![]()
2009 ம் ஆண்டுக்கான சமாதானத்துக்கான நோபல் பரிசு இந்த வெள்ளிக்கிழமை பிரித்தானிய ஜி.எம்.ரி நேரம் காலை 9 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது. இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால் இலங்கையைச் சேர்ந்தவருக்கு அதிலும் குறிப்பாக தமிழர் ஒருவருக்கு இம்முறை இவ்விருது கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்பதே. இவ்வகையில் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினர்களான ராஜன் கூல்லுக்கும் கோ.சிறிதரனுக்கும் இவ்வருட சமாதான நோபல் பரிசு பெறும் வாய்ப்பு அதிகமிருக்கிறது.
நோபல் பரிசுகளில் அதிகம் சர்ச்சைக்குரியது சமாதானத்துக்கான பரிசுகளே. ஏனைய பரிசுகள் துறைசார்ந்த அறிஞர்களால் தெரிவுசெய்யப்பட சமாதானத்துக்கான பரிசோ நோர்வே பாராளுமன்ற அரசியல்வாதிகளாலும் அவர்களை ஏய்க்கும் அமெரிக்க அரசாலுமே உண்மையில் தெரிவு செய்யப்படுகிறது. இந்த வகையில் அரசியல் மயப்படுத்தப்பட்ட விருது சமாதானத்துக்கான நோபல் பரிசு. இதனுடைய அர்த்தம் பரிசு பெற்ற அனைவருமே தகுதியற்றவர்கள் என்பதல்ல. ஹென்றி கிசிங்கர் சில இஸ்ரேலிய அரசுத்தலைவர்கள் சில அமெரிக்க அரசுத் தலைவர்கள் அன்வர் சதாத் முதலியவர்களுக்கு வழங்கப்பட்ட சமாதானப் பரிசுகள் ஏளனத்துக்கும் சர்ச்சைக்கும் உரியது என்றால் முகமட் யூனுஸ் வங்கரி மாதாய் கொபர்ச்சேவ் ஆங் சாங் சூ கீ போன்றவர்களுக்கு வழ்ஙகப்பட்டவைகள் மிகப்பொருத்தமானவைகள்.
சமாதானத்துக்கான நோபல் பரிசுகளில் தகுதி தகுதியின்மை மட்டுமன்றி வழங்கப்படுகின்ற கால நேரங்களும் மிகுந்த சர்ச்சைக்குரியவை. தலாய் லாமாவுக்கான விருது 1988 ம் ஆண்டுக்கு முதலே வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சீன மாணவர் எழுச்சியை அடுத்து நடந்த தியனமென் சதுக்கப்படுகொலைகள் நடந்த 1989 ம் ஆண்டிலேயே தலாய் லாமாவுக்கு விருது வழங்கப்படுகிறது. கிழக்கு தீமோர் பாதிரியார் கார்லோஸ் பெலோ விடுதலைப் போராளி ராமோஸ் ஹோட்டா போன்றவர்களுக்கும் 1996 ம் ஆண்டுக்கு முதலே வழங்கப்பட்டிருக்க வேண்டும். மறுதலையாக கிளின்ரன் நிர்வாகத்தில் இந்தோனேசியா தொடர்பான கொள்கை மாற்றத்தை நாடி பிடித்துப் பார்த்த பின்னரே தீமோர்க்காரர்களுக்கு வழங்கப்பட்டது. ராப்லோயிட் பத்திரிகைகளுக்குரிய சூடு சுவாரசியம் பரபரப்பு என்பனவும் இப்பரிசுத்தெரிவில் உண்டு. ஒரு பெரும் போர் முடிந்த பின்னர் சம்பந்தப்பட்ட இரு தரப்பிலிருந்தும் ஆட்களை தெரிவு செய்து “வஞ்சகமில்லாமல்”; பரிசு கொடுப்பார்கள். உதாரணம் வியட்னாம் போரை அடுத்து கிசிங்கருக்கும் வியட்னாமிய தலைவர் டக் தோவுக்கும் வழங்கப்பட்ட விருது. விவசாய மரபணு விஞ்ஞானி நோமன் போர்லோக் 1956 ம் ஆண்டிலேயே மெக்ஸிக்கோவில் பெரு விளைச்சலை நிறுவி சாதித்து விட்டார். ஆனால் 1965 இலிருந்து 1970 வரை அவர் “பஞ்சம் பிழைக்கும் பரதேசமாம்” இந்திய துணைக்கண்டத்துக்கு வந்து “படங்காட்டும்” வரை நோபல் மன்று அவரை கணக்கெடுத்துப் பார்க்கவில்லை.
இத்தகைய நோபல் சமாதானப் பரிசின் வரலாற்றை கூர்ந்து நோக்குகிற போதுதான் இம்முறை நம்மவர்க்களுக்கான முறை என்பது தெரிகிறது. அதிக அளவில் இவ்வாண்டில் உலகப் பத்திரிகைகளில் அடிபட்ட செய்தி இலங்கை அரசு வெல்ல முடியாது என்று நம்பப்பட்ட மரபு சாரா போர்க்காரர்களான விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டது. தென்னாசியாவுக்கு வெளியே புலம்பெயர்ந்து வாழ்கின்ற எட்டு இலட்சம் தமிழர்களில் பெரும்பாலானோர் செம்மறி ஆடுகளாக விடுதலைப் புலிகளின் மந்திரத்தை ஓதி உலக நாடுகளில் ஈழத்தில் ஒரு இனப்படுகொலை நடக்கிறது என தப்பாட்டம் ஆடியும் உலக ஊடகங்களின் கவனத்துக்கு வந்தார்கள். போதாக்குறைக்கு நோர்வேக்காரர்களும் சமாதான ஒப்பந்த மத்தியஸ்தர்களாக இங்கு சிக்குப்பட்டிருக்கிறார்கள். நோபல் மன்றத்திற்கு இது உத்தமமான பொருத்தம்.
உலக நாகரிகத்தின் முக்கியமான யூத முஸ்லீம் கிறிஸ்தவ மதங்கள் தோன்றிய பலஸ்தீனத்தின் பிரச்சனையே “தீர்த்துவைத்தோம்” என்று நோர்வேக்காரர்கள் 1994 ம் ஆண்டில் அரபாத்துக்கும் அப்போதைய இரு இஸ்ரேலியத் தலைவர்களுக்கும் நோபல் பரிசு கொடுத்து உலகத்தின் சமாதான மொத்த வியாபாரிகள் தாங்களே என்று உலகின் காதில் பூச்சுற்றினார்கள். ஆனானப்பட்ட அவர்களுக்கு ராஜபக்ஷ அரசாங்கம் முகத்தில் கரிபூசியது மட்டுமின்றி கன்னத்தில் அறைந்தும் அனுப்பியிருக்கிறது. மிகவும் நொந்து போயிருக்கிறார்கள் எரிக் சொல்கைம் போன்ற சர்வதேச சமாதான யாவாரிகள். இப்போதைக்கு அவர்களுக்கு ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு தாங்களும் பதிலுக்கு கரிபூச வேண்டும். அதற்கு ராஜபக்ஷவை அம்பலப்படுத்தி அவமானப்படுத்தும் ஒருவருக்கு நோபல் விருது கொடுக்க வேண்டும்.
மேலும் ராஜபக்ஷ பிறப்பால் அமெரிக்கரோ அல்லது யூதரோ இல்லை என்பதால் வியட்னாம் போர் முடிவு போல இரு தரப்பினருக்கும் பரிசு கொடுக்க முடியாது. எனவே இங்கு “போரில் தோற்ற” தமிழர் பிரதிநிதிகளான மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கு பரிசு கொடுக்கலாம் என்றால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. 2002 ம் ஆண்டு அமுலுக்கு வந்த போர் நிறுத்தத்தில் நோர்வேக்காரர்களான தங்களது மத்தியஸ்தத்தை அதிகம் விமர்சித்தது அதே யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமே. அதிஸ்ரவசமாக புலிகளின் மங்கு சனி காலத்திலிருந்து புலிகள் மடிந்ததுவரை மேற்குறித்த சங்கத்தின் அறிக்கைகள் அதிகமாக ராஜபக்ஷ அரசாங்கத்தையே விமர்சித்து வந்துள்ளன.
உண்மையைச் சொல்லப்போனால் 2005 ம் ஆண்டிறுதியில் தெரிவு செய்யப்பட்ட ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஜனநாயக விரோத போக்குகளை உலகுக்கு அம்பலப்படுத்தியது மேற்கூறிய மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க அறிக்கைகளே. திருமலையில் 5 மாணவர் மற்றும் 17 பிரெஞ்சு தொண்டர் நிறுவன உறுப்பினர் படுகொலை என்பனவற்றை நிகழ்த்திய இலங்கை இராணுவத்தினரை அம்பலப்படுத்தியது யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமே. புலிகள் துவம்சம் செய்யப்பட்ட பின்னர் யாழ் சங்கக்காரர் ராஜபக்ஷ அரசாங்கத்திலிருந்தே உயிராபத்தை எதிர்நோக்கியுள்ளார்கள். இதன் காரணமாகவே இவர்கள் இப்போது வெளிநாடுகளிலிருந்து இயங்குகிறார்கள். மேற்கூறிய காரணங்கள் காரணமாகவே நோர்வே மன்றின் கடைக்கண் பார்வை சங்கத்தின் மீது விழுந்துள்ளது.
பிறப்பால் ஒரு தமிழர் என்றாலும் ராஜன் கூல்லின் எழுத்துக்களுக்கூடாகவும் வாதங்களுக்கூடாகவும் வெளிப்படுவது ஒரு சமாதான இலங்கைக்கான சாத்தியமான திட்ட வரைவே. (பார்க்க அவரின் ஆங்கில நூலான The arrogance of power)
மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்துக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெறும் அனைத்து தகுதிகளும் இருக்கிறது. இவ்விருது உண்மையிலேயே இவர்களுக்கு வழங்கப்பட்டடால் ஒரு மோசமான பாழாட்சியை நோக்கி இலங்கையை ஓட்டிச்செல்லும் ராஜபக்ஷ நிர்வாகத்துக்கு இது பேரிடியாக அமையும். காலத்தின் தேவையும் அதுதான்.