ஏறாவூர் – மீராக்கேணி மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு போஷாக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டதையடுத்து மாணவர்களுக்கு மயக்க நிலை ஏற்பட்டதால் சுமார் 150 இற்கும் அதிகமான மாணவர்கள் ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் நேற்று (புதன்கிழமை) அனுமதிக்கப்பட்டனர்.
ஏறாவூர் சுகாதார வைத்திய அதி காரி அலுவலகத்தினால் பாடசாலை களுக்கு விநியோகிக்கப்பட்ட இரும்புச் சத்து மற்றும் விற்றமின் – சீ மாத்திரைகளே மாணவர்களுக்கு ஆசிரியர்களினால் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாணவர்கள் இவருக்கு முதலில் மயக்க நிலை ஏற்பட்டது. இவர்கள் உடனடியாக ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து மேலும் பல மாணவர்களுக்கு மயக்க நிலை ஏற்பட்டதால் சுமார் 150 மாணவர்கள் வைத்தியசாலைக்கு பெற்றோர்களினால் அழைத்து வரப்பட்டனர்.
இந்த விடயம் தொடர்பாக ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம். எச். எம். தாரிக் கருத்துத் தெரிவிக்கையில், குறிப்பிட்ட போஷாக்கு மாத்திரைகள் மாணவர்கள் உணவு உட்கொண்ட பின்னரே வழங்கப்பட வேண்டும் எனவும், உணவு உட்கொள்ளாத நிலையில் இந்த மாத்திரைகளை உட்கொள்ளும் போது வயிற்றுவலி, வாந்தி, பசியின்மை மற்றும் மயக்க நிலை போன்றவை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
இரண்டு மாணவர்களுக்கு மட்டுமே இந்த நிலை ஏற்பட்டதாகவும், ஏனைய மாணவர்களில் பெரும்பாலானவர்கள் அச்சம் காரணமாகவே வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தரம்-06 தொடக்கம் 10 வரையான மாணவர்களுக்கு வழங்குவதற்காக சுகாதார அமைச்சினால் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு இந்தப் போஷாக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஏனைய பாடசாலை மாணவர்களுக்கும் கடந்த ஆறு மாத காலமாக இந்த போஷாக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த சம்பவத்தையடுத்து ஏறாவூரில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாடசாலை சென்ற தமது பிள்ளைகளின் நிலைமை பற்றி அறிந்து கொள்வதற்காக பெற்றோர்கள் பாடசாலைக்கும் வைத்திய சாலைக்கும் படையெடுத்ததையடுத்து நிலைமையைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக வைத்திய சாலைக்கு உடனடியாக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம். எச். எம். தாரிக் ஒலிபெருக்கி மூலமாக இந்த விடயம் பற்றி பொதுமக்களுக்கு விளக்க மளித்ததையடுத்து ஓரளவு சமுக நிலை ஏற்பட்டது. இதேவேளை இந்த செய்தி எழுதப்படும் வரை 25 மாணவர்கள் ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். ஏனைய மாணவர்கள் அனைவரும் சிகிச்சையின் பின்னர் தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்களில் பெரும்பாலானவர்கள் இன்று மாலைக்குள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கக்கூடிய நிலையில் இருப்பதாகவும் வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.