29

29

யுத்தத்தில் இராணுவத்திற்கு கிடைத்த வெற்றி அதிஷ்டலாப சீட்டில் கிடைத்த வெற்றியல்ல- ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவில் தெரிவிப்பு

இராணுவத்தின் இந்த வெற்றி மிகவும் இலகுவாக, அதிஷ்டலாப சீட்டில் அதிர்ஷ்டம் கிடைத்தது போலானது என எடைபோட்டு விடக்கூடாது. அந்த வெற்றியின் உண்மை தன்மை குறித்து விடுதலைப் புலிகளுடனான போரில் ஈடுபட்டிருந்தோருக்கே தெரியும் என்று பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான மோதலின் போது சுமார் 5200 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் படையினரில் 28000 பேர் காயமடைந்தனர். இராணுவத்தினரும் பொதுமக்களும் இணைந்திருக்காவிடின் என்னதான் இராணுவ தளபதியாக இருந்தாலும் , அரசியல் வாதியாக இருந்தாலும் இந்த வெற்றியை பெற்றுக்கொண்டிருக்கமுடியாது என்றும் அவர் சொன்னார். அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள விகாரையொன்றுக்குச் சென்று உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் கூறியதாவது :

நான் முதன் முறையாக பௌத்த விகாரையொன்றில் உரை நிகழ்த்துகின்றேன். அதிலேதும் பிழை இருந்தால் மன்னிக்கவும். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் நான் என்ன நினைக்கின்றேன்? என்பது குறித்து இந்த விகாரையின் பிரதம தேரர் தர்மசிறியுடனான சந்திப்பின் போது தெளிவுபடுத்தினேன். அங்கு இதுவரையிலும் என்ன நடந்தது. எதிர்காலத்தில் என்ன நடக்க வேண்டும் என்பது தொடர்பில் அங்கு கலந்துரையாடினோம். அமெரிக்காவுக்கு நான் கடந்தமுறை வந்திருந்தபோது என்னைச் சந்தித்த சிலர் இன்றும் இவ்விடத்தில் கூடியிருக்கக் கூடும். அன்று நான் அவர்களிடம் என்ன உறுதியளித்தேன் என்று அவர்களுக்கு தெரியும் . இந்த வருடத்துக்குள் அதாவது 2009ஆம் ஆண்டுக்குள் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவேன் என்று நான் அன்று அவர்களிடம் உறுதியளித்தேன். அந்த உறுதிமொழியின் பிரகாரம் அதனை கடந்த மே மாதம் 18 ஆம் திகதி நிறைவேற்றினேன். அதற்காக நாம் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். நாட்டிற்குள் ஊடுருவியிருந்த பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து எதிர்கால சந்ததியினர் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழ வழிசமைக்கக்கூடிய நாடொன்றாக உருவாக்குவோம் என்னும் உறுதியினை நிறைவேற்றினோம்.

உறுதி மொழிகளை நிறைவேற்றுவதற்காக நாம் பல அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டோம். இந்த வெற்றி மிக இலகுவாகப் பெறப்பட்டதல்ல. அதற்காக பெரும் கஷ்டங்களைச் சந்தித்தோம். தைரியமாகச் செயற்படுவதற்காக பல பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டோம். அதன்மூலமாகவே இந்த வெற்றி கிட்டியது. நாட்டிலுள்ள பெருமளவானோருக்கு இந்த வெற்றி இலகுவாகக் கிடைத்ததொன்றாகத் தோன்றுகிறது. அதனால் தான் அந்த வெற்றியைப் பங்கிட்டுக்கொள்வதற்கு பலரும் முயற்சிக்கின்றனர். யுத்த வெற்றி தொடர்பில் பலரும் பலவற்றை பேசுகின்றனர். ஆனால் அந்த வெற்றியின் உண்மை தன்மை குறித்து விடுதலைப் புலிகளுடனான போரில் ஈடுபட்டிருந்தோருக்கே தெரியும்.

வெற்றியை எவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் பெற்றுக் கொண்டோம் எனும் உண்மையை அவர்கள் மாத்திரமே அறிந்திருக்க முடியும். அதிலும் விஷேடமாக இராணுவத்தினரே அறிந்திருக்க முடியும். இராணுவத்தினரின் அர்ப்பணிப்பு தொடர்ப்பில் இந்த இடத்தில் நான் தெரிவிக்காவிட்டால் அது எனது சேவைக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும்.

யுத்த காலத்தின் போது இராணுவத்தில் சுமார் ஒரு இலட்சம் பேர் இணைந்துகொண்டனர். அத்தொகையினர் இணைந்திருக்காவிடின் நாம் இன்னமும் வவுனியா பிரதேசத்திலேயே நின்றுகொண்டிருந்திருப்போம். அங்கிருந்து முன்னோக்கிச் செல்ல முடியாது போயிருக்கும். பொதுமக்கள் எமக்கு வழங்கிய ஆசிர்வாதம் மற்றும் கௌரவம் போன்றவையே எமது வெற்றிக்கு ஊன்றுகோலாக விளங்கியது.

இராணுவத்தில் இணைந்துகொண்டவர்களில் சுமார் 80ஆயிரம் பேர் இன்னமும் சேவையில் ஈடுபட்டுள்ளனர். ஏனைய 20 ஆயிரம் பேர் விடுமுறை இல்லாமையால் விட்டு சென்றிருக்கலாம். இராணுவத்தில் இணைந்துகொண்ட வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இல்லாவிடின் என்னதான் இராணுவ தளபதிகளாக அல்லது அரசியல்வாதிகளாகவே இருந்திருந்தாலும் இந்த வெற்றியினை அடைந்திருக்க முடியாது. இந்த காலகட்டத்திற்கு முன்னரும் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு செய்யும் யோசனை இருந்தது. இருப்பினும் வருடத்துக்கு 3000 பேரையேனும் இணைத்துக்கொள்ள முடியாது போயிற்று. ஆனால் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின் போது வருடத்துக்கு 40ஆயிரம் பேர் இராணுவத்தில் புதிதாக இணைந்துகொண்டனர் அதுவும் நாம் பெற்றுக்கொண்ட வெற்றி என்றே கூறவேண்டும்.

யுத்த வெற்றியின் போது புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார், அதனால் அனைத்தும் முடிந்துவிட்டது எனக்கூறி சந்தோசமாக காலத்தை கழிப்பதை நாம் விரும்பவில்லை. பிரபாகரன் என்றொருவர் இருக்கவில்லை. கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் அவர் உருவாக்கப்பட்டார். இதனை மறந்துவிடுவதற்காக எமது பிரஜைகள் கடந்த 30 வருடங்களாக எவ்வளவு கஷ்டப்பட்டனர். நாம் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டதுடன் சவால்களுக்கும் முகம்கொடுத்தோம். அவற்றிலிருந்து விடுதலைபெற எவ்வளவு கஷ்டப்பட்டோம். அர்ப்பணிப்புக்களை செய்தோம் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

எமது அர்ப்பணிப்புகளை இந்த பரம்பரையினர் மறந்தால் அடுத்த பரம்பரையினர் கட்டாயமாக இவ்வாறான பிரபாகரன்களை சந்திப்பார்கள் என்பது எனது அதீத நம்பிக்கையாகும். அதனால், தேரர் என்னிடம் சொன்னது போன்று அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஒற்றுமையை கட்டிக்காப்பது மிக மிக அவசியமாகும். அவ்வாறாயின்,அனைத்துத் தரப்பினரும் அனைவரது தேவைகளையும் கருத்திற் கொண்டு எல்லாப் புறத்திலிருந்தும் வரும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு உண்மையானவர்களாக செயற்பட வேண்டும். அப்படி நடந்தால் தான் எமது நாட்டை தொடர்ந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன்.

எம்மால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டிய சேவைகளை நாம் சரிவர செய்து வருகின்றோம். சீருடையணிந்த ஜெனரல்கள் இந்த சேவையிலேயே இருந்து விடமுடியாது. நான் ஓய்வு பெறும் வயதையும் தாண்டி மேலதிகமாக 4 வருடங்கள் சேவையாற்றியுள்ளேன். இருப்பினும் நாடு முழுமையானளவில் பயனடைந்து விட்டது என்று கூறுவதற்கில்லை. பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்பதால் நாட்டின் பாதுகாப்பு 100 வீதமாக முழுமையடைவில்லை. யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த பொதுமக்கள் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கு தேவையான பாதுகாப்பு நடைமுறைகளை முன்னெடுப்பதன் மூலமே பயங்கரவாதம் எனும் நோய்க்கிருமி மீண்டும் நுழைய விடாமல் தடுக்க முடியும். நலன்புரி முகாம்களில் தற்போது தங்கியுள்ள பொதுமக்களுடன் ஆயிரக்கணக்கான புலி உறுப்பினர்களும் தங்கியுள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் அதேவேளை, அப்பாவிப் பொதுமக்களை மீளக் குடியேற்றி அவர்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகளை முன்னெடுப்பதால் மட்டுமே நாம் வெற்றிகொண்ட யுத்தத்தில் வெற்றியை கண்டோம் என்று மகிழ்ச்சியடைய முடியும்.அதனால் அந்த கொள்கையை நோக்கி நாம் பயணிக்கவேண்டும்.

நாட்டின் அபிவிருத்திக்கும் பாதுகாப்பிற்கும் எடுக்கக்கூடிய நடவடிக்கை இருக்குமாயின் நாட்டின் பிரஜை என்றவகையில் அதனை நடைமுறைப்படுத்துவது அவர்களின் கடமையாகும். பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றி தொடர்பில் கதைத்தே காலத்தை கழிப்பதை விட எதிர்காலத்தில் என்ன நடக்கபோகிறது என்பது தொடர்பில் கவனம் செலுத்துவது மிக முக்கியமானதாகும்.

யுத்த காலத்தின் போது நாட்டின் எதிர்காலம் குறித்து கவலையுற்றவாறே எதிர்வரும் காலங்களிலும் நாடு தொடர்பில் கவனம் செலுத்தி அதனை சரியான திசையில் கொண்டு செல்வதா? அல்லது கொண்டு செல்லவேண்டுமா? நாட்டிற்கான பாதுகாப்பை வழங்குவதா? என்பது தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டும். அதன் மூலம் நாட்டிற்கு சேவையாற்றினோம் என்ற திருப்தியை அனைவரும் உணரவேண்டும்

வீரகேசரி நாளேடு 10/29/2009

தென் மாகாண சபை உறுப்பினர் இன்று சத்தியப் பிரமாணம்

220909southern_province.jpgதென் மாகாண சபை முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் இன்று (29) பதவிப் பிரமாணம் செய்கின்றனர். முன்னாள் முதலமைச்சர் சான் விஜேலால் த சில்வா மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ளதோடு முன்னாள் அமைச்சர்களான ஹேமால் குணசேகர, வீ. கே. இந்திக, யூ. ஜி. டீ. ஆரியதிலக மற்றும் மாத்தறை மாவட்ட ஐ. ம. சு. முன்னணி உறுப்பினர் பிந்து வீரசிங்க (கம்யூனிஸ்ட் கட்சி) ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

ஏ – 9 ஊடாக அம்பியூலன்ஸ் சேவை நேற்று ஆரம்பம்

ஏ -9 தரை வழியினூடாக நோயாளிகளை சிகிச்சைக்காகக் கொழும்புக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அம்பியூலன்ஸ் மூலம் கொண்டு செல்லும் இந்த நடவடிக்கையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று ஆரம்பித்து வைத்தார். ஏ- 9 தரைப்பாதை ஊடாக வரையறைக்கு உட்பட்ட நிலையில் தற்போது பயணிகள் போக்குவரத்து உட்பட ஏனைய சில போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

ஆயினும் தற்போது அம்பியூலன்ஸ் வண்டிகள் மூலம் நோயாளர்களை யாழ் குடாநாட்டிலிருந்து பிற மாவட்டங்களுக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கும் நடவடிக்கையும் அமைச்சர் டக்ளஸ் தேவான ந்தாவினது பெரு முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சென் ஜோன்ஸ் சேவைக்குரிய அம்பியூலன்ஸ் வண்டி மூலம் நேற்று இ. சீவரத்தினம் எனும் நோயாளர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

டேவிட் செப்பர்ட் காலமானார்

இங்கி லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல முன்னாள் சர்வதேச கிரிக்கெட் நடுவர் டேவிட் ஷெப்பர்ட் மரணம் அடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட காலம் சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் நேற்று பிரிந்தது.

291009david-shepherd.bmp68 வயதான டேவிட் ஷெப்பர்ட் 1983 ஆம் ஆண்டு முதல் 2005 ம் ஆண்டு வரை 172 ஒரு நாள் போட்டி மற்றும் 92 டெஸ்ட் போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றி இருக்கிறார்.

இதில் 3 உலக கோப்பை போட்டி இறுதி ஆட்டமும் அடங்கும். 282 முதல் தர போட்டியில் விளையாடியுள்ள ஷெப்பர்ட் 1981 ஆம் ஆண்டில் முதல் தர போட்டியில் நடுவராக நியமிக்கப்பட்டார். 2005 ஆம் ஆண்டில் சர்வதேச நடுவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

சட்டியைப் பார்த்துப் பானை ….. : பா ஜெ வேந்தன்

Hunting_Dogsஅமைச்சர் முரளீதரன், முதலமைச்சர் சந்திரகாந்தன் அப்பதவிக்கு லாயக்கு அற்றவர் என்று டெய்லி மிரர் க்கு கொடுத்த பேட்டி, முதலமைச்சரின் லாயக்கைவிட அமைச்சர் கருணாவின் லாயக்கையும் அரசியல் சாணக்கியத்தையும் அப்பட்டமாகக் காட்டிவிட்டது. இன்று சிறிலங்காவில் தகுதி அடிப்படையில் பதவிகள் வழங்கப்பட்டால் முக்கால்வாசிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிராமத்து குடும்பக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வேலைக்கே தெரிவு செய்யப்பட மாட்டார்கள் என்பது நிச்சயம். இதில் சிங்கள அரசியல்வாதிகள் மட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ‘டாக்டர்’ மேர்வின் சில்வா மற்றும் தமிழ் அரசியல் மட்டத்தில் Tamil Nutters Alliance (TNA) அனைத்து உறுப்பினர்களையும் குறிப்பிடலாம். இதில் ரிஎன்ஏ சிவாஜிலிங்கத்தை தனியாக எடுத்தப் பார்த்தால் வல்வெட்டித்துறை தாச்சி மறிப்பு விளையாட்டிற்குக் கூட தலைவராக வரத் தகுதியற்றவர்.

‘இன்று வடக்கு கிழக்கு மாகாணத்தில் தகுதியற்ற அதிகாரிகள் தான் இருக்கிறார்கள் ஆதலால் நான் கொழும்பிலிருந்து அனைத்து நிர்வாகத்தையும் செய்ய வேண்டி இருக்கின்றது’ என கிழக்கின் உதயம் நிர்வாக அதிகாரி கருத்துத் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பிலிருந்து தமது அதிகார ஆதிக்கத்தை வடக்கு கிழக்கில் தொடர இவ்வாறான உதாரணங்கள் பாவிக்கப்படுவதும் அவதானிக்கப்பட வேண்டிய விடயம். சிறிலங்காவில் தகுதி அடிப்படையில் அரசியல் நியமனங்கள் நடைபெறுவது நம் வாழ்நாளில் இடம்பெறப் போகும் விடயமல்ல. (நீங்கள் இன்னமும் பிறக்காமல் இருந்தாலொழிய.) ஆதலால் அந்த ஆசையை இப்போதைக்கு விட்டுவிடுவோம்.

தமிழ் இனத்தின் ‘ஒப்பற்ற தீர்க்கதரிசனமான தலைவர்’ மறைந்து சில மாதங்கள் தான் ஆகின்றது. இச்சில மாதங்களுள் சகல விடயங்களும் எதுவிதத் தடையுமின்றி சுமூகமாக இயங்கும் என எவரும் எதிர்பார்க்க முடியாது தான்.

வடக்கில் நிலை இப்படிப் பரிதாபமாக இருக்கும் போது கிழக்கு ஏதோ ஜனநாயகத்தில் திளைத்து இருந்தது என யாரும் கருதிவிட முடியாது. கொலை கொள்ளை ஆட்கடத்தல் தொடக்கம் அனைத்து அராஜகங்களும் நடந்த வண்ணம் தான் இருக்கின்றது. 2005க்கு முன் சாரத்துடனும் கலுசானுடனும் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களையும் காடைத்தனங்களையும் இப்போது கோட்சூட் போட்டுக் கொண்டு செய்கின்றார்கள். ‘தொட்டில் பழக்கம் விடிஞ்சால் போய்விடுமா’ என்று எங்கள் பெரியோர்கள் தெரியாமலா சொல்லி வைத்திருக்கிறார்கள்.

எமது எல்லாத் தலைவர்களையும் ஒன்றாக ஒப்பிட்டால் தந்தை செல்வா, அண்ணன் அமீர், தம்பி பிரபா, ஐயா சம்பந்தர், கடிதப் புகழ் சங்கரி, வெத்து வேட்டுச் சித்தர், அறுவைச் சுகு என்று ஒப்பிட்டளவில் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே ஒப்பீட்டளவில் தமிழரின் பிரச்சினையை யதார்த்தமாகப் புரிந்துகொண்டு  உறுதியுடன் எதிர்கொண்டார் என்று கூற வேண்டும். அதனால் தான் பல கொலை முயற்சிகளில் இருந்தும் சில தற்கொலை முயற்சிகளில் இருந்தும் தன்னைத் தற்காத்துக் கொண்டார். இன்று அமைச்சர் கருணா முதுகெலும்பு முறிகிற வரைக்கும் குனிந்ததால் டக்ளஸ் தேவானந்தாவும் தன்னைத் தக்க வைக்க சற்று வளைந்து கொடுக்க வேண்டி இருந்தது. அதனால் தான் வீணையை மீட்டியவர் வெற்றிலை போட வேண்டி வந்தது.

மறைந்த தலைவர் செல்வநாயகம் கூட வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் ‘எமது தமிழ் இனத்தை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று கூறியதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. தந்தை செல்வாவின் இந்தக் கூற்று அவரின் இயலாமையையும் தான் பல சக்திகளால் நெருக்கப்படுவதையும் அம்பலமாகக் காட்டி உள்ளது. நான் டக்ளஸ் தேவானந்தா உட்பட பல தலைவர்களை 1985 முதல் சந்தித்து வருகின்றேன். 2005ல் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்த போது தான் முதற் தடவையே சந்திரிகாவுடன் இணையாததை ஒரு சுயவிமர்சனக் கண்ணோட்டத்தில் கூறி வைத்தார். நான் இதை எழுதுவதன் மூலம் டக்ளஸ் தேவானந்தா ஏதோ தமிழ் இனத்தின் ஒப்பற்ற தீர்க்க தரிசனமான தலைவர் தூய்மையான தலைவர் என்று அர்த்தமல்ல. டக்ளஸ் தேவானந்தா ‘ஒரு நல்ல பிரபாகரன்’ என்று வேண்டுமென்றால்  சொல்லலாம். அவர் ஒருவகை புலி மார்க்ஸிஸ்ட் ‘தோழர்’. அவரிடம் ஒரு தெளிவான கருத்து இருந்ததை குறிப்பிட முனைகிறேன். மற்றவர்கள் அரச பாதுகாப்பிலும் நிதியிலும் இருந்துகொண்டு நாங்கள் அரசுடன் இல்லை என்று தமிழிலும் நாங்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம் என்று ஆங்கிலத்திலும் றீல் விடுவது போல் டக்ளஸ் தேவானந்த செயற்படவில்லை.

சுருக்கமாகக் கூறின் எமது ஒப்பற்ற தலைவர் மேதகு முழுத் தமிழ் இனத்தையும் சிங்கள ஆட்சியாளர்களின் முன்னிலையில் கைகட்டிப் பிச்சை கேட்கும் தரத்திற்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டு கறுத்த கோவணத்துடன் விடைபெற்றுச் சென்றுவிட்டார். இந்நிலையில் ஒப்பீட்டளவில் வலுவான தலைமையை டக்ளஸ் தேவானந்தா கொண்டுள்ளார்.

இந்த 50 வருட தமிழ் அரசியல் வரலாற்றில் Tamil Nutters Alliance (TNA) தமிழ் நட்டுக் கழன்றவர்களின் கூட்டணி போன்ற பினாமி அரசியல்வாதிகளை தமிழ் இனம் ஏற்றுக்கொள்வது ஆபத்தானது. பிரபாகரன் தமிழ் இனத்தின் சாபக்கேடு என்றால் இந்தத் தமிழ் நட்டுக் கழன்ற கூட்டணியினர் சாத்தன்கள்.

இன்று வடக்கு கிழக்கு அதிகார நிர்வாக அமைப்பு பெரும்சவால்களை எதிர்நோக்குகின்றது. அரசியல் சீராகவில்லை. 250 000 பேர் வன்னியில் உட்பட வடக்கு கிழக்கில் 600 000 தமிழ் முஸ்லீம் மக்கள் அகதிகளாக உள்ளனர். பிரச்சினைகள் மலை உயரத்திற்கு இருக்கின்றது. சுமூகநிலை திரும்ப 10 வருடங்கள் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வடக்கு கிழக்கு இப்படியான நிலையில் இருக்க லண்டன் உட்பட வெளிநாடுகளில் இருந்து சிலர் உதவி செய்கிறேன் பேர்வழி என்று இலங்கைக்கு சென்றுள்ளனர். ஆலோசகர் பதவிகளையும் கட்சிப் பதவிகளையும் அலங்கரிக்கத் தொடங்கிவிட்டனர். அங்குள்ளவர்கள் தான் தகுதியற்றமுறையில் நியமிக்கப்படுகிறார்கள் என்றால் வெளிநாட்டில் இருந்து செல்பவர்களிடம் என்ன வாழுது. அவர்களுக்குள்ள ஒரே தகுதி கடந்த 30 வருடமாக மாற்றுக் கருத்தும் மாற்று அரசியலும் பேசி ரீல் விட்டது மட்டுமே. புலம்பெயர்ந்த நாடுகளில் அவர்களுக்கு ஒப்பீட்டளவில் அதிக வாய்ப்புகள் இருந்த போதும் அவர்களால் சமூகத்திற்கு எவ்வித நன்மையும் கிட்டவில்லை என்பது மட்டுமல்ல அவர்களால் அவர்களையே முன்னெற்றிக் கொள்ளவும் முடியவில்லை. பெரியவர்கள் சொல்வார்களே முயல் பிடிக்கப் போகிற பிராணியின் மூஞ்சையைப் பற்றி. அது தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றது. பலசரக்குக் கடை கொம்பியூட்டர் கடை சொலிசிட்டர் கடை இதெல்லாம் செய்து பார்த்து சரி வராத ஒரு கோஸ்டி கிழக்கிலும் வன்னியிலையும் யாழிலையும் தலைவர்களாகவும் ஆலோசகர்களாகவும் படையெடுக்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து கிழக்கு வன்னி யாழ் மக்களை வழிநடத்தவும் வழிகாட்டவும் போகின்ற இவர்கள் இவ்வளவு நாளும் புலத்தில் செய்தவற்றை பட்டியல் போட்டால் எல்லாம் வெளிக்கும்.

அம்மண்ணோடு ஒன்றாக் கலந்த அந்த மக்களைப் பலப்படுத்தி அங்குள்ள இளையவர்களின் திறமையை இனம்கண்டு அவர்களை பொறுப்புகளில் அமர்த்துவதை விட்டுவிட்டு வெளிநாடுகளில் உள்ள பெயில் ஓடருக்கு கடையை மூடிய, லோ சொசைட்டிக்கு பயந்து சொலிசிட்டர் கடையை மூடி தங்களிடம் வந்த அகதிகளைத் தவிக்கவிட்ட ‘சோம்பேறிக் கோஸ்டியை’ வைத்துக் கொண்டு அம்மக்களை வழிநடாத்துவதும் வழிகாட்டுவதும் பாரிய ஆபத்தினை விளைவிக்கும். ஆலோசனைணையும் வழிகாட்டல்களையும் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த வல்லுனர்களிடம் பெற வேண்டும். டாக்குத்தர் சொலிசிட்டர் என்றதற்காக பதவிகளில் இருத்தப்படாது.

குறிப்பு : இக்கட்டுரையாளர் புனைபெயரில் கட்டுரையைத் தந்துள்ளார். ஆயினும் கட்டுரையாளர் தேசம்நெற் ஆசிரியர் குழுவிற்கு தன்னை வெளிப்படுத்தி அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.