October

October

இந்தோனேஷியாவில் கைதான இலங்கையர்களை நாட்டுக்குத் திருப்பி அழைத்துவர அரசு நடவடிக்கை

14indonesia.jpgஇந்தோனே ஷியாவில் கைதான 260 இலங்கையர்களையும் விடுதலை செய்து இலங்கைக்கு திருப்பி அழைத்து வருவதற்கான முயற்சிகளை வெளிவிவகார அமைச்சு மேற் கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு நேற்று கூறியது. இவர்கள் குறித்து சர்வதேச புலம் பெயர் அமைப்புடன் பேச்சு நடத்தி வருவதாகவும் குறித்த இலங்கை யர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவ தாகவும் வெளிவிவகார அமைச்சு கூறியது.

அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக செல்ல முற்பட்ட இவர்கள் கடந்த 11 ஆம் திகதி இந்தோனேஷிய கடலில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் தமிழில் உரையாற்றிய போதும் கைதான 260 பேரும் இலங்கையர்கள் என இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தோனேஷியாவிலுள்ள இலங்கை தூதரகத்தினூடாக இவர்கள் பற்றிய விபரங்களை திரட்டவும் இவர்களை விடுவிக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை கனடாவுக்கு சட்ட விரோதமாக செல்ல முற்பட்ட சுமார் 76 வெளிநாட்டவர்கள் பசுபிக் கடலில் வைத்து நேற்று முன்தினம் (17) கைதாகியுள்ளனர்.  இவர்கள் இலங்கையர்களாக இருக்கலாம் என நம்பப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. இவர்கள் குறித்த தகவல்களை திரட்டவும் வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட போதும் பிரிவினைவாதம் இன்னுமுள்ளது. அரசு அதனையும் எதிர்கொள்ள தயார் – ஜனாதிபதி

290909mahinda.jpgபயங் கரவாதம் தோற்கடிக்கப்பட்ட போதும் பிரிவினை வாதம் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை. அதனையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாராகவே உள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டு மக்களின் மனதை அறிந்து செயற்படுபவரே மக்கள் தலைவராக இருக்க முடியும். நாடு பற்றிய எமது தெளிவும் முக்கியத்துவமுமே தென் மாகாண தேர்தலில் அமோக வெற்றிபெற காரணமாயமைந்தது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பயங்கரவாதத்திடமிருந்து நாட்டை மீட்டெடுத்த படை வீரர்களைக் கெளரவிக்கும் மத்திய மாகாண நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் மாத்தளை அலுவிஹாரை புனித பிரதேசத்தில் நடைபெற்றது.    இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

இம்மாத்தளை மாவட்டம் பல வரலாற்றுச் சிறப்புக்களைக் கொண்ட மாவட்டமாகும். இராவணன் சீதையை மறைத்து வைத்தது மாத்தளை மாவட்டத்தின் லக்கலையில்தான். அதே போன்று குவேனியின் பெற்றோர் வாழ்ந்ததும் இம்மாவட்டத்தில்தான் என்பதை வரலாறுகள் தெரிவிக்கின்றன. 1818 ஆம் ஆண்டு கால கட்டத்தில் கெப்பிட்டிப்பொல போராட்டம் போலவே பயங்கரவாத ஒழிப்பிலும் மாத்தளை மாவட்டம் சிறந்த பங்களிப்புக்களை வழங்கியுள்ளது. இந்த வகையில் பயங்கரவாத யுத்தத்தில் உயிரிழந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட படை வீரர்கள் இங்குள்ளவர்களே.

இந்த மாவட்டத்தில் நடைபெறும் படைவீரர் கெளரவிப்பு விழாவிற்கு நான் தென் மாகாண மக்களின் தேர்தல் வெற்றியைப் பரிசாக எடுத்து வந்துள்ளேன். ஜனாதிபதித் தேர்தலில் நாம் மூன்று இலட்சம் மேலதிக வாக்குகளையே அம்மாகாணத்தில் பெற்றோம். எனினும் இத்தேர்தலில் அம்மக்கள் ஐந்து இலட்சம் வாக்குகளை வழங்கி மூன்றில் இரண்டு பலத்தை எமக்குத் தந்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க மற்றுமொரு விடயம் என்னவென்றால், அரசாங்கத்தின் சார்பில் போட்டியிட்ட அத்தனை படை வீரர்களும் வெற்றிபெற்றுள்ளதுடன் எதிர்க்கட்சியின் சார்பில் போட்டியிட்ட படை வீரர்கள் தோல்வியுற்றதுதான்.

 நாடு பற்றிய தெளிவான நோக்கும் முக்கியத்துவமுமே இந்த வெற்றிக்குக் காரணமாகியுள்ளது. நாடு முழுவதிலும் தேர்தல்களில் 25 இலட்சம் வாக்குகளை நாம் மேலதிகமாகப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. படை வீரர்களின் அர்ப்பணிப்பினாலேயே நாம் யுத்தத்தில் வெற்றிபெற முடிந்துள்ளது. அவர்களின் சேவை அளப்பரியவை.

இதற்கு சர்வதேச உதவி, ஊடகங்கள், அரச நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் உட்பட நாட்டு மக்களின் பூரண பங்களிப்பும் கிட்டியதை நாம் குறிப்பிட வேண்டும். இது ஒருவருக்கு கிடைத்த வெற்றியல்ல; முழு நாட்டிற்கும் கிடைத்த வெற்றியாகும். பயங்கரவாதி என புலிகளை அழைக்க அஞ்சிய காலமொன்று இந்த நாட்டில் இருந்தது. புலிகளை கேர்ணல், கெப்டன் என நமது தலைவர்களும் வர்ணித்த காலம் இருந்தது. அவர்களின் மாவீரர் தினத்தை நம்மவரும் மாவீரர் தினமென்றே குறிப்பிட்டனர். அதேவேளை எமது படை வீரர்களை வீரர்கள் என குறிப்பிடாது பாதுகாப்புப் படையினர் என்றே குறிப்பிட்டனர். தேர்தல்கள் கூட புலிகளுக்குச் சார்பாகவே நடத்தப்பட்டன.

நான் பதவியேற்றதும் பாதுகாப்புச் செயலாளரை நியமித்தேன். அத்துடன் பொறுப்புகளை துணிவுடன் ஏற்கும் தலைவர்களை நியமித்தேன். ஐக்கிய இலங்கையை நோக்காகக் கொண்டே எமது செயற்பாடுகள் ஆரம்பித்தன. எனினும் எவரும் அதனை நம்பத் தயாராக இருக்கவில்லை. ஆயுத பலம், குழு பலம் இல்லாமை, நாட்டைப் பயங்கரவாதத்திற்கு எழுதிக் கொடுத்தமை போன்ற செயல்களே இளைஞர்கள் படையில் சேர முன்வராமைக்கு முக்கிய காரணம். பயங்கரவாதம் ஒழிக்க முடியாதது என்ற சர்வதேச கூற்றினைப் போன்றே எமது கிராமத்து இளைஞர்களும் சிந்திக்க முற்பட்டனர்.

அவர்களில் பலர் படையிலிருந்து விலகிச் சென்றனர். இந்நிலையை மாற்றவேண்டிய அவசியம் எமக்கிருந்தது. இளைஞர்களைப் படைக்கு அழைக்கும் போது நாம் அதற்கு முன்மாதிரியாக நடந்து கொண்டோம். எனது மகனையும் நான் படைக்கு அனுப்பினேன். அத்துடன் ‘நமக்காக நாம்’ போன்ற சிறந்த வேலைத் திட்டங்களையும் ஆரம்பித்தோம்.

அரசாங்கத்தின் நோக்கம் என்ன என்பதை நாட்டு மக்கள் தெளிவாக விளங்கிக் கொண்டதாலேயே பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் நாம் வெற்றிபெற முடிந்தது. 2005 ஆம் ஆண்டு நாம் இந்தியா சென்று பயங்கரவாதத்தின் கொடூரம் பற்றி இந்தியப் பிரதமருக்கு விளக்கினோம். உதவி கோரினோம்.

புலிகள் தாக்கினால் நாம் தாக்குவதற்காக ஆயுதம் வேண்டும் எனக் கேட்டோம். அயல் நாடுகளுடன் நாம் சுமுகமாக அணுகியே உதவிகளைப் பெற்றோம். படையினரை உச்ச அளவில் பலப்படுத்துவதை நாம் செய்தோம்.

பல சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. பல உள்நாட்டு எதிர்ப்புகளுக்கும் பதில் சொல்ல நேரிட்டது. சர்வதேசத்தை எமது பக்கம் திருப்ப நாம் கடுமையாக பாடுபட வேண்டியிருந்தது. நாம் ஒரே நோக்கத்தில் இருந்து யுத்தத்தை முன்னெடுத்துள்ளோம். அவ்வாறு நாம் செயற்பட்டிருக்காவிடில் நாட்டில் பாதியை அல்ல முழு நாட்டையும் புலிகள் கைப்பற்றியிருப்பர்.

சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும் நாம் உலகம் காணாத வெற்றியை ஈட்டினோம். இந்த யுத்தம் தோல்வியுற்றிருந்தால் இலட்சக்கணக்கான எமது மக்கள் பலியாகியிருப்பர், முதலில் எனக்கும் எனது சகோதரர்களுக்குமே கெட்ட பெயர் வந்திருக்கும்.

சிலர் அமைதிப் படையை நாட்டுக்கு அழைக்க கோரிய போதும் நாம் எமது நாட்டை ஒரு பொஸ்னியாவாகவோ கொஸோவாவாகவோ பார்க்க விரும்பவில்லை.  இலங்கையாக பார்க்க விரும்பினோம். நாம் தீர்க்கமாகச் சிந்தித்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வெற்றிபெற்றோம். எனினும் எமது படை வீரர்களை சர்வதேச யுத்த நீதிமன்றத்துக்குக் போகும் அறிக்கையை நாளை செனட் சபைக்குக் கையளிக்கவுள்ளதாக அறிய முடிகிறது.

வெற்றியின் போது படையினரைப் பாராட்டாவிட்டால், அவர்களைக் காட்டிக் கொடுத்தால் எதிர்காலத்தில் நாட்டைப் பாதுகாக்க எவரும் முன்வர மாட்டார்கள்.

அவர்களுக்கு நாம் சகலதையும் வழங்குவோம். இறுதி வீரர் களத்தில் இருக்கும் போது நாம் அவர்களுடனேயே இருப்போம். பயங்கரவாதம் முடிவுற்றாலும் பிரிவினைவாதம் இன்னும் உள்ளது. பயங்கரவாதிகளின் வளங்கள் சொத்துக்கள் பெருவாரியாக உள்ளது. அவை எப்போது பாவிக்கப்படப் போகிறதென நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எதற்கும் அடிபணியாத மனப்பாங்கு படையினருக்கு அவசியம். இறுதி மூச்சுவரை நாடு, நாட்டு மக்கள் என்ற மன நிலை அவசியம். அப்போதுதான் நாட்டு மக்களின் கெளரவம் கிட்டும்.

படையினரில் 80க்கும் மேற்பட்டோர் கிராமத்தவர்களே. அவர்களின் எதிர்காலத்தை சுபீட்சமாக்கும் சகல செயற்பாடுகளையும் நாம் மேற்கொள்வோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கடலுக்கு அடியில் அமைச்சரவைக் கூட்டம் – மாலைதீவில் புதுமை நிகழ்ச்சி

2222maldives.jpgமாலைத்தீவு அமைச்சரவை கூட்டம், கடலுக்கு அடியில் நேற்று முன்தினம் வெற்றிகரமாக நடந்தது. உலகிலேயே கடலுக்கு அடியில் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
 
உலகம் வெப்பமயமாகி வருவதால் துருவப் பகுதியில் பனிமலைகள் உருகி, கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் வரும் 2100ஆம் ஆண்டில் மாலத்தீவு கடலில் மூழ்கிவிடும் என,  ஐ.நா., சுற்றுச்சுழல் அமைப்பு எச்சரித்திருந்தது.
 
ஏனெனில் கடல் மட்டத்தில் இருந்து நூறடிக்கும் குறைவான உயரத்தில் உள்ளது இத்தீவு .எனவே, இந்த பயங்கரத்தை தடுக்க உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும், என்பதை வற்புறுத்துவதற்காக நேற்று முன்தினம் மாலத்தீவு அமைச்சரவைக் கூட்டம் கடலுக்கு அடியில் நடந்தது.
 
தலைநகர் மாலேவில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிரிபுஷி தீவில்,  ஆறு மீட்டர் ஆழத்தில் அதிபர் முகமது நஷீத்(42) தலைமையில் கடலுக்குள் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
 
அமைச்சர்கள் அனைவரும் கடலில் முத்தெடுக்கும் வீரர்களை போன்ற உடையுடன் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 45 நிமிடம் இவர்கள் கடலுக்கு அடியில் இருந்தனர்.
 
அமைச்சரவைக் கூட்டம் 25 நிமிடங்கள் நடந்தது.”உலகம் வெப்பமடைவதால் எங்கள் நாடு கடலில் மூழ்குவதிலிருந்து காப்பாற்ற உலகத் தலைவர்கள் முன்வரவேண்டும்’ என, இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.
 அமைச்சர்கள் தங்கள் கையில் இருந்த வெள்ளைப் பலகையில் எழுதி தங்கள் கருத்தை தெரிவித்துக் கொண்டனர்.கடலுக்கு அடியில் தங்கியிருப்பதற்காக,  இந்த அமைச்சர்கள் கடந்த இரண்டு மாதங்களாக கடலில் மூழ்கும் பயிற்சி பெற்றனர்.
 
மாலைத்தீவு நூற்றுக்கும் அதிகமான தீவுகளை உள்ளடக்கியது. இதில் 90 சதவீத தீவுகள் கடல் மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் உயரத்தில் உள்ளது.

அக்மீமன தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து முத்துஹெட்டிகம நீக்கம்.

191009nisantha_muthuhetti.jpgதென் மாகாண சபை உறுப்பினர் நிசாந்த் முத்துஹெட்டிகம, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அக்மீமன தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து இருந்து நீக்கப்பட்டுள்ளார். இத்தகவலை ஐ.ம.சு.மு. பொதுச் செயலாளர் மைத்திரிபாலா சிறிசேன தெரிவித்தார்.

இவர் மீது மீண்டும் ஒழுக்காற்று முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து இதன்மூலம் ஜனாதிபதி மகிந்த ராஐபக்ஷவின் அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படும் என்ற காரணத்தால் இவரை அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவரின் இடத்துக்குக் காலஞ்சென்ற அமைச்சர் ரிச்சர்ட் பத்திரனவின் மகன் டாக்டர் ரமேஸ் பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தில் நடிகை அனார்கலியுடன் மோதல்களை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

ஏறாவூர் மாணவர் சுகவீன சம்பவம்: விசாரணைகளை துரிதப்படுத்தி அறிக்கை

ஏறாவூர் மீராகேணி மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் கடந்த புதன்கிழமை போஷாக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டதால் மாணவர்களுக்கு சுகவீனம் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக சுகாதார அதிகாரிகள் மட்டத்திலான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை கோருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உறுதியளித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டமொன்று நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) மாலை ஏறாவூர் மாவட்ட வைத்திய சாலையில் நடைபெற்றது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். எஸ். சுபைரின் அழைப்பின்பேரில் இங்கு நேடியாக வருகைதந்த முதலமைச்சர் சம்பவம் தொடர்பாக அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டார்.

ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம். எச். எம். தாரிக், மாவட்ட வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் ஏ. சீ. எம். பbல், வலயக் கல்விப் பணிப்பாளர் யூ. எல். எம். ஜெயினுதீன் உட்பட பாடசாலை அதிபர் கே. காலிதீன், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள், வைத்தியசாலை அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமது விளக்கங்களை முன்வைத்தனர். கூட்டத்திற்கு தலைமைவகித்த மாகாண சபை உறுப்பினர் எம். எஸ். சுபையினரினால் இந்த விடயம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஆவண செய்யுமாறு கோரும் மகஜரொன்று முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட போஷாக்கு மாத்திரைகளும் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டன.

இவற்றைப் பொறுப்பேற்றுக் கொண்ட முதலமைச்சர் இது தொடர்பான தொடர் விசாரணைகளை மேற்கொண்டு அதிகாரிகளிடம் அறிக்கை கோருவதாகவும், பாடசாலையை எவ்வித இடையூறுகளும் இன்றி தொடர்ந்து இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) தொடக்கம் பாட சாலையை சுமுகமான முறையில் வழமைபோன்று ஆரம்பிப்பது எனவும், மாணவர்கள், பெற்றோர் கள், மற்றும் ஊர்மக்களுக்கு இது பற்றி விழிப்புணர்வூட்ட நட வடிக்கை எடுப்பதெனவும் தீர்மானி க்கப்பட்டது.

கிண்ணியா – சீனக்குடாவை இணைக்கும் பாலம் நாளை ஜனாதிபதியால் திறப்பு

121009.jpgஇலங் கையின் மிக நீளமான கடல்மேல் பாலமாகக் கருதப்படும் கிண்ணியாவையும், சீனக்குடாவையும் இணைக்கும் பாலம் நாளை 20 ஆம் திகதி வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்படவிருக்கின்றது.

495 மீற்றர் நீளமும் 10 மீற்றர் அகலமும் கொண்ட இப்பாலம் சவூதிய அரேபிய அரசாங்கத்தின் 710 மில்லியன் ரூபா கடனுதவி மூலம் நிர்மாணிக்கப் பட்டிருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இப்பாலம் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்படவுள்ளது. கிண்ணியா பிரதேச மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வந்த போக்குவரத்து பிரச்சினை இப்பாலம் திறக்கப்பட்டவுடன் தீர்த்து வைக்கப்படுகின்றது.

ஏ(எச்1 என்1) பீதி: லைசியம் சர்வதேச பாடசாலைகள் பூட்டு

பன்றிக்காய்ச்சல் என்கிற புதிய இன்புளுவென்ஸா ஏ(எச்1 என்1) நோய் காரணமாக லைசியம் சர்வதேசப் பாடசாலை அதன் நுகேகொடை மற்றும் வத்தளை கிளைப் பாடசாலைகளை உடனடியாக மூடியுள்ளது.

லைசியம் நுகேகொடை பாடசாலை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையும், வத்தளை கிளைப் பாடசாலை எதிர்வரும் 21 ஆம் திகதி வரையும் மூடப்பட்டுள்ளது.

கனடாவுக்குள் கப்பல் மூலம் பிரவேசிப்பதற்கு முயற்சித்த 76 இலங்கையர்கள் கைது

181009canada.jpgஇலங்கை அகதிகள் என்று சந்தேகிக்கப்படும் ஒரு குழுவினர் சென்ற கப்பல் ஒன்றை கடந்த சனிக்கிழமை கனடிய பொலிஸார் பிரிட்டிஷ் கொலம்பியா கடலின் கனடா கடற்பரப்பிற்குள் வைத்து கைப்பற்றியுள்ளார்கள். கப்பலில் உள்ள அகதிகள் எங்கிருந்து புறப்பட்டார்கள் என்று உடனடியாக தெரியவில்லை.

கனடாவின் கடற்படை பிரிவினரதும் இரண்டு பொலிஸாரினதும் பாதுகாப்புடன் கப்பல் தற்போது அகதிகளோடு விக்ரோறியாவிலுள்ள ஒரு துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 76 பேருடன் வந்த “ஓசன் லேடி’ என்ற பெயர் பொறிக்கப்பட்ட இக் கப்பல் சனிக்கிழமை காலை கனடிய கடல் பிரதேசத்திற்குள் பிரவேசித்தது என்று கனடிய பொது பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் வேன் லோன் தெரிவித்தார். எங்கிருந்து இக்கப்பல் வந்தது என்று கேட்ட போது ஆரம்பத்தில் இலங்கையிலிருந்து வந்ததாக கருதப்பட்டது. ஆனால் இன்னமும் அது ஊர்ஜிதம் செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.

வன்னி தேடுதலில் பெருமளவு ஆயுதங்கள் கண்டுபிடிப்பு – பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம்

வன்னிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில் பெருமளவு ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

அக்கராயன் குளம் பகுதியில் மேற்கொண்ட தேடுதல்களில் 25 மிதி வெடிகள் மீட்கப்பட்டன.

புதுக்குடியிருப்பு பகுதியில் நடத்திய தேடுதலில் ஆர். பி. ஜி. ரக குண்டொன்றும் 75 ரவைகளும் ரீ-56 ரக துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா பகுதியில் நடத்திய தேடுதலில் 11 கிளைமோர் குண்டுகள், ரி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்கள் என்பன கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தேடுதலை நடத்தியுள்ளன.

இதேவேளை திருகோணமலை மலையூற்று பகுதியில் கைக்குண்டொன்றுடன் ஒருவர் கைதாகியுள்ளார்.

தெற்கு வசிர்ஸ்தானில் சண்டை தொடர்கிறது

181009taliban.jpgதெற்கு வசிர்ஸ்தானில் தலிபான்கள் மற்றும் அல் கொய்தாவினர் வலுவாக இருக்கும் பகுதியில் இரண்டாவது நாளாக இராணுவத்தினருக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகின்றது.

சண்டையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மாறுப்பட்ட கருத்துக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இருதரப்பும் எதிர்தரப்புக்கு அதிக சேதம் ஏற்பட்டு இருப்பதாக கூறுகின்றன.

இந்த பிராந்தியத்தின் வட பகுதியில் கவனத்தை செலுத்தி வரும் இராணுவம், வான் தாக்குதல் முறைகளையும் ஆர்டிலரிகளையும் பயன்படுத்தி வருகிறது. ஆனால் பலத்த எதிர்ப்பு காணப்படுகிறது. சில இடங்களில் வீதிகளில் கூட சண்டை இடம்பெற்று வருகின்றது.

இந்த பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இன்னும் பலரும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.