கொழும்பிலிருந்து கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டம் திரும்பியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று வருடங்களின் பின்னர் தற்போது பொது வைபவங்களில் கலந்து கொள்கின்றனர். தமது பாதுகாப்பின் நிமித்தம் கடந்த மூன்று வருடங்களாக கொழும்பில் தங்கியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன் ,தங்கேஸ்வரி கதிர்காமர் ,மற்றும் த.கனகசபை ஆகியோர் கடந்த வாரம் மட்டக்களப்பிற்கு திரும்பியிருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமர் வவுணதீவு பிரதேசத்தில் சர்வதேச வாசிப்பு வாரத்தை முன்னிட்டு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார்
மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தலா 16 லட்சம் ரூபா செலவில்கன்னன்குடா, வவுணதீவு , ஈச்சந்தீவு, நாவற்காடு , விளாவெட்டுவான், மகிழவெட்டுவான் மற்றும் நரிப்புல் தோட்டம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நூல் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன.
பிரதேச சபைத் தலைவர் க.சுப்பிரமணியம் தலைமையில் நடை பெற்ற இந் நிகழ்வுகளில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமர் ” கடந்த காலத்தை மறந்து அபிவிருத்தியில் சகல தரப்பினரும் இனைந்து செயல்பட வேண்டும் .அபிவிருத்தியைப் பொறுத்த வரை எமது ஒத்துழைப்பு சகலருக்கும் கிடைக்கும் ” என்றார். இந் நிகழ்வுகளில் பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் து.சத்தியாணந்தி ,வவுணதீவு பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவர் கே.விமலநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.