ஏறாவூர் மீராகேணி மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் கடந்த புதன்கிழமை போஷாக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டதால் மாணவர்களுக்கு சுகவீனம் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக சுகாதார அதிகாரிகள் மட்டத்திலான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை கோருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உறுதியளித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டமொன்று நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) மாலை ஏறாவூர் மாவட்ட வைத்திய சாலையில் நடைபெற்றது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். எஸ். சுபைரின் அழைப்பின்பேரில் இங்கு நேடியாக வருகைதந்த முதலமைச்சர் சம்பவம் தொடர்பாக அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டார்.
ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம். எச். எம். தாரிக், மாவட்ட வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் ஏ. சீ. எம். பbல், வலயக் கல்விப் பணிப்பாளர் யூ. எல். எம். ஜெயினுதீன் உட்பட பாடசாலை அதிபர் கே. காலிதீன், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள், வைத்தியசாலை அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமது விளக்கங்களை முன்வைத்தனர். கூட்டத்திற்கு தலைமைவகித்த மாகாண சபை உறுப்பினர் எம். எஸ். சுபையினரினால் இந்த விடயம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஆவண செய்யுமாறு கோரும் மகஜரொன்று முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட போஷாக்கு மாத்திரைகளும் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டன.
இவற்றைப் பொறுப்பேற்றுக் கொண்ட முதலமைச்சர் இது தொடர்பான தொடர் விசாரணைகளை மேற்கொண்டு அதிகாரிகளிடம் அறிக்கை கோருவதாகவும், பாடசாலையை எவ்வித இடையூறுகளும் இன்றி தொடர்ந்து இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) தொடக்கம் பாட சாலையை சுமுகமான முறையில் வழமைபோன்று ஆரம்பிப்பது எனவும், மாணவர்கள், பெற்றோர் கள், மற்றும் ஊர்மக்களுக்கு இது பற்றி விழிப்புணர்வூட்ட நட வடிக்கை எடுப்பதெனவும் தீர்மானி க்கப்பட்டது.