October

October

பத்திரிகை, பேரவையை மீண்டும் செயற்படுத்த குறைநிரப்பு பிரேரணை 4.79 மில். ரூபாவுக்கு சமர்ப்பிப்பு

26parliament.jpgஇலங்கை பத்திரிகைப் பேரவையை மீண்டும் செயற்பட வைப்பதற்காக 4.79 மில்லியன் ரூபாவுக்கான குறை நிரப்பு பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பாராளுமன்ற பொது தொழில் முயற்சிகள் செயற்குழுவின் (சேளப்) கட்டளையின் பிரகாரம் இலங்கை பேரவை மீண்டும் செயற்படவிருக்கின்றது.

இதன் உத்தியோகத்தர்களின் சம்பளம், அலுவலகத் தளபாடக் கொள்வனவு, மற்றும் மீண்டெழும் செலவு என்பவற்றுக்காகவே இக்குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. தகவல், ஊடகத்துறை அமைச்சர் சார்பில் ஆளும் கட்சி பிரதம கொறடாவும், அமைச்சிருமான தினேஷ் குணவர்தன இந்த குறை நிரப்பு பிரேரணையை சபையில் சமர்ப்பித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் கடும் ‘வரட்சி’ இரு ஆதி வாசிகள் மரணம்

அம்பாறை மாவட்டத்தில் நிலவும் வரட்சியால் றதுகல காட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த ஆதிவாசிகள் மரணமடைந்தும், நச்சுக் கிழங்குகளை உண்டதனால் சிலர் சுகவீனமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அம்பாறை- பிபிலை பிரதான வீதியில் சுமார் 15 மைல் தொலைவில் றதுகல என்ற காட்டுப் பிரதேசம் அமைந்துள்ளது. அங்கு சுமார் 50 ஆதிவாசிகள் குடும்பம் வாழ்ந்து வருகின்றன. சுது வன்னிலத்தோ என்பவர் அக்குடும்பங்களுக்கு தலைமை தாங்கியுள்ளார்.

அண்மைக் காலமாக மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி றதுகலவையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் உண்பதற்காக பராமரித்து வந்த சிறுசேனைகள் நீரின்றி வரண்டுவிட்டன. அதனால் அவர்கள் வேறு பல காட்டு மரங்களின் கனிகளையும், காய்களையும் சில கிழங்கு வகைகளையும் புசித்துவந்தனராம். கடந்தவாரம் இவ்விதம் உண்ட கிழங்கில் இருந்த நச்சுத்தன்மை காரணமாக இரு ஆதிவாசிகள் இறந்துள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழ்க் கைதிகள் விவகாரம்; அமைச்சர் மிலிந்தவுடன் புத்திரசிகாமணி பேச்சு

091009puttirasigamani.jpgசிறைகளில் தடுத்துவைக்கப் பட்டுள்ள தமிழ்க் கைதிகளின் விடுதலை குறித்து நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவ தாகப் பிரதியமைச்சர் வி.புத்திர சிகாமணி தெரிவித்தார். கைதி களுக்கு எதிராக வழக்குப் புதிவு செய்வதா, அல்லது விடுதலை செய்வதா என்பதை ஆராய்ந்து வருவதாகப் பிரதியமைச்சர் கூறினார்.

அவசரகாலச் சட்டத்தின் கீழும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழகக் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி அண்மையில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தனர். பின்னர் பிரதியமைச்சர் கவனம் செலுத்தியதையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். பல்வேறு சிறைகளிலும் சுமார் 600 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழா நேற்று கோலாகலமாக ஆரம்பம்

இந்த சமய கலாசார பாரம்பரியங்களை உள்ளடக்கியதான மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழா நேற்று 10ம் திகதி வெகு கோலாகல மாக ஆரம்பமானது. மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்- முஸ்லிம் பாட சாலைகளைச் சேர்ந்த சுமார் 2000 மாணவர்களும், மற்றும் ஆசிரியர்களும், மாத்தளை மாவட்ட பொதுமக்களும் தொடக்க விழாவில் பெருந் திரளாகக் கலந்து கொண்டனர்.

மாத்தளை நகரெங்கும் வாழை, மா தோரணங்களால் அலங்கரிக்கப்ப ட்ட, மாத்தளை மாநகர வீதியெங் கும், சாஹித்திய விழாவை வாழ்த்தி மும்மொழிகளிலும் பதாகைகள் தொங்க விடப்பட்டிருந்தன.

சாஹித்திய விழாவிற்கு மெருகூட்டும் வகையில் மாத்தளை பாக்கியம் மகளிர் தேசிய பாடசாலை முன்றலிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பொழுது, திருகோணமலையிலிருந்து வருகை தந்திருந்த இனிய இசை முன்னே ஊர்வலத்தில் அணி வகுத்துச் செல்ல, விழாவின் கதாநாயகனான மத்திய மாகாண அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் தலைமையில் விழா பிரமுகர்களும், தமிழ் இலக்கியக் கர்த்தாக்களும், மற்றும் பொதுமக்களும் அணி வகுத்து சென்றனர்.

வீதிகள் தோறும் பட்டாசுகள் கொளுத்தி பொதுமக்கள் தமது ஆரவாரத்தினை தெரிவித்தனர்.

30 வருடங்களின்; பின்னர் யாழ். நகரில் உள்ளூராட்சி மாநாடு! எதிர்வரும் 18ஆம் 19ஆம் திகதிகளில்

260909srilanka.jpgவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் உள்ளூராட்சி ஆளுகையை விருத்தி செய்வதற்கான தளமொன்றை உருவாக்கும் நோக்குடன் யாழ். நகரில் உள்ளூராட்சி மாநாடு ஒன்றை அரசாங்கம் நடத்தவுள்ளது. உள்ளூராட்சி மாநாடு 2009 என்ற பெயரில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

சுமார் 30 வருடங்களுக்குப் பின்னர் நடத்தப்படவுள்ள இம்மாநாடு எதிர்வரும் 18ஆம் 19ஆம் திகதிகளில் நடைபெறும்.

18ம் திகதி யாழ். மத்திய கல்லூரியிலும் 19ம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் மாநாடு நடைபெறும்.
மாநாடு நான்கு அம்சங்களைக் கொண்டதாக நடத்தப்படும்.
1. கருத்தரங்குகள்
2. வடமாகாண உள்ளூராட்சி,  மாகாண சபை நிர்வாகங்களினால் நடத்தப்படும் கண்காட்சிகள்
3. கலாசார நிகழ்வுகள்
4. பரிசுகளும் விருதுகளும் வழங்கல்
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு,  கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலிலிருந்து உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த சுமார்; 730 பேர் நிகழ்வில் கலந்து சிறப்பிக் கவுள்ளனர். வெளிமாவட்டங்களிலிருந்தும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளும் செல்லவுள்ளனர்.

இடம்பெயர்ந்தோரின் கடற்றொழில் உபகரணங்கள், படகுகள், கையளிப்பு

வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது மாத்தளன், புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் மற்றும் முல்லை த்தீவுப் பகுதிகளிலிருந்து படகுகள் மூலம் முனைப்பகுதிக்குத் தப்பி வந்தவர்களில் ஒரு சிலரது படகுகளும், வெளியிணைப்பு இயந்திரங்களும் உரிமையாளர்களிடம் கடற்படையி னரால் கையளிக்கப்பட்டன.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமராட்சிப் பிரதேசக் கடற்படை அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அமைச்சரின் முன்னிலையில் இவை கையளிக்கப்பட்டன.

வன்னி முகாம் GCE(O/L) மாணவர்களுக்கான கல்வி நிவாரணத் திட்டம்‏

அன்புடன் நண்பர்களுக்கு,

வன்னி முகாம்களில் உள்ள மக்களின் நிலை நீங்கள் அறியாதது அல்ல. அங்குள்ள 280 000 மக்கள் தொகையில் 60 000 பேர் மாணவர்கள். இளமையில் கல்வி சிலையில் எழுத்தென்பது பெரியோர் வாக்கு. துரதிஸ்டவசமாக அம்மாணவர்கள் மோசமான சூழலில் தங்கள் கல்வியைத் தொடர நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு எம்மாலான உதவியை வழங்குவது புலம்பெயர்ந்து வாழும் எங்களின் பொறுப்பும் கடைமையும் கூட.

அந்த வகையில் 5ம்தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 4872 மாணவர்களுக்கும் 15 000 பவுண் செலவில் 4 வழிகாட்டிப் புத்தகங்களையும் 30 மாதிரி வினாத்தாள்களையும் வழங்கி அவர்களது பரீட்சைக்கு எம்மாலான உதவியை வழங்கி இருந்தோம்.

அத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததை அடுத்து வரும் டிசம்பரில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கும் எமது உதவியை வன்னி முகாம்களில் உள்ள மாணவர்களின் கல்விக்குப் பொறுப்பாக உள்ள அதிகாரி த மேகநாதன் கேட்டுள்ளார். அத்திட்டம் பற்றிய விபரங்கள் 2 – 4 பக்கங்களில் உள்ளது.

பரீட்சைகள் டிசம்பரில் நடைபெற இருப்பதால் மிகத் துரிதமாக இவற்றை செய்ய வேண்டிய நிலையுள்ளது. நாம் பலரிடம் தொடர்பு கொண்ட போதும் மிகச்சிலரே உதவ முன்வந்துள்ளதால் இத்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும் எனக் கருதவில்லை. அதனால் கிடைக்கும் நிதிக்கு ஏற்ப ஒவ்வவொரு பாடத்திற்கும் மாதிரி வினாத்தாள்களை 6200 மாணவர்களுக்கும் வழங்குவதென முடிவெடுத்துள்ளோம். இக்கல்வித் திட்டத்திற்கு உங்களது உதவியையும் எதிர்பார்க்கின்றோம்.

நிதிப்பங்களிப்புச் செய்பவர்களின் விபரங்கள் ஒவ்வொரு வினாத்தாளின் முடிவிலும் அச்சிடப்படுவதுடன் முழுமையான கணக்கறிக்கை பொதுத் தளத்தில் வெளியிடப்படும். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட கல்வித்திட்டத்தின் அறிக்கை அதனை உறுதிப்படுத்தியும் உள்ளது.

உங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.

த ஜெயபாலன் (தேசம்நெற்)
._._._._._.

தரம் 5 – புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு தேசம்நெற் – சிந்தனை வட்டம் மேற்கொண்ட கல்வி நிவாரணப் பணிகளுக்கு வன்னி முகாம் மாணவர்களின் கல்விக்குப் பொறுப்பாகவுள்ள அதிகாரி த மேகநாதன் அனுப்பி வைத்த கடிதம்:

விசேட கல்வி அலுவலகம்
செட்டிகுளம் ம வி
செட்டிகுளம்

2009 – 08 – 24

எம்மால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிற்கு வருகை தந்து நிவாரணக் கிராமங்களில் தங்கி கற்றுவரும் மாணவர்களுக்காக தங்களால் மேற்கொள்ளப்பட்ட மேற்படி செயற் திட்டம் காரணமாக நேற்றைய நாளில் நடைபெற்று முடிந்துள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சைக்குத் தோற்றியுள்ள மாணவர்களிற்கு பெரிதும் பயன் தந்துள்ளது. ஆசிரியர்க்கான கற்பித்தலை இலகுபடுத்தி உள்ளது. கையேடுகள் மாணவர்கள் சுயமாகக் கற்ற உதவின. தங்கள் பயிற்சி மாதிரி வினாப்பத்திரங்களில் காணப்பட்ட வினாக்களை ஒத்ததாகக் வினாக்கள் காணப்பட்டதாகவும் ஆசிரியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 30 வினாப் பத்திரங்களைச் செய்து பழகியதன் காரணமாக பரீட்சைப் பயமின்றி மாணவர்கள் விடைஎழுதி உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கற்றலுக்கு எவ்வித உதவியும் இன்றி முகாமை வந்தடைந்த மாணவர்களுக்கு தங்கள் வினாப்பத்திரங்களும் கையேடுகளும் பரீட்சைக்குத் தயார்படுத்தலுக்கு உதவியுள்ளன. இச்செயற்திட்டம் மூலம் வன்னி மாணவர்களுக்கு நீங்கள் ஆற்றிய கல்விப் பணிக்காக எல்லோர் சார்பாகவும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

த மேகநாதன்

._._._._._.

5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் கல்வி நிவாரணப் பணிகளுக்கு உதவியவர்கள்:

சிந்தனை வட்டம் : 925 680 ரூபாய்
மத்திய இலங்கை முஸ்லீம் பட்டதாரிகள் ஒன்றியம் : 700 000 ரூபாய்
அகிலன் பவுண்டேசன் : 564 000 ரூபாய்
தேசம்நெற் : 200 000 ரூபாய்
லிற்றில் எய்ட் : 188 000 ரூபாய்

லண்டன் நண்பர்கள் :

பி சோமசுந்தரம் : 56 000 ரூபாய்
பொன் சிவகுமார் : 30 000 ரூபாய்
ஆர் சுகேந்திரன் : 28 000 ரூபாய்
எஸ் தீபன் : 28 000 ரூபாய்
ஆர் தர்மராஜ் : 18 000 ரூபாய்
எஸ் செல்வகுமார் : 18 000 ரூபாய்
எஸ் ரவீந்திரகுமார் :  9 000 ரூபாய்
பி விஜி :  9 000 ரூபாய்

ஒத்துழைப்பு வழங்கிய அனைவரிற்கும் மனமார்ந்த நன்றிகள்!!!

._._._._._.

தேசம் நெற் – சிந்தனை வட்டம் செயற்படுத்தத் திட்டமிட்டுள்ள வன்னி முகாம் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான கல்வி நிவாரண செயற்றிட்டம் – 2009

செயற்றிட்ட அறிக்கை:
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள  நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் தரம் 11 இல் கல்வி பயிலும் 6290  மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காக வேண்டி தேசம் நெற் – சிந்தனை வட்டம்  இணைந்து செயற்படுத்தத் திட்டமிட்டுள்ள க.பொ.த சாதாரண தர  மாணவர்களுக்கான கல்வி நிவாரண செயற்றிட்டம் – 2009 பற்றிய விரிவான அறிக்கை.

மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் வவுனியா நலன்புரி நிலையப் பாடசாலைகளின் இணைப்பாளரும் துணுக்காய் கல்வி வலையப் பணிப்பாளருமான திருவாளர் த. மேகநாதன் 2009.08.17 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தில் இதற்கான வேண்டுகோளை விடுத்து உதவி கோரி இருந்தார்.

நோக்கம்:
வன்னியில் நடைபெற்று முடிந்த யுத்தத்தினால் பாடசாலைக் கல்வியை இழந்து நிவாரண கிராமங்களில் குடியேறியுள்ள கிளிநொச்சி முல்லைத்தீவு உட்பட வடபகுதி மாணவர்களின் கல்வி நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடல். நீண்ட காலங்களாக பாடசாலை முறைசார் கல்வியைப் பெற்றுக்கொள்ள முடியாதிருந்த இம் மாணவர்கள் கற்றவற்றை மறக்காமலிருப்பதற்கும் பாடசாலைக்குச் செல்லாத காலங்களில் கற்பிக்கப்பட்ட விடயங்களை சுருக்கமாக மீட்டுவதற்கும் இவர்கள் எதிர்நோக்கும் அரசாங்கப் பரீட்சைகளை நாடளாவிய ரீதியிலுள்ள ஏனைய மாணவர்களைப் போல நம்பிக்கையுடனும் அச்சமின்றியும் எதிர்நோக்கக் கூடிய ஆயத்த நிலையை உருவாக்குதல்.

திட்டம்:
நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்து 2009 ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு நேரடி பாடப்பரப்புக்கு உட்பட்ட வகையில் கல்வி நிவாரண உதவிகளை வழங்குவதினூடாக பரீட்சைக்கு ஆயத்தப்படுத்தல்.

இலக்கு:
கடந்த காலங்களில் அரசாங்கப் பரீட்சையை எதிர்நோக்கிய வடமாகாண மாணவர்கள் பெற்ற சித்தி வீதத்தை பாதுகாத்தல். குறிப்பாக 2009 ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் நலன்புரி நிலைய மாணவர்களுள் 35 சதவீதத்துக்கு மேலான மாணவர்களை க.பொ.த உயர்தர வகுப்புக்கான அனுமதியைப் பெறக்கூடிய வகையில் சித்தியடையச் செய்தல்.

மாணவர்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள கல்வி நிவாரண உதவிகள்:
1 மாதிரி வினாத்தாள்கள்
2. கையேடுகள்

1 மாதிரி வினாத்தாள்கள்:
புதிய பாடப்பரப்பை உள்ளக்கிய பல்தேர்வு வினாக்கள், கட்டுரை வினாக்கள் அமைப்பு வினாக்களைக் கொண்ட ஆறு மாதிரி வினாத்தாள்கள் ஐந்து பிரதான பாடங்களுக்கும் தனித்தனியே வழங்கப்படும். மொத்தமாக வழங்கப்பட உத்தேசிக்கப்பட்ட மாதிரி வினாத்தாள்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் 6 மாதிரி வினாத்தள்கள்படி 5 பாடங்களுக்கும் 30 மாதிரி வினாத்தாள்களாகும்.

இந்த மாதிரிவினாத்தாள்கள நலன்புரி நிலைய பாடசாலைகளில் உள்ள  ஆசிரியர்களினதும் அம்முகாம்களுக்குச் சென்று கற்பிக்க உள்ள பல்கலைக்கழக மாணவர்களின் துணையுடனும் பரீட்சைகளாக நடத்தப்பட்டு மதிப்பீடு செய்யப்படும்.

இந்த மாதிரி வினாத்தாள்கள் அரசாங்க வினாப்பத்திரங்கள் மதிப்பீடு செய்யும். ஆசிரியர்களாலும்,  வினாப்பத்திர உருப்படிகளை தயாரிப்பதில் அனுபவம் மிக்க ஆசிரியர்களாலும் ஆசிரிய ஆலோசகர்களாலும் நலன்புரி நிலைய மாணவர்களின் கல்வி நிலையைக்கருத்தில் கொண்டு தயாரிக்கப்படும்.

2008 அரசாங்கப் பரீட்சை வினாத்தாள்கள்:
ஐந்து பிரதான பாடங்களுக்கும் தனித்தனியே வழங்கப்படும். மொத்தமாக வழங்கப்பட உத்தேசிக்கப்பட்ட அரசாங்கப் பரீட்சை வினாத்தாளகள் 05 ஆகும்.

3 கையேடுகள்:
நலன் புரி நிலைய மாணவர்களின் கல்வி நிலையைக்கருத்தில் கொண்டு புதிய பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கையேடுகள் ஒவ்வொரு பாடத்திற்கும் சுமார் 10 வரை கையேடுகள் வழங்கப்படும். இக்கையேடுகள் வழிகாட்டிக் குறிப்புக்களைக் கொண்டதாகவும் பயிற்சிகளைக் கொண்டதாகவும் அமைந்திருக்கும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதான பாடங்கள்:
1.விஞ்ஞானம்
2.தமிழ்
3.கணிதம்
4.ஆங்கிலம்
5.வரலாறு

உதவி வழங்கப்பட வேண்டிய மாணவர் எண்ணிக்கை:
வடபுலத்து மண்ணில் தமிழர்கள் செறிவாக வாழ்ந்து வந்த கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, கண்டாவலை ஆகிய கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த அனைத்துப் பாடசாலை மாணவர்களும், அதேபோல முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும்,  துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த துணுக்காய்,  ஒட்டிசுட்டான்,  மாந்தை கிழக்கு ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் தற்போது அகதிகளாக நலன் புரிநிலையங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

2009.07.31ஆம் திகதி அறிக்கைப் பிரகாரம் வவுனியா நலன்புரி நிலையங்களில் சுமார் 60,000 மாணவர்கள்  மொத்தமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைப்படி 2009 ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர் எண்ணிக்கை வருமாறு:

வலயம் 0 – 535 மாணவர்கள்
வலயம் 01 – 1261 மாணவர்கள் 
வலயம் 02 – 1401 மாணவர்கள்
வலயம் 03 – 912 மாணவர்கள்
வலயம் 04 – 907 மாணவர்கள்
வலயம் 05 – 99 மாணவர்கள்
சுமதிபுரம் நிவாரண முகாம் – 156 மாணவர்கள்
வீரபுரம் நிவாரண முகாம் – 116 மாணவர்கள்
தர்மபுரம் நிவாரண முகாம் – 136 மாணவர்கள்
IDP பாடசாலைகள் – 583 மாணவர்கள்
புல்மோட்டை நலன்புரி நிலையம் – 184 மாணவர்கள்

மொத்தம் – 6290 மாணவர்கள்

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செலவீனம்:
ஒரு மாணவனுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் 10 அல்லது 8 (5 பாடத்திற்கும் 42) வழிகாட்டிக் குறிப்பேடுகளையும் 6 (5 பாடத்திற்கும் 30) மாதிரி வினாப்பத்திரங்களையும் ஒரு (5 பாடத்திற்கும் 5) அரசாங்க வினாப்பத்திரத்தையும் வழங்குவதற்கு 900 ரூபாய் ஆகின்றது. (அண்ணளவாக 5 பவுண்கள்)

6200 மாணவர்களிற்கும் ஒவ்வொருவருக்கும் 42 கையேடுகளையும் 30 மாதிரி வினாத்தாள்களையும் 5 அரசாங்க வினாப்பத்திரங்களையும் வழங்குவதற்கு  5 661 000 ரூபாய் செலவாகின்றது. (அண்ணளவாக 30 000 பவுண்கள்)

மாணவனுக்கு 5 பாடத்திற்கும் 5 வினாத்தாள்களை வழங்க ஏற்படும் செலவு:
ஒரு பாடத்திற்கு ஒரு வினாத்தாள் வழங்க ஏற்படும் செலவு 15 ரூபாய்
5 பாடத்திற்கும் 5 வினாத்தாள்கள் வழங்க ஏற்படும் செலவு  75 ரூபாய்
6290 மாணவர்களுக்கு 5 பாடத்திற்கும் 5 வினாத்தாள்கள் வழங்க ஏற்படும் செலவு 471 750 ரூபாய்
(அண்ணளவாக 2500 பவுண்கள்)

ஒரு மாணவனுக்கான வழிகாட்டிக் குறிப்பேடுகளுக்கு ஏற்படும் செலவு:
விஞ்ஞானம் பாடத்திற்கான 10 வழிகாட்டிக் குறிப்பேடுகள் 100 ரூபாய்
கணித பாடத்திற்கான 8 வழிகாட்டிக் குறிப்பேடுகள் 80 ரூபாய்
வரலாறுப் பாடத்திற்கான 8 வழிகாட்டிக் குறிப்பேடுகள் 80 ரூபாய்
தமிழப் பாடத்திற்கான 8 வழிகாட்டிக் குறிப்பேடுகள் 80 ரூபாய்
ஆங்கிலப் பாடத்திற்கான 8 வழிகாட்டிக் குறிப்பேடுகள் 56 ரூபாய்
 
6290 மாணவர்களுக்கான வழிகாட்டிக் குறிப்பேடுகளுக்கு ஏற்படும் செலவு:
விஞ்ஞானம் பாடத்திற்கான 10 வழிகாட்டிக் குறிப்பேடுகள் 629 000 ரூபாய்
(அண்ணளவாக 3400 பவுண்கள்)
கணித பாடத்திற்கான 8 வழிகாட்டிக் குறிப்பேடுகள் 503 200 ரூபாய்
(அண்ணளவாக 2700 பவுண்கள்)
வரலாறுப் பாடத்திற்கான 8 வழிகாட்டிக் குறிப்பேடுகள் 303 200 ரூபாய்
(அண்ணளவாக 2700 பவுண்கள்)
தமிழப் பாடத்திற்கான 8 வழிகாட்டிக் குறிப்பேடுகள்  503 200 ரூபாய்
(அண்ணளவாக 2700 பவுண்கள்)
ஆங்கிலப் பாடத்திற்கான 8 வழிகாட்டிக் குறிப்பேடுகள்  352 200 ரூபாய்
(அண்ணளவாக 1900 பவுண்கள்)

தொடர்பு விபரங்கள்:

பிரித்தானியாவில்:

த ஜெயபாலன் : 0044 208 279 0354 அல்லது 0044 7800 596 786 அல்லது thesam97@hotmail.com

ரி சோதிலிங்கம் : 0044 7846 322 369 அல்லது sothi@btinternet.com

இலங்கையில்:
பி எம் புன்னியாமின் : 0094 812 493 892 அல்லது pmpuniyameen@yahoo.com

சமூக வளர்ச்சியின் அடிப்படை கல்வி! இளமையில் கல்வி சமூகத்தின் அஸ்திவாரம்!

தென்மாகாண சபைத் தேர்தல் – ஆளும் ஐக்கிய முன்னணி கூட்டணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி – புன்னியாமீன்

11upfa.jpgநேற்று 10ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற தென் மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது.

தென் மாகாணசபையில் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை 55ஆகும். இதில்  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு போனஸ் ஆசனம் இரண்டையும் சேர்த்து 38 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய கட்சி 14 ஆசனங்களையும் ஜே வீ பி 3 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

அம்பாந்தொட்டை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 961 வாக்குகளை பெற்று  8 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி 62 ஆயிரத்து 391 வாக்குகளை பெற்று  3 ஆசனங்களையும், 31 ஆயிரத்து 734 வாக்குகளை பெற்ற ஜே வி பி 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 2 லட்சத்து 57 ஆயிரத்து 110 வாக்குகளை பெற்று 12 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி 94 ஆயிரத்து 614 வாக்குகளுடன் 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ள அதேவேளை, 20 ஆயிரத்து 687 வாக்குளை பெற்ற ஜே வி பி 1 ஆசனத்தை வென்றுள்ளது.

இதேவேளை காலி மாவட்டத்தின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி, 3 லட்சத்து 54 ஆயிரம் வாக்குகளை பெற்று 16 ஆசனங்களை வென்றுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி 1லட்சத்து 40 ஆயிரத்து 175 வாக்குகளுடன் 6 ஆசனங்களையும், 19 ஆயிரத்து 958 வாக்குகளை பெற்ற ஜே வீ பி 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன. மாவட்ட ரீதியானதும் மாகாண ரீதியானதுமான முழுமையான பெறுபேறுகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

தென் மாகாண சபைக்கான தேர்தல் நேற்று சனிக்கிழமை 10ம் திகதி நடைபெற்றது. காலை ஏழு மணிக்கு ஆரம்பமான தேர்தல் வாக்கெடுப்பு மாலை நான்கு மணிக்கு நிறைவுபெற்றது. ஒப்பீட்டளவில் நேற்றைய தேர்தல் அமைதியாக நடைபெற்றதாக காலி மாவட்ட பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். சில சில சம்பவங்களைத் தவிர பாரிய சம்பவங்கள் ஏதும் இடம்பெறவில்லை என்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரு போனஸ் உறுப்பினர்கள் அடங்களாக 55 பேரைத் தெரிவு செய்வதற்காக நடைபெற்ற இந்தத் தேர்தலில், 18 அரசியல் கட்சிகளிலும் 13 சுயேச்சைக் குழுக்களிலுமாக 1,091 வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர்.

காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 17 இலட்சத்து 61 ஆயிரத்து 859 பேர் வாக்களிக்கவென 1479 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும், அமைதியாகவும் நடாத்துவதற்கென பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இராணுவத்தினருக்கு மேலதிகமாக சுமார் ஏழாயிரம் பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டிருந்தனர். தேர்தல் கடமைகளில் பத்தாயிரம் அரச ஊழியர்கள் அமர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காலி மாவட்டத்தின் பலப்பிட்டிய, அம்பலாங்கொடை, கரந்தெனிய, பெந்தர-எல்பிடிய, ஹினிதும, பத்தேகம, ரத்கம, காலி, அக்மீமன, ஹபராதுவ ஆகிய 10 தொகுதிகளில் 761,815 பேர் 670 நிலையங்களில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மாத்தறை மாவட்டத்தின் தெனியாய, ஹக்மன, அகுரஸ்ஸ, கம்புறுபிட்டிய, தெவிநுவர, மாத்தறை, வெலிகம ஆகிய தேர்தல் தொகுதிகளைச் சேர்ந்த 578,858 பேர் 436 நிலையங்களிலும். அம்பாந்தோட்டை மாவட்டத்தின் முல்கிரிகல, பெலியத்த, தங்காலை, திஸ்ஸமஹராம ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளைச் சேர்ந்த 421,186 வாக்காளர்கள் 373 நிலையங்களிலும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தபால் மூலம் வாக்களிப்பதற்கு 31,158 அரச ஊழியர்கள் 85மூ வாக்களித்திருந்தனர். அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் ஆளும் கூட்டணியே வெற்றியீட்டிருந்தது. மாகாண ரீதியில் 67.88 வீத வாக்குகளை ஆளும் கட்சி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத்தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸ வாக்கெடுப்பில் கலந்துகொண்டார். அச்சந்தர்ப்பத்தில் அடுத்ததாக ஜனாதிபதித் தேர்தலா அல்லது பாராளுமன்றத் தேர்தலா என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அது பற்றி பின்னர் குறிப்பிடப்படும் என்றார். ஆனாலும் உயர்மட்டங்களிலிருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் நவம்பர் 19ஆம் திகதியின் பின் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவித்தல் விடுக்கப்படுமென தெரியவருகின்றது. அதேநேரம், 2010ஆம் ஆண்டு ஜனவரி மாத ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமென நம்பகமான வட்டாரங்கள் தேசம்நெற் க்குத் தெரிவித்தன. ஜனாதிபதித் தேர்தலையடுத்து பாராளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது. பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதே தற்போதைய அரசாங்கத்தின் இலக்காகக் காணப்படுகின்றது. அவ்வாறு மூன்றில் இரண்டு பாராளுமன்ற பெரும்பான்மை கிடைக்குமிடத்து ஜனாதிபதி ஆட்சி முறையிலும் தேர்தல் முறைகளிலும் அரசியல் அமைப்பிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமென தெரியவருகின்றது. புதிய அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்படுமிடத்து இலங்கையில் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் அரசியலமைப்பினூடாக முன்வைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றதாகவும் நம்பப்படுகின்றது.

Final District Result – Matara District
 
Party Name / Votes %/  Seats
 
     United People’s Freedom Alliance  257110 / 67.97% / 12
 
     United National Party  94614 / 25.01% / 5
 
     People’s Liberation Front  20687 / 5.47% / 1

 
     Sri Lanka Muslim Congress  4280 / 1.13% / 0
 
     United National Alliance  371 / 0.10% / 0
 
     Jathika Sangwardena Peramuna  294 / 0.08% / 0
 
     Independent Group 1  252  /0.07% / 0
 
     United Socialist Party  218 / 0.06% / 0
 
     Jana Setha Peramuna  98 / 0.03% / 0
 
     Democratic Unity Alliance  61 / 0.02% / 0
 
     Independent Group 3  59 / 0.02% / 0
 
     Patriotic National Front  43 / 0.01% / 0
 
     Eksath Lanka Maha Sabha  36 / 0.01% / 0
 
     Sri Lanka Progressive Front  34 / 0.01% / 0
 
     Sinhalaye Mahasammatha Bhoomiputra Pakshaya  32 / 0.01% / 0
 
     Independent Group 2  32 / 0.01% / 0
 
     Ruhunu Janatha Party  31 / 0.01% / 0
 
Valid 378,252 / 95.77%
Rejected 16,727 / 4.23%
Polled 394,979 / 0.00%
Electors 578,858

Final District Result – Hambantota District
 
Party Name Votes % Seats
 
     United People’s Freedom Alliance  192961 / 66.95% / 8
 
     United National Party  62391 / 21.65% 3
 
     People’s Liberation Front  31734 / 11.01% / 1
 
     United Socialist Party  221 / 0.08% / 0
 
     Eksath Lanka Podujana Pakshaya  217 / 0.08% / 0
 
     Jathika Sangwardena Peramuna  174 / 0.06% / 0
 
     Independent Group 1  120 / 0.04% / 0
 
     Independent Group 6  105 / 0.04% / 0
 
     Independent Group 3  62 / 0.02% / 0
 
     Eksath Lanka Maha Sabha  55 / 0.02% / 0
 
     Jana Setha Peramuna  52 / 0.02% / 0
 
     Independent Group 2  45 / 0.02% / 0
 
     Independent Group 5  34 / 0.01% / 0
 
     Sinhalaye Mahasammatha Bhoomiputra Pakshaya  23 / 0.01% / 0
 
     Independent Group 4  23 / 0.01% / 0
 
     Sri Lanka Progressive Front  14 / 0.00% / 0
 
Valid 288,231 / 95.56%
Rejected 13,403 / 4.44%
Polled 301,634 / 0.00%
Electors 421,186

Final District Result – Galle District
 
Party Name / Votes % / Seats
 
     United People’s Freedom Alliance  354000  /  68.34%  /  16
 
     United National Party  140175  /  27.06%  /  6
 
     People’s Liberation Front  19958  /  3.85% / 1
 
     Sri Lanka Muslim Congress  2273 / 0.44% / 0
 
     United National Alliance  500 / 0.10% / 0
 
     United Socialist Party  366 / 0.07% / 0
 
     Independent Group 4  112 / 0.02% / 0
 
     Socialist Equality Party  95 / 0.02% / 0
 
     Left Front  92 / 0.02% / 0
 
     Jana Setha Peramuna  89 / 0.02% / 0
 
     Independent Group 3  64 / 0.01% / 0
 
     Eksath Lanka Podujana Pakshaya  57 / 0.01% /0
 
     National People’s Party  49 / 0.01% / 0
 
     Independent Group 2  46 / 0.01% / 0
 
     Sri Lanka Progressive Front  38 / 0.01% / 0
 
     Independent Group 1  38 / 0.01% / 0
 
     Sinhalaye Mahasammatha Bhoomiputra Pakshaya  36 / 0.01% / 0
 
     Ruhunu Janatha Party  21 / 0.00% / 0
 
     Eksath Lanka Maha Sabha  19 / 0.00% / 0
 
Valid 518,028 / 98.97%
Rejected 5,401 / 1.03%
Polled 523,429 / 0.00%
Electors 761,815

Elections to Provincial Councils in Southern Province
Final  Result

 
Party Name Votes % Seats
 
     United People’s Freedom Alliance  804071 / 67.88% / 38*
 
     United National Party  297180 / 25.09% / 14
 
     People’s Liberation Front  72379 / 6.11% / 3
 
     Sri Lanka Muslim Congress  6553 / 0.55% / 0
 
     United National Alliance  871 / 0.07% / 0
 
     United Socialist Party  805 / 0.07% / 0
 
     Jathika Sangwardena Peramuna  468 / 0.04% / 0
 
     Eksath Lanka Podujana Pakshaya  274 / 0.02% / 0
 
     Jana Setha Peramuna  239 / 0.02% / 0
 
     Eksath Lanka Maha Sabha  110 / 0.01% / 0
 
     Socialist Equality Party  95 / 0.01% / 0
 
     Left Front  92 / 0.01% / 0
 
     Sinhalaye Mahasammatha Bhoomiputra Pakshaya  91 / 0.01% / 0
 
     Sri Lanka Progressive Front  86 / 0.01% / 0
 
     Democratic Unity Alliance  61 / 0.01% / 0
 
     Ruhunu Janatha Party  52 / 0.00% / 0
 
     National People’s Party  49 / 0.00% / 0
 
     Patriotic National Front  43 / 0.00% / 0
* Including two (2) bonus seats
 
Valid 1,184,511 /  97.09%
Rejected 35,531 / 2.91%
Polled 1,220,042 / 0.00%
Electors 1,761,859 
# All Independent Groups contested for Galle , Matara and Hambantota districts received 992 votes.

10 பேர் கொண்ட தமிழக பாராளுமன்றக் குழு இன்று இலங்கை வருகை – டி. ஆர். பாலு, கனிமொழி, திருமாவளவன் உட்பட 10 பேர் பங்கேற்பு

baalu.jpgஇலங்கை நிலைவரம் குறித்து ஆராயவென தமிழகத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று இன்று இலங்கை வருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று இந்திய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழக உறுப்பி னர்களைக் கொண்ட குழுவினரே இன்று இலங்கை வரவுள்ளனர். தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பணிப்பிற்கமைய குழுவினர் இலங்கை வருகின்றனர்.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் உறுப்பினரான அமைச்சர் டி. ஆர். பாலு தலைமையில் வரும் இக்குழுவில் 10 பேர் அங்கம் வகிக்கின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமைச்சர் டி. ஆர். பாலு, தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் புதல்வியும், இலங்கை விவகாரம் தொடர்பாக கலைஞரின் ஆலோசகருமான கனிமொழி, எம்.பிக்களான ரி. கே. எஸ். இளங்கோ, ஏ. கே. எஸ். விஜயன், கெலன் டேவிட்சன் ஆகியோரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் என். எஸ். வி. சித்தன், என். சுதர்ஷன நாச்சியப்பன், ஏ. கே. எஸ். அழகிரி, ஜே. எம். ஹருண் ஆகியோரும்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரும் இன்று இலங்கை வருகின்றனர். இன்று காலை இலங்கை வரும் இவர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானுடன் திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

நாளை மேற்படி குழுவினர் யாழ். மற்றும் வவுனியா பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் கண்டறிவர். நாளை மறுதினம் இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகளுடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் முக்கியஸ்தர்களுடனும் சந்திப்புகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது-

இன்று காலை 8.50க்கு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் இல. 1 x 621 ரக ஏயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தமிழக குழுவினர் வருகின்றனர். அங்கிருந்து கிழக்கு மாகாணம் செல்லும் குழுவினர் வாகரையில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதியை பார்வையிடுகின்றனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்களை சந்தித்து பேசவுள்ளனர். மட்டக்களப்பு மேயர் சிவகீதா பிரபாகரனுடனான சந்திப்பு இடம்பெறுவதுடன் இந்திய உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட ரயில், பஸ் திட்டப் பகுதிக்கும் விஜயம் செய்வர். இன்று திருகோணமலையில் தங்கியிருக்கும் மேற்படி தமிழக குழுவினர் நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ். நகர் செல்லவுள்ளனர்.

வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரையும் தமிழக குழுவினர் சந்திக்கவுள்ளனர். இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதிக்கும் விஜயம் செய்யும் குழுவினர், மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களையும் சந்தித்து பேசுவர்.

தமிழகத்திலிருந்து வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலய பிரதிநிதிகளையும் சந்திக்கும் இக்குழுவினர் யாழ். மாநகர சபையின் புதிய மேயர் உட்பட மாநகர சபை உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளனர்.

யாழ். பொது நூலகம், விளையாட்டரங்கு, யாழ். பல்கலைக்கழகம் போன்ற பகுதிகளுக்கும் தமிழக குழுவினர் விஜயம் செய்வர். யாழ். பல்கலைக்கழக துணை வேந்தருடனான சந்திப்பின் பின்னர் நிவாரணக் கிராமங்களிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு வந்த மாணவர்களையும் சந்தித்து உரையாடவுள்ளனர்.

இலங்கை புறப்படுவதற்கு முன்ன தாக ரி. ஆர். பாலு தலைமையிலான தமிழக குழுவினர் கலைஞர் கருணா நிதியை நேற்று மாலை சந்தித்து உரையாடினர். இலங்கைக்கு புறப்ப டுவதற்கு முன்னதாக முதல்வர் கலை ஞர் கருணாநிதியின் ஆலோசனையை பெறுவதற்காகவே இவர்கள் முதல் வரை சந்தித்தனர். 

பிலிப்பைன்ஸில் கடும் புயல், நிலச்சரிவு! : 153 பேர் பலி

280909.jpgபிலிப் பைன்ஸ் நாட்டில் ‘பார்மா’ என்ற புயல் கடுமையாகத் தாக்கியது. இதனையடுத்துப் பலத்த மழை பெய்தது.

இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது. நிலச்சரிவும் ஏற்பட்டதால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.  ஏராளமானோர் பலியானார்கள். வெள்ளம் வடிந்த பிறகும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

வடக்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட ஒரு மலைக் கிராமத்தில் இன்று மீட்பு பணி நடந்தது. அப்போது மண்ணுக்குள் புதைந்துக் கிடந்த 153 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.