காற்றைக் கரியாக்காதே: நோர்வே நக்கீரா.

oslo-city-bus-norwayகாற்றைக் கரியாக்காதே- (குறியீட்டு படிமக்கவிதை)

பெருமூச்சு விட்டபடி
பேருந்து ஊருந்தும்.
ஊரெங்கும் உள்ளுந்தும்.
எம்மைச் சுமந்த கூலிக்காக
எம் உயிர்மூச்சை
ஊதியம் கேட்கும்.

உலகம்
உருண்டு கொண்டே இருக்கிறது.

தரிப்பு நிலையமொன்றில்
தலைசுற்றிய
தலையில் சுற்றிய
ஒரு ஈராக்கியத்தாய்
ஆணாதிக்க மதத்தின்
அடிமையாய் ஏறினாள்.
அம்மா என்றழைத்தபடி
பாலர் பாடசாலை ஒன்றே
அவளில் தொங்கிக் கொண்டிருந்தது.

அவள் தன்மொழியிலும்
ஓட்டுணரோ நோர்வேயின் மொழியிலும்
ஏதோ புரிந்தும் புரியாததுமாய்
தலையை
அங்குமிங்கும் ஆட்டிவிட்டு
ஓட்டுணர் ஓடினார்
ஓடாத இடம் தேடி

உலகம்
உருண்டு கொண்டே இருக்கிறது.

அடுத்த தரிப்பில்
இன்னொருத்தி தலையில் கூடாரத்துடன்…
பயணிகள்
மூக்குகளை பொத்திக் கொண்டார்கள்
குசினியையே
கூடாரத்துள் கூட்டி வந்திருக்கிறாள்

கண்மட்டும் தெரியுமாறு
ஒருகாப்பிலிப் பெண்
வெளியில் மூன்று
வண்டிக்குள் ஒன்று
அவள் வண்டிக்குள்ளும் ஒன்று.

உலகம்
பாரம் தாங்காது
உருண்டு கொண்டே இருக்கிறது.

அருகிருக்க வெறுக்கும்
கறுப்பனென்னருகில்
அழகான ஒருத்தி.
நிரம்பிவிட்டது என்மனம்போல் பேருந்தும்
இருக்கை சொர்க்கமானது எனக்கு.

திரும்பிப்பார்க்கிறேன்
இசைகேட்கும் சாட்டில்
காதுகளை அடைத்து
செவிப்புலனைக் காவு கொடுத்திருந்தது
செவிட்டுச்சமூகம்
இவர்களிடமா?
எம்மக்களைக் காப்பாற்று என்று
கேட்டோம்.
கேட்குமிடமறிந்து கேட்காததால்
வந்த வினை
நந்திக்கடலில் முடிந்ததே

உலகம்
சுமையுடன் சுற்றிக்கொண்டே இருக்கிறது.

பட்டையும்
சொட்டையுமாய்
நாறல்பாக்குப் போட்டு
நாறடித்துக் கொண்டிருந்தான்,
பிரம்மமறிய வேண்டிய ஆனால்
பிரபஞ்சமேயறியாத பிராமணி

உலகம்
சுமையுடன் சுற்றிக்கொண்டே இருக்கிறது.

உள்ளேயும் மொட்டை
வெளியேயும் மொட்டையாய்
ஒரு ஆமுத்துறு
ஆத்திரப்படுகிறான்
மதகுருமாருக்கு இடமெங்கே?
மதம்
மதம் பிடித்து நிற்கிறது

உலகம்
சுமையுடன் சுற்றிக்கொண்டே இருக்கிறது.

பூச்சடித்த சப்பறமாய்
ஒரு வெள்ளைக்காரக்கிழவி
ஏறிக்கொள்கிறாள்
உலக வரைபடத்தின்
எல்லைக்கோடுகள் அவள் முகத்தில்.
எழும்பி இடம்கொடுத்தேன்
முறைத்தபடி கேட்டாள்
”வயது போய்விட்டது என்று எண்ணுகிறாயா?
நான் சமாளிப்பேன்”

அந்திமகாலம் வரையப்பட்ட
முந்தியவயது பெண்டிர்க்கு –
தாரமாகத் துடிக்கும் தாரகைக்கு –
என்மரியாதை மானக்கேடுதான்.

அடங்கி அமரமுன்
ஆமுத்துறு பாய்ந்து கொண்டான்
என்னிருக்கையில்

உலகம்
சுமைதாங்காது சுற்றிக்கொண்டே இருக்கிறது

வேதமறியா பாதிரி
பாதி வேதம்கொண்டு
ஊதிஊதி ஓதுகிறான்
பேருந்தில்

உலகம்
சுமைதாங்காது சுற்றிக்கொண்டே இருக்கிறது

காதலர்கள் கைகளை
இறுகப்பற்றியபடி
இருக்கையிலும்
வெளியே நடக்கையிலும்…
கையை விட்டால்
ஓடிவிடுவார்களோ?
சந்தேகத்தில் காதலும் குடும்பமும்.

நெரிசல்
சனநெரிசல்
மனநெரிசல்
காற்றெடுக்கும் கரியமிலவாயு
கண்களை உருட்டியது
யன்னலை திறந்து
பார்வையை எறிந்தேன்
கண்டகாட்சி வெருட்டியது

வானத்தைப் பழுக்கவைக்க
படுத்திருந்து
சுருட்டடித்துக் கொண்டிருந்தன
தொழிற்சாலைகள்
ஓசோன் ஓட்டையூடு
சுருட்டைப் பிடித்துத்தான்
யமன்
பூமிக்கு வருவானோ?

காலச்சக்கரம் காற்றின்றி
வெடித்துச்சிதற
ஞாலச்சக்கரம் பிரளத்தொடங்கியது
உச்சி மலையில் இருந்து
பாதாளத்துள்

உலகம்
சிதறத்தொடங்கியது
காற்றைக் கணக்கெடுக்காததால்
கரியாய் போன காற்றால்
காலனின் கையில்
கலண்டர் முடிந்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • gunarajah
    gunarajah

    yes very good thanks your way not go to bad way then i am replay four you

    gunarajah

    Reply
  • param
    param

    இந்தக் கவிதை முழுக்க நல்லாய்த்தான் இருக்குது. ஆனால் தலையங்கத்துக்கு பொருத்தமாய் கடைசியிலுள்ள பந்திகள் பொருந்துது. ஆனால் பஸ்ஸில் ஏறும் ஆட்களுக்கும் தலைப்புக்கும் என்ன தொடர்பென்று நக்கீலா விளக்குவீர்களா? நான் கவிதைகள் வாசிப்பேன். துல்லியமாக விளங்கிக் கொள்பவனல்ல.

    Reply
  • london boy
    london boy

    நக்கீராவின் கவிதை இன்றய ஜரோப்பிய சமூகத்தின் மாற்றங்களை சித்தரிப்பதாகவே வாசிக்கிறேன். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஜரோப்பா இன்று இல்லை மாறிக் கொண்டேயிருக்கிறது. புதிய ஜரோப்பிய சமூகம் மாறுபட்ட சமூகப்பின்னணியுடையவர்களை விரும்பியோ விரும்பாமலோ ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் மாறுபட்ட சமூகப்பின்னணியுடையவர்களை அனுமதிக்கும் அதேவேளை அவரவர் கலாச்சார மதப் பின்னணிகளைக் கொண்ட அம்சங்களையும் உத்தியோக பூர்வமாக அனுமதிக்க வேண்டியுள்ளது மத வழிபாட்டுத்தலங்கள் மதக் கலாச்சாரnஅம்சங்கள் என்பனவாகும்.

    இன்று லண்டனிலும்

    கிறீம் தெரியாத தோலும்
    மையே கண்டிராத கண்ணையும்
    தாலிக்கொடி கழுத்தும்
    ஆனந்தவிகடனும் கையும்
    ஒரேஞபார்லி போத்தலும்
    ரோஸ்ட் பாணுடன் சம்பலும்………

    உதுமாதிரி இன்னும் நிறைய நம்மவர் கூத்துக்கள் கிடக்குது. அதுகளையும்கூட அனுமதிக்க வேண்டியிருக்கு

    Reply
  • Nackeera
    Nackeera

    பரம்! நம்பிக்கை இல்லாத மனிதர் என்றும் வாழ்ந்ததில்லை. நான் நாளை வருகிறேன் எனும் பொழுது அங்கே நான் நாளை வாழ்வேன் எனும் நம்பிக்கை இழையோடுகிறது. இந்த நம்பிக்கைகளில் உயிர்வாழ்வன தான் மதங்கள். அதனால் மதவருகைகளையும்; நம்பிக்கைகளையும்; கீழத்தைய கிழக்கத்தை கலாச்சாரங்கள்; விழுமியங்களின் வருகைகளைகளும் புரையோடிப்போய் கிடக்கம் வெள்ளையர் மனங்களினூடாக எப்படித் பார்க்கப்படுகிறது என்பது தான் பயணிகளின் குறியீடாக அமைந்தது. பேருந்தை ஒரு உலகமாகவும் அதில் பயணிகளின் வருகை சனப்பெருக்கமாகவும்; கலாச்சார மாற்றங்களை உலகம் எதிர்கொள்கிறது என்பதை வெளிநாட்டவர்களாகவும்: அப்பெருக்கங்களாலும்; தொழிற்சாலை மோட்டார் வண்டிகளாலும் காற்று கரியாக்கப்படுவதால் மூச்சு நிறுத்தப்படுவதை ரையர் வெடித்து பஸ்முழுவதும் சாதி மத பேதமின்றி அழியப்போவதையும் குறியீடாக காண்பிக்கிறது கவிதை.

    மதம்பிடித்து மதம் கொள்ளாது ஒன்றாய் இணைந்த காற்றைக் காப்பாற்ற வேண்டிய கடமை உலகத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு. பஸ்சினுள்தான் காற்று கரியானது என யன்னலைத் திறந்தால் தொழிற்சாலைகள் படுத்திருந்து சுருட்டடிக்கின்றன. ஒருவர் படுத்திருந்து சுருட்டுக் பிடித்தால் எப்படி இருக்குமே அதே போலிருக்கும் தொழிற்சாலைகளின் குழாய்களூடு தள்ளப்படும் கரியமில வாயு. வாழைக்குலையை புகையடித்துப் பழுக்கவைப்பது போல் இக்குழாய்களூடு புகையடித்து வானம் பழுக்கவைக்கப்படுகிறது.

    நக்கீராவின் வேறு சில பழைய கவிதைகள்:
    http://nackeeraa.wordpress.com/

    நட்புடன் நோர்வே நக்கீரா

    Reply
  • Nackeera
    Nackeera

    லண்டன் பையனுக்கு! சரியான நோக்கோடு பார்க்கிறீர்கள். படிமம் என்பதால் பல வடிவங்களை கவிதை எடுக்கும். அவரவர்கள் தம்கலாச்சார விழுமியங்களை கைவிட நான் சொல்லவில்லை ஆனால் அது மற்றவர்களால் எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதுவும் எவர் எப்படி இருந்தாலும் ஒரே பஸ்சில்தான் போக வேண்டி இருக்கிறது. பஸ் (உலகம்)என்பதும்; காற்றென்பதும் எல்லோருக்கும் பொதுவான போதும் நாம் சிறு சிறு பேதங்களையல்லவா நக்கலாகவும் நளினமாகவும் பார்த்துப் படிகி பண்ணிக் கொண்ட இருக்கிறோம் ஆனால் பஸ் (உலகம்) பாதாளத்தை நோக்கிப் பயணம் செய்வதை நாம் மறந்து விடுகிறோம் என்பதே தத்துவார்த்தம்.

    Reply
  • தமிழில் செய்திகள்
    தமிழில் செய்திகள்

    http://tamilseithi.wordpress.com

    […] http://thesamnet.co.uk/?p=16894 […]

    Reply
  • பல்லி
    பல்லி

    பல்லியின் லொள்ளுக்கு
    கவிதயும் ஒரு கேடா;;
    இப்படிதான் பலருக்கு
    எண்ணவுமே தோன்றும்;;

    தினம் சில கட்டுரைகள்
    மணிக்கு பல பின்னோட்டம்;;
    தமிழர்கள் கூடல் ஒன்றில்
    தேனீர் வேளை போல்;;

    நக்கீரன் கவிதைகளும்
    இடையினிலே அரங்கேற;;
    அதுக்கும் பின்னோட்டம்
    விடுவது தவறல்ல;;

    இலக்கிய சந்திப்பில்
    இக்கவியோ வந்துவிட்டால்;;
    இனையற்ற மகிழ்ச்சி தரும்
    விமர்சன பிரியர்க்கு;;

    கவியின் ஆரம்பமே
    மொழியோடு மோதுவதால்;;
    யதார்த்த கவிதையிது
    என்பதுவும் அனுபவமே;;

    சமுதாய புரிந்துனர்வு
    யாவருக்கும் வேண்டுமே;;
    உணவாக இருந்தாலும்
    இடையூறு தவறுதானே;;

    இசையுடன் விஸத்தை
    இன்பமாய் கலந்து;;
    பலரது தூக்கத்தை
    பட்டாசாய் கெடுத்து;;

    பகுத்தறிவை விட்டாரா
    நோர்வேயின் நக்கீரன்;;
    நல்லாய்தான் சொல்லுகிறார்
    மதத்துக்கு மதம் என்று;;

    விண்வெளியில் ஆராட்ச்சி
    ஓசான் படலம் பற்றி;;
    நக்கீரன் கவிதையுமோ
    கரும் புகை சேதம் சொல்லி;;

    பல கருத்தை ஏற்றி கொண்டு
    கரும்புகையை ஒதுக்கி விட்டு;;
    கருத்துடைய கவிதையிது
    அதனால்தான் பேரூந்தா???

    இது விமர்சனமல்ல
    நட்புக்காய் பல்லி;;

    Reply
  • நக்கீரா
    நக்கீரா

    பல்லிக்குப் பலன் சொல்லப் பாட்டெடுத்தேன்
    பல்லுரண்டும் கிட்டிடவே நா மடித்தேன்

    பல்லியைத் தேடி பிராண்டினேன் கணனியை
    சொல்லியது கணனி பல்லியாரென்று

    பல்லி சொல்லியும் கேளாது
    தொலைந்து போன
    தொலைபே(வே)சி எடுத்து
    தொலை தூரம் தொடர்பு கொள்ள
    பல்லி பதுங்கியது புலியாக
    பின் என்மனதின் கிலியாக

    இலக்கியச் சந்திப்பில்
    இக்கவிதை வந்துவிட்டால்
    இலக்கியம் நாறிவிடும்
    இலட்சியம் ஓடிவிடும்
    அலட்சியம் செய்வதுதான்
    இலட்சனை ஆகிவிடும்

    மதம் வேண்டும்
    மனிதமதம் வேண்டும்
    மதத்தினுள் மனித மதம் வேண்டும்
    மதத்தில் மதம் வேண்டாம் மக்காள்

    அறியாமல் சொல்லாது பல்லி
    நோர்வேயில் அறிந்த அறிவால்
    அறைந்து சொல்கிறது
    பல்லியோ!! பல்லி

    பல்லியைத் தேடினேன் பத்தையிலும்
    மெத்தையிலும் பல்லியோ
    ஈழத்துச் செத்தையிலும்
    தேசத்தை நேசிக்கும் தேசியவாதிக்கு
    தேகத்தையே ஊற்றிடுவோம் தேனாக பல்லிக்கு

    பல்லி சொன்னால் தப்பாது
    பலிக்காமலும் போகாது
    வருமுன் காக்கும் வள்ளலுக்கு
    வணங்குகிறேன்
    தலை வணங்குகிறேன்

    நட்புடன்
    நோர்வே நக்கீரா

    Reply