October

October

இராணுவ கண்காட்சி 11ம் திகதி வரை நீடிப்பு

011009army_exhibition1.jpgகொழும்பு – பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் இராணுவக் கண்காட்சி எதிர்வரும் 11 ஆந் திகதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு ள்ளது.

கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக நாளாந்தம் இலட்சக் கணக்கான மக்கள் வருகை தருவதால் அதனை நீடித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்தின் 60வது ஆண்டு நிறைவையொட்டி கடந்த மூன்றாந் திகதி ஆரம்பமான இந்தக் கண்காட்சியை ஏழாம் திகதி வரை நடத்துவதென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

பல் வைத்தியசேவைக்கு 106 சத்திர சிகிச்சை நிபுணர்களை சேர்ப்பு

அரசாங்க பல் வைத்திய சேவைக்கு 106 பற் சத்திரசிகிச்சை நிபுணர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க பற் சிகிச்சைத் துறையை மேலும் நோக்கில் சுகாதாரப் பராமரிப்பு, போஷா க்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சர வையின் கவனத்திற்குக் கொண்டு வந்த யோசனைக்கு ஏற்பவே 106 பற்சத்திரசிகிச்சை மருத்துவ நிபுணர்களை சேர்த்துக் கொள்ளுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கி இருக்கின்றது.

இலங்கை முகாம்களுக்கான உதவி நிறுத்தப்படும் – பிரிட்டன் அறிவிப்பு

vau-camp-srilanka.jpgஇலங்கையின் வடபகுதியில், சுமார் இரண்டரை லட்சம் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு அவசர உதவிகளை தவிர ஏனைய அனைத்து உதவிகளையும் நிறுத்தப் போவதாக பிரிட்டிஷ் அரசாங்கம் கூறியுள்ளது. அங்கிருக்கின்ற மிகப்பெரிய முகாமுக்கு பிரிட்டிஷ் அமைச்சர் மைக் ஃபொஸ்டர் அவர்கள் விஜயம் செய்து திரும்பியதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அதே நேரம் பருவ மழைக்காலத்தில் அங்கு ஏற்படக் கூடிய எந்தவிதமான வெள்ளமும் வடிந்தோடும் வகையில் தேவையான வடிகால் வசதிகளை தாம் முகாம்களில் அமைப்பதாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது. ஆனால், அதனுடன் பிரிட்டனும், ஐநாவும் உடன்படவில்லை.

மனிக்ஃபார்ம் முகாமுக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் அமைச்சர் மைக் ஃபொஸ்டர், அங்கு கடுமையான மழை பெய்தால், பெரும் அழிவும், தொற்றுநோய் பரவலும் ஏற்படும் என்று அச்சம் வெளியிட்டுள்ளார். முகாமில் உள்ளவர்களில் சுமார் 70 வீதமானவர்கள் அங்கிருந்து வெளியேறும் பட்சத்தில், அவர்களுக்கு ஆதரவு வழங்கக்கூடிய குடும்பங்களுடன் சென்று தங்குவதற்கான வசதியுடையவர்கள் என்றும் அவர் கூறுகிறார்.

அந்த முகாம்களில் தமது நிலலைமை குறித்து பேசுவதற்கு ஆர்வத்துடன் இருந்த மக்களுடன் பிபிசிக்கு பேசும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு நிலைமைகள் மிகவும் மோசம் என்றும், நல்ல குடிநீர் கிடையாது என்றும், போதுமான வடிகால் வசதி கிடையாது என்றும், அதிக வெப்பம் காரணமாக மக்கள் பலர் நோயில் வீழ்வதாகவும், அங்கிருந்த பெண்கள் மாறி மாறி கூறினார்கள். முடிந்தவரை விரைவாக எங்களை எங்கள் வீடுகளுக்கு அனுப்புங்கள் என்று ஒருவர் கூறினார்.

மனிக்பார்ம் முகாமில் இரண்டு லட்சத்து நாற்பதினாயிரம் பேர் இன்னமும் இருப்பதாக கூறுகின்ற அரசாங்கம், இதுவரை இருபதினாயிரம் பேர் மீள்குடியேற்றப்பட்டு விட்டதாக, அல்லது விடுவிக்கப்பட்டு விட்டதாக கூறுகிறது.

கவலைப்படவில்லை

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களுக்கான உதவியை ஐக்கிய ராஜ்ஜியம் நிறுத்தினாலும், வேறு பல நாடுகள் இலங்கைக்கு தொடர்ந்து உதவ தயாராக இருப்பதாகவும் இந்த முடிவால் தாம் கவலைப்படவில்லை என்றும் இலங்கை சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் ராஜீவ விஜயசிங்க பி பி சியின் சிங்கள சேவையான சந்தேஷியாவிடம் தெரிவித்தார்.

கொழும்பு பங்குச் சந்தை முதலாவது இடத்தில்!

071009stock_mkt.pngகொழும்பு பங்குச் சந்தை உலகின் சிறந்த பங்குச் சந்தையாக விளங்குவதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றைய முன் தினம் (05)  இந்தப் பங்குச் சந்தையின் முதலீட்டுத் தொகை வரலாற்றில் என்றுமில்லாதவாறு முதற்தடவையாக  994.5 பில்லியன் ரூபாவாக அதிகரித்துக் காணப்பட்டதாக  அறிவிக்கப்படுகின்றது.

பங்கு நிலைவரங்கள்  106.1 வீதத்தால் அதிகரித்துள்ளது.

மிலங்கா விலைச் சுட்டெண் 3508.7 ஆகக் காணப்பட்டதுடன் அதன் அதிகரிப்பு வீதம் 115.1 எனவும் தெரிவிக்கப்படுகிறது.

லிபியாவின் உள்நாட்டுக் கொள்கைகளை விளக்க கடாபி இன்று விசேட உரை

லிபியாவின் உள்நாட்டுக் கொள்கைகளை விளக்கும் வகையில் ஜனாதிபதி முஹம்மர் கடாபி விசேட உரையாற்ற வுள்ளார். அரச உயரதிகாரிகள் இந்த படை தளபதிகள் பொலிஸ் உயரதிகாரிகள் வைபவத்தில் பங்கேற்கவுள்ளனர்.

சுமார் ஆயிரம் பேர் இக்கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இன்று புதன்கிழமை இந்த விசேட உரை நிகழ்த்தப்படவுள்ளது. லிபிய ஜனாதிபதி முஹம்மர் கடாபியின் உரை மரபுரியாக இருக்குமென சிலரும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ளதாகச் சிலரும் கூறுகின்றனர். லிபியாவின் நாற்பதாவது சுதந்திர தினம் செப்டெம்பர் 01ம் திகதி கொண்டாடப்பட்டது.

அங்கு உரையாற்றிய கடாபி லிபியாவின் உள்நாட்டுக் கொள்கைகள் குறித்து உரையாற்றவில்லை. இது மக்களிடையே பெரும் ஏமாற்றத்தையளித்தது. இதை நிவர்த்தி செய்யும் பொருட்டு கடாபி உள்நாட்டு கொள்கைகளை விளக்கவுள்ளார்.

மேற்கு நாடுகளின் நெருக்குதல், அழுத்தங்களுக்குட்படாத லிபியாவையே கடாபி விரும்புகின்றார். தென்னமெரிக்க நாடுகளுடன் ஆபிரிக்க நாடுகளையும் இணைத்து பொதுவான அணியை உருவாக்குதல், ஏகாதிபத்திய வாதத்துக்கெதிராக செயற்படல் என்பன கடாபியின் முக்கிய நோக்கம்.

எரிபொருட்களூடாகப் பெறும் வருமானங்களை உள்நாட்டுத் தேவைகளுக்காகப் பயன்படுத்தவும் அரச அதிகாரிகள் நிறுவனங்களிடையே நிலவும் ஊழல், குறைபாடுகளைக் களையவும் கடாபி கொள்கை வகுப்பார்.

காற்றைக் கரியாக்காதே: நோர்வே நக்கீரா.

oslo-city-bus-norwayகாற்றைக் கரியாக்காதே- (குறியீட்டு படிமக்கவிதை)

பெருமூச்சு விட்டபடி
பேருந்து ஊருந்தும்.
ஊரெங்கும் உள்ளுந்தும்.
எம்மைச் சுமந்த கூலிக்காக
எம் உயிர்மூச்சை
ஊதியம் கேட்கும்.

உலகம்
உருண்டு கொண்டே இருக்கிறது.

தரிப்பு நிலையமொன்றில்
தலைசுற்றிய
தலையில் சுற்றிய
ஒரு ஈராக்கியத்தாய்
ஆணாதிக்க மதத்தின்
அடிமையாய் ஏறினாள்.
அம்மா என்றழைத்தபடி
பாலர் பாடசாலை ஒன்றே
அவளில் தொங்கிக் கொண்டிருந்தது.

அவள் தன்மொழியிலும்
ஓட்டுணரோ நோர்வேயின் மொழியிலும்
ஏதோ புரிந்தும் புரியாததுமாய்
தலையை
அங்குமிங்கும் ஆட்டிவிட்டு
ஓட்டுணர் ஓடினார்
ஓடாத இடம் தேடி

உலகம்
உருண்டு கொண்டே இருக்கிறது.

அடுத்த தரிப்பில்
இன்னொருத்தி தலையில் கூடாரத்துடன்…
பயணிகள்
மூக்குகளை பொத்திக் கொண்டார்கள்
குசினியையே
கூடாரத்துள் கூட்டி வந்திருக்கிறாள்

கண்மட்டும் தெரியுமாறு
ஒருகாப்பிலிப் பெண்
வெளியில் மூன்று
வண்டிக்குள் ஒன்று
அவள் வண்டிக்குள்ளும் ஒன்று.

உலகம்
பாரம் தாங்காது
உருண்டு கொண்டே இருக்கிறது.

அருகிருக்க வெறுக்கும்
கறுப்பனென்னருகில்
அழகான ஒருத்தி.
நிரம்பிவிட்டது என்மனம்போல் பேருந்தும்
இருக்கை சொர்க்கமானது எனக்கு.

திரும்பிப்பார்க்கிறேன்
இசைகேட்கும் சாட்டில்
காதுகளை அடைத்து
செவிப்புலனைக் காவு கொடுத்திருந்தது
செவிட்டுச்சமூகம்
இவர்களிடமா?
எம்மக்களைக் காப்பாற்று என்று
கேட்டோம்.
கேட்குமிடமறிந்து கேட்காததால்
வந்த வினை
நந்திக்கடலில் முடிந்ததே

உலகம்
சுமையுடன் சுற்றிக்கொண்டே இருக்கிறது.

பட்டையும்
சொட்டையுமாய்
நாறல்பாக்குப் போட்டு
நாறடித்துக் கொண்டிருந்தான்,
பிரம்மமறிய வேண்டிய ஆனால்
பிரபஞ்சமேயறியாத பிராமணி

உலகம்
சுமையுடன் சுற்றிக்கொண்டே இருக்கிறது.

உள்ளேயும் மொட்டை
வெளியேயும் மொட்டையாய்
ஒரு ஆமுத்துறு
ஆத்திரப்படுகிறான்
மதகுருமாருக்கு இடமெங்கே?
மதம்
மதம் பிடித்து நிற்கிறது

உலகம்
சுமையுடன் சுற்றிக்கொண்டே இருக்கிறது.

பூச்சடித்த சப்பறமாய்
ஒரு வெள்ளைக்காரக்கிழவி
ஏறிக்கொள்கிறாள்
உலக வரைபடத்தின்
எல்லைக்கோடுகள் அவள் முகத்தில்.
எழும்பி இடம்கொடுத்தேன்
முறைத்தபடி கேட்டாள்
”வயது போய்விட்டது என்று எண்ணுகிறாயா?
நான் சமாளிப்பேன்”

அந்திமகாலம் வரையப்பட்ட
முந்தியவயது பெண்டிர்க்கு –
தாரமாகத் துடிக்கும் தாரகைக்கு –
என்மரியாதை மானக்கேடுதான்.

அடங்கி அமரமுன்
ஆமுத்துறு பாய்ந்து கொண்டான்
என்னிருக்கையில்

உலகம்
சுமைதாங்காது சுற்றிக்கொண்டே இருக்கிறது

வேதமறியா பாதிரி
பாதி வேதம்கொண்டு
ஊதிஊதி ஓதுகிறான்
பேருந்தில்

உலகம்
சுமைதாங்காது சுற்றிக்கொண்டே இருக்கிறது

காதலர்கள் கைகளை
இறுகப்பற்றியபடி
இருக்கையிலும்
வெளியே நடக்கையிலும்…
கையை விட்டால்
ஓடிவிடுவார்களோ?
சந்தேகத்தில் காதலும் குடும்பமும்.

நெரிசல்
சனநெரிசல்
மனநெரிசல்
காற்றெடுக்கும் கரியமிலவாயு
கண்களை உருட்டியது
யன்னலை திறந்து
பார்வையை எறிந்தேன்
கண்டகாட்சி வெருட்டியது

வானத்தைப் பழுக்கவைக்க
படுத்திருந்து
சுருட்டடித்துக் கொண்டிருந்தன
தொழிற்சாலைகள்
ஓசோன் ஓட்டையூடு
சுருட்டைப் பிடித்துத்தான்
யமன்
பூமிக்கு வருவானோ?

காலச்சக்கரம் காற்றின்றி
வெடித்துச்சிதற
ஞாலச்சக்கரம் பிரளத்தொடங்கியது
உச்சி மலையில் இருந்து
பாதாளத்துள்

உலகம்
சிதறத்தொடங்கியது
காற்றைக் கணக்கெடுக்காததால்
கரியாய் போன காற்றால்
காலனின் கையில்
கலண்டர் முடிந்தது.

தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களுக்கு இந்திய குடியுரிமை அவசியமில்லை – அமைச்சர் விநாயகமூர்த்தி

140909karuna.jpgதமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டிய அவசியமில்லை என தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாடு அகதிமுகாம்களில் சுமார் 200,000 இலங்கைத் தமிழ்அகதிகள் தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் தற்போது நிலைமைகள் சுமூகமான சுழ்நிலை காணப்படுவதாகவும்,  இதனால் இந்திய மத்திய அரசு இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டிய அவசியமில்லை என எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள மக்களை இலங்கைக்கு மீள அழைத்துக்கொள்ள இதுவே சிறந்த தருணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தங்கி இருக்கக்கூடிய இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியது. அந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அது தொடர்பாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து எடுத்துக் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2009-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு

மருத்துவத் துறையில் சாதனை புரிந்துள்ள மூன்று அமெரிக்க விஞ்ஞாணிகள் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த எலிசபெத் பிளாக்பர்ன், கரோல் கிரெய்டர்,  ஜேக் சோஸ்டாக் ஆகியோர் 2009-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு தெரிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எலிசபெத் பிளாக்பர்ன்

அவுஸ்திரேலியாவில் 1948-ல் பிறந்தவர். தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1975-ல் டாக்டர் பட்டம் பெற்றவர்.

கரோல் கிரெய்டர்

அமெரிக்கரான கரோல் கிரெய்டர் 1961-ல் பிறந்தார். 1987-ல் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.

ஜேக் சோஸ்டாக்

லண்டனில் 1952-ல் பிறந்தார். அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ள இவர் நியூயார்க்கின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் 1977-ல் டாக்டர் பட்டம் பெற்றார். 1979 முதல் ஹார்வர்டு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

வயோதிகம் தொடர்பான முக்கியக் கண்டுபிடிப்புக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இவர்களது கண்டுபிடிப்பு புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவும். வயோதிகத்துக்கு காரணமான செல் மற்றும் செல் பிரிதலின் போது குரோமோசோம்கள் எவ்வாறு பிரதி எடுக்கின்றன என்பதை இவர்கள் கண்டறிந்துள்ளனர்.

எதிர்வரும் டிசம்பர் 10-ம் தேதி ஸ்டாக்ஹோம் மற்றும் ஒஸ்லோவில் நடைபெறும் விழாவில் இவர்களுக்கு நோபல் பரிசு  வழங்கப்படவுள்ளது. நோபல் பரிசில் தங்கப் பதக்கம்,  பட்டயம் மற்றும் ரொக்கப் பரிசு  ஆகியவை அடங்கும். பரிசு தொகை மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும். டைனமைட்டை கண்டுபிடித்த அல்பிரட் நோபலின் நினைவாக 1901-ம் ஆண்டில் இருந்து பல்வேறு துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

பருவப்பெயர்ச்சி மழையின் பாதிப்பை நிவாரண கிராமங்களில் தவிர்க்க திட்டம் – மஹிந்த சமரசிங்க

mahinda-samarasinha.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்கள் பருவப் பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படாவண்ணம் முன்னெடுக்கப்பட்டு வரும் சுகாதார மற்றும் உட்கட்டமைப்பு வேலைத் திட்டங்கள் 80 சதவீதம் பூர்த்தியடைந்திருப்பதாக இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்கள் அமைக்கப்பட்டிருக்கும் வவுனியாவில் அனைத்து வலயங்களிலும் பாதுகாப்பான முறையில் வடிகாலமைக்கும் வேலைத் திட்டங்கள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் 10 நாட்களுக்குள் இத்திட்டத்தின் பணிகள் முழுமையாக பூரணப்படுத்தப்படுமெனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

வன்னியில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின்போது இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தோரில், மீளக்குடியமர்த்தப்பட்டோர் மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டோர் தவிர்ந்த தற்போது தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருக்கும் 2 இலட்சத்து 88 ஆயிரத்து 679 பேரினதும் சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் இச் செயற்திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் சமரசிங்க சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இம்மாதம் இறுதி முதல் எதிர்வரும் டிசம்பர் வரையான காலப் பகுதியில் வவுனியாவில் பருவப் பெயர்ச்சி மழை எதிர்பார்க்கப்படுவது வழமை.

இம்மழைக்கு முகம் கொடுக்க கூடிய வகையில் வேலைத் திட்டங்கள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கை அரசாங்கத்தின் இந்த வேலைத் திட்டங்கள் ஐ.நா. அமைப்புக்களின் அனுசரணையுடன் நடைபெற்று வருகின்றன.

வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் மீள்குடியேற்றம் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் இதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

மழைகாலத்தின்போது நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்கள் பாரிய அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அவ்வாறானதொரு சூழ்நிலையை தவிர்க்கும் முகமாகவே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

மழையினால் ஏற்படக் கூடிய அசாதாரண சூழ்நிலைகளை தவிர்க்கும் முகமாக அநேகமான வேலைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

வவுனியா வலையம் 01 இல் 95 சதவீதமான வேலைத் திட்டம் பூர்த்தியாகியிருப்பதாகவும் வலையம் 02 இல் 100 சதவீதமும் வலையம் 03 இல் 80 சதவீதமும் வலையம் 04 இல் 80 சதவீதமும் வலையம் 05 இல் 90 சதவீதமும் வலையம் 06 ‘எ’ யில் 40 சதவீதமும் வலையம் 06 ‘பி’ யில் 50 சதவீதமும், வலையம் 08 இல் சுமார் 70 சதவீதமான வேலையும் பூர்த்தியடைந்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். வலையம் ‘0’ மற்றும் வலையில் 07 இல் வேலைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எமது படைவீரர்கள் குறித்து தெரிவித்த கூற்றை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது – உண்மையை கூறியமைக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

அமெரிக்க ராஜாங்க செயலாளர் திணைக்களம் எமது படை வீரர்களுக்கு எதிராக தெரிவித்த கூற்றுக்களில் உண்மையில்லையென்பதை அத்திணைக்களமே ஏற்றுக்கொண்டுள்ளது. தவறை சரி செய்து உண்மை நிலையை வெளிப்படுத்தியுள்ளமைக்கு தாம் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அமெரிக்க ராஜாங்க செயலாளர் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள குறிப்பில் தமது தவறை நிவர்த்தி செய்துள்ளதுடன் எமது படை வீரர்கள் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமைக்கான பின்னணி அல்லது நிலைமைகள் தொடர்பாகத் தம்மிடம் எவ்வித தகவல்களும் இல்லையென்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். அக்குற்றச்சாட்டை வாபஸ் பெறுவதாகவும் மேற்படி திணைக்களம் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, தம்மால் இடம்பெற்றுள்ள தவறை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.