பயங் கரவாதம் தோற்கடிக்கப்பட்ட போதும் பிரிவினை வாதம் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை. அதனையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாராகவே உள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டு மக்களின் மனதை அறிந்து செயற்படுபவரே மக்கள் தலைவராக இருக்க முடியும். நாடு பற்றிய எமது தெளிவும் முக்கியத்துவமுமே தென் மாகாண தேர்தலில் அமோக வெற்றிபெற காரணமாயமைந்தது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பயங்கரவாதத்திடமிருந்து நாட்டை மீட்டெடுத்த படை வீரர்களைக் கெளரவிக்கும் மத்திய மாகாண நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் மாத்தளை அலுவிஹாரை புனித பிரதேசத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,
இம்மாத்தளை மாவட்டம் பல வரலாற்றுச் சிறப்புக்களைக் கொண்ட மாவட்டமாகும். இராவணன் சீதையை மறைத்து வைத்தது மாத்தளை மாவட்டத்தின் லக்கலையில்தான். அதே போன்று குவேனியின் பெற்றோர் வாழ்ந்ததும் இம்மாவட்டத்தில்தான் என்பதை வரலாறுகள் தெரிவிக்கின்றன. 1818 ஆம் ஆண்டு கால கட்டத்தில் கெப்பிட்டிப்பொல போராட்டம் போலவே பயங்கரவாத ஒழிப்பிலும் மாத்தளை மாவட்டம் சிறந்த பங்களிப்புக்களை வழங்கியுள்ளது. இந்த வகையில் பயங்கரவாத யுத்தத்தில் உயிரிழந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட படை வீரர்கள் இங்குள்ளவர்களே.
இந்த மாவட்டத்தில் நடைபெறும் படைவீரர் கெளரவிப்பு விழாவிற்கு நான் தென் மாகாண மக்களின் தேர்தல் வெற்றியைப் பரிசாக எடுத்து வந்துள்ளேன். ஜனாதிபதித் தேர்தலில் நாம் மூன்று இலட்சம் மேலதிக வாக்குகளையே அம்மாகாணத்தில் பெற்றோம். எனினும் இத்தேர்தலில் அம்மக்கள் ஐந்து இலட்சம் வாக்குகளை வழங்கி மூன்றில் இரண்டு பலத்தை எமக்குத் தந்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க மற்றுமொரு விடயம் என்னவென்றால், அரசாங்கத்தின் சார்பில் போட்டியிட்ட அத்தனை படை வீரர்களும் வெற்றிபெற்றுள்ளதுடன் எதிர்க்கட்சியின் சார்பில் போட்டியிட்ட படை வீரர்கள் தோல்வியுற்றதுதான்.
நாடு பற்றிய தெளிவான நோக்கும் முக்கியத்துவமுமே இந்த வெற்றிக்குக் காரணமாகியுள்ளது. நாடு முழுவதிலும் தேர்தல்களில் 25 இலட்சம் வாக்குகளை நாம் மேலதிகமாகப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. படை வீரர்களின் அர்ப்பணிப்பினாலேயே நாம் யுத்தத்தில் வெற்றிபெற முடிந்துள்ளது. அவர்களின் சேவை அளப்பரியவை.
இதற்கு சர்வதேச உதவி, ஊடகங்கள், அரச நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் உட்பட நாட்டு மக்களின் பூரண பங்களிப்பும் கிட்டியதை நாம் குறிப்பிட வேண்டும். இது ஒருவருக்கு கிடைத்த வெற்றியல்ல; முழு நாட்டிற்கும் கிடைத்த வெற்றியாகும். பயங்கரவாதி என புலிகளை அழைக்க அஞ்சிய காலமொன்று இந்த நாட்டில் இருந்தது. புலிகளை கேர்ணல், கெப்டன் என நமது தலைவர்களும் வர்ணித்த காலம் இருந்தது. அவர்களின் மாவீரர் தினத்தை நம்மவரும் மாவீரர் தினமென்றே குறிப்பிட்டனர். அதேவேளை எமது படை வீரர்களை வீரர்கள் என குறிப்பிடாது பாதுகாப்புப் படையினர் என்றே குறிப்பிட்டனர். தேர்தல்கள் கூட புலிகளுக்குச் சார்பாகவே நடத்தப்பட்டன.
நான் பதவியேற்றதும் பாதுகாப்புச் செயலாளரை நியமித்தேன். அத்துடன் பொறுப்புகளை துணிவுடன் ஏற்கும் தலைவர்களை நியமித்தேன். ஐக்கிய இலங்கையை நோக்காகக் கொண்டே எமது செயற்பாடுகள் ஆரம்பித்தன. எனினும் எவரும் அதனை நம்பத் தயாராக இருக்கவில்லை. ஆயுத பலம், குழு பலம் இல்லாமை, நாட்டைப் பயங்கரவாதத்திற்கு எழுதிக் கொடுத்தமை போன்ற செயல்களே இளைஞர்கள் படையில் சேர முன்வராமைக்கு முக்கிய காரணம். பயங்கரவாதம் ஒழிக்க முடியாதது என்ற சர்வதேச கூற்றினைப் போன்றே எமது கிராமத்து இளைஞர்களும் சிந்திக்க முற்பட்டனர்.
அவர்களில் பலர் படையிலிருந்து விலகிச் சென்றனர். இந்நிலையை மாற்றவேண்டிய அவசியம் எமக்கிருந்தது. இளைஞர்களைப் படைக்கு அழைக்கும் போது நாம் அதற்கு முன்மாதிரியாக நடந்து கொண்டோம். எனது மகனையும் நான் படைக்கு அனுப்பினேன். அத்துடன் ‘நமக்காக நாம்’ போன்ற சிறந்த வேலைத் திட்டங்களையும் ஆரம்பித்தோம்.
அரசாங்கத்தின் நோக்கம் என்ன என்பதை நாட்டு மக்கள் தெளிவாக விளங்கிக் கொண்டதாலேயே பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் நாம் வெற்றிபெற முடிந்தது. 2005 ஆம் ஆண்டு நாம் இந்தியா சென்று பயங்கரவாதத்தின் கொடூரம் பற்றி இந்தியப் பிரதமருக்கு விளக்கினோம். உதவி கோரினோம்.
புலிகள் தாக்கினால் நாம் தாக்குவதற்காக ஆயுதம் வேண்டும் எனக் கேட்டோம். அயல் நாடுகளுடன் நாம் சுமுகமாக அணுகியே உதவிகளைப் பெற்றோம். படையினரை உச்ச அளவில் பலப்படுத்துவதை நாம் செய்தோம்.
பல சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. பல உள்நாட்டு எதிர்ப்புகளுக்கும் பதில் சொல்ல நேரிட்டது. சர்வதேசத்தை எமது பக்கம் திருப்ப நாம் கடுமையாக பாடுபட வேண்டியிருந்தது. நாம் ஒரே நோக்கத்தில் இருந்து யுத்தத்தை முன்னெடுத்துள்ளோம். அவ்வாறு நாம் செயற்பட்டிருக்காவிடில் நாட்டில் பாதியை அல்ல முழு நாட்டையும் புலிகள் கைப்பற்றியிருப்பர்.
சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும் நாம் உலகம் காணாத வெற்றியை ஈட்டினோம். இந்த யுத்தம் தோல்வியுற்றிருந்தால் இலட்சக்கணக்கான எமது மக்கள் பலியாகியிருப்பர், முதலில் எனக்கும் எனது சகோதரர்களுக்குமே கெட்ட பெயர் வந்திருக்கும்.
சிலர் அமைதிப் படையை நாட்டுக்கு அழைக்க கோரிய போதும் நாம் எமது நாட்டை ஒரு பொஸ்னியாவாகவோ கொஸோவாவாகவோ பார்க்க விரும்பவில்லை. இலங்கையாக பார்க்க விரும்பினோம். நாம் தீர்க்கமாகச் சிந்தித்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வெற்றிபெற்றோம். எனினும் எமது படை வீரர்களை சர்வதேச யுத்த நீதிமன்றத்துக்குக் போகும் அறிக்கையை நாளை செனட் சபைக்குக் கையளிக்கவுள்ளதாக அறிய முடிகிறது.
வெற்றியின் போது படையினரைப் பாராட்டாவிட்டால், அவர்களைக் காட்டிக் கொடுத்தால் எதிர்காலத்தில் நாட்டைப் பாதுகாக்க எவரும் முன்வர மாட்டார்கள்.
அவர்களுக்கு நாம் சகலதையும் வழங்குவோம். இறுதி வீரர் களத்தில் இருக்கும் போது நாம் அவர்களுடனேயே இருப்போம். பயங்கரவாதம் முடிவுற்றாலும் பிரிவினைவாதம் இன்னும் உள்ளது. பயங்கரவாதிகளின் வளங்கள் சொத்துக்கள் பெருவாரியாக உள்ளது. அவை எப்போது பாவிக்கப்படப் போகிறதென நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
எதற்கும் அடிபணியாத மனப்பாங்கு படையினருக்கு அவசியம். இறுதி மூச்சுவரை நாடு, நாட்டு மக்கள் என்ற மன நிலை அவசியம். அப்போதுதான் நாட்டு மக்களின் கெளரவம் கிட்டும்.
படையினரில் 80க்கும் மேற்பட்டோர் கிராமத்தவர்களே. அவர்களின் எதிர்காலத்தை சுபீட்சமாக்கும் சகல செயற்பாடுகளையும் நாம் மேற்கொள்வோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.