுடைய பிரதிநிதித்துவம் அரசியலில் குறைவாகவுள்ளமையாலே அரசியல் கொள்கைகளிலும், சட்டவாக்கங்களிலும் பெண்களது உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றது“ என வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (16.03.2021) மாலை இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நான் பல அரசாங்க அதிபர்களின் கீழ் பணியாற்றியுள்ளேன். ஒரு பெண் அரச நிர்வாக அதிகாரியாக கடமையாற்றிய போது பெண்களினுடைய உரிமைகள் மறுக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் காணப்பட்டன. அவற்றுக்காக நான் குரல் எழுப்பி பழிவாங்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. நான் அரசாங்க அதிபராக இருந்த போது அந்த விடயங்கள் இடம்பெறக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். நிர்வாக சேவைக்கு சேர்த்துக் கொள்ளப்படும் அனைத்து அதிகாரிகளும் எந்த இடத்திலும், எந்தப் பகுதியிலும் கடமையாற்ற வேண்டும்.
ஆனாலும் சில அரசாங்க அதிபர்கள் இந்த பதவி பெண்ணால் வகிக்க முடியுமா என்று கேட்ட சந்தர்ப்பங்களை நான் இன்னும் மறக்கவில்லை. அவை தான் எனக்கு சவால்களாக மாறி சாதனைகளாக மாறியது என்பது தான் உண்மை.

அந்த அரசாங்க அதிபர்களும், நானும் ஒரே மாநாட்டில் கலந்து கொண்ட போது நான் பேசியதைப் பார்த்து திகைத்து போய் நின்ற சம்பவங்களும் உண்டு. எங்கு அடக்கப்படுகின்றீர்களோ, எங்கு உங்களது உரிமைகள் மறுக்கப்படுகின்றதோ, எங்கு நீங்கள் தடுக்கப்படுகின்றீர்களோ அங்கு தான் நீங்கள் கிளர்ந்து எழ வேண்டும். அங்கு தான் உங்களுக்கு சாதனைகள் இருக்கும். கடமைகளை சரியாக செய்கின்ற போது பதவிகள் தானாகவே தேடி வரும்.

பெண்களுடைய பிரதிநிதித்துவம் அரசியலில் மிகக்குறைவாக காணப்படுகின்றது. இதனால் அரசியல் ரீதியாக சில கொள்கைகளிலும், சட்டவாக்கங்களிலும் பெண்களது உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றது. காணி உரிமைச் சட்டத்தில் மூன்றாட் அட்டவணையில் பெண்களுக்கு காணி உரிமை மாற்றுவது மறுக்கப்பட்டிருக்கின்றது. அதாவது குடும்பத்தில் மூத்த ஆண் மகனுக்கு தான் காணி உரிமை மாற்றப்படுகின்றது. இந்த சட்டம் திருத்தப்பட வேண்டியதாக இருக்கின்றது.

திருமண அத்தாட்சிப் பத்திரமான பதிவுத் பத்திரத்தில் பெண்களின் உடைய தொழிலை பதிவதற்கான இடம் வழங்கப்படவில்லை. காலனித்துவ ஆட்சியில் பெண்கள் உத்தியோகம் பார்க்கவில்லை. அதனால் அன்று வடிவமைக்கப்பட்ட படிவங்களில் அவை காணப்படவில்லை. அப்படிவங்களே சுமார் 70 வருடங்களாக நாம் பின்பற்றி வருகின்ற நிலமை காணப்படுகின்றது.

குடும்ப வன்முறை சம்மந்தமான சட்டவாக்கம் இருக்கின்ற போதிலும் பெண்கள் பொலிஸ் நிலையம், நீதிமன்றம் செல்கின்ற போது அவர்கள் கையாளப்படுகின்ற முறைகளினால் பெண்கள் நீதிமன்றங்களையும், பொலிஸ் நிலையங்களையும் தவிர்த்துக் கொள்ளும் நிலமை காணப்படுகின்றது.

பெண்கள் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ளும் போது தான் சட்டவாக்கம் ஊடாகவும், கொள்கை வகுப்பின் ஊடாகவும் பெண்களைப் பாதுகாக்கும் ஒரு நிலமை இந்த நாட்டில் ஏற்படும். வடமாகாணத்தில் மகளிர் விவகாரம் என்பது எமது மாகாண அதிகார பரம்பலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.

பெண்களின் வாழ்வாதாரம், அவர்களது பிரச்சனைகள் தொடர்பில் நாங்கள் கொள்கை வகுப்பில் ஈடுபட்டுள்ளோம். அந்த கொள்கை வகுப்பின் மூலம் வடமாகாணத்தில் இருக்கும் பெண்களின் பிரச்சனைகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் நாங்கள் விரைவிலே இனங்கண்டு அதற்கான திட்டங்களை வகுத்து அவர்களுக்கு உதவி செய்வோம்.

வடமாகாணம் தொடர்பில் ஜனாதிபதியுடனும் நாம் பேசியுள்ளோம். பல விடயங்களை செய்து தருவதாக வாக்குறுதியளித்துள்ளார். எங்களுக்கு கிடைத்த நிதி ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக நிதி ஒதுக்கி தந்து சில விசேட வேலைத்திட்டங்களை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்” என்றார்.

“பாடசாலை பாடத்திட்டத்தில் ‘சட்டத்தை’ ஒரு பாடமாக்க நடவடிக்கை ” – நீதி அமைச்சர் அலி சப்ரி

பாடசாலை பாடத்திட்டத்தில் ‘சட்டத்தை’ ஒரு பாடமாக உள்ளடக்குவதற்கு
பொருத்தமான பொறிமுறையொன்றைத் தயாரிக்க பாராளுமன்ற உப குழு
வொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி
ஆகியோரின் தலைமையில் அண்மையில் கூடிய இரு அமைச்சுகளும் இணைந்த
ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்த உப குழு நியமிக்கப்பட்டது.

கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்
கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த மற்றும் பாராளு
மன்ற உறுப்பினர் களான ரவூப் ஹக்கீம், சிவஞானம் சிறிதரன், வீரசுமண வீர
சிங்ஹ, சாகரகாரியவசம், அமரகீரித்தி அத்துக்கோரல, டயனா கமகே, (மேஜர்)
சுதர்ஷன தெனிப்பிட்டிய உள்ளிட்ட எட்டுப்பேரைக் கொண்ட குழுவே
இவ்வாறு நியமிக்கப்பட்டுள் ளது. இதன் செயலாளராக பாராளுமன் றத்தின்
உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே.ஜயதிலக செயற்படுவார்.

இங்கு கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிடுகையில்,

சட்டம் தொடர்பில் பொதுமக்களின் அறிவு மிகவும் குறைவான மட்டத்தி
லேயே காணப்படுவதாகவும், சட்டம் தொடர்பான அடிப்படைப் புரிதலை
நாட்டிலுள்ள மாணவர்களுக்கு வழங்குவது மிகவும் முக்கியமானதாகும் என்
றார்.

முன்னேற்றமடைந்த நாடுகளில் அடிப்படைச் சட்டம் தொடர்பில் குடியியல்
கல்வி வழங்கப்படுவதாகவும், பாடசாலை பாடத்திட்டத்தில் சட்ட அறிவை
இணைப்பது அவசரத் தேவை என்றும் நீதி அமைச்சர் வலியுறுத்தினார்.

பாடசாலைப் பாடத்திட்டத்தில் சட்டத்தை ஒரு பாடமாகக் கொண்டுவருவது
தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட இந்தக் குழு தனது யோசனைகள்
அடங்கிய அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கல்வி
அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இதன் பின்னர் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய சட்டத்தை
பாடத்திட்டத்தில் விரைவில் உள்ளடக்குவதற்கு நட வடிக்கை எடுக்கப்படும்
என்றார்.

“எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் தேவையேற்பட்டால் பயணக்கட்டுப்பாடு விதிதக்கப்படும்” –

எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் தேவையேற்பட்டால் பயணக்கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

கடந்த நத்தார் பண்டிகையின் பின்னர் இந்நாட்டு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்ததன் ஊடாக அவ்வாறான காலப்பகுதியில் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பதில்லை என உறுதியாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.

டிசம்பர் நத்தார் பண்டிகை மற்றும் பின்னர் இருந்த தொடர் விடுமுறைக்கு பின்னர் அதிகப்படியான கொவிட் தொற்றாளர்கள் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் பதிவாகியிருந்தமை குறிப்பிடதக்கது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி !

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

50484752 Unknown

குறித்த போராட்டத்தில், வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் , பொதுமக்கள் , சிவில் சமூகத்தினர் , காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் .  அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட அசாத்சாலியின் மோட்டார் வாகனத்தில் வெளிநாட்டு கைத்துப்பாக்கி !

அசாத் சாலி கைது செய்யப்படும் போது அவர் பயணித்த மோட்டார் வாகனத்தில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் அதற்குப் பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் குறித்த வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது இவை கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

முன்னாள் ஆளுநர் அசாத்சாலி நேற்றைய தினம் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.