29

29

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வலது கையில் அறுவை சிகிச்சை !

ஸ்கேன் மற்றும் ஆலோசகர் மதிப்பாய்வைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வலது கையில் அறுவை சிகிச்சை செய்துகொள்ளவுள்ளார்.

ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு சற்று முன்பு தனது வீட்டில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த ஆர்ச்சருக்கு கையில் வெட்டு ஏற்பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

குறித்த காயம் இந்தியா அணிக்கு எதிரான தொடரில் பிரகாசிக்க தடையாக இருந்த நிலையில் ஆர்ச்சர் குணமடைய இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

“யாழ்ப்பாணம் முடக்கப்படலாம்.” – ஜெனரல் சவேந்திர சில்வா

ஒரு மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் திடீரென அதிகரித்தால் அந்த மாவட்டத்தை முற்றாக முடக்குவதா ? இல்லையா ? என்பது மக்களின் நடத்தைகளில்தான் தங்கியுள்ளது . எனவே, யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் சுகாதார ஒழுங்கு விதிகளை உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டும்.என இராணுவத் தளபதியும் கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் .

யாழ்ப்பாண மாவட்டத்தின் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன . இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .

மேலும் பொதுமக்களும் முடக்கப்பட்ட பகுதிகளுக்குள் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதோடு சுகாதார வழிகாட்டல்களை ஒழுங்கான முறையில் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார் . இதேவேளை சுகாதாரப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் படைகளின் சேவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் .

“புலம்பெயர் அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை . ஏற்கனவே எதிர்பார்த்தது தான்” – எம்.ஏ.சுமந்திரன்

இலங்கை அரசால் புலம்பெயர் அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.”என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ள இலங்கை அரசு 7 புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும், 300 இற்கும் மேற்பட்ட தனி நபர்களுக்கும் தடை விதித்துள்ளது.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்குக் கருத்துக் கூறுகையில்,

இந்த விடயம் குறித்து அறிந்துள்ளோம். இது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம். இந்த அரசு ஆட்சிக்கு வந்தவுடன் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள் என்பது தெரிந்த விடயமே.

இது குறித்து விரைவில் எங்களின் நிலைப்பாட்டை அறிவிப்போம் – என்றார்.

“சிங்கராஜ வனப்பகுதியில் எந்தவிதத்திலும் காடுகள் அழிக்கப்படவில்லை” – யுனெஸ்கோவின் இலங்கை அலுவலகம்

உலக மரபுரிமையான சிங்கராஜ வனத்திற்குள் நீர்த்தேக்கங்களை நிர்மாணிப்பதற்கு பதிலாக மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ இணங்கியுள்ளதாக யுனெஸ்கோவின் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

உத்தேச நீர்த்தேக்கங்கள் காரணமாக சிங்கராஜ வனத்தின் சுமார் ஐந்து ஹெக்டேயருக்கு பாதிப்பு ஏற்படகக்கூடுமென அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை சிங்கராஜ வனப்பகுதியில் எந்தவிதத்திலும் காடுகள் அழிக்கப்படவில்லை என யுனெஸ்கோவின் இலங்கை அலுவலகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அலுவலகத்தின் செயலாளர் பேராசிரியர் புன்சிநிலமே மீகஸ்வத்தே தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை கூறியுள்ளார்.

சிங்கராஜா வனத்தை உலக மரபுரிமைப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான வாய்ப்பு இல்லை எனவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், சிங்கராஜ வனப் பகுதிக்குள் 5 ஹெக்டெயார் நிலப்பரப்பில் இரண்டு குளங்களை நிர்மாணிப்பதற்காக கோரிக்கையொன்று யுனெஸ்கோ அமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கோரிக்கைக்கு இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் சிங்கராஜா வனம் மற்றும் அதன் இயற்கைக்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் தற்போதுள்ள நிலைமைகளை கருத்திற்கொண்டு குறித்த வேலைத்திட்டத்தை கைவிடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, உலக மரபுரிமையாக அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 8 ஆயிரம் ஹெக்டயார் நிலப்பரப்பைக் கொண்ட சிங்கராஜ வனத்தின் இயற்கைக்குப் பாதிப்பினை ஏற்படுத்துகின்ற எந்தவொரு நிர்மாணப் பணிகளும் முன்னெடுக்கப்பட மாட்டாது என பேராசிரியர் புன்சிநிலமே மீகஸ்வத்தே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிங்கராஜ வனப்பகுதியில் நட்சத்திர விடுதியொன்று அமைக்கப்பட்டு வருவதாகவும், இதன்காரணமாக சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் பல்வேறு தரப்பினரும் தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

இதுதொடர்பில் ஆராயும் நோக்கில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று குறித்த பகுதிக்கு நேற்று விஜயம் செய்துள்ளது.

இதன்போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அங்கு காடழிக்கப்பட்டு ஹோட்டல் கட்டப்படுவதாக ஒருசில தரப்பினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ளனர்.

அத்துடன், எதிர்க்கட்சியினர் மக்களை ஏமாற்றும் வகையில் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இந்த நாட்டுக்கு பேரவமானம்.” – சந்திரிகா பண்டாரநாயக்க

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இந்த நாட்டுக்கு பேரவமானம்.” என  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானம் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்படும் என்று முதலே இலங்கை அரசுக்கு தெரியும். அவ்வாறு தெரிந்து கொண்டு அதற்குச் சவால்விடும் வகையில் இலங்கை அரசு செயற்பட்டது. அந்தச் சவால் தவிடுபொடியாகியுள்ளது.

ராஜபக்ச அரசின் வெளிவிவகாரக் கொள்கை படுதோல்வியடைந்துள்ளது. இது நாட்டுக்குப் பேரவமானம். நாட்டின் இன்றைய மோசமான நிலைக்கு இந்தத் தீர்மானம் சான்றாக அமைந்துள்ளது. இந்தத் தீர்மானத்தால் இலங்கைக்கு சர்வதேச அரங்கில் எந்தவேளையிலும் பேராபத்து ஏற்படலாம்.

ஏனெனில் பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசு தட்டிக்கழிப்பதால் சர்வதேசம் இலங்கை மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் மறுபுறத்தில் நிரூபணமாகின்றது. இதனால் சர்வதேச அழுத்தங்கள் மேலும் இலங்கை மீது அதிகரிக்கும். என்ன நடந்தாலும் ஐ.நா.வின் தீர்மானத்துக்கு கட்டுப்பட வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது என்றார்.

நல்லூர் கிட்டுப் பூங்காவின் முகப்பு கொட்டகைக்கு விஷமிகள் தீ வைப்பு !

நல்லூர் கிட்டுப் பூங்காவின் முகப்பின் அடையாளமாகக் காணப்பட்ட கொட்டகைக்கு விசமிகளால் தீவைத்து நாசமாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு படைக்கு அறிவிக்கப்பட்ட போதும் வாகனம் மற்றொரு இடத்தில் சேவையில் ஈடுபட்டு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.

அதனால் நல்லூர் கிட்டு பூங்காவின் முகப்பு பகுதி ஏரிந்து நாசமாகியுள்ளது.

அண்மையில் நல்லூர் கோயில் மீதும் அதன் வளாகத்திலும் சில விஷமிகளால் கழிவு எண்ணெய் வீசப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட எவரேனும் இலங்கையில் செயற்பட்டால் உடன் கைது !

தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட எவரேனும் இலங்கையில் செயற்பட்டாலோ அல்லது இலங்கைக்கு வருகை தந்தாலோ அவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளமை, இஸ்லாமிய பயங்கரவாத கொள்கையை பரப்புகின்றமை மற்றும் அவர்களுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்றமை போன்ற காரணங்களால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என அரசு தெரிவித்துள்ளது.

நீண்டகாலமாக இலங்கை விவகாரங்களில் கண்காணித்து செயற்பட்டு வருகின்ற புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும் தனிப்பட்ட முஸ்லிம் மற்றும் தமிழ் உறுப்பினர்கள் உட்பட 400 இற்கும் அதிகமானவர்களின் பெயர்களையும் இலங்கை அரசு  தடை செய்துள்ளது.

இந்தத் தடைக்கான காரணம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில ஆகியோர் அரசின் நிலைப்பாட்டை மேற்கண்டவாறு ஊடகங்களுக்கு அறிவித்துள்ளனர்.