May

May

கம்பஹா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோருக்கு யாழ்ப்பாணத்திலிருந்து நிவாரண உதவி!

coio.jpgவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் கம்பஹா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, யாழ்ப்பாணத்திலிருந்து நிவாரண உதவி கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது  வட மாகாண சபையூடாக இவ்வுதவி அனுப்பப்பட்டுள்ளதாக ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் ஆறு லொறிகளில் கம்பஹா மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நீர்த்தாங்கிகள், தண்ணீர் போத்தல்கள், மற்றும் உலருணவுப் பொருட்களே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து மேலும் இரு லொறிகளில் நாளை நிவாரணப் பொருட்கள் கம்பஹாவுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து அண்மையில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட தமிழ் மக்களே இந்த நிவாரண உதவிகளை வழங்கியுள்ளதாக வடமாகாண ஆளுனர் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் கண்டாவளை, கரைச்சி பிரதேச மக்கள் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர்!

வவுனியா ‘மெனிக்பாம்’ நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 62.810 இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 7,350 பேர் எதிர்வரும் 11 நாட்களில் அவர்களின் சொந்த ஊர்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட கரைச்சி மற்றும், கண்டாவளை முதலான பிரதேச மக்களே இவ்வாறு மீள் குடியேற்றப்படவுள்ளனர். நேற்று 20ஆம் திகதி ஆரம்பமான இந்நடவடிக்கை 31ஆம் திகதி வரை நடைபெறும் என இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான  இணைப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

 ‘மெனிக்பாம்’ முகாமில் 11 வரையான நிலையங்களில் தங்கியுள்ள மக்களில் ஒரு தொகையினரே இவ்வாறு மீள்குடியேற்றப்படவுள்ளனர். இதனையடுத்து நலன்புரி நலையங்களின் எண்ணிக்கை ஆறாகக் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்முகாம்களில் தங்கியுள்ள மக்களின் எண்ணிக்கையும் 55,460 அக குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மேயரையும் அவரது செயலாளரையும் நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்றத்தை அவமதித்ததான குற்றச்சாட்டு தொடர்பாக யாழ்ப்பாண மேயர் திருமதி ப.யோகேஸ்வரி, மேயரின் செயலாளரான திரு. கு.பற்குணரஜா ஆகியோரை இன்று (21.05.2010) நீதிமன்றில் முற்படுத்துமாறு யாழ்.குற்றப்புலனாய்வுப் பொலிஸாருக்கு யாழ்.நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் உள்ளுர் பத்திரிகைகளில் விளம்பரங்களைப் பிரசுரித்தமை தொடர்பாக யாழ்.குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வந்த விசாரணைகள் குறித்த அறிக்கை யாழ். நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வறிக்கையை ஆராயந்த  நீதிமன்றம் யாழ். மேயரையும் அவரது செயலரையும் இன்று யாழ். நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் குறித்த விளம்பரங்களை பிரசுரித்த, யாழ். குடாநாட்டிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளான ‘உதயன்’ ‘யாழ்.தினக்குரல்’ ‘வலம்புரி’ ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை பத்திரிகைகளில் வெளியான விளம்பரங்களின் மூலப்பிரதிகளுடன் நீதிமன்றில் பிரசன்னமாக இருக்கமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செனல் 4 குறித்து அரசாங்கம் அலட்டிக்கொள்ள மாட்டாது! ஊடகத்துறை அமைச்சர் தகவல்

kahiliya.jpgசெனல் 4 தொலைக்காட்சியில் அண்மையில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சி குறித்து அரசாங்கம் அலட்டிக்கொள்ளப் போவதில்லை என தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் நேற்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

செனல் 4 புதிய நிகழ்ச்சி குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். கடந்த வருடமும் அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செனல் 4 தொலைக்காட்சி வீடியோ காட்சி ஒன்றை ஒளிபரப்பியது. அந்தக்காட்சி முற்றிலும் பொய்யானது என விஞ்ஞான ரீதியிலாக பரிசோதனை மூலம் நிருபிக்கப்பட்டதுடன் அந்தத் தொலைக்காட்சி சேவைக்கு எதிராக அரசாங்கம் சவால் விடுத்தது.

எனினும் இதுவரை அந்த தொலைக்காட்சிச் சேவை அந்த சவாலுக்கு எவ்வித பதிலையும் அளிக்கவில்லை. எனவே இவ்வாறான செயற்பாட்டை அந்த தொலைக்காட்சி நிலையம் ஒரு வாடிக்கையாக செய்து வருவதாகவே அரசாங்கம் கருதுகிறது. முதலில் கேட்ட கேள்விக்கே பதில் அளிக்காத போது மீண்டும் மீண்டும் நாம் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வெள்ளம் ஏற்படுவதை தடுக்க நீண்டகால செயற்றிட்டம்; – ஏ. எச். எம். பெளஸி

fauzi.jpgஎந்தவொரு வெள்ள நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக நீண்டகாலத் திட்டமொன்று மேற்கொள்ளப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது :- வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரணங்கள் வழங்க சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் தொகை அதிகரித்து வருவதோடு எதிர்வரும் நாட்களில் வெள்ள அபாயம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆறுகள், கால்வாய்கள் என்பவற்றுக்கு அருகிலுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அருகில் நிலைகொண்டுள்ள ‘லைலா’ சூறாவளியினால் இலங்கைக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் சூறாவளி நிலைமை குறித்து நாம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்பொழுது இரத்தினபுரி, நில்வளா கங்கை, களுகங்கை என்பவற்றின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி மழை பெய்யத் தொடங்கியதும் ஆறுகள் பெருக்கெடுத்து, வெள்ள அபாயம் அதிகரிக்கலாம்.

வெள்ளநீர் வடிந்து செல்வதற்காக வடிகால் கட்டமைப்புகளை சுத்திகரிக்கவும் நீர் வடிந்து செல்வதற்கு தடையாக அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக வடிகால்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒக்டோபர் மாதத்தில் அடுத்த மழை தொடங்குவதற்கு முன்னர் கால்வாய்களை திருத்தவும் அவற்றை நிர்வகிக்கவும் உள்ளோம். கால்வாய்களுக்கு அருகில் உள்ளவர்களை தற்காலிக இடங்களுக்கு அகற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. கால்வாய்களைத் திருத்த பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டாலும் அவை நிர்வகிக்கப்படாததால் வெள்ளம் வடிவதில் சிக்கல் ஏற்படுகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 80 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதோடு இதுவரை 25 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களி னூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் நிதி தேவைப்பட்டால் திறைசேரியினூடாக வழங்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். இவர்களுக்கு உணவு வழங்குவதற்காக வழங்கப்படும் தொகையை இரட்டிப்பாக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்றார்.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக தனிப்பட்ட ரீதியில் அஞ்சலி செலுத்தலாம் சகலருக்கும் உரிமை இருக்கிறது -கெஹலிய

kahiliya.jpgயுத்தத்தின் போது இறந்தவர்களுக்காக தனிப்பட்ட ரீதியில் அஞ்சலி செலுத்துவதற்கு பொதுமக்களுக்கு சகல உரிமையும் உள்ளது.

அதற்கு அரசாங்கம் தடைபோடாது அரசியல் நோக்கங்களுக்காகவோ வேறு தேவைகளுக்காகவோ அணிதிரண்டு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிக்க முடியாது என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது,

யுத்தத்தினால் இறந்தவர்களுக்காக ஒரு வார காலம் சோக தினமாக அனுஷ்டிக்குமாறு சம்பந்தன் கோரியிருந்தார். இவர் ஆரம்ப முதலே பிரபாகரனுக்காக குரல்கொடுத்து வந்தார். இந்த நிலையில் இறந்தவர்களுக்காக அணி திரண்டு அஞ்சலி நிகழ்வுகள் நடத்துவதன் பின்னணியில் வேறு நோக்கங்கள் காணப்படும்.

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் திரைப்பட விழா

indian-film.jpgயாழ். மக்களின் மனநிலையில் ஒரு புத்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அங்கு ஒரு வாரத்துக்கான திரைப்பட விழாவொன்றை விரைவில் நடத்த அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துசிங்கவின் பணிப்பின் பேரில் இதற்கான நடவடிக்கைகளை யாழ். பாதுகாப்புத் தலைமையகம் மேற்கொண்டு வருகின்றது. இத்திரைப்பட விழாவில் தென் இந்திய பழைய தமிழ் திரைப்படங்களும் வெற்றிப் படங்களும் காண்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டில் முன்னர் 16 திரையரங்குகள் இருந்த போதும் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக அவை அனைத்தும் அழிக்கப்பட்டன. இதனால், பொது மக்கள் பொழுது போக்குக்காக திரையரங்குகளில் ஒன்றுகூடி படம் பார்த்து மகிழும் சந்தர்ப்பத்தை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திடீர் அனர்த்த மாவட்டமாக நுவரெலியா பிரகடனம் – பிரதேச செயலர்கள், கிராமசேவர்களின் விடுமுறைகள் அனைத்தும் ரத்து

fo.jpgமலைய கத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையின் காரணமாகவும், மண்சரிவு அபாயம் உள்ளதனாலும் நுவரெலியா மாவட்டம் திடீர் அனர்த்தம் ஏற்படும் மாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

fo.jpgதேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகமும் வானிலை அவதான நிலையமும் விடுத்துள்ள எச்சரிக்கைகளை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ பீ. ஜி. குமாரசிறி ‘தினகரனு’க்குத் தெரிவித்தார். அதேவேளை, பிரதேச செயலாளர்கள், கிராமசேவை அலுவலர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளின் விடுமுறைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் சாமிமலை, கவுரகலை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரமாகவுள்ள கவுரகலையில் 33 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் தற்காலிகமாக பொதுக் கட்டடமொன்றில் தங்க வைக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படு கின்றது.

இதேநேரம், கினிஸ்தன்னை பிளக் வோட்டர் பகுதியில் மண்சரிவு ஏற் பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதியிலிருந்து சில குடும்பங்கள் அப்பு றப்படுத்தப்பட்டுள்ளன. கொத்மலை, பூண்டுலோயா – தவலந்தன்னை வீதியிலும் மண்சரிவு ஏற்பட்டதால் அந்தப் பகுதியிலிருந்து ஒரு குடும்பம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மழைபெய்தால் நுவரெலியாவுக்கான புதிய வீதியின் 52ஆம் மைல்கல் பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அரசாங்க அதிபர் குமாரசிறி தெரிவித்தார்.

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய மாற்று நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவென எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு விசேட கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். பிரதேச செயலாளர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட சகலரையும் நுவரெலியா மாவட்டச் செயலகத்துக்கு அழைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இது இவ்வாறிருக்க அதிக மழை வீழ்ச்சியின் காரணமாக இந்தப் பகுதிகளில் உள்ள நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. காசல்ரீ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் இதனால் நீர்த்தேக்கத்திற்குக் கீழ்ப் பிரதேசத்தில் உள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘லைலா’ வலுவிழந்தது

லைலா புயல் வலுவிழந்து வருவதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மைய தலைவர் தியாகி தெரிவித்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து கனமழை பெய்யும் எனத் தெரிவித்தார்.

சென்னை அருகே மத்திய மேற்கு வங்க கடலில் நேற்று முன்தினம் நிலை கொண்டிருந்த லைலா புயல் வட மேற்கு திசையில் ஆந்திரா நோக்கி நகர்ந்து வலு இழந்தது. நேற்றுக் காலை ஓங்கோலுக்கு கிழக்கே 50 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டிருந்தது.

கொழும்பு – விமான நிலையத்துக்கிடையில் ஹெலிகொப்டர் சேவை

9colombo.jpgகொழும்புக்கும், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையில் விஷேட ஹெலிகொப்டர் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் குறூப் கெப்டன் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

கடும் மழை காரணமாக கொழும்பு கட்டுநாயக்க வீதி வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதையடுத்தே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். விமானப்படையின் ஹெலிடுவர்ஸ் ஹெலிகொப்டர்கள் இந்த சேவைகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் குறைந்த கட்டணமே அறவிடப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை எந்த ஒரு அவசர நிலைமைக்கும் முகம் கொடுக்கும் வகையில் விமானப்படை ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.