._._._._._.
முகாம்களை மூடுங்கள் – கண்டனப் பொதுக்கூட்டம்
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும் 280 000 மக்களை சிறை வைத்துள்ள வன்னி முகாம்களை மூடுமாறு கோரியும் கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்று ஒக்ரோபர் 17ல் லண்டன் குயின்ஸ்மேரி பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழ் ஒருங்கமைப்பு – ரமிழ் சொலிடாரிற்றி என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்டனக் கூட்டம் நீண்ட போராட்டத்தின் ஒரு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. தமிழர்களை படுகொலை செய்வதை நிறுத்து – என்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக இந்தக் கண்டனக் கூட்டத்தை தமிழ் ஒருங்கிணைப்பு அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழர்களைப் படுகொலை செய்வதை நிறுத்து மற்றும் தமிழ் ஒருங்கிணைப்பு மேற்கொள்கின்ற போராட்டங்கள் இன்றைய சூழலில் மிக அவசியமானவையாக உள்ளது. தமிழ் அரசியல் சூழல் மற்றும் புலம்பெயர் தமிழ் அரசியல் சூழல் என்பது ஒற்றைப் பரிமாணமாகி நின்று தமிழ் மக்களை மிகமோசமான அரசியல் சூழலுக்குள் தள்ளியுள்ள நிலையில் அந்த ஒற்றைப் பரிமாண அரசியலை நிராகரிக்கின்ற இவ்வாறான போராட்டங்கள் ஊக்குவிக்கப்படுவது இன்றைய காலத்தின் தேவையாகின்றது.
தமிழர் ஒருங்கிணைப்பு சோசலிசக் கட்சியின் போராட்ட முன்னரங்க அமைப்பாகும். ஒக்ரோபர் 17ல் சோசலிசக் கட்சியின் பொதுச்செயலர் பீற்றர் ரப்பே, பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்னான போராட்டங்களை ஏற்பாடு செய்த ஜனனி பரமசோதி, சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய ஆய்வாளர் நாகர்ஜீனன் (ரமேஸ் கோபாலகிருஸ்ணன்), தமிழர் ஒருங்கிணைப்பின் சர்வதேச இணைப்பாளர் சேனன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு: PUBLIC MEETING -sat 17 october, 6pm, Queen mary university, room 210, Laws building
._._._._._.
அரசியல் பொருளாதார ரீதியாக மிகுந்த நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கின்ற இலங்கை அரசு அவற்றுக்கு சளைக்காமல் வன்னி மக்கள் தொடர்பில் திட்டமிட்ட ஒரு இன ஒடுக்குமுறையையும் இனச் சுத்திகரிப்பையும் மேற்கொள்ளத் திட்டமிட்டு உள்ளது. வன்னி முகாம்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் மிகுந்த அசமந்தப் போக்கிலேயே அரசு செயற்படுகின்றது. ஆரம்பத்தில் 80 வீதமான மக்களை நவம்பர் மாதத்திற்குள் மீள்குடியேற்றப் போவதாக அரசு அறிவித்து இருந்தது. ஆனால் யூலை 10ல் ஜனாதிபதி ராஜபக்ச நவம்பரில் 60 வீதமான மக்களை மீள்குடியேற்றப் போவதாகத் தெரிவித்தார். “We have a 180-day programme. That is our plan. In 180 days, we want to settle most of these people,” எனத் தெரிவித்த ஜனாதிபதி ராஜபக்ச ஆனால் “It’s not a promise, it’s a target.” என்றும் குறிப்பிட்டு இருந்தார். 60 வீதமான மக்களை மீளக்குடியேற்ற வழங்கிய காலக்கெடு இன்னும் இரு வாரங்களில் வந்துவிடும். 180 நாள் இலக்கும் வெகு தொலைவில் இல்லை. ஆனால் மீள்குடியேற்றம் பற்றிய தெளிவான அறிவிப்புகளை அரசு இன்னமும் வெளியிடவில்லை.
உலகின் ‘மிகச் சிறந்த’, ‘மிகக் கட்டுக் கோப்பான’ இராணுவ அமைப்பு என்று பெயரெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளை 30 ஆண்டுகள் ஆயுத வன்முறையை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளை ‘புரஜக்ற் பீக்கன்’ என்ற திட்டத்தை வகுத்து கால அட்டவணைப்படி இரு வார தாமதத்தில் இலங்கை அரசு துடைத்து அழித்தது. அவ்வளவு வல்லமையைப் பெற்றிருந்து அரசு வன்னியில் உள்ள 300 000 லட்சம் மக்களை தான் குறிப்பிட்ட ஆறு மாதங்களுக்குள் மீள்குடியேற்றத் திணறுவதற்கு அரசின் இனவாதப் போக்கைத் தவிர வேறு குறிப்பிடத்தக்க காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
வன்னி முகாம்களில் உள்ள மக்களில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலையைச் சேர்ந்த மக்கள் அவர்களது அடையாள அட்டையில் உள்ள பிரதேசங்களில் கொண்டு சென்று விடப்பட்டு உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவித்தார். ஓக்ரோபர் 13 தேசம்நெற்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டார். இப்பகுதிகளில் கொண்டு சென்று விடப்பட்டு உள்ளவர்களது ‘பூர்வீகம் அப்பிரதேசங்களாக இருந்தாலும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் அப்பிரதேசங்களுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை’ என்று தெரிவித்த எம் கெ சிவாஜிலிங்கம் ‘இம்மக்களுக்கு மீளத் தமது வாழ்வை ஆரம்பிப்பதற்கான எவ்வித உதவிகைளயும் அரசு வழங்கவில்லை’ எனவும் குற்றம்சாட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில் ‘தீவுப்பகுதிகளில் குடியேற்றப்பட்டவர்களில் இரு கால்களையும் இரு கைகளையும் இழந்த ஒரு போராளிப் பெண்ணும் அவரது தாயும் அடங்குவதாகவும் எவ்வித உதவியும் இல்லாமல் அத்தாய் எவ்வாறு தனது ஊனமாக்கப்பட்ட மகளைப் பராமரிக்க முடியும்’ என்றும் கேள்வி எழுப்பினார்.
இவற்றின் பின்னணியில் வன்னி முகாம்களில் உள்ள கணிசமான பகுதியினர் வன்னி முகாம்களைவிட்டு வெளியேறத் தயாராக இல்லை என அங்குள்ள சிலருடன் ஏற்படுத்திக் கொண்ட தொலைபேசி உரையாடல்களில் இருந்து தெரியவருகின்றது. எந்தவொரு வெளிநாட்டுத் தொடர்புகளும் கிடையாத பெரும்பாலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்த இம்மக்கள் நிரந்தரமான வேலை வாய்ப்புகளைக் கொண்டிருக்கவில்லை. (பெரும்பாலும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் 75 வீதத்திற்கும் அதிகமானவர்கள் யாழ் மாவட்டத்தையே சேர்ந்தவர்கள்.) இவர்கள் வன்னி முகாம்களைவிட்டு வெளியேறும் பட்சத்தில் இவர்களது நாளாந்த வாழ்வுக்கு எவ்வித ஆதாரமும் இல்லாத நிலை ஒன்றும் உள்ளது. அதனால் இம்மக்கள் தாங்கள் முகாம்களைவிட்டு வெளியேறினால் நிர்க்கதியாவோம் எனத் தேசம்நெற்க்கு தெரிவித்தனர். அவ்வாறு இருந்தும் தங்களது சுதந்திரமான நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி அரசு தங்களை கைதிகளாக நடத்துவதாக அம்மக்கள் உணர்கின்றனர்.
இவ்வாறு வன்னி முகாம்களுக்கு உள்ளேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளவர்களில் வன்னியில் குடியேறிய மலையகத் தமிழர்களும் கணிசமானவர்கள் உள்ளதாக எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவிக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சேர்ப்பிலும் நடந்து முடிந்த யுத்தத்திலும் இம்மக்கள் மிகுந்த இழப்புகளைச் சந்தித்ததாகவும் அவர் தெரிவித்தார். இவ்விடத்தில் வன்னிக்குப் புலம்பெயர்ந்த மலையகத் தமிழர்கள் எதிர்கொண்ட சமூகப் பிரச்சினை தமிழ் மக்களால் கண்டுகொள்ளப்படாத ஒரு பிரச்சினை. (அதனை முடிந்தவரை ஆர் புதியவன் தனது ‘மண்’ படத்தில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.)
அண்மையில் தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் வன்னி முகாம்களில் உள்ள மக்களில் கணிசமான தொகையினரை அரசு நாட்டின் ஏனைய பகுதிகளில் ‘தற்காலிகமாக’ குடியிருத்த முயற்சிப்பதாகத் தெரியவருகின்றது. அதன்படி வெளிநாடுகளில் உள்ளவர்கள் வன்னி முகாம்களில் உள்ள மக்களைப் பொறுப்பெடுக்க முன்வரும்பட்சத்தில் பொறுப்பெடுக்கப்பட்டவர்களை ‘தற்காலிகமாக’ தென்னிலங்கையில் குடியமர்த்துவது பற்றி அரசு ஆராய்கின்றது. அவ்வாறு குடியிருத்தப்படுபவர்களது செலவீனங்களை அவர்களைப் பொறுப்பெடுக்கின்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் செலுத்த வேண்டும் எனக் கேட்கப்பட இருப்பதாகவும் தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வன்னி முகாம்களில் உள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கான கால தாமதம் ஏற்படும் பட்சத்தில் வடக்கு – கிழக்கில் குடியமர்த்த முடியும் ஆயினும் அரசு அவர்களை வடக்கு கிழக்கில் ‘தற்காலிகமாக’ குடியமர்த்துவதற்குப் பதிலாக தென்னிலங்கையில் ‘தற்காலிகமாக’ குடியமர்த்த முற்படுவதன் பின்னணி அபாயகரமானது. ஏற்கனவே சனத்தொகை ரீதியாக மிகப் பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தமிழ் மக்கள் வன்னி முகாம்களில் உள்ள மக்கள் தெற்கில் ‘தற்காலிகமாக’ குடியமர்த்தப்படுவார்களாக இருந்தால் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் சனத்தொகையில் பாரிய விழ்ச்சி ஏற்படும். வட மாகாணத்தின் யாழ் மாவட்டம் தவிர்ந்த வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னியின் மொத்த வன்னியின் மொத்த மக்கள் தொகை – 551,000. ( மன்னார் – 100,000, கிளிநொச்சி – 142,000, முல்லைத்தீவு – 145,000, வவுனியா – 164,000) இவர்களில் 250 000 மக்கள் தொகையினர் – 50 வீதமான மக்கள் வன்னி முகாம்களில் உள்ளனர். இவர்களில் கணிசமான தொகையினரை அரசு தென்பகுதிகளில் குடியேற்ற முயற்சிக்குமாக இருந்தால் வன்னி நிலப்பரப்பிலும் வடக்கு கிழக்கிலும் தமிழ் மக்களின் சனத்தொகை கணிசமான அளவு வீழ்ச்சி அடைவது தவிர்க்க முடியாதது.
ஏற்கனவே யாழ் மாவட்டத்தில் வாழந்த முஸ்லீம் மக்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டு கடந்த 20 வருடங்களுக்கு மேலாக புத்தளத்தில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இம்மக்கள் தங்கள் வாழ்நிலையை அங்கேயே ஸ்தீரப்படுத்திக் கொண்டதால் அவர்கள் மீண்டும் தங்கள் பூர்வீக மண்ணுக்கு வருவதற்கு தயாராகவில்லை. அவர்களது வாழ்நிலையை உயர்த்துவதற்கான மீள்குடியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படாதவரை அவர்கள் தாங்கள் தங்கியுள்ள இடத்திலேயே தங்களை நிலைப்படுத்திக் கொள்வர்.
இன்று வன்னி முகாம் மக்களை தெற்கில் முடியமர்த்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளும் இதே விளைவையே ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
கடைசியாக 1981லேயே வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் சனத்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் வடக்கு கிழக்கில் சனத்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான சுமூகமான சூழலோ அல்லது வடக்கு கிழக்கு பிரதேசங்கள் அரச கட்டுப்பாட்டிலோ இருக்கவில்லை. பத்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மேற்கொள்ளப்பட உள்ள குடிசனமதிப்பீடு 2011ல் இடம்பெற இருக்கின்றது. 1991, 2001 ல் வடக்கு கிழக்கின் சனத்தொகை மதிப்பீடு இலங்கையின் வளர்ச்சி வீதத்துடன் ஒத்ததாக மதிப்பிடப்பட்டது. தற்போது வடக்கு கிழக்கு முழுமையாக அரச கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் 2011ல் குடிசனமதிப்பீடு மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்படி வடக்கு கிழக்கின் உண்மையான சனத்தொகைப் புள்ளிவிபரம் வெளிவரும்.
கடந்த 30 ஆண்டுகளில் வடக்கு கிழக்கின் சனத்தொகையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றது. இது தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையவில்லை. அண்ணளவாக மூன்று மில்லியனாக இருந்த வடக்கு கிழக்கு தமிழர்களில் ஒரு மில்லியன் தமிழர்கள் குறிப்பாக யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து உள்ளனர். இன்னும் ஒரு மில்லியனுக்கும் சற்று குறைவான தமிழர்கள் தென்பகுதிகளில் வாழ்கின்றனர். எஞ்சிய ஒரு மில்லியனுக்கும் சற்று அதிகமான தமிழர்களே வடக்கு கிழக்கில் உள்ளனர். இவர்களில் 660 000 பேர் (முஸ்லீம்கள் உட்பட) இடம்பெயர்வு முகாம்களில் வாழ்வதாக தமிழர் தகவர் நடுவம் தெரிவிக்கின்றது.
வன்னி யுத்தத்தில் இலங்கை அரசு மிக மோசமாக மனித உரிமைகளை மீறியது. தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தது. ஆனால் இலங்கை அரசு இன அழிப்பை மேற்கொண்டதாக நிறுவுவது கடினம் என்பதனை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அனுதாபமானவர்கள் லண்டனில் ஏற்பாடு செய்த கூட்டங்களிலேயே சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். வன்னியில் மக்களின் உயிரிழப்புகள் அதிகரித்தால் சர்வதேசம் தலையீடு செய்யும் என்ற முட்டாள்தனமான சமன்பாட்டை வைத்துக் கொண்டு மக்கள் கொல்லப்படுவதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தது புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்த புலி ஆதரவு திங்ராங்க். யுத்தத்தின் கொடுமை தாங்காது தங்கள் கட்டுப்பாட்டை மீறி அரச படைகளை நோக்கி ஓட நிர்ப்பந்திக்கப்பட்ட மக்களை புலிகள் சுட்டுக்கொன்றனர். ஓடித்தப்ப முடியாது சிக்குண்டவர்கள் அரசின் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். இவ்வாறு தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் பெரும் மனித அவலத்தை நிகழ்த்தி சர்வதேசத்தை கூவி அழைத்தனர் புலிகள். இம்முயற்சி எவ்வித பலனையும் அளிக்கவில்லை. அதனால் வன்னி யுத்தத்தில் இலங்கை அரசு இனஅழிப்புச் செய்துள்ளது என்பதனை நிறுவுவதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இடம்கொடுக்கவில்லை.
ஆனால் ‘இலங்கை அரசு தற்போது செய்ய முற்படுகின்ற விடயங்களே திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு இனஅழிப்பு நடவடிக்கை’ என்கிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஏபிஆர்சி உறுப்பினருமான எஸ் தவராஜா. தற்போதைய இன அழிப்பு இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் என்பது தமிழ் மக்களை படுகொலை செய்வதும் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்துவதும் அல்ல எனத் தெரிவிக்கும் அவர் ‘அரசு மிகத் திட்டமிட்டு நிதானமாக தமிழ் மக்களை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்த முயற்சிக்கின்றது’ என்கிறார். ‘இதுவே தற்போது தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய விடயம்’ எனவும் அவர் தெரிவிக்கின்றார். ‘எப்போதும் வருமுன் காப்பதே நன்று’ எனக் கூறும் எஸ் தவராஜா ‘தமிழ் மக்களுக்கு சிறுபான்மை இனங்களுக்கு எதிரான சட்டங்கள், விதிமுறைகள், நடைமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவை ஒரு போதும் மீளப்பெறப்படப் போவதில்லை. கல்லோயக் குடியேற்றத் திட்டம் முதல் இன்றுவரை நிலைமைகள் அவ்வாறே உள்ளது. அவற்றை இனிமேல் நீக்க முடியாது. அதனால் அவ்றை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டார்.
வன்னி முகாம்களை தொடர்ந்தும் வைத்திருப்பதில் இலங்கை அரசு பெரும் பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றது. அதனால் அந்த முகாம்களை மூடவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளேயும் வெளியேயும் அரசுக்கு ஏற்பட்டு உள்ளது. ஆனால் இந்த முகாம்களை மூடிவிட்டு மக்களை அவர்களது சொந்த மண்ணில் குடியமர்த்தும் விருப்பம் அரசிற்கு இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் அரசு இம்மக்களில் கணிசமான பகுதியினரை வடக்கு கிழக்கிற்கு வெளியே கொண்டு சென்று குடியேற்றவும் வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளவும் திட்டமிடுகின்றது. கிழக்கில் அரசு வெற்றிகரமாக சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்ட போதும் வடக்கில் அவ்வாறான ஒரு நிலை காணப்படவில்லை. ஆனால் தற்போதைய சூழல் வடக்கிலும் அவ்வாறான ஒரு சனத்தொகை மாற்றத்தை அரசு மேற்கொள்வதை நோக்கி நகர்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இலங்கை அரசின் இந்தப் போக்கானது மலேசிய அரசு தனது சிறுபான்மை இனங்களை எவ்வாறு கையாள முற்படுகின்றதோ அதை நோக்கியதாக உள்ளதாக அண்மையில் தமிழர் தகவல் நடுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு ஒன்றில் மலேசிய நண்பர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
இவற்றின் பின்னணிகளைக் கொண்டு வன்னி முகாம்களில் உள்ள மக்களது எதிர்காலம் தொடர்பில் அந்த மக்களுடன் தொடர்புபட்டு போராட்டங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகின்றது. நாம் சரியெனத் தீர்மானிக்கும் அரசியல் காரணங்களுக்காக அல்லாமல் அந்த மக்களது நலன்களை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்களும் கோரிக்கைகளும் முன் வைக்கப்பட வேண்டும். அதற்கு போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் அந்த மக்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வன்னி முகாம்களை மூடுவது மட்டும் தீர்வாகாது.
._._._._._.
அரசின் முகத்திரையைக் கிழிக்கும் வன்னி முகாம்களின் முட்கம்பிவேலி : த ஜெயபாலன்
வன்னி முகாம்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக …..
1. அரசு வன்னி முகாம்களில் உள்ள மக்களை துரிதகதியில் அவர்களது பகுதிகளிலேயே அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து மீளக் குடியேற்றுவது மிக மிக அவசியம். அதுவொன்றே இந்த முகாம்களில் உள்ள பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதுடன் அந்த மக்களின் சுயாதீனமான சுதந்திரமான வாழ்வையும் அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டும்.
2. மீளக் குடியேற்றும் வரையான குறுகிய காலப்பகுதியில் வன்னி முகாம்களினுள் உள்ள பாதுகாப்புப் படைகள் வெளியெற்றப்பட்டு நிர்வாகம் சர்வதேச மனிதாபிமான ஸ்தாபனங்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட வேண்டும். சர்வதேச அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படாத பட்சத்தில் இலங்கையின் அனைத்து சமூகங்களையும் புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கிய சிவிலியன் நிர்வாகத்தில் அம்முகாம்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்.
3. முகாம்கள் சர்வதேச விதிமுறைகளுக்கமைய நிர்வகிக்கப்பட வேண்டும்.
4. முகாம்களில் உள்ளவர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் போது முகாம் நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமான பதிவுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அழைத்துச் செல்லப்படுபவருடன் பெற்றோர் உறவினர் தொடர்பு கொள்ளக் கூடிய ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.
5. முகாம்களில் உள்ளவர்களுக்கு உளவியல் மருத்துவம் உட்பட அனைத்து மருத்தவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
6. முகாம்களில் உள்ளவர்கள் நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் தங்களுடைய உறவினர்களைச் சந்திக்கவும் உதவிகளைப் பெறவும் ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.
7. முகாம்களை கண்காணிப்பதற்கான சுயாதீன கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டு அவர்கள் முகாம்களை எப்போதும் எவ்வித தடையுமின்றி பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
8. சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் ஊடகங்கள் முகாமினுள் சென்று பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்.
9. அங்குள்ள மக்களது குறைகளைக் கேட்டறிந்து அவற்றை உடனுக்குடன் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
10. முகாம்களில் உள்ள அனைவருக்கும் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் பாதிப்புகளுக்கு அமைய தகுந்த நட்டஈடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.