20

20

யாழ். குடாவைச் சேர்ந்த 500 பேர் பொலிஸ் சேவையில் – பயிற்சிகளை முடித்துக் கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள்

யாழ். குடாநாட்டைச் சேர்ந்த 500 பேர் பொலிஸ் சேவையில் கடமையாற்றுதற்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன தெரிவித்தார். வழக்குகளை நெறிப்படுத்துதல் தொடர்பாக பயிற்சிகளை முடித்துக் கொண்ட 41 பொலிஸ் அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் நேற்று கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில். ஏ-9 வீதியின் ஊடாக சென்று யாழ். குடா நாட்டைச் சேர்ந்தவர்களை பொலிஸில் இணைத்துக் கொள்வதற்கான தேர்வு நடத்தப்பட்டமை இதுவே முதற் தடவையாகும்.

கிழக்கை போன்று வடக்கிலுள்ள மக்களும் தமது சொந்த மொழியைப் பயன்படுத்தி பொலிஸாரிடமிருந்து சேவைகளை உரிய முறையில் பெற்றுக் கொள்ள இது வழிவகுக்கும்.  வடக்கிற்கென 12 பொலிஸ் நிலையங்கள் நிறுவப்படவுள்ளதுடன் அவற்றில் 8 பொலிஸ் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

கல்லடியில் தமிழ் மொழி பயிற்சிக்கென பொலிஸ் பயிற்சி கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது போன்று வடக்கிலும் பயிற்சி கல்லூரி ஒன்று அமைக்கப்படும்;.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இளங்ககோன், பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான அசோக விஜேதிலக்க, லக்கி பீரிஸ், அநுர சேனநாயக்க, பிரசன்ன நாணயக்கார உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

யாழ். பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு அமைச்சர்கள் நியமனம் – மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளைக் கவனிக்கவென ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கும் ஒவ்வொரு அமைச்சர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதற்குத் தலைமை தாங்குவார். யாழ். குடாநாட்டில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக நேற்றுக்காலை கச்சேரியில் மாநாடொன்று நடந்தது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில்,  கொழும்பிலிருந்து வருகைதந்த எட்டு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அமைச்சர்கள் மஹிந்தானந்த அலுத்கமகே, ரோஹித அபேகுணவர்த்தன,  பிரதியமைச்சர்கள் வடிவேல் சுரேஷ், ஹஸைன் பைலா,  மஹிந்த அமரவீர,  பிரேமலால் ஜயசேகர உட்பட ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறியும் இதில் பங்குபற்றினார். மீள்குடியேற்ற நடவடிக்கைகளை கவனிக்க வாரா வாரம் கூடி நடவடிக்கைகளை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மேற்படி அமைச்சர்கள் அல்லைப்பிட்டி மீள்குடியேற்ற நடவடிக்கைகளைப் பார்வையிட்டனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவர்களை அழைத்துச் சென்றிருந்தார்.

வடக்கில் 12095 குடும்பங்களைச் சேர்ந்த 41,685 பேர் நாளை மறுதினம் (22) முதல் மீள்குடியேற்றம்

260909srilanka.jpgவன்னி யிலிருந்து இடம் பெயர்ந்து வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கி இருக்கும் 12 ஆயிரத்து 95 குடும்பங்களைச் சேர்ந்த 41 ஆயிரத்து 685 பேர் அவர்களது சொந்த வாழிடங்களில் நாளை மறுதினம் மீளக் குடியமர்த்தப் படவுள்ளனர்.  வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இவர்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுகின்றனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களிலுமுள்ள பத்து பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 118 கிராம சேவகர் பிரிவுகளில் இம் மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவதாக மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த, நிவாரண சேவைகள் அமைச்சு நேற்றுத் தெரிவித்தது.

இத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரச்சி மற்றும் பூநகரி பிரதேச செயலகப் பிரிவுகளில் இருக்கும் ஐந்து கிராம சேவகர் பிரிவுகளில் 2453 குடும்பங்களைச் சேர்ந்த 10017 பேர் மீளக் குடியமர்த்தப்படுவர் என்று முல்லைத்தீவு மாவட்ட செயலாளரும், கிளிநொச்சி மாவட்ட பதில் செயலாளருமான இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஒட்டி சுட்டான், மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 30 கிராம சேவகர் பிரிவுகளில் 4415 குடும்பங்களைச் சேர்ந்த 16394 பேர் மீளக்குடியமர்த்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தி லுள்ள வவுனியா, வெங்கலசெட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 2583 குடும்பங்களைச் சேர்ந்த 8643 பேரும், மன்னார் மாவட்டத்திலுள்ள மன்னார் மேற்கு, மன்னார் நகர் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் 2644 குடும்பங்களைச் சேர்ந்த 6631 பேரும் மீளக்குடியமர்த்தப்படவிருக்கின்றனர்.

இம் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட விருக்கும் 118 கிராம சேவகர் பிரிவுகளிலும் கண்ணி வெடிகள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இக் கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் துரிதமாகப் புனரமைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.

வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இடம் பெயர்ந்துள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவ்வதிகாரி கூறினார்.

சொந்த வாழிடங்களில் மீளக் குடியமர்த்தப்படும் இம் மக்களுக்கு ஒரு வாரத்திற்கு சமைத்த உணவு நிவாரணமும், அதனைத் தொடர்ந்துவரும் ஆறு மாத காலத்திற்கு உலர் உணவு நிவாரணமும், வாழ்வாதார உதவிகளும் வழங்கப்படும் என்று அரசாங்க அதிபர்கள் கூறினர்.