October

October

கண்டியில் இன்று உள்ளூராட்சி தலைவர்கள் மாநாடு

இலங்கை உள்ளூராட்சி சபைகளினதும் மாநகர சபை மேயர்களினதும், ஆணையாளர்களினதும் மாநாடு இன்றும், நாளையும் கண்டி மாநகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மத்திய மாகாண ஆளுநர் டிக்கரி கொப்பேகடுவ மாநாட்டை ஆரம்பித்து வைத்து ஆரம்ப உரையாற்றவுள்ளார்.

காசா மீதான இஸ்ரேலிய படை நடவடிக்கை: ஐ.நா. மனித உரிமை சபையில் மீண்டும் விசாரணை

171009gaza.jpgகாசாவில் இஸ்ரேல் தீவிர படை நடவடிக்கை மேற்கொண்டிருந்தது  மத்தியகிழக்கிலுள்ள காசா பகுதி மீது இந்த வருடத்தின் முற்பகுதியில் நடைபெற்ற இஸ்ரேலிய படை நடவடிக்கை குறித்த தனது விவாதத்தை ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் மீண்டும் துவக்கியுள்ளது.

இது குறித்த விசாரணைகள் தென் ஆப்பிரிக்க நீதிபதி ரிச்சரட் கோல்ட்ஸ்டோன் தலைமையில் நடைபெற்றது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அகிய இரண்டுமே போர்க் குற்றங்களை புரிந்ததாக குற்றம்சாட்டி, இருதரப்பும் நம்பத்தகுந்த விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இவ்விசாரணைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான முதல் விவாதம் இரு வாரங்களுக்கு முன்பு நடந்தபோது, இப்பிரச்சினை தொடர்பான தனது பதில் நடவடிக்கைகளை ஆறு மாதங்கள் காலம் தாழ்த்துவது என மனித உரிமை கவுன்சில் முடிவெடுத்தது.

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக முதலில் இதற்கு பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இணக்கம் தெரிவித்திருந்தார். ஆனால் பாலத்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முடிவை மாற்றிக் கொண்டு, இது தொடர்பான விவாதம் உடனே மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அவர் கோரினார்.

கல்வி அமைச்சு மாகாணசபைகளுக்கு 90 மில்லியன் ரூபா அனுப்பி வைப்பு – மாணவர்களிடம் பரீட்சை கட்டணம் அறவிடக் கூடாது

அரசாங்க பாடசாலைகளில் 2009ம் ஆண்டுக்கான மூன்றாந்தவணைப் பரீட்சைகளை நடத்துவதற்கென கல்வி அமைச்சு 90 மில்லியன் ரூபாவை மாகாண சபைகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. பாடசாலை மட்டத்தில் வலய மட்டத்தில் இம்முறை நடைபெறவுள்ள மூன்றாந்தவணை பரீட்சைக்கென மாணவர்கள் எவரும் பணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

அத்துடன் பரீட்சைக்கென மாணவர்களிடம் கட்டணம் அறவிட வேண்டாம் என்றும் கல்வி அமைச்சு தெரிவிக்கிறது. சில மாகாண சபைகளும் இப்பரீட்சைக்கென நிதி ஒதுக்கியுள்ளதுடன் கல்வி அமைச்சின் வேண்டு கோளுக்கு இணங்க 3ஆம் தவணைப் பரீட்சை நடத்துவதற்குரிய செலவினம் தொடர்பான மதிப்பீடுகளை கல்வி அமைச்சுக்கு மாகாண சபைகள் அனுப்பி வைத்துள்ளன.

அத்துடன் இம்முறை க.பொத. சாதாரண தர பரீட்சையை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கும் மாதிரி பரீட்சையும் நடத்தப்படவுள்ளது. நவம்பர் 6ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இப்பரீட்சைகள் நடைபெறும். மூன்றாம் தவணைப் பரீட்சையாக ஆண்டு 6 தொடக்கம் 10ஆம் ஆண்டு வரை மாணவர்களுக்குரிய பரீட்சை நவம்பர் 17 தொடக்கம் 30ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது என்றும் கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

தவணைப் பரீட்சைகளை ஏற்பாடு செய்வதற்கென நியமிக்கப்பட்ட விசேட குழுவினதும், தேசிய கல்வி ஆணைக்குழுவினதும் அறிக்கையின் பிரகாரம் மாகாண அதிகாரிகளின் ஒப்புதல்களுடன் பரீட்சையை இவ் வாறு நடத்துதென முடிவு செய்யப்பட்டுள்ளது. மாகாண ரீதியில் ஒருங்கிணைப்புகளை மேற்கொள்வதற்கென கல்வி அமைச்சில் 9 பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலைகள் மற்றும் பாடசாலைகள் தொகுதி (சிறிய பாடசாலை களுக்கான பிரதான பாடசாலையுடன் இணைந்து அடிப்படையில் பரீட்சைகளை ஒருங்கிணைப்பதற்கென அதிபர்கள் மற்றும் பிரபல்ய மான ஆசிரியர்களை உள்ளடக்கியதாக கமிட்டியொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

ஊழலுக்கு எதிராக தென்னாப்பிரிக்க மக்கள் ஆர்ப்பாட்டம்

181009strike_july.jpgபல தென்னாப்பிரிக்க நகரங்களில், தமக்கு அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்றும், ஊழல் புரியும் அதிகாரிகளை நீக்க வேண்டும் என்றும் கோரி மக்கள் வீதிக்கு வந்து போராட்டம் செய்துள்ளனர்.

குறிப்பாக சாக்ஹைல் என்ற இடத்தில் அவசரகாலநிலை போன்ற ஒரு சூழல் நிலவுவதாக பிபிசி நிருபர் ஒருவர் கூறுகிறார்.

மூன்று வாரங்களாக நடக்கும் இந்த போராட்டத்தில் பல சாலைகள் மறிக்கப்பட்டன. முனிசிபல் கட்டிடங்கள் கொளுத்தப்பட்டன.இரண்டு அமைச்சர்களும் பல மூத்த அதிகாரிகளும் அந்தப் பகுதிகளுக்கு செல்லவுள்ளனர்.

இந்திய அமைச்சர் கெளர் தலதாவில் வழிபாடு

இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் திருமதி பி. கெளர் கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து புனித தந்தத்தினை வழிபட்டார்.

கொழும்பில் நடைபெறும் மூன்று நாள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்த கெளர் இளைஞர் வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடன் தலதா மாளிகைக்கு விஜயம் செய்தார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டி மும்பையில்

cricket_.jpg2011ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் இறுதிப் போட்டி மும்பையில் நடைபெறுகிறது. சென்னையில் இந்தியா ஆட்டம் உட்பட 4 ஆட்டங்கள் நடக்கிறது. 10 வது உலக கோப்பை ஒரு நாள் கிரிக் கெட் போடியை 2011ம் ஆண்டில் நடத் தும் உரிமையை ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து பெற்றன.

பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை நிலவுவதால் அந்த நாடு போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து கழற்றிவிடப்பட்டது. அதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு இழப்பீடு தொகை வழங்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒப்புக் கொண்டுள்ளது.

பாகிஸ்தான் போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதால் இந்தியாவுக்க கூடுதலாக 8 ஆட்டங்களை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது.  அதாவது மொத்தம் 49 ஆட்டங்களில் இந்தியாவில் 29 ஆட்டமும், இலங்கையில் 12 ஆட்டமும், பங்களாதேஷில் 8 ஆட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உலக கோப்பை ஆட்டங்கள் நடைபெறும் இடங்களை முடிவு செய்ய உள்ளூர் போட்டி அமைப்பு குழு கூட்டம் மும்பையில் நடந்தது. கூட்டத்துக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் சபை செயலாளர் என். சீனிவாசன் விடுத்துள்ள அறிக்கையில், உலக கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட ஆட்டங்கள் நடைபெறும் இடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மும்பையில் இறுதிப் போட்டி மற்றும் 2 ஆட்டங்களும், மொகாலியில் ஒரு அரை இறுதிப் போட்டி மற்றும் 2 ஆட்டங்களும், அகமதாபாத்தில் ஒரு கால் இறுதிப் போடி மற்றும் 2 ஆட்டங்களும், டில்லியில் இந்திய அணி ஆடும் ஒரு ஆட்டம் மற்றும் 3 ஆட்டங்களும் நடைபெறுகிறது.

சென்னையில் இந்திய அணி விளையாடும் ஒரு ஆட்டம் மற்றும் 3 ஆட்டங்களும், பெங்களூரில் இந்திய அணி ஆடும் ஒரு ஆட்டம் மற்றும் 3 ஆட்டங்களும், நாக்பூரில் இந்திய அணி மோதும் ஒரு ஆட்டம் மற்றும் 3 ஆட்டங்களும், கொல்கத்தாவில் இந்திய அணி ஆடும் ஒரு ஆட்டம் மற்றும் 3 ஆட்டங்களும் நடக்கிறது. இந்த உலக கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.

கிழக்கு பல்கலையில் நேற்றும் மாணவர்கள் பகிஷ்கரிப்பு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீட மாணவர்களது விரிவுரைப் பகிஷ்கரிப்பு நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது. இம் மாணவர்கள் நேற்று முன்தினம் விரிவுரைப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்ததுடன் அடையாள கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 50,000 பேரை மீள்குடியமர்த்தல்

chals_.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 50,000 பேரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பும் வேலைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.

முதற்கட்டமாக நேற்றுக் காலை 620 கர்ப்பிணித் தாய்மார் உட்பட சுமார் 3260 பேர் 62 பஸ் வண்டிகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களது உடைமைகளை ஏற்றிச் செல்வதற்காக 27 லொறிகளும் பயன்படுத்தப்பட்டன என வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார். நேற்று தொடக்கம் தினமும் 2500 முதல் 3000 வரையில் மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

நேற்று 620 கர்ப்பிணித் தாய்மார்கள் 12 பஸ் வண்டிகளிலும் அவர்களது உடைமைகள் 2 லொறிகளிலும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஏனைய 2500 பேரும் 50 பஸ் வண்டிகளிலும் அவர்களது உடைமைகள் 25 லோறிகளிலும் அனுப்பி வைக்கப்பட்டன.

நேற்றுக் காலை முதல் இவர்களை கட்டம் கட்டமாக அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நேற்றுக் காலையிலேயே முதற்கட்டமாக மூன்று பஸ் வண்டிகள் புறப்பட்டுச் சென்றன. யாழ். நகருக்கு ஏ-9 பாதையூடாக செல்லும் இவர்களை யாழ். அரச அதிபர் கே. கணேஷ் பொறுப்பேற்பதுடன் அவர்களது சொந்த இடங்களுக்கு பொறுப்பான பிரதேச செயலகங்களுக்கும் கிராம சேவகர்களுக்கும் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 5000 பேரும் விரைவில் குடியமர்த்தப் படவுள்ளனர். அத்துடன் வவுனியா மாவட்டத்திலும் நிவாரணக் கிராமங்களிலுள்ள 4000 பேரும் குடியமர்த்தப்படவுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவுகளில் மக் களை மீளக் குடியமர்த்துவதற்கு ஏது வாக நிலக்கண்ணி வெடிகள், மிதி வெடிகள் அகற்றும் பணிகள் துரிதப் படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் திஸ்ஸ விதாரனவுடன் கேள்வி நேரம் : ரி கொன்ஸ்ரன்ரைன்

Tissa_Vitharanaஒக்ரோபர் 18ல் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவுடனான கேள்வி நேரம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மே 18 நிகழ்வுகளுக்குப் பின் இலங்கை அமைச்சர் ஒருவர் புலம்பெயர்ந்து வாழும் சாராதண தமிழர்களைச் ஒரு பொது இடத்தில் சந்திக்கின்ற ஒரு சந்திப்பாக இது அமைய உள்ளது.

இச்சந்திப்பு அமைச்சர் திஸ்ஸ விதாரண தனது கருத்துக்களைத் தெரிவித்துவிட்டுச் செல்லும் சந்திப்பாக அல்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் முகம் கொடுக்கின்ற வகையிலேயே  ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது. மூடிய கதவுகளுக்குள் அரசியல் நடத்துவதும் சிலர் தங்களை அரசியல் முகவர்களாக புரட்சியின் முகவர்களாக காட்டி மேதாவித்தனம் செய்வதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். பத்திரிகையாளர்களும் தங்களை அரசியல் மேதாவிகளாகக் காட்டிக்கொள்வோரும் தான் அரசியல் பேசுகின்ற நிலையைக் கடந்து சாதாரண ஒரு புலம்பெயர்ந்த தமிழனும் இலங்கை அரசை நோக்கி கேள்விகளை எழுப்புவதற்கு இச்சந்திப்பு இடமளிக்கும்.

தேசம்நெற் வாசகர்கள் தங்கள் கேள்விகளைப் பதிவு செய்யும் பட்சத்தில் அக்கேள்விகளுக்கான பதிலைப் பெற்று தேசம்நெற்றில் பிரசுரிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். ஆகையால் தேசம்நெற் வாசகர்கள் தங்கள் கேள்விகளைப் பதிவிடவும்.

ஒக்ரோபர் 18ல் நடைபெறவுள்ள சந்திப்பில் கேள்வி நேரத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு உங்கள் வரவை உறுதிப்படுத்தவும். மட்டுப்படுத்தப்பட்ட இருக்கைகளே இருப்பதால் தங்கள் வரவை உறுதிப்படுத்தாதவர்களை அனுமதிக்க முடியாது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

என்னுடைய தொடர்புகளுக்கு :
ரி கொன்ஸ்ரன்ரைன்
tarrin@desilugroup.com

புராதன கால மனித குடியிருப்புகளின் எச்சங்கள் வடமராட்சியில் – தொல்பொருளியல் துறையின் இயக்குநர் தகவல்

161009artifact_jaffna.jpgபுராதன காலத்தில் மனித குடியிருப்புகளின் எச்சங்கள் வடமராட்சியின் கிழக்கு பகுதியில் தோண்டியெடுக்கப் பட்டுள்ளதாக தொல்பொருளியல் துறையின் இயக்குநர் டாக்டர் செனரத் திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்

அங்கு மூன்று மனித குடியிருப்புகள் இருந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த குடியிருப்புகள் சுமார் 3 கிலோமீற்றர் தூரத்துக்கு  பரந்திருந்ததாகவும் இந்த சான்றுகள் யாழ் குடாநாட்டில் வரலாற்றுப் பின்னணியை நிரூபிப்பதற்கு மிக முக்கிய சான்றுகள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கு நேரசட்டங்களை வேறுபட்ட நிறங்களில் ஓவியமாக தீட்டியிருந்த களிமண் பானைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன எனவே இவற்றைக் கொண்டு எந்த சகாப்தத்தில் அக்குடியிருப்புகள் இருந்தன என்பதைக் கண்டுபிடிக்கலாம்.

கி.மு. ஆரம்பத்திலிருந்து கி.மு 900ஆண்டு காலப்பகுதியில் இக்குடியிருப்புகள் இருந்துள்ளன எனத் தாம் நம்புவதாகவும் ஆனால் மிகச்சரியாக இதைக் கூறமுடியாது என்றும் இயக்குநர் கூறியுள்ளார். 

யாழ்குடாநாட்டில் கந்தரோடை பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சியின் போது பெரிய பெரிய மாடங்களின் எச்சங்கள் கிடைத்துள்ளதாக கூறினார்  இங்கு கிடைத்தசான்றுகளின்படி யாழ் குடாநாட்டில் மிகப்பழைய குடியிருப்புகள் இங்கேயே இருந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்

வல்லிபுர தங்க காகிதச் சுருள்களும் யாழ்குடாநாட்டின் வரலாற்றைத் தீர்மானிக்க உதவுகின்றதாகவும் அது 2ம் நூற்றாண்டுக்குரியது என்றும் தெரிகிறது மேலும் ராஜாக்களின் மாளிகை மற்றும் அதன் தடாகத்தையும்கூட கண்டு பிடித்துள்ளனர் மேலும் மன்னார் யாழ்ப்பாணம் கிளிநொச்சி பகுதிகளிலும் இதுபோன்ற சான்றுகள் கிடைக்கும் என தாம் நம்புவதாகவும் தொல்பொருளியல் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்