10

10

ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்துக்கு எதிராக 12 மாகாண அரசுகள் வழக்கு !

பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்தது தொடர்பாக ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்துக்கு எதிராக 12 மாகாண அரசுகள் வழக்கு தொடர்ந்துள்ளன. சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன.

புவிவெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் கட்டுப்படுத்துவதற்கான பருநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கடந்த 2015-ம் ஆண்டு பரிஸில் நடந்த கூட்டத்தின்போது எட்டப்பட்டது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் ஒபாமா ஆட்சியின் கீழ் அமெரிக்கா முதல் நாடாக இணைந்தது. ஆனால் அதன் பின்னர் ஆட்சி பொறுப்புக்கு வந்த டிரம்ப், இந்த ஒப்பந்தம் வளரும் நாடுகளுக்கு ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டினார். இதனை காரணம் காட்டி கடந்த 2017-ம் ஆண்டு பரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அவர் அறிவித்தார்.

அதனைத்தொடர்ந்து 2019-ம் ஆண்டின் இறுதியில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா முறைப்படி வெளியேறியது.

இந்த நிலையில், அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்று ஜனாதிபதியானார்.
அவர் தனது தேர்தல் பிரசாரத்தின் போதே, தான் ஜனாதிபதியானால் பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என உறுதி அளித்தார்.

அதன்படியே அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் நாளிலேயே பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவதற்கான நிர்வாக உத்தரவில் ஜோ பைடன் கையெழுத்திட்டார். அதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 19-ந்தேதி பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா முறைப்படி மீண்டும் இணைந்தது.

இந்தநிலையில் பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்ததன் மூலம் அமெரிக்காவுக்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படும் என கூறி ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் மீது 12 மாகாண அரசுகள் கூட்டாக வழக்கு தொடர்ந்துள்ளன. மிசோரி மாகாணத்தில் அட்டர்னி ஜெனரல் ஏரிக் ஸ்மித் தலைமையில் ஆர்கன்சாஸ், அரிசோனா, இண்டியானா, கன்சாஸ், மென்டோனா, நெப்ராஸ்கா, ஓஹியோ, ஒக்லஹோமா, தெற்கு கரோலினா, டென்னிசி மற்றும் உட்டா ஆகிய மாகாணங்களின் அட்டர்னி ஜெனரல்கள் ஒன்றிணைந்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர்.

இதுகுறித்து மிசோரி அட்டர்னி ஜெனரல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கான ஜோ பைடன் நிர்வாகத்தின் உத்தரவு அமெரிக்க பொருளாதாரத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கும். வரவிருக்கும் 10 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான பில்லியன் அல்லது டிரில்லியன் டாலர் சேதத்தை ஏற்படுத்தும். இது அமெரிக்காவின் ஒவ்வொரு குடும்பத்தையும் பாதிக்கும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது நிர்வாகத்துக்கு எதிராக மாகாண அரசுகள் தொடர்ந்துள்ள வழக்கு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காது சானிடைசரை செய்தியாளர்களின் முகத்தில் தெளித்த தாய்லாந்து பிரதமர் !

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 3 அமைச்சர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அமைச்சரவையில் காலியாக உள்ள இடங்களுக்கு நியமிக்கும் சாத்தியமான தலைவர்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதனால் விரக்தியடைந்த அவர், கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்க்கும் வகையில் தனது கையில் இருந்த சானிடைசரை செய்தியாளர்களின் முகத்திற்கு நேரே தெளித்தவாறு புறப்பட்டுச் சென்றார். செய்தியாளர்களுடன் கோபமாக பேசியதுடன், அவர்கள் கூறுவதை காதுகொடுத்து கேட்காமல் சென்றுவிட்டார். அவரது இந்த செயல்பாட்டை பார்த்து செய்தியாளர்கள் திகைத்தனர்.
பிரதமர் பிரயுத் சாதாரணமாக அனைவரிடமும் பேசக்கூடியவர். சில நேரங்களில் நகைச்சுவையாகவும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தவர். ஆனால் பெரும்பாலும் செய்தியாளர்களை திட்டுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

“திலீபனின் உயிரை தியாகம் செய்யும் வரை பார்த்துக்கொண்டிருந்தது போல அம்பிகை செல்வகுமாரும் மரிக்க வேண்டும் என சர்வதேசம் விரும்புகிறதா ?” – மு. சக்திவேல்

“தியாகிகள் உயிர் நீப்பதையா சர்வதேசம் விரும்புகிறது. எமது கண்ணீருக்கு ஐக்கிய நாடுகள் பதில் சொல்ல வேண்டும்” என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் தலைவர் மு. சக்திவேல் தெரிவித்துள்ளார்கள்.

இலங்கையை சர்வதேச குற்றவியில் நீதிமன்றில் நிறுத்தக்கோரி யாழ் நல்லூர் பகுதியில் இடம்பெற்றுவரும் சுழற்சிமுறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் நேற்று கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுடைய நீண்ட கால போராட்டமானது அரசியல் சார்ந்தது. இந்த போராட்டத்தை தெற்கின் அரசாங்கம் பயங்கரவாத போராட்டமாக சித்தரித்து பல்வேறு அழிவுகளை செய்தது மட்டுமல்லாமல் இன அழிப்பினை மேற்கொண்டதையும் நாம் அனுபவித்துள்ளோம்.

இந்த இன அழிப்புக்கு சர்வதேச நீதி வேண்டும் என கேட்கும் அதே வேளையில் 1987 ஆம் ஆண்டு தியாகி திலீபன் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு தமது பிரச்சனையை தீர்க்குமாறு இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்தார் ஆனால் இந்தியா தலைசாய்க்கவில்லை. அதே போல தற்போதும் எமக்கு எதிராகத்தான் உள்ளது. அதே போல சர்வதேச நாடுகளும் எமக்கு எதிராக இருக்கின்றதா ? என சந்தேகிக்கிறோம். ஏனெனில் தற்போது வெளியாகிய ஐ.நா சபையினுடைய தீர்மானம் எமக்கு சார்பானதாக இல்லை.

இதனால் லண்டனில் அம்பிகை செல்வகுமார் என்ற பெண்மணி சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார். அவருடைய கோரிக்கைக்கும் அமைவாக சர்வதேசம் நீதியை பெற்றுத்தருமாறு கேட்கிறோம். எமது தியாகத்தை ஏற்றுக்கொள்ளாமல் கடந்த முறை இந்தியா திலீபனின் உயிரை தியாகம் செய்யும் வரை பார்த்துக்கொண்டிருந்தது. அதே போல இம்முறையும் தியாகிகள் மரிக்க வேண்டும் என சர்வதேசம் விரும்புகிறதா ? இதுவா மனித நீதி.

எமது அரசியல் பயணத்தில் மைல் கல்லை எட்டியுள்ளோம். எனவே அம்பிகை அவர்களின் உயிரை பாதுகாக்க வேண்டும் என்றால் எமக்கு நீதி வேண்டும். அதை விடுத்து உயிர்நீப்பதை தான் இந்த உலகம் விரும்புகிறது என்றால் அவரின் பின்னால் பலர் வர ஆயத்தமாக உள்ளார்கள்.

நாம் தற்போது மிகவும் வேதனையுடனும் கவலையுடனும் உள்ளோம். எமது கண்ணீருக்கு ஐக்கியநாடுகள் சபையும் சர்வதேச நாடுகளும் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.

“பிரச்சினைக்கு தீர்வைக் கேட்டால் மேலுமொரு பிரச்சினையை உருவாக்குவதே அரசின் நோக்கம்” – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்

“பிரச்சினைக்கு தீர்வைக் கேட்டால் மேலுமொரு பிரச்சினையை உருவாக்குவதே அரசின் நோக்கம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனநாயக ரீதியாக அகிம்சை வழிமுறையில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்குமாறு அரசிடம் கோரினால், இனவன்முறைகள், இனவழிப்புகளைப் பதிலாக அரசு கொடுத்தது. தற்போது ஜனாசாக்களை எரிக்காது அடக்கம் செய்யுமாறு தமிழ் பேசும் மக்கள் கோரியதற்கு, இரணைத்தீவில் சடலங்களைப் புதைக்கலாம் என்று அங்கு வாழும் மக்களுக்கு மேலுமொரு பிரச்சினையை அரசு உருவாக்கியுள்ளது. சமூகங்களைப் பிரித்தாளுவதே அரசின் நோக்கமாக இருக்கிறது.

தேசிய ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு என்பதெல்லாம் வெறும் வாய்ப்பேச்சுகளாகவே உள்ளது. ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதெல்லாம் ஓரினத்திற்குச் சாதகமான ஓசையாகவே இருக்கிறது. சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து 73 ஆண்டுகளாக சிங்கள அதிகார வர்க்கமே ஆட்சி செய்கிறது. நாட்டில் அபிவிருத்தியோ, அமைதியோ ஏற்படவில்லை. தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படவுமில்லை. உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்கும் ஆளுமை ஆட்சியாளர்களுக்கு இல்லாததாலேயே பிரச்சினை சர்வதேசம் வரை நீண்டுள்ளது.

சண்டித்தனத்தால் பிரச்சினைகளை உருவாக்கலாம் ஆனால் சமாதானத்தை உருவாக்க முடியாது. சாணக்கியம், சாதுரியம், மனித நேயம் என்பவற்றால் தான் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். இந்த நாடு மியன்மாரின் இராணுவாட்சித் தடத்தைப் பின்பற்றப் போகிறதா? இல்லை தென்னாபிரிக்காவின் நெல்சன் மண்டேலாவின் ஜனநாயகத் தடத்தைப் பின்பற்றப் போகிறதா? என்பது தான் எனது கேள்வியாகும் என்று தெரிவித்துள்ளார்.

தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அறிவிக்கும் வர்த்தமானி வெளியீடு !

தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 05 ஆம் திகதியில் இருந்து இந்த தீர்மானம் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபா வரை அதிகரிக்க வேண்டும் என்ற யோசனை நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது.

குறித்த யோசனையை செயற்படுத்துவதற்காக கடந்த சில மாதங்களாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதும உடன்பாட்டுக்கு வராத காரணத்தால் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதனை சம்பள நிர்ணய சபைக்கு மாற்றினார்.

அதன்படி, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளம் 900 ரூபாவும் மற்றும் பாதீட்டு நிவாரண கொடுப்பனவாக 100 ரூபாவுமாக 1000 ரூபாய் நாளாந்த சம்பளத்தை வழங்க கடந்த பெப்ரவரி 8 ஆம் திகதி சம்பள நிர்ணய சபையால் தீர்மானிக்கப்பட்டது.

பின்னர், அதனுடன் தொடர்புடைய ஆட்சேபனைகளை தெரிவிக்க பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், கடந்த முதலாம் திகதி சம்பள நிர்ணய சபை மீண்டும் கூடியது.

அதன்படி, தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க மேற்கொண்ட தீர்மானம் குறித்த கூட்டத்தின் போது அங்கீகரிக்கப்பட்ட நிலையில், அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலை வௌியிடுவதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, மார்ச் மாதம் 05 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

“சஹ்ரானையும் என்னையும் தொடர்புபடுத்தி, விமல் வீரவன்ச பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்” – ரிஷாட் பதியுதீன்

“ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானையும் என்னையும் தொடர்புபடுத்தி, அமைச்சர் விமல் வீரவன்ச வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்” என மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில் தனது அரசியல் இருப்புக்காக இவ்வாறு அப்பட்டமான பொய்யை கூறும் விமலுக்கு எதிராக சட்டத்தரணி ஊடாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகி வருவதாகவும் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாகவும் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், அவரிடம் விசாரணை செய்து, உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு சி.ஐ.டியினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் வெளிவந்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலும், தனக்கும் இந்த தாக்குதல் சம்பவத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.

“இலங்கை தற்போது மீண்டும் சர்வதேசப் பொறிக்குள் சிக்குண்டு போக  ராஜபக்சக்களின் மோசமான செயல்களே பிரதான காரணமாகும்” – ரணில் விக்கிரமசிங்க 

“இலங்கை தற்போது மீண்டும் சர்வதேசப் பொறிக்குள் சிக்குண்டு போக  ராஜபக்சக்களின் மோசமான செயல்களே பிரதான காரணமாகும்” என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜெனிவா விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

எமது நல்லாட்சியில் சர்வதேசத்தின் பொறிக்குள் இருந்து இலங்கையை மீட்டெடுத்திருந்தோம். ஐ.நாவைப் பகைக்காமல் நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுக்காமல் சர்வதேசத்துடன் இணைந்து நாம் பயணித்தோம். ஆனால், மீளவும் ஆட்சிக்கு வந்த ராஜபக்ச தரப்பினர், இலங்கையை மீண்டும் சர்வதேசப் பொறிக்குள் சிக்க வைத்துள்ளனர்.

தமிழ், முஸ்லிம் மக்களைப் பழிவாங்கும் வகையில் இந்த ஆட்சியில் இடம்பெறும் மோசமான செயல்களாலே இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணையை ஐ.நா. உறுப்புரிமை நாடுகள் முன்வைத்துள்ளன.

அன்று எமது நல்லாட்சியை வாய் கிழியக் கத்தி விமர்சித்த இனவாதிகள், இன்று வாயடைத்து – பேச்சடங்கி – பேச முடியாத நிலையில் உள்ளனர். நாட்டின் இந்த அவல நிலைக்கு அவர்களும் காரணமாக உள்ளனர்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் பான் கி – மூனுடனான கூட்டு உடன்படிக்கையில் அன்று கையெழுத்திட்ட முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ச, இன்று ஐ.நாவுக்கு சவால் விடுவது வேடிக்கையானது தெரிவித்துள்ளார்.

“புர்கா அணிய தடை” – பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர

ஏப்ரல்-21 தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணையத்தின் அறிக்கை குறித்த விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் தற்போது மட்டுமல்லாது எதிர்காலத்திலும் ஏற்படவிருக்கும் அச்சுறுத்தல்களை இனம் கண்டு அவற்றை தடுக்கும் பொருட்டு அதன் ஓர் அங்கமாக புர்கா அணிவதை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

“நுண்கடன் திட்டத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 200இற்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்” – நாடாளுமன்றில் பேராசிரியர் ஹரினி அமரசூரிய

“நுண்கடன் திட்டத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 200இற்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்” என தேசிய மக்கள் சக்தியின் (மக்கள் விடுதலை முன்னணி) நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதார முறையால் பெண் தொழில் முயற்சியாளர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பாரியளவில் நிதி நிறுவனங்களால் பெண்கள் பாரியளவில் சூரையாடப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நுண்கடன் நிதி நிறுவனங்களின் போலி வாக்குறுதிகளுக்கு ஏமாற்றப்பட்டு, பெற்றுக்கொண்ட கடனை செலுத்தமுடியாத பலர் எமது நாட்டில் இருக்கின்றனர்.

மேலும் நுண்கடன் வழங்கும் நிதிநிறுவனங்களின் பாரிய சூரையாடல்கள் காரணமாக எமது நாட்டில் 2,8மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 24இலட்சத்தி 38ஆயிரம் பேர் பெண்களாகும். அதேபோன்று 200பெண்கள் வரை நுண்கடன் திட்டத்தில் சிக்கிக் கொண்டு கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

மேலும் நுண்கடன் நிதி நிறுவனங்கள் மிகவும் மோசமான முறையில் பெண்களை இலக்குவைத்து இந்த கடன் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றன. இலாபத்தைவிடவும் பாரிய சூரையாடலையே மேற்கொள்கின்றன.

அதனால் நுண்கடன் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள், அவற்றின் சட்ட முறைகள் தொடர்பாக கணக்காய்வொன்றை மேற்கொள்ளவேண்டும். இதுதொடர்பாக நாடாளுமன்ற செயற்குழுவில் ஆராய்ந்து முறையான செயற்திட்டங்களை ஏற்படுத்தவேண்டும்.

அதேபோன்று நுண்கடன் திட்டத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு கடன் நிவாரணங்களை வழங்குவதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவிக்கப்பட்டபோதும் அந்த நிவாரணங்கள் இதுவரை அந்த பெண்களுக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.