பங்களாதேஷின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராகக் கருதப்படும் தானுஷ்வ அனன் ஷிஷிர் தனது முதல் நிகழ்ச்சி முடிந்து கண்ணீர் விட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
தாஷ்னுவ அனன் ஷிஷிர் வங்க தேசத்தின் சமூகச் செயற்பாட்டாளராக அறியப்படுகிறார். குடிபெயர்ந்தவர்கள், திருநங்கைகளுக்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தானுஷ்வ அனன் ஷிஷிர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக மகளிர் தினத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். இதன் மூலம் வங்க தேசத்தின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது.
தனது முதல் நிகழ்ச்சியில் மூன்று நிமிடம் செய்தி வாசித்துவிட்டு அவர் கண்ணீர் விட்ட புகைப்படங்கள் வைரலாகின.
செய்தி வாசிப்பாளராக அறிமுகமானது குறித்து தானுஷ்வ அனன் ஷிஷிர் கூறும்போது,
“இது மக்களின் சிந்தனையில் புதிய வடிவத்தை ஏற்படுத்தும். மக்களின் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால், மக்கள் உணர்ச்சி வசப்படுவதில்லை. இந்த நிகழ்வு அவர்களை உணரச் செய்யும் என்று நம்புகிறேன். மேலும், அவர்களைச் சுற்றியுள்ள என்னைப் போன்ற தாஷ்னுவாக்களையும் கவனிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.