மருத்துவத் துறையில் சாதனை புரிந்துள்ள மூன்று அமெரிக்க விஞ்ஞாணிகள் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த எலிசபெத் பிளாக்பர்ன், கரோல் கிரெய்டர், ஜேக் சோஸ்டாக் ஆகியோர் 2009-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு தெரிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எலிசபெத் பிளாக்பர்ன்
அவுஸ்திரேலியாவில் 1948-ல் பிறந்தவர். தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1975-ல் டாக்டர் பட்டம் பெற்றவர்.
கரோல் கிரெய்டர்
அமெரிக்கரான கரோல் கிரெய்டர் 1961-ல் பிறந்தார். 1987-ல் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.
ஜேக் சோஸ்டாக்
லண்டனில் 1952-ல் பிறந்தார். அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ள இவர் நியூயார்க்கின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் 1977-ல் டாக்டர் பட்டம் பெற்றார். 1979 முதல் ஹார்வர்டு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.
வயோதிகம் தொடர்பான முக்கியக் கண்டுபிடிப்புக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இவர்களது கண்டுபிடிப்பு புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவும். வயோதிகத்துக்கு காரணமான செல் மற்றும் செல் பிரிதலின் போது குரோமோசோம்கள் எவ்வாறு பிரதி எடுக்கின்றன என்பதை இவர்கள் கண்டறிந்துள்ளனர்.
எதிர்வரும் டிசம்பர் 10-ம் தேதி ஸ்டாக்ஹோம் மற்றும் ஒஸ்லோவில் நடைபெறும் விழாவில் இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது. நோபல் பரிசில் தங்கப் பதக்கம், பட்டயம் மற்றும் ரொக்கப் பரிசு ஆகியவை அடங்கும். பரிசு தொகை மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும். டைனமைட்டை கண்டுபிடித்த அல்பிரட் நோபலின் நினைவாக 1901-ம் ஆண்டில் இருந்து பல்வேறு துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.