March
March
“நல்லாட்சி காலத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் மாதா மாதம் சிங்கப்பூர் சென்றவர், ஜனாதிபதியானவுடன் ஒருமுறையேனும் சிகிசிச்சைக்காக சிங்கப்பூர் செல்லவில்லை.” எனவும் ஒரு வேளை ஜனாதிபதியானால் நோய் குணமாகிவிடுமோ எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் இன்று (31.03.2021) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
தங்களை புலிக் குட்டிகளாக பிரசாரம் செய்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று மக்கள் முன் பூனைக் குட்டிகளாக மாறிவிட்டது. சீனி ஊழலை பற்றி பேசி முடிப்பதற்குள் கலப்பட தேங்காய் எண்ணெயுடன் வந்துவிட்டனர்.
இன்று உள்ள பொருளாதார நெருக்கடிக்குள் கடன்பட்டே மக்கள் இரண்டு வேளையாவது உண்கின்றனர். அவ்வாறு கடன்பட்டு உண்ணும் மக்களுக்கு விஷம் கலந்த உணவையே இந்த அரசு வழங்குகிறது. இந்த விஷ உணவுகளை ஜனாதிபதி உண்பதில்லை. அதனால் இதன் தாக்கம் அவருக்கு விளங்காது. அவ்வாறு அவர் நோய் வாய்ப்பாடின் சிகிசிச்சைகளுக்காக உடனடியாக சிங்கப்பூர் சென்று விடுவார்.
அதிலும் அதிசயம் என்னவென்றால் நல்லாட்சி காலத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் மாதா மாதம் சிங்கப்பூர் சென்றவர், ஜனாதிபதியானவுடன் ஒருமுறையேனும் சிகிசிச்சைக்காக சிங்கப்பூர் செல்லவில்லை. ஜனாதிபதியானால் நோய் தானாக குணமடைந்துவிடுமோ தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.
முன்பெல்லாம் மக்கள் தமது பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் கூறிய காலமிருந்தது. ஆனால் இப்போது ஜனாதிபதி தனது பிரச்சினைகளை மக்களிடம் கூற கிராமங்களுக்கு செல்கிறார். இதனால் தான் நாம் சொல்கிறோம் “சேர் பெய்ல்” இந்த “அரசாங்கம் பெய்ல்” என.
காடழிப்பு, சீனிமோசடி, ஈஸ்ட்டர் தாக்குதல் அறிக்கை , தேங்காய் எண்ணெய் என இந்த அரசு மக்களிடம் இருந்த செல்வாக்கை இழந்துவிட்டது. இத்தகைய சூழலில் மாகாணசபை தேர்தல் நடத்தப்பட்டால் அரசு நிச்சயம் தோல்வியடையும். அதனால் தான் இதை மறைக்க முஸ்லிம் விரோத செயற்பாடுகளை அரசு முன்னெடுத்து மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறது.
அசாத் சாலி கைது செய்யப்பட்டமை அவர்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியளிக்காததால் தற்போது மீண்டும் மாடறுப்பு தடையை கையில் எடுத்திருப்பதாக அறிய கிடைக்கிறது எனவும் தெரிவித்தார்.
“யுத்தத்தினால் பல்வேறுபட்ட வேதனைகள் மற்றும் இன்னல்களையும் வலிகளையும் மார்பிலே சுமந்துகொண்டிருக்கின்ற ஒரு சமூகமாக நாங்கள் இருக்கின்றோம்” என மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி அபிவிருத்திப் பணியினை ஆரம்பித்துவைக்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் “நாட்டைக்கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக நாட்டில் ஒரு இலட்சம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் சிபாரிசுக்கமைவாக மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சின்னகாலபோட்டமடு கிராமத்தின் பிரதான வீதியினை 01 கிலோ மீட்டர் கொங்கிறீட் வீதியாக மாற்றியமைக்கும் திட்டத்தினை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு நேற்று (30.03.2021) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.
குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை வளர்ப்பு, சிறு பொருளாதாரப் பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டு வீதிக்கான கொங்கிறீட் இடும் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
மக்களுக்கு தேவைதானா என கேட்கும் சில அரசியல்வாதிகளிடம் நான் ஒரு கேள்வியை கேட்க விரும்புகின்றேன். எங்களுக்கு உரிமை தேவை என்பது உண்மை ஆனால் அத்தோடு அடிப்படை உரிமை என்ற விடயமும் இருக்கின்றது. அவைதான் உணவு, உடை, உறையுள் அதுவும் எமக்கு தேவை, அதை கூட மூன்று தசாப்த கால யுத்தத்தினால் இழந்து நிற்கின்ற ஒரு சமூகமாகத்தான் எமது தமிழ் சமூகம் காணப்படுகின்றது.
கிராமங்கள் தன்னிறைவு அடையவேண்டும், இன்று பலர் அரசியலுக்காக சொல்லுகின்றார்கள், நிலம் பறிபோகிறது வளம் பறிபோகிறது என்று, அப்படியானால் அந்த நிலத்தையும் வளத்தையும் பாதுகாக்க என்ன வழி என்று கேட்டுப்பாருங்கள் அவர்களுக்கே அதற்கான வழி தெரியாது.
சிந்தித்துப் பாருங்கள் ஏன் பறிபோகின்றது என்று, எல்லை கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு தேவையான வசதி வாய்ப்புக்கள் அந்த கிராமங்களில் இல்லை. அவர்களுக்கு சரியான போக்குவரத்து இல்லை, சரியான சுகாதார வசதிகள் இல்லை, கல்வி வசதி இல்லை, மின்சார வசதி இல்லை, வீட்டு வசதி மற்றும் மலசல கூட வசதி இல்லை அப்படியானால் இவ்வளவு வசதிகளும் இல்லாமல் ஒரு எல்லை கிராம மக்கள் என்ன செய்வார்கள். அந்த எல்லைக் கிராமங்களை விட்டு நகரை நோக்கி அவர்கள் இடம் பெயர்வார்கள், அவர்கள் கிராமத்தில் இருந்து இடம்பெயரும் போது என்ன நடக்கும், அந்த எல்லைகளில் இருக்கும் நிலவளங்கள் பறிபோகத்தான் செய்யும்.
ஆகவே நிலத்தைப் பாதுகாக்க வேண்டும் வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று சொன்னால் பின்தங்கிய எல்லைக் கிராமங்களிலே வாழுகின்ற மக்கள் அந்த இடங்களிலே இருந்து இடம்பெயராதவாறு அவர்களுக்கு நல்ல போக்குவரத்து வசதி, நல்ல சுகாதார வசதி, நல்ல கல்வி வசதி, தொழில் சார்ந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேறவேண்டிய அவசியம் வராது.
மாவட்டத்தில் இருக்கின்ற பாரிய பிரச்சனைகளில் ஒன்றுதான் தொழில் இல்லா பிரச்சனை, அதற்காகவும் நாங்கள் தொழிற்சாலைகளை உருவாக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம், அதனடிப்படையில் 8000 பேருக்கு தொழில் வழங்கக் கூடிய ஆடைக் கைத்தொழிற் பூங்காவை ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிரிவில் நிறுவுவதற்கான வேலைத்திட்டங்கங்களை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்.
“ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் என யாரின் அனுசரணை இருந்தாலும் சரி சட்டவிரோத மண் அகழ்வு செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் இன்றைய தினம் வேப்பவெட்டுவான் பிரதேசத்திற்கு மேற்கொண்ட கள விஜயத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக சட்டவிரோதமாக மண் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களுக்கு களவிஜயத்தினை மேற்கொள்வதற்காக நாங்கள் வந்திருந்தோம்.
நாங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வந்து பார்த்ததற்கும் இன்றைய தினம் வந்து பார்த்ததற்கும் சில வேலைத்திட்டங்கள் இங்கு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சட்டவிரோதமாக மண் எடுத்ததாகச் சந்தேகப்படும் இடங்களை திரும்பவும் மூடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதற்கான மண் எங்கே இருந்து வந்தது என்று கேட்டால் அந்தக் கேள்விகளைக் கேட்டதற்காக தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு எங்களையே ஒரு அச்சுறத்தலுக்குள் உள்ளாக்கும் செயற்பாடுகள் இடம்பெற்றன.
இன்று இன்னுமொரு பிரதேசத்தையும் நாங்கள் வந்து பார்த்தோம். இது அணைக்கட்டுக்கு அருகாமையில் இருக்கும் பிரதேசம். இதில் மண் அகழ்வு மேற்கொண்டமையால் 2500 ஏக்கருக்கு தண்ணீர் பாய்ச்சலைக் கூடச் செய்ய முடியாத நிலைமை இன்று இருக்கின்றது.
எமது மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறுவதாக இருந்தது. அது ஒத்திவைக்கப்படுவதாக இன்று கடிதம் கிடைத்தது. இவ்வாறாக மாவட்டத்தில் முக்கிய விடயங்களைத் தீர்மானிக்க முடியாத மாவட்ட அபிவருத்திக் குழுத் தலைவரும், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டமும் அவசியம் இல்லாத ஒரு விடயமாகவே தென்படுகின்றது.
நாளைய தினமும் மூன்று அமைச்சர்கள் மட்டக்களப்பிற்கு வருகை தந்து கூட்டம் வைக்கப் போகின்றார்கள் என்று அறிகின்றேன். இந்த மாவட்டத்தில் மேலதிகமாக ஏதேனும் வளங்களைச் சூரையாடலாம் என்று பார்ப்பதற்காகத்தான் இந்த விஜயம் மேற்கொள்ளப்படுகின்றதா என்றும் என்று நினைக்கத் தோணுகின்றது.
இவ்வாறான சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இது எவருடைய அனுமதிப்பத்திரமாக இருந்தாலும் சரி. ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் என யாரின் அனுசரணை இருந்தாலும் சரி இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். ஏனெனில் இது இந்தப் பிரதேச மக்களின் வளம். இந்த வளங்களை அழித்தால் இந்தப் பிரதேசத்தில் இனி வாழும் மக்களுக்கு எந்தவித எதிர்காலமும் இல்லாமல், குடிநீரும் இல்லாமல், எவ்வித வளமும் இல்லாமல் போகும். இப்பிரதேசம் ஒரு பாலைவனமாகப் போவதற்கும் சாத்தியங்கள் இருக்கும். எனவே இதனை உடனே நிறுத்த வேண்டும் என்று உரிய அதிகாரிகளிடம் மிகத் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.
கடற்றொழில், கைத்தொழிலை மேம்படுத்தும் வகையில் மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட கடலட்டை இனப்பெருக்க நிலையம் நேற்று (30.03.2021) முற்பகல் 10.30 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
தேசிய நீர் வாழ் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஜயந்த விஜேரத்தின வின் அழைப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோர் இணைந்து கடலட்டை இனப்பெருக்க நிலையத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து கடலட்டை உற்பத்தியை நேரடியாக பார்வையிட்டதோடு உரிய தரப்பினருடன் கலந்துரையாடினர்.
இதன்போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.திலீபன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல், மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் உட்பட திணைக்களத் தலைவர்கள், அமைச்சின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்ற 28 மாணவர்கள் கடந்த 3 மாதங்களில் பாடசாலையை விட்டு இடை விலகியுள்ளனர். அவர்களை மீள இணைப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலாளர் கே. சுலோஜனா தெரிவித்துள்ளார்.
சிறுவர், பெண்கள் பாதுகாப்பு தொடர்பில் செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்திருந்தார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான 3 மாத காலப்பகுதியில் செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பாடசாலைகளில் இருந்து 28 மாணவர்கள் இடை விலகியுள்ளதாக கிராம அலுவலர் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்கள் இடை விலகியமைக்கான காரணத்தை கண்டறிந்து அவர்களை மீளவும் பாடசாலை கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் கிராம அலுவலர்கள் மற்றும் எமது பிரதேச செயலக சிறுவர், பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன், பாடசாலை இடைவிலகும் மாணவர் விபரத்தை அதிபர்கள் எமது பிரதேச செயலகத்திற்கு வழங்கினால் அவர்களை மீள் இணைப்பதற்கான நடவடிக்கைகளை கிராம அலுவலர் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் ஊடாக முன்னெடுக்க முடியும் எனவும் இதன்போது அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் அதிக அளவில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் யாழின் நகர மத்தியை அண்மித்த முக்கிய பகுதிகள் முடக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் நேற்றும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஆளுநர்,
இது வரை 499 பேர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டு அவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் தொடர்புடை சுமார் 1000 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்தோடு 1000 பி.சி.ஆர் மாதிரிகள் கொழும்புக்கும் 1000 மாதிரிகள் அநுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் நகரை அண்டியுள்ள பகுதிளிலும் சுகாதார நடைமுறைகளை கடுமையாக கண்காணிக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அறுவுறுத்தப்பட்டுள்ளதாவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
நகரை சூழவுள்ள பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்கவும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பொது மக்கள் பரவலை மேலும் கட்டுப்படுத்த சுகாதார பிரிவினர் வழங்கியுள்ள வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.
போராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தினால் பேணப்பட்டு வந்த நிலையான வைப்புக் கணக்குகளில் 50 மில்லியன் ரூபா நிதி முன்னாள் சிரேஷ்ட அதிகாரி ஒருவரால் மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தின் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) புலப்பட்டது.
போராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தினால் மக்கள் வங்கியின் பேராதனைக் கிளையில் பேணப்பட்டுவந்த 14 நிலையான வைப்புக்கள் 2006ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2016 டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மூடப்பட்டு பெறப்பட்ட 93 மில்லியன் ரூபாவில், 37 மில்லியன் ரூபா மாத்திரம் மீண்டும் நிலையான வைப்பில் இடப்பட்டிருப்பதுடன், எஞ்சிய 50 மில்லியன் ரூபா சிரேஷ்ட உதவி நிதி அதிகாரியினால் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதி மோசடியுடன் தொடர்புபட்ட அதிகாரி பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருப்பதுடன், இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. பல்கலைக்கழகத்தில் இந்த மோசடியுடன் தொடர்புபட்ட நபர்கள் குறித்து ஆராய்வதற்கு பேராதனைப் பல்கலைக்கழக மூதவையினால் ஒழுக்காற்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இதற்கு மேலதிகமாக கணக்காய்வாளர் திணைக்களத்தினால் தண்டக் கட்டணம் அறவிடப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் கூடிய அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் மேலும் தெரியப்படுத்தப்பட்டது.
பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் 2018 மற்றும் 2019 வருடங்களுக்கான கணக்காய்வு அறிக்கை மற்றும் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கோப் குழு கூடியிருந்தது.
“இலங்கையில் மீண்டும் பழிவாங்கல் ஆட்சியே இடம்பெறுகின்றது.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றும்போது, இணை அனுசரணை நாடாக செயற்பட்ட ஜேர்மனி தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பியனுப்ப நினைப்பது கவலை அளிக்கின்றது.
இலங்கையில் பல தனிநபர்களும், அமைப்புக்களும் தடை செய்யப்படுகின்ற நிலையில், மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஜேர்மனி அங்கிருக்கின்ற தமிழர்களை திருப்பியனுப்ப முனைவது பாரதூரமான நிலைமையை ஏற்படுத்தக்கூடும்.
ஜேர்மனியில் இருக்கின்ற தமிழர்கள் இப்போதைக்கு இலங்கையில் வந்து வாழ முடியாத சூழ்நிலை இருப்பதை ஜேர்மனியும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கருத்தில்கொள்ள வேண்டும். ஏனெனில், இலங்கையில் மீண்டும் பழிவாங்கல் ஆட்சியே இடம்பெறுகின்றது.
ஜேர்மனி, இந்த நடவடிக்கையை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். இலங்கைத் தமிழர்களைத் திருப்பியனுப்பும் தீர்மானத்தை ஜேர்மனி கைவிட வேண்டும்.” என்றார்.