ஆப்கானிஸ்தானுக்கு பிரிட்டிஷ் துருப்பினர் கூடுதலாக ஐநூறு பேர் அனுப்பப்படவிருப்பதை பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன் உறுதிசெய்துள்ளார். கூடுதல் படையினரும் சேரும்போது ஆப்கானில் உள்ள மொத்த பிரிட்டிஷ் துருப்பினரின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து ஐநூறாக உயரும்.
நிறைய நிபந்தனைகளுடனேயே புதிதாக படையினர் அனுப்பப்படுகிறார்கள் என்று லண்டனில் உள்ள நாடாளுமன்றத்தில் பிரதமர் பிரவுன் தெரிவித்துள்ளார்.
நேட்டோ அமைப்பில் உள்ள பிற நாடுகளும் தங்களுடைய பங்குக்கு கூடுதல் படையினரை வழங்க விருப்பம் தெரிவித்தள்ளன என்பதும் ஆப்கானிய அரசாங்கம் கூடுதலானோரை படையில் சேர்த்து, பயிற்சி அளித்து, பணியில் ஈடுபடுத்த உறுதி வழங்கியுள்ளது என்பதும் இந்த நிபந்தனைகளில் அடங்கும்.
ஆப்கானில் அதிக துருப்பினரைக் கொண்ட நேட்டோ நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் பிரிட்டன் உள்ளது.