19

19

ஸ்பெயினில் கருணைக்கொலைக்கு பாராளுமன்றம் ஒப்புதல் !

ஸ்பெயின் நாட்டில் தீராத நோயால் நீண்ட நாட்கள் அவதிப்படுவோர் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் மருத்துவ உதவியுடன் வாழ்க்கை நடத்துவது போராட்டமாகவே இருக்கிறது. எனவே இதுபோன்றவர்களை கருணை கொலை செய்ய அனுமதிக்கும் கூட்டம் ஸ்பெயின் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.

அந்த நாட்டின் பாராளுமன்றத்தின் கீழ் சபையில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவுக்கு ஆதரவாக 202 உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிராக 140 வாக்குகள் பதிவாகின.

வருகிற ஜூன் மாதம் முதல் இந்த கருணை கொலை சட்டம் அமுலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடது சாரி கூட்டணி அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இதற்கு தீவிர வலதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாங்கள் ஆட்சி அமைக்கும் போது இந்த கருணைக்கொலை சட்டத்தை நீக்குவோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

“ஐ.நா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த தீர்மானம் ஏமாற்றமளிக்கும் வகையில் காணப்படுகின்றது” – பிரிட்டனின் நாடாளுமன்றில் சிபோன் மக்டொனாக் !

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த தீர்மானம் ஏமாற்றமளிக்கும் வகையில் காணப்படுகின்றது என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனாக் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில்  இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான விவாதத்தின் மீது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் ஏமாற்றமளிக்கும் வகையில் குறைவானதாக காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையை பாரப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுப்பதன் மூலம் குற்றவியல் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான பரிந்துரைகள் எவையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரிட்டிஸ் அரசாங்கம் பாதுகாப்பு சபையில் போதிய ஆதரவு கிடைக்காது என தெரிவித்ததை என்னால் நம்பவே முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் காடழிப்பு இடம்பெறுவதை வெளிப்படுத்திய ஓவியங்களை அகற்ற ஜனாதிபதி செயலகம் உத்தரவு !

இலங்கையில் காடழிப்பு இடம்பெறுவதை வெளிப்படுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்டிருந்த ஓவியங்களை அகற்ற ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டுள்ளது.
நெலும்பொக்குனவிற்கு அருகில் உருவாக்கப்பட்டிருந்த ஓவியங்களை அகற்ற கொழும்பு மாநகரசபை முயல்கின்றது. வனவிலங்கு இயற்கை பாதுகாப்பு சமூகத்தை சேர்ந்த சிறுவர்களே இந்த சுவரோவியத்தை உருவாக்கியிருந்தனர்.
இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் சூழலிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் அவர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
கொழும்பு மாநகரசபையினதும் பொலிஸாரினதும்அனுமதியை பெற்றே அவர்கள் குறிப்பிட்ட சுவரோவியத்தை உருவாக்கியிருந்தனர்.
இதேவேளை இந்த ஓவியங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓவியங்களை வரைந்த சிறுவர்கள் தங்கள் எதிர்ப்பினை வெளியிட்டுவருகின்றனர்.

பங்களாதேஷிற்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச !

பங்களாதேஷிற்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை பங்களாதேஷின் டாக்காவிலுள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அதிகாரிகளினால் பிரதமர் வரவேற்கப்பட்டார்.

இந்த உத்தியோகபூர்வ பயணத்தின்போது பிரதமர், பங்களாதேஷ் குடியரசின் தேசத்தின் தந்தையாகப் போற்றப்படும் பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மானின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றில் கலந்துகொள்கின்றார்.

பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மானின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்ட ‘முஜிப் ஆண்டு’ தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று சிறப்புரையாற்றுகின்றார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்தப் பயணத்தின்போது பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது அப்துல் ஹமீத், பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பிரமுகர்களுடன் இருதரப்பு பேச்சுகளிலும் ஈடுபடவுள்ளார்.

“யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு திட்டங்களை நாம் வடபகுதியில் மேற்கொண்டுள்ளோம்” – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

“யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு திட்டங்களை நாம் வடபகுதியில் மேற்கொண்டுள்ளோம்” என அஞ்சல் சேவைகள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்

வட்டுக்கோட்டையில் புதிய தபாலக கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

224 வருடங்கள் பழைமை வாய்ந்த தபால் சேவை மக்களின் அவசியமான சேவையாக காணப்படுகிறது. 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கவலைப்பட்டாலும் 2010 ற்குப் பின்னர் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

2009 ற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களிற்கு காரணமான அரசியல் காரணங்கள் பற்றி நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை. யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு திட்டங்களை நாம் வடபகுதியில் மேற்கொண்டுள்ளோம்.

சுபிட்சத்தை நோக்கு என்ற எமது அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் வடபகுதியிலும் பல்வேறு பட்ட அபிவிருத்தி திட்டங்கள் கிராம மட்டங்களிலும் பிரதேச மட்டங்களிலும் இடம்பெற்று வருகின்றது

கொரோனா காலத்திலும் கூட தபால் சேவையானது மிகவும் சிறப்பாக செயற்பட்டது அந்த வைரஸ் தொற்று காலத்திலும் கூட எமது தபால் ஊழியர்கள் தமது கடமையை சிறப்பாக செயற்பட்டு நாட்டில் சேவையாற்றி இருந்தார்கள் எனது பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டியுள்ளது

யாழ்ப்பாண பிரதேசத்தை பொருத்தவரை விவசாயம் ,கல்வி உயர் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளே மிகமுக்கியமான துறையாக காணப்படுகின்றது அத்துடன் அந்த துறைகளை அபிவிருத்தி மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. மேற்குறிப்பிட்ட துறைகளை ஒன்றிணைத்து முன்னோக்கு செல்வதற்கு பெரும் உதவியாக இருப்பது இந்த தபால் துறை என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன் ஒரு இணைப்பு கருவியாகவே நான் தபால் துறையை காண்கிறேன்

நம்மை பொருத்தவரை வடபகுதி அபிவிருத்தி தொடர்பில் எமது அரசாங்கமானது மிகவும்ஆர்வமாக செயற்படுகின்றோம்.

தபால் துறையை நவீனப்படுத்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன 224 வருடங்கள் பழமை வாய்ந்த தபால் துறையை நவீனமயப்படுத்தி தபால் துறையுள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி செயற்படுத்தல் தொடர்பில் ஆராய்கிறோம்.

உலக நாடுகளில் உள்ள தபால் துறையை போன்று நமது நாட்டிலும் அதிநவீன வசதிகளைக் கொண்ட வகையில் எமது நாட்டின் தபால் துறையை மேம்படுத்துவதற்கு பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். வடபகுதியினை அபிவிருத்தி செய்வதற்கு வடக்கில் உள்ள எமது அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் வடபகுதியினை அபிவிருத்தி செய்வதற்கு நாம் எப்போதும் ஒத்துழைப்போம் என தெரிவித்தார்.